Tuesday, June 10, 2014

கலில் ஜிப்ரான் வீடு மற்றும் அருங்காட்சியகம். (லெபனான் குறிப்புகள் - 2)

உலகமெங்கும் உள்ள மக்களால் விரும்பப்படும் மிஸ்டிக் (மிஸ்டிக் என்பதன் தமிழர்த்தம் என்ன?) கவிஞர், ஓவியர் மற்றும் தி ப்ராஃபெட் என்ற அழியா புத்தகத்தை உலகிற்கு அழித்த கலில் ஜிப்ரானின் வீட்டிற்கு வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது எனது ஆசைகளில் ஒன்று. கம்பெணி செலவில் இந்த ஆண்டு கைகூடியது.

புஷ்ஷேர் என்றழைக்கப்படும் கிராமத்தில் இருக்கிறது. அந்தக் கிராமம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 1500 மீட்டர் உயரமான மலைமீது இருக்கிறது இக்கிராமம்.

உலகின் தலைசிறந்த கவிகளுக்கு என்ன நடக்குமோ அதுதான் இவருக்கும். பெய்ரூட்டிலிருந்து புஷ்ஷேர் என்ற ஊர் எனக் கேட்டுக்கொண்டேதான் செல்ல வேண்டியிருந்தது. கலில் ஜிப்ரான் பிறந்த ஊர் என வழிகேட்டதில் 3 பேர் மட்டுமே தெரியும் இப்படிப் போ என வழி சொன்னார்கள்.

முதலில் வீடு. இப்படி ஒரு அழகான வீட்டில் எதிர்த்தாற்போல பள்ளத்தாக்கும் இருக்கிறது. (தற்போது வீட்டின் எதிர்புறம் புதிய சர்ச்சொன்று கட்டப்பட்டுள்ளது)

எளிமையான ஆனால் அழகான வீடு. அந்தக்காலத்திலேயே டேபிள், மேசை வைத்து எழுதி, படங்கள் வரைந்திருக்கிறார். வீட்டில் நுழைந்ததும் வலதுபுறம் கட்டில். நேராக வரவேற்பறை, வலதுகோடி மூலையில் டேபிள் சேர்.

வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம். அங்கே அவரது மார்பளவு சிலையை அரசாங்கம் வைத்திருக்கிறது. அவரது இல்லத்தை சுற்றிப்பார்த்த நேரம் முழுக்க என்னைத்தவிர வேறு யாரும் இல்லை, காவலாளி உட்பட. 


கலில் ஜிப்ரானின் வீட்டின் உள்ளே நுழைந்ததும் கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவரது எழுத்துக்களைப் படிக்கும்போது அவர் திராட்சை தோட்டங்கள் வழியாக அடந்து செல்லும்போது தாய்மார்கள் குழந்தைகளைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்கும்போது எப்படி இருந்திருப்பார் என மனது நினைத்துக்கொண்டே இருந்தது. நான் மனதில் வைத்திருந்த ஜிப்ரான் மறைந்து அங்கே படத்தில் இருந்த ஜிப்ரான் இடம் மாறிக்கொண்டார்.

வீடிருக்கும் சூழல் மிகவும் ரம்மியமாக, மிகக்குளிர்ச்சியாக, செடிகொடிகள் மற்றும் மரங்களுடன் இயற்கையுடன் இயைந்து இருக்கிறது, ஜிப்ரான் வாழ்ந்த காலத்தில் இந்த நாகரீக முன்னேற்றங்கள் ஏதுமின்றி, மின்சாரம் இன்றி மிகவும் ரம்மியமாய் இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். 

கொஞ்ச நேரம் அமர்ந்து அந்த மகிழ்ச்சியை முழுதும் அனுபவித்தேன். எத்தனை பேருக்கு கிடைக்கும் இப்படி ஒரு வாய்ப்பு. இன்னும் இந்த கிராமத்தைப் பார்க்காத, கலில் ஜிப்ரானின் பெருமைகளை அறியாத இன்றைய தலைமுறை லெபனானிகள் இருக்கக்கூடும்.


பின்னர் அங்கிருந்து கிளம்பி அவரது பெயரில் இயங்கும் அருங்காட்சியகம் மற்றும் கல்லறைக்கு சென்றேன். அவர் இறக்கும்போது எங்கு. எப்படி புதைக்க வேண்டும், அவரது கல்லறையில் என்ன எழுதப்பட வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிவிட்டே இறந்திருக்கிறார்.

அருங்காட்சியகம்.

ஒரு அருமையான அருங்காட்சியகம் எப்படி இருக்கலாம், இருக்க வேண்டும் என்பதற்கு கலில் ஜிப்ரானின் அருங்காட்சியகமும் ஒன்று. 8000 லிபான்கள் நுழைவுக் கட்டணம். (5.5 டாலர்கள்) கையேடு ஒன்றும் தருகிறார்கள், அதில் எந்தெந்த அறைகளில் என்னென்ன வைக்கப்ட்டுள்ளது, அதற்கான விளக்கம் ஆங்கிலத்தில் அந்தப் புத்தகத்தில் இருக்கிறது. 

