Thursday, September 30, 2010

ராமஜென்மபூமி தீர்ப்பு குறித்துபரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்களின் அறிக்கை

அலகாபாத் உயர்நீதி மன்றம் அயோத்தி ஸ்ரீ ராமஜன்ம பூமி சம்பந்தப்பட்ட தாவாவில் வழங்கிய தீர்ப்பு பற்றி பரம பூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை.
ஸ்ரீராமஜன்ம பூமிக்காக எழுந்த நியாயமான வாதங்களை முன் வைத்து அலகாபாத் நீதி மன்றம் 2010 செப்டம்பர் 30௦ அன்று அளித்துள்ள தீர்ப்பானது மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமன் மீதும் அவரின் ஜன்ம பூமியான அயோத்யாவின் மீதும் பாரத மக்கள் அனைவரும் வைத்துள்ள உயர்ந்த பக்த்திக்கும் உரிய மரியாதைக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாகும். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், இந்த நியாயமான போராட்டத்திற்காக ஒத்துழைத்தவர்கள் பங்கேற்றவர்கள் ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டத்தில் தலைமை ஏற்று போராட்டம் நடத்திய சாதுக்கள், இப்போராட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீராமஜன்ம பூமி அறப் போராட்டங்களில் பங்கு கொண்டு உயிர் நீத்த தியாகிகள், கரசேவகர்கள் என அனைவருக்கும் மிகப் புனிதமான ஸ்ரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறோம்.
ஆலயம் அமைக்க வேண்டும் என்பது இந்த தேசத்தின் தன்மானத்தின், பக்தியின், சுதந்திர வேட்கையின் கௌரவமான அடையாளங்களாகும். பாரத நாட்டில் சனாதன தர்மத்திற்கும் சமநோக்கு சிந்தனைக்கும் எல்லோரிடத்திலும் உள்ளார்ந்த அன்பு, பொறுமை, பண்பாட்டிற்கும் உரிய மகத்துவமான உதாரணம்தான் ஸ்ரீராமன். ஆலயம் நிர்மானிக்கப்பட வேண்டும் என்பது எதோ ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை விரோதிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. ஆகவே ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு ஆலயம் எழுப்ப நீதிமன்றம் நிர்ணயம் செய்து காட்டிய வழியானது சமுதாயத்தின் எந்தப் பிரிவினருக்கும் வெற்றி தோல்வியை ஏற்படுத்தியது என்ற எண்ணம் ஏற்படலாகாது.
நமது மகிழ்ச்சியின் வெளிப்பாட்டை கட்டுக்கோப்புடன் அமையுடன் நீதியை நியாயத்தை மதிக்கும் விதமாக தேவையற்ற உணர்ச்சிகளை அடக்கி அமைதியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். தேசப்பண் பாட்டிற்கு உரிய பொறுமையுடனும் சமநோக்கு சிந்தனையுடனும் பழைய நிகழ்வுகளை மறந்து ஒரு புனிதமான லட்சிய உணர்வின் அடிப்படையிலும் மொழி, கலாசாரம் மற்றும் இயற்கை அமைப்பில் இருக்கின்ற பல வேற்றுமைகளை மறந்து சமுதாய ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து இனபேதமில்லாத சமுகம் உருவாக்க ஒரு சந்தர்ப்பம் இன்று நமக்கு வாய்த்துள்ளது.
ஆகவே இத்தருணத்தில் இந்த தேசத்தில் வாழும் முஸ்லிம்களும் மற்றும் அனைத்து சமுதாயத்தினருக்கும் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் பல ஆண்டுகளாக நம்மிடையே ஏற்பட்டிருக்கிற கசப்புணர்வுகளை மறந்து நீதிமன்றம் காட்டிய நியாயமான பாதையை ஏற்றுக்கொண்டு ஸ்ரீராமஜன்ம பூமியில் மரியாதா புருஷோத்தமன் ஸ்ரீராமனுக்கு அழகான அற்புதமான ஆலயம் எழுப்பிட நியாயத்தின் அடிப்படையிலும் செயலாக்கத்தின் அடிப்படையிலும் நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயல்படுவோம்.

எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம்

தமிழ் ஹிந்துவில் வெளியான எமர்ஜென்ஸி - ஜே.பி.யின் ஜெயில் வாசம் புத்தக விமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நன்றி.

Thursday, September 9, 2010

மலர்மன்னனின் தி.மு.க உருவானது ஏன்?


அறிஞர் என திராவிட கட்சித் தலைவர்களாலும், தொண்டர்களாலும் அழைக்கப்படுபவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான சி.என்.அண்ணாத்துரையைப் பற்றி அவரது தீவிர விசுவாசிகளில்ஒருவரான மலர்மன்னன் எழுதியிருக்கும் புத்தகம் தி.மு.க உருவானது ஏன்?

திராவிடக் கட்சிகளின் தாய்க் கட்சியாக திராவிடர் கழகத்தைச் சொல்வார்கள்.. அதிலிருந்து பிரிந்தது தி.மு.க,

தி.மு.கவிலிருந்து பிறந்தது அ.தி.மு.க. மற்றும் ம.தி.மு.க.

மற்ற இதர பிரிவுகளுக்குக் காரணமான முதல் பிரிவான தி.க விலிருந்து, தி.மு.க உருவானதற்கான காரணங்களைச் சொல்லி அதன் வரலாற்றை பதிவு செய்கிறார்.

மிக முக்கிய காரணங்களாக மலர்மன்னன் சொல்வது

01. பரம வைரியான ராஜாஜியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு கட்சியின் நிதியை தனது நிதியாக்கிக் கொண்டது, அதாவது சாவியை அண்ணாத்துரையிடம் கொடுப்பதாக மேடையில் சொல்லிவிட்டு, பெட்டியை தனதாக்கிக் கொண்டது.

02. இதுவரை ஊருக்குச் செய்துவந்த உபதேசத்துக்கு மாறாக தனது முதிய வயதில் ஈ.வே.ராமசாமி பொருந்தாத் திருமணம் செய்துகொண்டது.

03. கருஞ்சட்டை அணிய வற்புறுத்தியதும், முரட்டுப் பிடிவாதத்துடன், யாரையும் அனுசரித்துப் போகாத்தனத்துடன் இருந்ததும்...

04. அண்ணாத்துரை தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக ஈ.வே.ரா குற்றம் சாட்டியதும்..

தமிழகத்தின் முக்கிய பிராந்தியக் கட்சியான தி.மு.க, வைப் பற்றி 70களில் எங்களைப் போன்ற சிறுவர்களுக்கு கருணாநிதி கட்சி என்ற அளவில்தான் தெரியும்.

இன்றும் தி.மு.க என்றதும் நம் நினைவுக்கு வருவது கருணாநிதிதான்.

ஆனால் அவரைப் பறிய சிறுகுறிப்புகூட இல்லாத அவரது கட்சியைப் பற்றிய புத்தகம் இது.

ஏன் இப்படி? ஏனெனில் தி.மு.க உருவானபோது கருணாநிதி என்பவர் தலைவர்கள் பட்டியலில் எந்த இடத்திலும் இல்லை என்பதே உண்மை.

ஆனால் அதை உருவாக்கியதில் ஈடுபட்ட அனைவரையும் பின்தள்ளி இன்று தி.மு.க என்றாலே கருணாநிதிதான் என்ற அளவிற்கு கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கருணாநிதியின் சாதனை.

நான் சிறுவனாய் இருந்த காலகட்டத்தில் வழக்கமாக தி.மு.கவின் பிரச்சாரக்கூட்டங்களில் ஈ.வே.ராமசாமி, அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோர் கொண்ட படங்கள் இருக்கும். இன்று கருணாநிதி தவிர்த்த இரு இடங்களையும் இதர போட்டோக்கள் அலங்கரிக்கின்றன.

பள்ளியில் படிக்கும் காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உருவாகியிருந்தது. எனது இளமைக்காலம் எப்போதும் தி.மு.கவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களையே கேட்டு வளர்ந்திருக்கிறேன். எங்கள் தெருவின் பொதுக்கழிப்பிடச் சுவற்றில் பல ஆண்டுகள் இருந்த வாசகம் இன்றும் மனதைவிட்டு அகலாதிருக்கிறது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தால்

வாணம் வறண்டு விடும்
ஊழல் பெருகிவிடும்
மக்காச்சோளம் கிடைக்கும்
கப்பக் கிழங்கு கிடைக்கும்
அரிசியை பொருட்காட்சிகளில் காணலாம்.

இவன்
மாணவர் அமைப்பு.

எப்படிபட்ட வெறுப்பு இருந்திருந்தால் இப்படி எழுதி வைத்திருப்பார்கள். அதற்குத் தக்காற்போலவே கருணாநிதியின் ஆட்சிக்காலம் இருந்திருக்கிறது. காலம் சென்ற எனது பாட்டிக்கு உயிரோடு இருந்தவரை கருணாநிதியின் ஆட்சிக் காலம் குறித்த கசப்பான ஞாபகங்களே இருந்தன.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி எப்படி இருக்கிறது? அதை உண்மையில் யாருக்காக செயல்படுகிறது என்பதெல்லாம் ஊரறிந்த உண்மைகள்.

அப்படிப்பட்ட தி.மு.க ஏன் உருவானது? என்பதைப் பற்றிய புத்தகம் இது. ஈ.வே.ரா.வின் கட்டுப்பாட்டிலிருந்த பகுத்தறிவு இயக்கமான திராவிடர் கழகம் என்ற அமைப்பிலிருந்து எப்படி அண்ணா வெளியேற்றப்பட்டார்? அல்லது வெளியேறும்படியாக என்ன நடந்தது என்பதை மலர்மன்னன் விவரிக்கிறார்.

இதைப் படிக்கப் படிக்க சரித்திரம் திரும்புவதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். அன்றைக்கு அண்ணா என்ற அண்ணாத்துரை ஏன் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவந்தாரோ, அதன் காரணங்களின் ஒன்றினால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது என்பதையும் உணர்ந்து கொள்லலாம்.

இரும்புப் பெட்டியை தான் வைத்துக் கொண்டு சாவியை மட்டும் அண்ணாத்துரையிடம் கொடுத்தார் ஈ.வே.ரா. ... தி.மு.க பிறந்தது.

எம்.ஜி.ஆர் கட்சியின் கணக்குக் கேட்டதால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அது இன்னொரு திராவிடக் கட்சிக்கு அடிகோலியது.

தன்னை கொலைசெய்யப் பார்க்கிறார் அண்ணாதுரை என்றார் ஈ.வே.ரா

தன்னை கொலை செய்யப்பார்க்கிறார் வை.கோ என்றார் கருணாநிதி.

தனது பேத்தி வயதில் ஒருத்தியை திருமணம் என்ற பெயரில் ஒன்றை செய்தார் ஈ.வே.ரா

மணைவி, துணைவி மற்றும் வேறு ஒன்று என மூவரைத் திருமணம் செய்தவர் கருணாநிதி.

இப்படியாக திராவிடக் கட்சியும், தலைவர்களும் ”கொள்கை”களுடன் வலம்வந்தனர், வருகின்றனர்.

