Tuesday, June 10, 2014

பாபிலோன் - காலத்தால் அழிந்த நகரம்

இன்றைக்கு உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான பாபிலோன் சென்று வந்தேன். கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ் பெற்றிருக்கிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகள் வரை உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. 

நிறைய இடிபாடுகள் இருப்பினும் சதாம் ஹுசைன் உயிருடன் இருந்த காலத்தில் நிறைய எடுத்து கட்டி இருக்கிறார். வேறு வகையில் சொல்வதானால் அதை மீண்டும் உயிரூட்ட முனைந்திருக்கிறார். பாபிலோனில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக 5000 பேர் அமரும் ஆம்பி தியேட்டர் ( திறந்த வெளி கலையரங்கம்) அமைத்து அவர் அமெரிக்காவுடன் சண்டையிடும் முன்னர் வரை பாபிலோனில் வந்து தங்கி இருந்திருக்கிறார்.

பாபிலோனின் வரலாறெல்லாம் நெட்டில் தேடி படித்துக்கொள்ளுங்கள். கடைசியாய் இந்த நகருக்கு உயிரூட்ட முனைந்தவர் மாவீரன் அலெக்சாண்டர். ஆனால், அது முடியாமலேயே போயிருக்கிறது.

எனக்கு பெருத்த ஏமாற்றமாய் இருந்தது பாபிலோனின் தொங்கும் தோட்டங்கள் தான்..  நான் குறைந்தபட்சம் அதையாவது மீண்டும் எடுத்து கட்டி இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால், வெறும் சமதளத்தைக் காட்டி இதுதான் தொங்கும் தோட்டத்தின் தரைத்தளம் எனச் சொன்னார் கைடு.

பாக்தாதிலிருந்து கிட்டத்தட்ட 140 கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது ஹில்லா என்ற ஊர். அதன் அருகில் இருக்கிறது இந்த அழிந்துபோன பாபிலோன். ஈராக்கில் யாருக்கும் பாபிலோன் எனச் சொன்னால் தெரிவதில்லை. பாபில் என்றால் மட்டுமே தெரிகிறது. மேலும் பாபிலோன் எனக் கேட்டு என்னவென்றே தெரியாத டாக்ஸிக்காரர் 300 டாலர் போக வர கேட்டதுதான் இன்றைய ஜோக்.


மதியம் 12 மணிக்கு கிளம்பி மாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தேன். வழியெங்கும் செக் போஸ்ட்டுகள். இஸ்லாமியர்களின் (ஷியாக்கள்) புனித தலமான நஜஃப் இதன் அருகில்தான் இருக்கிறது. ஒவ்வொரு செக் போஸ்ட்டிலும் பேர், ஊர் எழுதிக்கொண்டுதான் அனுப்புகிறார்கள். 

பாபில் பற்றி உனக்கு என்ன தெரியும்? பாஸ்ராவில் வேலை செய்யும் உனக்கு பாபிலோனில் என்ன வேலை? நீ இஸ்லாமியனா? இன்ன பிற கேள்விகள் எல்லாம் கேட்டுவிட்டு அனுப்புகிறார்கள்.

பாபிலோனில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து ஒரு போலிஸ் குழுவே பாதுகாக்கிறது. உள்ளே நுழைய கட்டணம் 20 டாலர்கள். கைடுக்கு 10 டாலர்கள். 

முதலில் பாபிலோனின் திறந்த வெளி கலையரங்கம் சென்று பார்த்தேன். பாபிலோன் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் இப்ப்டித்தான் இருந்திருக்கிறதாம். நம்ம சதாம் ஹுசைன் எடுத்து கட்டி அவருக்கும் ஒரு உப்பரிகையை அமைத்துக் கொண்டிருக்கிறார் மேடைக்கு நேர் எதிராக.

அருமையாக இருந்தது பார்க்க. பாபிலோனிலும் ஒரு அரன்மனை அமைத்து வாழ்ந்திருக்கிறார் சதாம். இன்றும் முழுப்பொலிவுடன் பராமரிக்கப் படுகிறது. 2 ஹெலிகாப்டர்களும் இருக்கின்ற்ன. போலிஸ் பயன்படுத்துவார்கள் போல.

அதன் பின்னர் பாபிலோன் நகரின் சாலைகளில் ஒன்றை இன்றும் அப்படியே விட்டு வைத்திருக்கிறார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் 600 ஆண்டுகளுக்கு முன்னரே அந்த சாலையில் அலெக்சாண்டர் நடந்திருப்பான் என்பதை நினைக்கும்போது எங்கு நிற்கிறோம் என்ற மகிழ்ச்சி எழுந்தது உண்மை. 

கால ஓட்டத்தில் இன்றைய ஈராக் அல்லது ஹில்லா நகரம் அந்தக்காலத்தில் இருந்ததைவிட கிட்டத்தட்ட 60 மீட்டர்கள் மேலே இருக்கிறது. எனவே கைடு சொல்லும் 50 மீட்டர் உயரமான வளைவு இது எனக்காட்டிய வளைவின் உச்சியில் அமர்ந்து நான் போட்டோ எடுத்துக்கொள்ளும் அளவு மண்ணுக்குள் புதைந்திருக்கிறது. 

பாபிலோனின் அடையாளங்களில் ஒன்று சிங்கங்கள். சாலையில் இருமருங்கிலும் பக்கத்திற்கு 62 வீதம் 124 சிங்கங்கள் இருந்திருக்கின்றன. 

பிரிட்டிஷார் நம் பழமையான சிலைகள், வைரங்களை எல்லாம் கொள்ளை யடித்துக்கொண்டு போனதுபோல இங்கேயும் நிறைய பொருட்களை, அடையாளங்களை எல்லாம் பிர்இட்டனுக்கு எடுத்துச் சென்றுவிட்டனராம். 

நீலக்கலரில் இருக்கும் கோட்டை வாயில் (பார்க்க படம்) உண்மையில் இருந்திருக்கிறது. அதை அப்படியே பெயர்த்து எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் பிரிட்டிஷார். 

அரன்மனை, அவர்களின் கடவுள் எல்லாவற்றிலும் எதெல்லாம் எடுத்துப்போக முடியுமோ அத்தனையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். பாபிலோனின் ஆண்ட மன்னர்கள் தினமும் வணங்கிய கோயில்கூட இன்னமும் அப்படியே இருக்கிறது. சதாம்கூட பழையதை தள்ளிவிடாமல் அதை உள்ளே வைத்து மேலே புதிதாய் ஜட்டி இருக்கிறார். எனவே முதலில் எப்படி இருந்தது என்பதை நாம் காணமுடியும். 

கிட்டத்தட்ட 2 மணி நேரம் சுற்றிவிட்டு வந்து சேர்ந்தேன். சாப்பாட்டை பற்றி எழுதக்கூடாதுதான்.. ஆனால், எனக்கு இன்றைய மதிய உணவாக ஒரு தட்டு நிறைய வெள்ளரிக்காயும், தக்காளியும், புதினா தலைகளும், வினிகரில் ஊறிய கேரட்டும் கிடைத்தது. 

பாபிலோனை கண்ட மகிழ்ச்சியில் இதெல்லாம் பொருட்டாகவே இல்லை. 

படங்களில் முடிந்த அளவு நான் கேட்ட விஷயங்களை பதிவு செய்கிறேன்.

முழு ஆல்பத்தையும் இங்கே காணலாம்.

No comments: