Wednesday, August 19, 2015

சர்வதேச புகைப்பட நாள் எண்ணங்கள்







80கள் மற்றும் 90களில் யாஷிகா கேமெரா வைத்திருப்பது பெருமை. (ரோல் போட்டு எடுப்பது) அதில் 36 படம் எடுத்து முடித்ததும் தாஸ் அல்லது ராஜேஸ்வரி கலர் லேப்பில் 4 ரூபாய் 50 காசுகளுக்கு ஒரு ப்ரிண்ட் (மேக்ஸி) போட்டுத்தருவார்கள். 

பெரும்பாலான படங்கள் ஷேக் ஆகியோ அல்லது சம்பந்தா சம்பந்தம் இல்லாமலோ, நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினரின் முகம் தெரியும் ஆனால் முடியில் பாதி இல்லாமலும் இருக்கும். என்னைய போட்டோ எடுங்க மாமா என நாயாய் அலைந்திருக்கிறோம். அவரும் நம் மனசு நோகாதபடிக்கு ஒரு ப்ளாஷை அடித்துவிட்டு போய்விடுவார். நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வரவுக்காய் காத்திருப்போம். நிச்சயம் நம் படம் இருக்கும் என்ற நம்பிக்கையில். ஏதேனும் ஒரு படத்தில் நாம் எட்டியாவது தலையைக் காண்பித்திருப்போம். அந்த படம்தான் நமக்கு பார்க்கக் கிடைக்கும். 

லேபில் முதலில் பிலிமைக்கழுவி நெகடிவைக் கொடுப்பார்கள். அங்கிருக்கும் ஃபில்ம் வியூவிங் லைட்டில் பார்த்து நமக்கே தேரும் என நினைக்கும் படங்களை நம்பர் எழுதிக்கொடுத்துவிட்டால் பிரிண்ட் கிடைக்கும். கொஞ்சம் டெக்னிகல் தெரியும் எனக்காண்பிக்கவும், கைபட்டால் ரேகை படாமல் இருக்கவும் படம் பிரிண்ட் போடும்போதெ மேட்டி பிரிண்ட் போடுங்கண்ணே என்றால் நாளைக்கு வா என்பார். கொஞ்சம் கெஞ்சினால் மாலை கிடைக்கும். அதற்குள் அத்தை வீடோ அல்லது சினிமா தியேட்டரோ சென்று விட்டு வந்தால் படங்கள் ரெடியாய் இருக்கும். அதைக் கையில் வாங்கிக் கொண்டு 36 படங்களுக்கு 40 போட்டோக்கள் வைக்கும் அளவு ஒரு ஃபோல்டரையும் ஓசி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தால் எல்லோரும் படத்தை பார்க்க ஆவலாய் இருப்பார்கள். 

ஒரு நாலு நாட்களுக்குள் அந்தப்படத்தை வீட்டிலுள்ளோர் 10 முறையும், பக்கத்து வீடு அக்கம் பக்கம் வீடுகளில் உள்லொர் இருமுறையும் பார்த்திருப்பார்கள். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் எங்கேயாவது நம் முகம் வந்திருக்கிறதா என்பதை பார்ப்பதற்குதான் ஆல்பத்தையே வாங்குவார்கள். ஃப்ளாஷ் அடிச்சி ஏமாந்த பெரியவர்களாய் இருப்பின் பொல்லாத போட்டோ எடுக்குறானுக என கடுப்பில் திட்டுவர். 

இன்றைக்கு 16 மெகாபிக்சல் கேமெராவில் எடுத்த படங்களை அந்த நிமிடமே பார்த்துவிட்டு நல்லா இல்லை என்றால் உடனே அடுத்த படத்தை எடுக்க முடிகிறது. ஆனால், இந்த வசதிகள் எல்லாம் இல்லாமல் வெறும் வியூஃபைண்டரில் பார்த்து அட்டகாசமான படங்களை எடுத்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் மதுரை அன்பு. அவர் எடுத்த ஒரு படமாவது இந்த கலர் லேபுகளில் பெரிதாய் இருக்கும். பிள்ளையார்பட்டி விநாயகரை எல்லாருடைய மணிபர்சுக்குள்ளும் தினித்ததில் அவருக்கு பெரும் பங்குண்டு. அவர் எடுத்த படம்தான் பல ஆண்டுகளாக மறு பதிப்பு கண்டுகொண்டிருந்தது. புகைப்பட நாளை ஒட்டி என் எண்ணங்கள்.

1 comment:

பத்மகிஷோர் said...

மதுரை அன்பு குறித்த அரிய தகவல்களுக்கு _/\_