அண்னாவைப் பற்றிய சிறிதளவுகூட எதிர்மறை எண்ணமே இல்லாத, அப்படி ஒரு பகுதியை இருப்பதைப் பற்றி கிஞ்சித்தும் பேச விரும்பாத அண்ணாவின் பக்தரால் எழுதப்பட்டிருக்கிறது இப்புத்தகம் என்பதை நாம் புத்தகத்தின் எல்லாப் பகுதியிலும் காண முடிகிறது. எங்கெங்கு காணினும் அண்ணாத்துரை குறித்த புகழாரங்கள் மட்டுமே.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்துகொண்டே சமூகத்தின் ஒரு பிரிவு சாதியினரை கீழ்த்தரமாக விமர்சிக்கும் கருணாநிதி, அந்தக் குணத்தை அவரது அண்ணாவிடமிருந்துதான் கற்றிருக்கிறார். அதைப் போன்ற மோசமான ஒரு இன அழிப்பிற்குத் துனைபோகக் கூடிய அளவிலான வெறுப்பை அண்ணாத்துரை அவரது ஆசிரியரான ஈ.வே.ராவிடமிருந்தும் கற்றிருக்கிறார்கள்.

ஈ.வே.ரா பார்ப்பானை ஒழிக்க வேண்டுமென்றார். பாம்பையும், பார்ப்பனையும் கண்டால் பாம்பை விட்டுவிடு, பார்ப்பானை அடி என்ற அன்பு உபதேசத்தை தனது சீடர்களுக்கு நல்கினார்.

அவரது அன்பின் நீட்சியான அண்ணாவும் அதே பிராமன சமுதாயத்தை வேரோடும், வேரடி மன்னோடும் அழிக்க விரும்பியதை, யூதர்களோடு ஒப்பிட்டு பார்ப்பனர்களை நீக்க விரும்பியதையெல்லாம் மலர்மன்னன் எங்கேயும் சொல்ல விரும்பவில்லை.

அண்ணாவின் வழித்தோன்றலான கருணாநிதி முதலமைச்சர் என்ற மிகப்பெரும் பதவியில் இருந்துகொண்டு அவரது எல்லா பிரச்சினைகளுக்கும் பார்ப்பனர்கள்தான் காரனம் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி எழுப்பபடும் கேள்விகளுக்கு நேர்மையாக பதிலளிக்க முடியாது என்பதால்தான் இப்படி ஜாதியைக் குறித்துப் பேசி தனது பிரச்சினைகளை சமாளிக்கிறர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிப் போனது.

ஈ.வே.ராவைப் பற்றி நல்லவிதமாக இந்தப் புத்தகத்தில் ஒன்றும் கிடையாது. அவரைப் பற்றி சொல்லியிருப்பதெல்லாம்

அவரது கண்டிப்பு,

பிறரது திறமையை மதிக்காத குணம் அல்லது அபூர்வமாக மட்டுமே பாராட்டும் குணம்,

கஞ்சத்தனம்,

திராவிடர்க் கழகம் என்ற அந்தக்காலத்தின் தேவையெனக் கருதப்பட்டு, பல இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தையே பனயம் வைத்து செயல்பட்ட இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்தது .

பணக்காரர்களின் ஊதுகுழலாக செயல்பட்டது.

பொருந்தாத் திருமணம் பற்றி ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு தானும் அதே தவறைச் செய்தது.

பரம வைரி என எவரை இதுவரை அழைத்து வந்தாரோ அவரை சுயநலத்திற்காக சென்று சந்தித்தது.

தனது சொத்துக்களுக்கு வாரிசாக தனது கழகத்திலிருந்த ஒருவரையும் நம்பாத குணம்.

என அவரைப் பற்றிய எதிர்மறை பிம்பங்கள் நிறைய..

அண்ணாவைப் பற்றிய நற்சான்றுகள் மிக அதிகம்.

அவரது ஆளுமை,

கூட்டத்தை வசீகரிக்கும் திறன்,

எத்தனை அவமானங்கள் பட்டாலும் தலைவனை விட்டு அகலாமல் இருந்தது

ஜனநாயக முறைப்படியே தனது கட்சி முடிவுகளை எடுத்தது,

பெரியாரின் இரட்டை வேஷங்கள் குறித்து காண நேரும்போது அவரைப்போன்று அண்ணாவும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளாமலிருந்தது.

