Monday, October 15, 2007

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை.. பகுதி இரண்டு


எங்கள் பள்ளியின் தினசரி நிகழ்வுகள்:-

காலையில் 7.30திலிருந்து 8 மணிக்குள் அனைவரும் வந்துவிடவேண்டும். துப்புரவு ஒவ்வொரு மாணவனின் கடமையாய் சொல்லித்தரப்பட்டது. அதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு அந்த இடத்தின் துப்புரவு பேணுதல் அந்தந்த வகுப்பின் கடமையாகும். மரங்களடர்ந்த எங்கள் பள்ளியில் காலையில் எங்கெங்கு காணினும் இலைகளடா என சொல்லும் அளவுக்கு இலைகள் இறைந்து கிடக்கும். அதை விளக்குமாறால் கூட்டி குப்பைகிடங்கில் காலை 8 மணிக்குள் இடவேண்டும். பிறந்ததிலிருந்து அந்த பள்ளியில் படித்ததால் எங்களுக்கெல்லாம் அது ஒரு விஷயமாகவே தெரிந்ததில்லை. வெளி பள்ளிகளில் படித்துவிட்டு இடையில் காந்திநிகேதனில் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு கடினமான பணியாக துப்புரவு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போதும் உள்ளூருக்கு விடுமுறையில் செல்லும்போது் வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்த பின்னர் அது அழகாய் காட்சி அளிக்கும்போது ஏற்படும் மன நிறைவை வேறு எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் தரமுடியாது என்பது அதை செய்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அனுபவம்... அதை பழக்கமாக்கியதும், அதுபோல வேலை செய்வது இழிவல்ல என்ற எண்ணத்தை உண்டாக்கியது காந்திநிகேதன் பள்ளி.

இறைவணக்கம்:-
செவ்வாய் முதல் வியாழன்வரை தினமும் வரிசை எனப்படும் பொது கூட்டமும் வெள்ளிக்கிழமைகளில் சர்வ சமய கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கும். இந்த சர்வ சமய கூட்டுப்பிரார்த்தனை உண்மையில் எவ்வளவு மன அமைதியை தரும் என்பதை கண்கூடாக அனுபவித்திருக்கிறேன்.

ஓம் தத் சத் ஸ்ரீ நாராயண நீ... என 1000 பேர்கள் ஒரே சமயத்தில் உச்சரிக்கும்போது எற்படும் அதிர்வும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும் விவரிக்க முடியாதது. பின்னர் புணித குரானிலிருந்து " அவ்வூதுபில்லாஹி மினஷைத்தான்.. எனத்தொடங்கும் பாடலும்.. அதை தொடர்ந்து " பரமண்டலங்களிருக்கிற எங்கள் பிதாவே என தொடங்கும் கிறித்துவ பிரார்த்தனையும் நடக்கும்.

பின்னர் அந்த அந்த மாதங்களுக்கு ஏற்ப இந்து பண்டிகைகள், இஸ்லாமியர்களின் பண்டிகைகள், கிறிஸ்துமஸ் எல்லாம் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சாண்டாகிளாஸ் தாத்தா வேடமிட்டு வந்து பரிசுப்பொருட்களை சிறுவர்கள் அனைவருக்கும் தருவார். இந்து பண்டிகையின்போது விநாயகர் சிலைகளை மாணவர்களை எடுத்துவரச்சொல்லி பள்ளியில் பொது மேடை அமைத்து பிரார்த்தனை பாடல்கள் பாடி பிரசாதம் விநியோகித்து பின்னர் மூன்றாம் நாள் அதை உள்ளுர் ஊருணியில் போய் கரைப்பர். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் சிறப்பாக நடைபெறும். இஸ்லாமியர்களின் பண்டிகையின்போது எங்கள் பள்ளியின் ஆசிரியர்களான அக்பர் அலி அய்யா, அப்பாஸ் அலி அய்யா அல்லது யாராவது ஒரு ஆசிரியர் இஸ்லாத்தின் பெருமைகள், நபிகள் நாயகத்தின் பெருமைகள், அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் ரமலான், ஈகை பெருநாள் பற்றிய விவரங்களும் எங்களுக்கு எடுத்துச்சொல்வர்.

