Monday, January 26, 2009

இந்திய குடியரசு தினம் - கத்தார்

இந்திய குடியரசு தினம் - கத்தார்.




குடியரசு தினம் வழக்கமான் உற்சாகத்துடன் இன்று கத்தாரின் இந்தியன் கல்சுரல் சென்டரில் நடைபெற்றது.

இந்திய தூதுவர் பஹ்ரைன் சென்றுவிட்டதால் சார்ஜ் டி அபெர்ஸ் திரு. சஞ்சீவ் கோக்லி தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

பள்ளிக்குழந்தைகள் மற்றும் கலந்து கொண்ட அனைவரும் தேசியகீதம் பாடினர். அதன் பின்னர் அசோகா அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. சஞ்சீவ் கோக்லி குடியரசுத்தலைவர் உரையை வாசித்தார். அதன் பின்னர் டெல்லி பப்ளிக் ஸ்கூல் குழந்தைகள் தேச பக்திப்பாடல்களை இந்தியில் பாட பின்னர் குடியரசு தின கேக்கை வெட்ட கூட்டம் இனிதே முடிவடைந்தது.

சுவையான சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

சில புகைப்படங்கள் கீழே










ஜெயக்குமார்

Sunday, January 25, 2009

நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்


நிழல் வெளிக் கதைகள் - ஜெயமோகன்

சின்ன வயதில் என்னை அதிக பயத்துக்குள்ளாக்கிய பேய்க்கதை இது. வசனம், இயக்கம், எல்லாம் எனது அண்ணன்.

எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமம் காரைக்கேணி. அந்த ஊருக்கு எப்போதும் சைக்கிளிலும், நடையிலுமாக ஆள்நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் பாதையில் எங்குமே விளக்குகள் இருக்காது. ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த முத்தையா அண்ணாச்சி இரவு காரைக்கேணியிலிருந்து கல்லுப்பட்டிக்கு வரும் வழியில் யாரோ பின்னால் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து கொண்டதுபோல இருந்ததாம்.. ஏய் யாருப்பா அது, யாருப்பா அதுன்னு முத்தையா அண்ணாச்சி கத்திக்கிட்டே வேக வேகமா அழுத்திகிட்டு கல்லுப்பட்டி எல்லை வரைக்கும் வந்துருக்காரு. அப்புறமா கொஞ்சம் வெளிச்சம் உள்ள் இடம் வந்த உடனே திரும்பிப் பாத்தா யாரையும் கானல.. ஆனா, ஒரு மொரட்டு ஆள வச்சு மிதிச்சிகிட்டு வந்த மாதிரி இருந்திருக்கு அவருக்கு... அப்புறம்தான் தெரிஞ்சிச்சி அங்க பேய் நடமாட்டம் இருக்குமாம்...அதுக்கப்புறம் ராத்திரி ரொம்ப நேரம் ஆச்சிருச்சின்னா எங்க வீட்லையே இல்லன்னா வேற எங்கையாச்சும் படுத்துட்டு கோழிகூப்ட ஊருக்குப் போவாரு. இத முத்தையா அண்ணாச்சியும் எங்கிட்ட சொல்லி இருக்காரு..

அதுக்கப்புறம் இதே மாதிரி இன்னோரு கதையக் கேட்டேன்.. இப்பையும் எங்கண்ணந்தான் இந்தக் கதையச் சொன்னாரு..

யாரோ ஒரு ஆளு ராத்திரி பதினோருமனிவாக்குல சைக்கிள்ள போய்க்கிட்டே இருந்திருக்காரு.. அப்ப அண்ணே பின்னாடி ஏறிக்கிரட்டுமா அப்படின்னு கேக்க இவரும் சரிப்பான்னுட்டாரு.. அப்புறம் பின்னாடி இருந்த ஆளு அண்ணே கடல சாப்பிடுறீங்களான்னு கேட்டு சைக்கிள் ஓட்றவருக்கு குடுத்துருக்காரு. கையில பாத்தா எல்லாமே மனுசப்பல்லு.. அய்யோன்னு கத்திக்கிட்டே திரும்பிப் பாத்திருக்காரு.. சைக்கிள் பின்னாடி யாருமே இல்ல.. கையிலையும் மனுசப்பல்லைக் காணோம்.

இது தவிர,

எங்க வீட்டுக்கு எதுத்த வீட்டு சந்துல லச்சுமின்னு ஒரு பேய் சுத்திகிட்டு இருக்கு ராத்திரி அது போற வழியில படுத்தா அப்படியே தூக்கி வீசிரும்,

கெனத்துக்குள்ள ஒரு சின்னப்புள்ள தினமும் இறங்கிப் போகுது.. அது பக்கத்துல இருக்குற புளிய மரத்துல இருந்துதான் வருது...

இதுமாதிரி எங்க ஊர்ல கேக்காத பேய்க்கதையே இல்ல.. அவ்வளவு கேட்ருக்கேன்.


ஜெயமோகனின் பன்முக ஆளுமை மற்றும் எழுத்தில் அவரது வீச்சு குறித்த விரிவான அலசல் திரு.வெங்கட் சாமிநாதன் முதல் நேற்றைய வலைப்பதிவர்கள் வரை அலசப்பட்டு விட்டது. புதிதாய் சொல்ல ஏதுமில்லை, நமது காலகட்டத்தில் வாழ்கின்ற ஒரு இலக்கிய மற்றும் பன்முக ஆளுமை என்பதைத்தவிர. அவரது சமீபத்திய கதைகளான , மத்தகம், ஊமைச் செந்நாய், அனல்காற்று தொடர், மற்றும் பல கதைகளும், கட்டுரைகளும் அவரது வலை வாசிப்பாளர்களுக்காகவே எழுதியவை. அழகான நடையுடன், வாசிப்பவருக்கு ஒரு நெருக்கமான உணர்வை அளிப்பவை அவரது கட்டுரைகளும், கதைகளும், நாவல்களும். அவர் எழுதி வாசிக்காமல் விட்டவை பல.. உண்மையில் அவரது எழுத்து வேகத்துக்கு வாசிப்பாளனால் ஈடு கொடுக்க முடியாது என்பது அவரது வலைப்பதிவை வாசிப்பவர்களுக்கு புரிந்திருக்கும். அவ்வளவு விஷயங்கள் நமக்குச் சொல்ல வைத்திருக்கிறார் ஜெயமோகன், கதைகளாகவும், கட்டுரைகளாகவும்.

அந்த வகையில் இந்த நிழல் வெளிக்கதைகளும் இன்னொரு வகையான இனிமையான வாசிப்பனுபவத்தைத் தரும் கதைகளின் தொகுப்பு.

பேய்க்கதை அரசன் பி.டி சாமி என்றொரு ஆசாமி இருந்தார். அவருக்குப்பின்னர் பேய்க்கதைகளை படிக்கும் பழக்கத்திற்கு ஒரு கும்பிடு போட்டு வைத்திருந்தேன். அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கி தற்போது படித்து முடித்த நிழல்வெளி கதைகள் பற்றி எனது எண்ணங்கள்..

இயக்குனர் லோகிததாசுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த புத்தகம் ஒரு அருமையான பேய்க் கதைகளின் தொகுப்பு.

இமையோன் என்ற கதையில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சாபமிடப்பட்ட அரசகுலப் பெண்ணின் தீராத மோகம் தான் கரு. வாழ்க்கையில் தீராத ஆசைகள் கொண்ட ஒரு ஆன்மா தனது ஆசைகள் அடங்கும் வரை ஆவியாய் அலையும் என்ற நமது புராதன நம்பிக்கைதான் கதைக் களன். அதைப் பலவித சூழ்நிலைகளுடனும், உள்ளூரில் புழங்கும் செவி வழிக்கதையிலும் புகுத்தி சிறந்ததொரு தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயமோகன்.

வர்ணனைகளும், சூழலும், கதை மாந்தர்களும், எல்லாம் நிஜமாகவே இருப்பது போன்ற தோற்றமும், கதை சொல்லும் விதத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள எளிமை படிப்பதை நம்பும்படியாக்குகிறது. அதாவது பேய் இருக்கிறது என நம்புவோருக்கு..

தன்னிடம் போகம் கொள்ளுவதாக நினைக்கும் ஒருவரும்.. இறக்கும் தருவாயில் அந்த கதையை அவர் இன்னொருவனிடம் சொல்ல அவனுக்கும் அதேபோல அனுபவம் ஏற்படுவதும் அதை சக மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாது என நினைக்கும் அளவு அவர்கள் அந்த ஆவியிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் உறவும்.. நல்ல விதமாய் சொல்லப்பட்டுள்ளன.
ஒருமுறை ஒருவனைப்பிடித்த பேய் அவனை அனுபவிக்க தொடர்ந்து வரும் என்பது போன்ற நம்பிக்கைக்கு லாரி ஓட்டுனராக வரும் ஒருவனது கதையிலும் அந்த ஆவியின் நம்பிக்கையால் இருவரது சாவுக்கு அவன் காரணமாய் அமைவதும் நடக்கின்றன.