என இப்படிப் பல..

மலர்மன்னன் கூற்றுப்படி, இனி பொறுப்பதில்லை என முடிவு செய்தபின்னரே அண்ணா புதிய கட்சியைத் தோறுவிக்கிறார் என்பதற்கான ஆதாரங்களை நிறையத் தருகிறார்.

அண்ணாவை கிட்டத்தட்ட தவறுகளே செய்யாத மனிதனாக காட்ட முயன்றிருக்கிறார் மலர்மன்னன். அண்ணாவைப் பற்றிய வாழ்க்கைக் கதை எழுதும்போது அவரது இதர குணங்களையும் பட்டியலிடுவாராயிருக்கும்.

கம்பரசம்எழுதி தான் யார் என எல்லோருக்கும் உரத்துச் சொன்னவர் அண்ணா.

அவரது சகாக்களாலேயே அவர் ”எதில் அறிஞர்” என ஏளனம் செய்யப்பட்டவர்.


அப்படிப்பட்ட அண்ணாவால் உருவாக்கப்பட்ட தி.மு.க தோன்றியது குறித்து ஏதுமறியாதவர்க்கு நிச்சயம் இந்த நூல் ஒரு வழிகாட்டி.

ஆனால் உன்னத நோக்கங்களுடன் எல்லோரையும் அரவனைத்துச் செல்லவேண்டும் என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு சமுதாயத்தின் ஒரு பிரிவினரை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டே எளிதில் வன்முறைய உருவாக்கும் அளவு பேசி அவர்களை அழித்துவிடக் கூடிய அளவு தரம் தாழ்ந்து பேசுவதும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் முழக்கத்தினை இன்று சிறுபான்மையினர் தேவனே தேவன் மற்றதெல்லாம் ஒழிக்கப்படவேண்டியவைகள் என்ற மாற்றத்தையும் அடைந்திருக்கிறது.

கட்சியை, இயக்கத்தை தனது சொத்துபோல பாவித்த பெரியாரிடமிருந்து பிரிந்து உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மீண்டும் ஒரு குடும்பத்தின் கட்சியாகிப் போனது காலத்தின் கோலமே.

கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இப்புத்தகத்தை வாங்க இங்கே சொடுக்குங்கள்

Tuesday, September 7, 2010

புத்தகம் படித்தல் என்ற அரும்பழக்கம்

நம்மில் எத்தனை பேருக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது என அவரவர்கள் கேட்டுக்கொண்டாலே தெரியும். நான் ஒரு புத்தகப் புழு. டாய்லெட்டில் அமர்ந்திருக்கும்போதுகூட எனக்கு படிக்க ஏதாவது வேண்டும். இன்றைக்கு இப்படி இருக்கும் நான், புத்தகம் படிக்க ஆரம்பித்ததே ஒரு கதை.

எனது நண்பர் டாக்டர் பிரகாஷ் பள்ளியில் படிக்கும் காலத்தில் எப்போதும் புத்தகமும், கையுமாய் இருப்பார். 10ம் வகுப்பு படிக்கும்போதே வெளிநாட்டுக்கு போவது எப்படி என்ற புத்தகத்தை வாங்கியவர். ஆனால் இரவல்வாங்கிப் படித்த நான் முதலில் வெளிநாடு வந்தேன். அதன் பின்னர் அவர் பல வெளிநாடு சுற்றுலாக்கள் சென்று வந்தார்.