எங்கள் பள்ளியைப் போல மத நல்லிணக்கத்தை இதைவிட சிறப்பாக மாணவர்களுக்கு போதிக்க முடியாது. எங்களுக்கு பள்ளியில் இந்த மதம் உயர்ந்தது.. இது தாழ்ந்தது என்ற எண்ணம் ஏற்ப்பட்டதே இல்லை எனக்கூறினால் அது மிகை இல்லை.

திங்கட் கிழமைகளில் நடக்கும் கொடி வணக்கமும் அதை தொடர்ந்த அணிவகுப்பும் நம்மை பெருமிதத்திற்கே இட்டுச்செல்லும். அதை தொடர்ந்த சுதந்திர போராட்டம் குறித்த உரையும் நடத்தப்படும். கொடிவணக்கத்திற்கு மாணவர்கள் அவர்களது வகுப்பில் ஆரம்பித்து கொடி மைதானம் வரை அணிவகுத்து நடந்து செல்வது கண் கொள்ளா காட்சி.

இது தவிர தினசரி அணிவகுப்பில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடிப்பாடலும், தேசிய கீதமும் இருக்கும். அன்றைய செய்திகளை ஏதெனும் ஒரு வகுப்பு மாணவன் தொகுத்தளிப்பான். பின்னர் தலைமை ஆசிரியர் உரையுடன் முடிவடையும்.

தொடரும்...

9 comments:

ஹரன்பிரசன்னா said...

கொடி வணக்கத்தின் போது யாராவது ஐயாவுங்க அல்லது அக்காவுங்க வந்து பெரிய பிளேடைப் போடுவார்கள். எல்லா அக்காவுங்க, ஐயாவுங்க எண்ணமும் தலைமை ஆசிரியரை அல்லது அவருக்கு நெருக்கமானவர்களைப் புகழ்வது போலவே இருக்கும்.

ஒருமுறை ஒரு அக்காவுங்க பேசும்போது, கீரைகளின் மகத்துவத்தை சொல்கிறேன் பேர்வழி என்று, "உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் என்றைக்கும் ஒரு கீரை உண்டு. யார்வேண்டுமானால் எப்போது வேண்டுமானால் அங்கு சென்று இதை சோதிக்கலாம். கீரையின் மகத்துவத்தை அறிந்தவர் அவர்" என்று சொல்லிவிட்டார். அந்த உதவித் தலைமை ஆசிரியரின் வீட்டை கடக்கும்போதெல்லாம், இன்றுவரை, இன்னைக்கு என்ன கீரை வெச்சிருப்பாங்க என்று நினைத்துக்கொண்டு, தலையில் அடித்துக்கொள்கிறேன். நல்ல பள்ளி!

//மரங்களடர்ந்த எங்கள் பள்ளியில் காலையில் எங்கெங்கு காணினும் இலைகளடா என சொல்லும் அளவுக்கு இலைகள் இறைந்து கிடக்கும். அதை விளக்குமாறால் கூட்டி குப்பைகிடங்கில் காலை 8 மணிக்குள் இடவேண்டும்.//

இதைவிட கொடுமை உண்டா? என்றைக்காவது காந்தியத்தை தூக்கிப் பிடிக்கிறேன் எனச் சொல்லிக்கொண்டு திரியும் வாத்தியார்கள் வந்து துப்புறவு செய்திருக்கிறார்களா? ஒன்றிரண்டு முறை ஸ்டண்ட் அடிப்பதைச் சொல்ல வேண்டாம். ஏன் வாத்திமார்களுக்கு விளக்குமாறு சுழற்சி அடிப்படையில் தரப்படவில்லை? சுத்தம், பழக்கம் மாணவர்களுக்கு மட்டுமா? காலையில் சாப்பிடாமல் வரும் ஏழை மாணவ, மாணவிகள் எத்தனை பேர் மயக்கம் போட்டு விழுந்து அடி வாங்கியிருக்கிறார்கள்? கொடுமை.

கூட்டுப் பிரார்த்தனையின் முக்கியமான பலன், வெள்ளிக்கிழமை முதல் பீரியட் கட் என்பது. யழவெடுத்த ஏதோ ஒரு பீரியட் வாத்தியாரின் அடியிலிருந்து தப்பித்துத் தொலைக்கலாம். எனக்குத் தெரிந்து மாட்டைக்கூட அப்படி அடிக்கமாட்டார்கள்.

//பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சாண்டாகிளாஸ் தாத்தா வேடமிட்டு வந்து பரிசுப்பொருட்களை சிறுவர்கள் அனைவருக்கும் தருவார்.//

நான் இரண்டு வருடங்கள் இப்பள்ளியில் படித்தேன். (பின் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!) எந்த வாத்தியும் சாண்டா க்ரூஸ் வேடம் போட்டு என் முன் வராமல் ஏமாற்றிவிட்டார்கள். கட்டுரை கதையாகிவிடும் இடம் போல இது.

அப்புறம் இந்த செய்திகளை தொகுத்தளிக்கும் முறை... ஐயோ பாவம் அந்த மாணவன். அவன் காலையில் ஏழரைக்குப் பள்ளிக்கு வந்து பெருக்கவேண்டும். அவன் ஏழையாகவும் இருப்பான். அவன் வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு பெரும்பாலும் எழுத்து வாசனை இருக்காது. அவன் வீட்டில் சாப்பாட்டுகே கஷ்டம் என்றால் எப்படி பேப்பர் வாங்குவான்? படித்து நோட்ஸ் எடுத்து... வாத்தி வந்தவுடன் நாலு சாத்து சாத்துவார்... பயப்படும் மாணவர்கள் கெஞ்சிக் கூத்தாடி, மனப்பாடம் செய்து, ஏதாவது செய்தியை சொல்லி ஒப்பேத்தி... சுத்த பேத்தல்.

காந்தி நிகேதன் பள்ளி நல்ல விஷயங்களைச் செய்வதாக நினைத்துக்கொண்டு, பாடங்களை நன்றாக நடத்துவதைத் தவிர, மற்ற அனைத்தையும் செய்துகொண்டிருந்தது. மாணவர்களுக்கு ஸ்டிரைக் செய்யும் சுதந்திரம் இருந்ததா? ஹோவென கத்திக்கொண்டு, பள்ளியை விட்டு ஓடும் சுதந்திரம் எந்தப் பள்ளியில் இருக்கிறதோ, அதுவே சிறந்த பள்ளி, என் கணிப்பில். :) அன்று கிடைக்கும் சந்தோஷம் பற்றி அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். காலை 10.15க்கு நான் MLWA ஸ்கூலில் காத்திருப்பேன், பக்கத்து பள்ளி நண்பர்கள் வந்து ஸ்டிரைக் என்று சொல்லி இன்று கூட்டிப் போவார்கள் என! அந்த சுதந்திரத்தை கொஞ்சம் கூட தராத பள்ளி காந்தி நிகேதன். :)

பள்ளியில் விளையாடுவது ஒரு குற்றமா? எப்படி விரட்டி விரட்டி அடி வாங்கியிருக்கிறேன் காந்தி நிகேதனில்? யோசிக்கவும்.

நல்ல காமெடியாக இருப்பதால், தொடர்ந்து எழுதவும் செய்யவும். இன்னும் என்னென்ன கதைகளை காணப்போகிறேன் என்று த்ரில்லிங்காக இருக்கிறது.

Anonymous said...

ஸ்ஸ்ஸப்பாஆஆ!!! இப்பவே கண்ணக்கட்டுதே!!!

PPattian said...

//வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்த பின்னர் அது அழகாய் காட்சி அளிக்கும்போது ஏற்படும் மண நிறைவை வேறு எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் தரமுடீயது எண்பது அதை செய்து அணுபவித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அணுபவம்//

மிக்க உண்மை..

ஹரண் உங்க பள்ளியில ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பார் போல....

கானகம் said...

ஹரன்ப்ரசன்னா...

//பள்ளியில் விளையாடுவது ஒரு குற்றமா? எப்படி விரட்டி விரட்டி அடி வாங்கியிருக்கிறேன் காந்தி நிகேதனில்? யோசிக்கவும். //

PET பீரியடில் விளையாண்டிருந்தால் அடித்திருக்க மாட்டார்கள்.

//நல்ல காமெடியாக இருப்பதால், தொடர்ந்து எழுதவும் செய்யவும். இன்னும் என்னென்ன கதைகளை காணப்போகிறேன் என்று த்ரில்லிங்காக இருக்கிறது.//

பொருத்திருந்து பாருங்கள்.

அணானி..

வருகைக்கு நன்றி. ஆனா இதுக்கு

"ஸ்ஸ்ஸப்பாஆஆ!!! இப்பவே கண்ணக்கட்டுதே!!!"

அர்த்தம் தெரியலியே..

புபட்டியன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

பிரகாஷ் said...

கூட்டுப்பிரார்த்தனையும், துப்புரவு செய்ததும்,மரங்கள் நட்டு தினமும் தண்ணீர் ஊற்றியதும்
இன்னும் பசுமையாய் என் நினைவில்.
கூட்டுப் பிரார்த்தனையில்,ஒரு இரண்டு வருடங்கள் பைபிள் வாசித்தது நான் தான்.
சிறிது காலம் பொது அறிவு வினா விடையும் (பொது)போர்டில் எழுதி இருக்கிறேன்.
கொடி வணக்க சிறப்புரை நிறைய உத்வேகமூட்டும்.
(உம்: கா.முனியாண்டி அய்யா, முத்துராமலிங்க அய்யா,எஸ்.பி.ஆர்.அய்யா)
உதவித் தலைமை ஆசிரியர் ஒரு நல்ல ஆன்மீகவாதி,இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
அவர் யோகா செய்வதை நிறைய முறை கவனித்து இருக்கிறேன்.அமைதியான ஆசிரியர்.
சுருங்கச் சொன்னால்,நிறைகுடம்.
அவரைப் பற்றி எழுத நிறைய உண்டு.
கிருஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று,மரங்களில் பலூன்கள் கட்டி,
சாண்டாகிளாஸிடம் சாக்லேட் வாங்கிய நினைவுகள் நிறைய உண்டு.
ஹரன்பிரசன்னா அரைப் பரீட்சை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கலாம்.
பள்ளி மாணவர்கள்,தேவன் குறிச்சியில் என்.எஸ்.எஸ். முகாமில் 10 நாட்கள் தங்கி மலைப்பாதை அமைத்தனர்.
நம் பள்ளியில் படித்து மாநில அளவில் குறிப்பிட்ட சில சப்ஜெக்ட்களில் முதல் இடம் பெற்று உள்ளனர்.
நிறைய டாக்டர்கள்,எஞ்சினியர்கள்,வெடனரி டாக்டர்கள், பி.எச்.டி.க்கள் உண்டு.
(பவணந்தி,Dr.ஜெயக்குமார்)மற்றும் பலர்.
பிரசன்னாவுக்கு(அந்த வயதில்,அந்த 2 வருடங்களில்) தெரியாத விஷயங்கள்
காந்தி நிகேதன் பள்ளியில் நிறையவே உண்டு.
நான், பள்ளியில் மட்டுமல்லாது, ஆசிரம விடுதியிலும் 5 வருடங்கள் தங்கிப் பயின்றதாலும்
எனக்கு நேரடியான அனுபவம் இருக்கிறது.
ஜெயக்குமார்,இனிதே தொடரவும்.

ஹரன்பிரசன்னா said...

Photo is very big and takes too much time to download. Pl resize the photo rectangally and use it.

parottacricket said...

தல
அஸ்திவாரம் பலமாக‌த்தான் போட்டிருக்கீங்க போல...
ஹரன் ப்ரசன்னாவோட இன்றைய நிழல்களுக்கு சாந்தி நிகேதன் பள்ளி மரங்கள்ள‌
ஒன்னு கூடவா காரணமா இல்ல?
அன்புடன்,
மூர்த்தி, லா ரோஸ்.

ஹரன்பிரசன்னா said...

என்னுடைய நிழல்களுக்கு காந்திநிகேதனின் ஒரு மரமல்ல, ஒரு சருகு கூட காரணம் அல்ல. நன்றாகத் திட்டி ஒரு பதிவு எழுதினால், அதுக்கு வேண்டுமானால் அப்பள்ளி காரணமாக இருக்கலாம். மற்றபடி காந்திய ஜல்லியில் ஜாதி வெறியோடு நடந்த, நன்றாக நடத்தத் தெரியாத மோசமான ஒரு ஆசிரியர் படை கொண்ட, ஒரு நாலாம்தரப் பள்ளி அது. தற்போதும் அது அப்படித்தான் இருக்கும் என யூகிக்கிறேன். உண்மை நிலவரம் தெரியவில்லை.

Anonymous said...

All the informations given by the author (My NSJK) is 100% correct. Every one has to enjoy the Gandhian thought once in a life. I am lucky enough. I fully enjoyed the schhol days and now i am in good position means mainly because of my school, teachers and beloved friends. I love my school for discipline first, discipline second and discipline third. Let us take goodthings for our life and forget the bitter things
With warm regards,
D.Basheer Ahamad