Sunday, January 4, 2009

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்




பொம்மலாட்டம்.

ஒரு பக்கா தமிழ் சினிமா இயக்குனரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி திரையுலகில் நடக்கும் அபத்தங்களையும், என்னென்ன கேணத்தனங்கள் சாத்தியம் என்பதையும் சில வித்தியாசமான முடிச்சுகளுடன் இந்த திரைப்படத்தை செய்திருக்கிறார் பாரதிராஜா.
என இனிய தமிழ் மக்களே என்ற இருகை கூப்பிய பாரதிராஜாவாக இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் செய்துகொள்கிறார்.

நானா படேகரின் முதல் தமிழ் படம் என நினைக்கிறேன் இது. ஒரு முன்னணி இயக்குனர் எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது இவரது நடிப்பால்.

கதை.. முழுதும் சொன்னால் சுவாரசியம் போய்விடும்.. எனவே ஒரு சிறுகுறிப்பு மட்டும்..
முன்னணி இயக்குனரான ரானா ( நானா படேகர்) ஒரு perfectionist. அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடிக்க மறுக்கும் நடிகையை தூக்கிவிட்டு புதிய நாயகியை தேடுகிறார். அதன்பின்பு திஷ்னா என்ற ( ருக்மிணி) நடிகையை வைத்து படத்தை தொடர்கிறார் ரானா. அந்த படம் முடிவதற்குள் மர்மமான முறையில் இருவர் கொல்லப்படுகின்றனர். மிக கறாரான பேர்வழியான ரானா இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிசுக்கு வர விசாரணையில் உண்மை வெளிவருகிறது. நம்ம அர்ஜுன் தான் போலிஸ் ஆபிசர் ( விக்ரம் வர்மா) கவிதை எழுதும் பெண்மணியும், ராணாவின் மனைவியாக ரஞ்சிதாவும் உண்டு.

நானா படேகர் :-

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் நானா படேகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தில் ஒரு இயக்குனராக நடித்திருக்கிறார். வாழ்வதெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் செய்யட்டும். கிரேனில் அமரும் விதம், கட்டளைகள் பிறப்பிக்கும் விதம், அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி என அட்டகாசமாக படத்தில் வருகிறார். அதே ஐந்து நாள் தாடி, ஜீன்ஸ், ஒரு அலட்சியமான பார்வை என கலக்குகிறார்.


ராணாவுக்கு பெண்கள் விஷயத்தில் மோகம் என்பதைப்போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு உருவாக்க ரஞ்சிதா சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்தில் போடும் சண்டை, அது முடிந்த பின்பு அவர் நாயகியிடம் நடந்து கொள்ளும் விதம், நாயகியிடம் அத்துமீற நினைப்பவர்களிடம் அவர் காட்டும் கடுமை ஆகியன.


படத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்லவும் ரானா மீது சந்தேகம் வர காரணமாகவும் இந்த நிகழ்ச்சிகள் உதவுகிறது. மற்றபடி பீப்பாயாக இருக்கிறார் ரஞ்சிதா..

ரானா ஒரு perfectionist எனக்காட்ட அவர் வீட்டில் நடந்துகொள்வது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் காட்டும் தேவையற்ற கடுமை, எல்லாம் சற்றே நாடகத்தன்மையுடன் இருக்கிறது. இது இயக்குனரின் பலவீனம்.

மற்றபடி விவேக் மதுரை என்னும் பேரில் வந்து சொறிந்துவிட்டுப் போகிறார். திரைப்பட தயாரிப்பாளரின் நிலையும், அவரது மகன்கள் நடந்துகொள்ளும் விதமும், இயக்குனர் மணிவண்ணன் நடித்துள்ள பகுதியும் இயல்பாய் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

த்ரிஷ்னாவாக வரும் ருக்மிணி மிக நன்றாக செய்திருக்கிறார். அவரது பாத்திரப்படைப்புக்கு அவர் அதிகபட்ச உழைப்பைக்கொடுத்து அனாயாசமாக சமாளித்திருக்கிறார்.

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதும் அர்ஜுன் இந்த படத்தில் சி.பி.ஐ ஆபிசராக அழாகாக பொருந்தி நடித்திருக்கிறார்.

பழைய பாரதிராஜா இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் வெற்றிப்படமாக அமையவாய்ப்புக்கள் மிகக்குறைவு. நிச்சயமாக பழைய பாரதிராஜாவாக வலம்வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாரதிராஜாவின் நல்லபடங்களின் வரிசையில் பொம்மலாட்டமும் சேரும்.


ஜெயக்குமார்

1 comment:

M.Rishan Shareef said...

சுவாரஸ்யமானதொரு திரைப்படம். படம் நகர்கையில் , சினிமா சம்பந்தமாகக் கேள்விப்பட்ட பல விடயங்கள் மனக் கண்ணில் வந்துபோகின்றன. நல்லதொரு விமர்சனம்.

(நாயகி பெயர் திரிஷ்ணா அல்ல..கிருஷ்ணா )