Wednesday, October 17, 2007

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை. பகுதி மூன்று

எனது ஆசிரியர்கள்:-

ஆரம்ப பள்ளியில் எனது ஆசிரியர்களாய் ஐவர் இருந்தாலும் எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி.பாக்கியம் அவர்களும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியை திருமதி.லில்லிஜாய்ஸ் அவர்களுமே என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களது வகுப்புகளில் மட்டுமே நான் மாணவனாய் என்னை உணர்ந்தேன். மற்ற ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்தவேண்டும் என்பதைத் தவிர வேறு ஒரு குறிக்கோளும் இல்லாதிருந்தனர்.

பின்னர் மேல் நிலைப்பள்ளிக்கு வந்த பின்னர் நிலைமை மாறியது. காந்தி ஐயா என்ற ஆசிரியர் என்மீது காட்டிய அன்பு அளவிடற்கறியது. எப்போதும் எனது அண்ணன் மற்றும் அக்காள்கள் எப்படிப் படித்தனர் நானும் அவ்வாறு படிப்பதே எனது பெற்றோருக்கு செய்யும் கடமை என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார்.

அதன் பின்னர் சாரதாமணி அக்கா, மெய்ஞானகுரு அய்யா, சோமசுந்தரம் அய்யா ( இவர் எடுக்கும் வரலாற்று பாடங்களை பரீட்சை எழுத வேண்டும் என்ற கட்டளை இன்றி கேட்டால் இன்று முழுதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். அவ்வளவு இனிமையாக நடத்துவார்)

சக்திவேல் அய்யா என்றொரு ஆசிரியர். இவர் எடுக்கும் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையும், ராமாயண, மஹாபாரத வகுப்புகளும் 45 நிமிடங்கள் போவதே தெரியாது. பின்னர் தவறான நடவடிக்கையால் பெயர் கெட்டார்.

எனது வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஆசிரியர்களுள் சாந்தி அக்காவுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஒரு ஆசிரியருக்கு என்ன இலக்கணம் என்பதை அவரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தனது மாணவர்களை தனது சொந்த தம்பி, தங்கைகள் போல நடத்தியது.

அவர்கள் நல்வாழ்விற்காக கோவில், குளம் என சென்றுவிட்டு அனைவருக்குமாக பிரார்த்திப்பது.

தனது பழைய மாணவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் எனப் பார்த்து நன்றாய் இருப்பவர்களை சுட்டிக்காட்டி அவர் படித்தது போல நீயும் படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என அறிவுறுத்துவது.

இன்னும் பல. அவர் வகுப்பில் படித்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டவர்கள் அல்ல. ஆனால் அவ்வாறு வெற்றி பெற வேண்டும் என நினைத்தார்கள். அதற்காக உழைத்தார்கள். இவர் எனக்கு ஆசிரியராய் வாய்த்தது நான் செய்த புன்னியம் என்றால் அது மிகை இல்லை.

ஆசிரியப் பணி என்பது தலைமுறைகளை உருவாக்கும் செயல் என்பதை குறைந்த அளவு ஆசிரியர்களே அறிந்திருந்தனர். அவர்கள் எல்லா குழந்தைகளையும் நல் மாணாக்கர்களாக ஆக்குவதற்காக எல்லா வழிகளையும் மேற்கொண்டனர். கிராமப் புற மாணவர்களாய் இருந்ததாலும் அவர்களை படிப்பில் ஆழ்த்த அதிக கடினமாய் இருந்ததாலும் அவர்களால் அடிக்காமல் சொல்லித்தர இயலவில்லை. அடியாத மாடு படியாது.. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவுறதில்ல அப்படி சொல்லிக்கிட்டே வெளுத்தாங்க.. அதுல நம்ம ஹரன் ப்ரசன்னாவுக்கு கொஞ்சம் ஜாஸ்தி விழுந்துருச்சி.. அதான் அப்படி எல்லாம் எழுதிட்டார்..

தொடரும்..

2 comments:

ஹரன்பிரசன்னா said...

//அடியாத மாடு படியாது.. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவுறதில்ல அப்படி சொல்லிக்கிட்டே வெளுத்தாங்க.. அதுல நம்ம ஹரன் ப்ரசன்னாவுக்கு கொஞம் ஜாஸ்தி விழுந்துருச்சி.. அதான் அப்படி எல்லாம் எழுதிட்டார்..//

காந்திநிகேதனில் படித்தால் இப்படித்தான் எழுத வரும். :))

ஹரன்பிரசன்னா said...

பதிவின் மேல் உள்ள படத்தின் நீளம் பெரியதாக இருக்கிறது. நீளத்தைக் குறைக்கவும்.