இமையோன்
பாதைகள்
அறைகள்
தம்பி
யட்சி
ஏழுநிலைப் பந்தல்
இரண்டாவது பெண்
குரல்
ஐந்தாவது நபர்
ரூபி

என மொத்தம் பத்துக் கதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப்புத்தகம். கிராமங்களில் சாயந்திரம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ரெண்டு,மூனு குடும்பங்கள் சேர்ந்துகொண்டு ஊர்க்கதை பேசும்போது கேள்விப்பட்ட செவி வழிச்செய்திகளை கதைகளாக்கும் உத்தி இது என நினைக்கிறேன். காதால் கேட்ட விஷயங்களை கதையாக மாற்றியமைக்கும் உத்தியில் வெற்றியும் பெற்றுள்ளார் ஜெயமோகன்.


விரிவான வர்ணனைகளும், நிஜ அனுபவங்களுக்கு நெருக்கமாக வாசகர்களை இட்டுச் செல்லும் இந்தக் கதைத் தொகுப்பு ஒரு நல்ல வாசிப்பனுபத்தைக் கொடுக்கும். அவசியம் படியுங்கள்..

ஜெயக்குமார்

இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.....

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.





இந்தியா என்றொரு நாடுண்டு ..அதில் ஏலம் கிராம்பு பெறுவதுண்டு.. பொன்னும் பொருளும் மிகவுண்டு .. அதன் போக்கறியாதார் பலருண்டு. எனப்பாடினான் வருமுன் குறிசொல்லிப்பாடிய வரகவி பாரதி.

இன்று இந்தியா அவன் கனவு கண்ட சுதந்திரமும் அடைந்து, குடியரசாக மலர்ந்து ஜனநாயகம் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் அவன் கனவு கண்ட வலிமையான இந்தியாகவும் ஆகி வருகிறது. இந்த கட்டுக்கோப்பைக் குலைத்து நாட்டைத்துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளுக்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் பாரதியின் பாடலே பதில்..

நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள எங்கள்தாய் - அவர்
அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடுவாள்.

ஐயா!

பேயவள் காண் எங்கள்தாய் - பெரும்
பித்துடையாள் எங்கள்தாய்
காயழல் ஏந்திய கையன் தன்னைக்
காதலிப்பாள் எங்கள்தாய்....

இது ஏதோ கவியின் கனவு இல்லை. 'நடைபெறும் காண்பீர் உலகீர், இது நான் சொல்லும் வார்த்தை என்றெண்ணிடல் வேண்டா! தடையற்ற தெய்வத்தின் வார்த்தை! இது சாதனை செய்க பராசக்தி!'

அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!

ஜெயக்குமார்.

போட்டோ உதவி.. Friend Cuttack

Thursday, January 15, 2009

மேட் இன் கத்தார் - பொருட்காட்சி




கத்தாரிலேயே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான பொருட்காட்சி தோஹா கண்காட்சி திடலில் நடைபெற்றது. அதில் கத்தாரின் இளவரசர் கலந்து கொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அதில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக ..

ஜெயக்குமார்

Thursday, January 8, 2009

கத்தார் - சில புகைப்படங்கள்



மணற்குன்றுகளில் விளையாடும் மணல் பைக்குகள் மற்றும் ஃபொர் வீல் டிரைவ் வாகனங்கள்.




மாலை நேரச்சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்.




சுத்தமான கடற்கரை.



கடலலைகள் செய்த மாயம்.



இயற்கை வரைந்த கோலம்.

Sunday, January 4, 2009

பாரதிராஜாவின் பொம்மலாட்டம்




பொம்மலாட்டம்.

ஒரு பக்கா தமிழ் சினிமா இயக்குனரை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி திரையுலகில் நடக்கும் அபத்தங்களையும், என்னென்ன கேணத்தனங்கள் சாத்தியம் என்பதையும் சில வித்தியாசமான முடிச்சுகளுடன் இந்த திரைப்படத்தை செய்திருக்கிறார் பாரதிராஜா.
என இனிய தமிழ் மக்களே என்ற இருகை கூப்பிய பாரதிராஜாவாக இல்லாமல் சாதாரணமாக அறிமுகம் செய்துகொள்கிறார்.