அருங்காட்சியகம் அமைந்திருக்கும் இடமே கொள்ளை அழகு. கோலப்பொடி செய்யும் கல்லால் ஆன மலை. அதைக் குடைந்து 4 அடுக்குகளில் 18 அறைகள் செய்து ஒவ்வொன்றிலும் அவரது பெயிண்டிங் மற்றும் புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், புகைப்படங்கள் ஆகியன வைத்துள்ளனர். ஒவ்வொரு அறையிலும் இருக்கும் விஷயங்களுக்கும் தனித்தனி எண்கள் தரப்பட்டுள்ளது. ஒரு புகைப்படத்தின் கீழ் 3 என இருந்தால் அந்த அறை எண்ணை பார்த்து 3ம் நம்பரை வாசித்தால் அந்த புகைப்படம் பற்றிய விளக்கம் இருக்கிறது. கைடுகளே தேவைப்படாத அருமையான முயற்சி. கலில் ஜிப்ரான் போன்ற மிஸ்டிக்குகள் குறித்து காணச் செல்லும்போது கூட இன்னொருவர் இருப்பதே அசௌகரியம். இது நான் உணர்ந்தது. அருமையான புல்லாங்குழல் எல்லா அறைகளிலும் மெல்லிய சப்தத்தில் இசைக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் நாம் செல்லும்போது விளக்குகள் தானாகவே ஒளிர்கிறது. அருமையான லைட்டிங்குகள். உள்ளே கேமெரா கொடு செல்லவோ, படங்களை, ஓவியங்களை தொட்டுப்பார்க்கவோ அனுமதி இல்லை. கலில் ஜிப்ரான் கையால் வரைந்த ஓவியங்கள்.


தி ப்ராஃபெட் எழுத உந்துசக்தியாக இருந்தது அந்த குகைக்குள் வந்துகொண்டிருந்த மெல்லிய நீரோடை. அதை இன்றும் சிறப்பாக பராமரிக்கின்றனர். மிக மிக ரம்மியமான சூழல்.

ஜப்பானிய தூதரகம் இந்த அருங்காட்சியகத்திற்கு விளக்குகளும், சிசிடிவி கேமெராக்களையும் பொருத்திதந்துள
்ளது.

ஒரு குடைவரைக் கட்டிடத்தின் ஏதோ ஒரு மாடியில் நாம் மட்டும் தனியாக ஓவியங்களை மெல்லிய இசையுடன் காணும் அனுபவத்தை என்னவென்று சொல்வது. அதை அனுபவித்தால் நிச்சயம் வாழ்நாள் அனுபவமாக நிச்சயம் இருக்கும். 

அருங்காட்சியகத்தை நிர்வகிப்போருக்கு இந்தியாவில் இருந்து ஒருவன் இதைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதனால், விதிகளை கொஞ்சம் தளர்த்தி எனக்கு சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ள அனுமதியளித்தார்.

கலில் ஜிப்ரானின் கல்லறை. :-

கிட்டத்தட்ட தரை மட்டத்திலிருந்து இரண்டு அடுக்குகள் கீழே உள்ளது கல்லறை. அவர் இறுதிக்காலத்தில் குகையாக இருந்த இப்பகுதியில் தங்கி படங்கள் வரைந்திருக்கிறார். தீர்க்கதரிசி புத்தகம் எழுதுவதற்கான உத்வேகம் இந்த மலைக்குகைக்குள்தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. 

கீழே கல்லறையில் அவர் கல்லறையில் எழுதச் சொன்ன வாசகங்களை ப்ரொஜெக்டர் மூலம் சுவற்றில் விழச் செய்துள்ளனர். (படங்களில் இருக்கிறது) 

கல்லறை திறந்தவாறே உள்ளது. கல்லறையின் உள்ளே அவரை வைத்து மூடி வைத்துள்ள பெட்டியை நாம் காணலாம். கீழே அதிகக் குளிர் என்பதால் ஹீட்டர் மூலம் அறையின் தட்பவெப்பத்தை சீராக வைத்துள்ளனர். 

சில படங்கள் கல்லறையின் உள்ளே எடுத்துக்கொண்டேன். கீழே கல்லறையில் இருக்கும்போது யாரோ சுவற்றில் சாய்ந்து நிற்பதுபோல ஒரு நிழல் சுவற்றில் விழுந்தது. ப்ரொஜெக்டர் மூலம் விழச்செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதைக் கேட்டு அவர்கள் ஆமாம் எனச் சொன்னால் நான் இழந்த அந்த சில விநாடிகள் பரவசத்தை இழந்துவிடுவேன் என்பதால் கேட்கவில்லை. (படங்களில் இருக்கிறது)

கிட்டத்தட்ட நீண்டகால நண்பனொருவனை வாழ்க்கையில் சந்திக்கவே முடியாதோ என நினைத்துக்கொண்டிருக்கும்போது அவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் கிடைக்கும் மகிழ்ச்சியை இன்று அனுபவித்தேன். 14.05.2014 என் வாழ்க்கையில் பொன்நாள்..


படங்களைக் காண இங்கே சொடுக்கவும். 

No comments: