தண்ணீரில் மிதந்து செல்லப் பயன்படும் எதையும் மிதவை எனலாம். இது தவிர சாதாரனமாக மிதந்துகொண்டிருக்கும் எதையும் மிதவை எனலாம்.
வாழ்க்கை எனும் கடலில் இழுத்துச் செல்லப்படும் மக்கள்தான் இங்கு மிதவை எனப்படுகின்றனர். அவர்கள் நினைத்ததுபோலெல்லாம் பயணம் செய்ய இயலாது. அலை இழுத்துச் செல்லும் திசையில்தான் செல்ல முடியும். அதிர்ஷ்டமிருப்பின் நல்ல இடத்திலும், இல்லையெனில் சாக்கடையிலும் போய் விழுவோம்.
பம்பாய் எனும் மாபெரும் மனிதக்கடலுக்குள் தினமும் மேலும் மேலும் மக்கள் வெள்ளம் வந்து சேர்ந்துகொண்டே இருக்கிறது. அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை முறை, குறிப்பாய் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையை பம்பாய் செல்லாமலேயே நாம் அறிந்து கொள்ளமுடியும், மிதவை நாவல் மூலமாக.
சிறுவயதில் நான் படிக்கும் விதத்தைப் பார்த்து எனது அப்பா எபோதும் சொல்லும் ஒரு வசனம், மதுரை ராகவேந்திர விலாஸ்ல போயி சீனு அனுப்புனார்னு சொல்லு, டேபிள் கிளீனர் வேலை நிச்சயமா ராகவன் மாமா தருவார்ரா என்பது. ஆனால், மிதவையில் பட்டணத்திலிருந்து வரும் பெரியப்பாவின் கருனைக்காக, அவரது சிபாரிசுக்காக காத்திருக்கிறான். எந்தத் தகவலும் வராமல் போக, அப்பா உழும் நிலத்தின் உரிமையாளர் பம்பாய்க்கு அனுப்பி வைத்து விடு, அவனை எங்கையாவது உக்காத்தி வச்சிர்ரேன் என்று சொல்லும் உறுதிமொழியை நம்பி பம்பாய்க்குப் பயணமாகும் ஒரு கிராமத்தான சந்திக்கும் அனுபவங்களே கதை.
ஆனால், இது கதையா எனில் நாஞ்சில் நாடன் ஆம் எனச் சொல்லக்கூடும். ஆனால், இன்றைய பம்பாயின் நிதர்சனத்தை சண்முகம் மூலம் நமக்குச் சொல்கிறார். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனது எண்ணங்கள் மாறுவதையும், எப்படி இருப்பதை வைத்து சமாளிப்பது என்பதைக் குறித்த சிந்தனையுடனே இருக்கிறான். நான் பம்பாயில் வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வதற்காக ஒவ்வொரு ஏஜென்ஸியாக ஏறி அலைந்த காலம் ஞாபகம் வருகிறது. அப்பொது இருக்கும் காசுக்குள்ளேயே சாப்பிட வேண்டிய கட்டாயம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு நாள் கூட சட்டைபையில் என்ன இருக்கிறது எனத் தெரியாமல் சாப்பிடும் நாள் வாய்த்ததேயில்லை.
காலமெனும் கடலில் இழுத்துச் செல்லப்படும் சிறு மிதவையென சண்முகத்தை உருவகம் செய்து கதை சொல்கிறார். நாகர்கோவிலின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும்போது என்னவாகப்ப்போகிறானோ என்ற எண்ணமும், பின்னர் சென்னையில் பெரியப்பாவின் வீட்டில் பெரியப்பாவின் உண்மையான உதவியின்றி இருக்கின்ற காலமும், பின்னர் திடீரென அய்யர் மூலம் கிடைக்கும் பம்பாய் பயண வாய்ப்பும், அப்படியே...
நாஞ்சில் நாடனின் எழுத்துகளில் மிக முக்கியமாக நான் உணர்வது அலங்காரமற்ற சுட்டெரிக்கும் உண்மையை பொட்டென போட்டு உடைத்து விடுவது.
கும்பமுனியாக இன்னொரு வேஷம் கட்டி அவர் எழுதிய எழுத்துகளும் அந்த வகையே. சமூகத்தைச் சாட நஞ்சில் நாடன் கட்டும் இன்னொரு வேஷம் கும்பமுனி.
மிதவையாக இருக்கும் சண்முகம் கரைசேர்ந்தானா என்பதே கதை. ஆனால், அவன் படும் அலைக்கழிப்புகள் எல்லாமே கெட்டும் பட்டணம் போய்ச் சேர்ந்த பலரின் வாழ்க்கைக்கதையாய் தெரிவதற்கு வாய்ப்புகளே அதிகம். சண்முகம் படும் பாட்டில் பெருவாரியானதை நானும் பட்டிருக்கிறேன், மும்பையில் இல்லாமல் ஆந்திராவிலும், கர்நாடகாவிலுமாக.
மிதவை : கஷ்டபட்டு முன்னேறிய அனைவருக்கும் தனது வாழ்க்கையை திரும்பிப் பார்த்தது போலிருக்கும். அவசியம் வாசியுங்கள் என சிபாரிசு செய்வேன்.
விஜயா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது இந்த நாவல்.