நானா படேகரின் முதல் தமிழ் படம் என நினைக்கிறேன் இது. ஒரு முன்னணி இயக்குனர் எப்படி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது இவரது நடிப்பால்.

கதை.. முழுதும் சொன்னால் சுவாரசியம் போய்விடும்.. எனவே ஒரு சிறுகுறிப்பு மட்டும்..
முன்னணி இயக்குனரான ரானா ( நானா படேகர்) ஒரு perfectionist. அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நடிக்க மறுக்கும் நடிகையை தூக்கிவிட்டு புதிய நாயகியை தேடுகிறார். அதன்பின்பு திஷ்னா என்ற ( ருக்மிணி) நடிகையை வைத்து படத்தை தொடர்கிறார் ரானா. அந்த படம் முடிவதற்குள் மர்மமான முறையில் இருவர் கொல்லப்படுகின்றனர். மிக கறாரான பேர்வழியான ரானா இந்தக் கொலைகளை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலிசுக்கு வர விசாரணையில் உண்மை வெளிவருகிறது. நம்ம அர்ஜுன் தான் போலிஸ் ஆபிசர் ( விக்ரம் வர்மா) கவிதை எழுதும் பெண்மணியும், ராணாவின் மனைவியாக ரஞ்சிதாவும் உண்டு.

நானா படேகர் :-

இந்திய சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் நானா படேகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்தப்படத்தில் ஒரு இயக்குனராக நடித்திருக்கிறார். வாழ்வதெல்லாம் நம்ம ஊர் நடிகர்கள் செய்யட்டும். கிரேனில் அமரும் விதம், கட்டளைகள் பிறப்பிக்கும் விதம், அவர் வெளிப்படுத்தும் உடல் மொழி என அட்டகாசமாக படத்தில் வருகிறார். அதே ஐந்து நாள் தாடி, ஜீன்ஸ், ஒரு அலட்சியமான பார்வை என கலக்குகிறார்.


ராணாவுக்கு பெண்கள் விஷயத்தில் மோகம் என்பதைப்போன்ற தோற்றத்தை பார்ப்பவர்களுக்கு உருவாக்க ரஞ்சிதா சினிமா ஷூட்டிங் நடக்கும் இடத்தில் போடும் சண்டை, அது முடிந்த பின்பு அவர் நாயகியிடம் நடந்து கொள்ளும் விதம், நாயகியிடம் அத்துமீற நினைப்பவர்களிடம் அவர் காட்டும் கடுமை ஆகியன.


படத்தை தொய்வில்லாமல் கொண்டுசெல்லவும் ரானா மீது சந்தேகம் வர காரணமாகவும் இந்த நிகழ்ச்சிகள் உதவுகிறது. மற்றபடி பீப்பாயாக இருக்கிறார் ரஞ்சிதா..

ரானா ஒரு perfectionist எனக்காட்ட அவர் வீட்டில் நடந்துகொள்வது, படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் காட்டும் தேவையற்ற கடுமை, எல்லாம் சற்றே நாடகத்தன்மையுடன் இருக்கிறது. இது இயக்குனரின் பலவீனம்.

மற்றபடி விவேக் மதுரை என்னும் பேரில் வந்து சொறிந்துவிட்டுப் போகிறார். திரைப்பட தயாரிப்பாளரின் நிலையும், அவரது மகன்கள் நடந்துகொள்ளும் விதமும், இயக்குனர் மணிவண்ணன் நடித்துள்ள பகுதியும் இயல்பாய் படத்துடன் ஒன்ற வைக்கிறது.

த்ரிஷ்னாவாக வரும் ருக்மிணி மிக நன்றாக செய்திருக்கிறார். அவரது பாத்திரப்படைப்புக்கு அவர் அதிகபட்ச உழைப்பைக்கொடுத்து அனாயாசமாக சமாளித்திருக்கிறார்.

காஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதும் அர்ஜுன் இந்த படத்தில் சி.பி.ஐ ஆபிசராக அழாகாக பொருந்தி நடித்திருக்கிறார்.

பழைய பாரதிராஜா இன்னும் மறைந்துவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனால் வெற்றிப்படமாக அமையவாய்ப்புக்கள் மிகக்குறைவு. நிச்சயமாக பழைய பாரதிராஜாவாக வலம்வர நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பாரதிராஜாவின் நல்லபடங்களின் வரிசையில் பொம்மலாட்டமும் சேரும்.


ஜெயக்குமார்

ஷல் வி டான்ஸ் - ஒரு அழகான கவிதை ( Shall we dance - 2004)




ஷல் வி டான்ஸ் - ஒரு அழகான கவிதை


2004ல் வெளிவந்த சினிமா இது.. இப்போதுதான் பார்க்கக் கிடைத்தது.
நிறைவான வாழ்க்கை வாழும் ஒருவனுக்கு ( ரிச்சர்ட் கேர்) இன்னும் எதோ ஒன்று குறைவதாக தோன்றுகிறது. அதை கண்டடையும் ஒருவனது வாழ்க்கையே ஷல் வி டான்ஸ் என்ற இந்த ஆங்கில திரைப்படம்.

மனைவு மற்றும் மகளுடன் வாழும் கதாநாயகனுக்கு தினமும் வேலைக்குச் செல்லுதல், வீடு திரும்புதல் இந்த தொடர் ஓட்டம் போரடிக்கிறது. சுவாரசியமாய் எதாவது செய்ய விரும்புகிறான், தினமும் ரயிலில் சென்று வரும் பாதையில் பால்ரூம் டான்ஸ் கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளி தென்படுகிறது. அதில் ஒரு சோகமான முகமும் தென்படும். நாயகனும், அந்த சோகமான முகம் கொண்டவளும் ( Jenifer Lopez) தினமும் கண்களால் சந்தித்துக்கொள்கின்றனர். இந்த பால் ரூம் டான்சை ஏன் நாம் கற்றுக்கொள்ளக்கூடாது என நினைக்கிறான். இணையத்தில் இந்த நடனம் கற்றுக்கொடுக்கும் பள்ளியை தேடி பின்னர் தான் தினமும் போகும் வழியில் காணும் பள்ளியிலேயே சேர்கிறான்.

அந்தப் பள்ளியில் சேர்ந்த உடனேயே ஒரு மாணவனின் குதூகலம் தொற்றிக்கொள்கிறது. அலுவலகத்திலும் அவனது கால்கள் நடனமிடுகிறது. அங்கு நடனம் கற்றுத்தரும் பள்ளியில் வேலைசெய்யும் பாலினா ( Jenifer Lopez) உடன் சகஜமாக உரையாட நினைக்கிறான். ஆனால அவளோ நாயகனை எட்டவே வைக்கிறாள். மாணவர்களுடன் சோஷியலைஸ் செய்வதில்லை என்கிறாள். அவளுக்கு பெரிய நடனப்போட்டியில் கலந்து கொண்டு தகுதி சுற்றுக்குக் கூட வரமுடியாமல் போன சோகத்துடன் எப்போதும் இருக்கிறாள். இதை நாயகனுக்கு எழுதும் ஒரு கடிதத்தில் தெரிவிக்கிறாள் கடைசியில்.

இந்த இடைவெளியில் ம்னைவி பெவெர்லி க்ளார்க் ( Susan Sarandon) கணவன் மீது சந்தேகம் வருகிறது. எங்கு செல்கிறான்?? என் தற்போது ஒருமாதிரியாக நடந்து கொள்கிறான் என்ற சந்தேகத்திற்கு விடைகான உளவு நிறுவனத்தை அணுகி உதவி கேட்கிறாள். அவர்களும் நாயகனைப் பின்தொடர்ந்து அவன் நடனப்பள்ளியில் சேர்ந்திருப்பதையும், வேறு ஒரு சிக்கலும் இல்லை என்பதை தெரிவிக்கின்றனர். நடனப்பள்ளியில் தனது கணவன் சேர்ந்திருப்பதை நம்ப முடியாமல் என்ன காரணமாய் இருக்கும் என கேட்கிறாள். Desperation தான் காரணம் என தெரிகிறது.

தன்னிடம் கூட கூறாமல் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன என அவள் குழம்புகிறாள்.
இப்படியே போகிறது. ஒருநாள் நடனப்பள்ளிகளுக்கு இடையேயான பால்ரூம் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்கிறான் நமது நாயகன். மிக சிறப்பாக நடனமாடுகிறான். அங்கு நாயகனது மனைவியும், மகளும் பார்வையாளர்களாக இருக்கிறார்கள். ஆர்வமிகுதியில் அவனது மகள் அவனது போட்டி என்னை சத்தமாக கூறி கவனத்தை ஈர்க்கிறாள். இதனால் கவனம் சிதறும் நாயகன் போட்டியில் தோற்கிறான். இதனிடையில் என்னிடம் என் கூறவில்லை என மனைவியும் கடிந்துகொள்கிறாள். சரி, இனிமேல் நான் இந்த நடனம் கற்றுக்கொள்ள போகவில்லை எனக் கூறிவிடுகிறான்.

இதனிடையில் நடனம் கற்றுக்கொடுத்த பள்ளியில் இருந்த ஆசிரியை பாலினா ( Jenifer Lopez) நடனத்தில் மேற்படிப்பு படிக்க வெளிநாடு செல்கிறாள். . அதற்கான பிரிவு உபச்சார விழாவில் உங்களுடன் நடனமாட விரும்புகிறேன்.. வருவீர்களா என கேட்டு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்புகிறாள். அதைப்படிக்கும் நாயகனின் மனைவி உண்மையைப் புரிந்துகொண்டு கணவனுடன் அங்கு செல்கிறாள். அங்கு அவளது கணவன் எவ்வளவு உற்சாகமாக் இருக்கிறான் எனக் காண்கிறாள். அவளுக்கும் ஆவல் தொற்றிக்கொள்கிறது. அவளும் அந்த பள்ளியில் சேர்வதுடன் படம் நிறைவுறுகிறது.

இந்த படத்தில் பின்னணி இசையாக வரும் பால்ரூம் டான்சுக்கான இசை அப்படியே மனதை அள்ளுகிறது. ஒரு தெளிந்த நீரோடையைப்போல நகர்கிறது கதை.

நடனப்பள்ளியில் நடன ஆசிரியையாக வரும் ஜெனிபர் லோபசுக்கும், ரிச்சர்டு கெரெவுக்கும் இருக்கும் அந்த நட்புகலந்த உணர்வுகளும் அவர்களது ஒத்த என்ன அலைவரிசையில் இருவரும் இணைந்து ஆடும் நடனங்கள் அழகோ அழகு. நாமும் அங்கு சென்று ஆடமாட்டோமா என நினைக்கவைக்கிறது அங்கு இருக்கும் சூழ்நிலையும், நட்புகளும்.
தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்டு வாழும் ஜெனிபர் லோபஸ் மெல்ல மெல்ல க்ளார்க்கின் கல்மிஷமில்லாத உண்மையான நட்பைக்கண்டு அவனுடன் நட்புகொள்கிறாள். க்ளார்க்கிடம் முதலில் கடுமையாக நடந்து கொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறாள்.
நடனப்பள்ளியில் அவனது உடன் படிக்கும் மாணவர்களாக ஒரு குண்டுப்பையனும் நடிக்கிறான். அவனுக்கும் அவனது ஆசிரியைக்குமான உறவுகள், அவனை அவனது உடல் வேர்வை நாற்றத்திற்க்காக வெறுக்கும் அவனது ஆசிரியை பின்னர் அவனது நிலையைக்கண்டு அவனுக்கு சொல்லித்தருகிறாள்.

இன்னும் மகளாக நடித்திருக்கும் பெண் தனது அப்பா அறைக்குள் நடனம் ஆடுவது கண்டு ஆச்சரியப்படுகிறாள். அம்மாவிடம் தெரிவிக்கிறாள்.

ஆங்கில சினிமாவில் வழக்கமாக காணும் அடிதடி காட்சிகளோ, அனாவசியமான முத்தக்காட்சிகளோ இல்லாத அருமையான உறவு முறையையும், நல்ல நட்புகளையும், அழகான இசையும் கொண்டுள்ள ஷல் வி டான்சை ஒரு கவிதை என நான் நினைக்கிறேன்.
மனதின் நுண்ணிய உணர்வுகளை இந்த திரைப்படத்தில் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தி இருப்பார்கள்.


ரிச்சர்டு கெரெயை தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். நம்மூர் ஷில்பா ஷெட்டியை மேடையில் முத்தமிட்டுவிட்டு பின்னர் மன்னிப்புக் கேட்டவர். புத்த மதத்தை தழுவியவர்.

ஜெயக்குமார்