என்னைவிட ஓராண்டு சிறிய அவரை எப்போதும் “ஏண்டா இப்படி புத்தகம் படிச்சு வீணாப்போற” என ரோட்டைத் தேய்ப்பதையே பொழுதுபோக்காய் கொண்ட நான் கிண்டல் செய்வதுண்டு. அவர் கோபப் படாமல் அண்ணே, படிச்சிப்பாருங்கண்ணே என எனக்கு புத்தகம் என்ற உலகினுள் கைபிடித்து அழைத்துச் சென்றார். வாசிக்க ஆரம்பித்த உடனேயே தீப்பிடித்ததுபோல படிக்க ஆரம்பித்து விட்டேன். யாரோ ஒருவர் வந்து இவ்வுலகை காண்பிப்பதற்காக காத்திருந்ததுபோல..

எங்களூரின் வாசக சாலையில் இருக்கும் பெருவாரியான புத்தகங்களை சில மாதங்களிலேயே வாசித்து விட்டேன். நூலகரோடு இருந்த நல்ல நட்பு எந்த புதிய புத்தகம் வந்தாலும் எனக்கும், பிரகாஷுக்கும் கிடைப்பதுபோல பார்த்துக்கொள்வார். சுற்றுக்குச் சென்றிருந்தால் வந்த உடன் அப்புத்தகத்தை எங்களுக்காக அவரது மேஜையிலேயே எடுத்துவைத்திருந்து கொடுப்பார். அவ்வளவுதூரம் எங்கள் மீது அன்பு அவருக்கு. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தனியாளாக கஷ்டப்படும் அவருக்கு புத்தகங்கள் அடுக்கிக் கொடுப்பது. ஆடிட்டிங் சமயத்தில் புத்தகங்களுக்கு வரிசை எண் இட்டு கொடுப்பது என எல்லாம் செய்வோம்.

கொஞ்சம் வளர்ந்து பெரியவர்களானதும் அதாகப்பட்டது 12ம் வகுப்பு பரீட்சையைத் தொடும் நேரத்தில் மதுரையின் டவுன் ஹால் ரோடு மற்றும் சர்வோதைய இலக்கியப் பண்ணை ( மேல வெளி வீதி) நடைபாதை புத்தகக்கடைகளில் புத்தகம் தேடப்பழகியிருந்தோம். எனக்கும் எனது நண்பனுக்கும் நட்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இப்படிப்பட்ட கடைகளில் புத்தகம் வாங்குவது மிகப் பிடித்தமான விஷயம். அவனது அம்மா புத்தகம் வாங்க எனக் கேட்டலும் காசு தரக்கூடியவர். எங்கள் வீட்டின் உறுப்பினர்களை மனதில் கொண்டால் புத்தகம் வாங்குதல் அதுவும் காசுகுடுத்து புத்தகம் வாங்குவது என்பது மிகப்பெரிய ஆடம்பரம். எனவே இவரது புத்தகங்கள்தான் எனக்கும்.

இதுதவிர அதிருஷ்டவசமாய் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில் கிடைக்கும் காசுகளையும் சேமித்து இப்படி பழைய புத்தகக் கடைகளில் அப்போது அதிகம் வாசித்த பாலகுமாரன் புத்தகங்கள் வாங்குவோம்.

பின்னர் பல்கலையில் சேர்ந்த உடனே காந்திகிராமப் பல்கலையின் கல்லூரி வாசக சாலையின் உறுப்பினரானோம். அது எங்களுக்கு கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷத்திற்கு சொந்தக்காரர்கள்போல எங்களை உணர வைத்தது. ஓராண்டு அக்கல்லூரியில் படித்த காலத்தில் ( பின்னர் காலநடை மருத்துவம் படிக்க நாமக்கல் புறப்பட்டு விட்டார் டாக்டர் பிரகாஷ்) எங்களின் மாலை நேர பொழுதுபோக்கே பல்கலையின் வாசகசாலையை புரட்டி எடுப்பதும், அப்போது வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்து திண்டுக்கல் - மதுரை அகல ரயில்பாதையில் சில கிலோமீட்டர்கள் நடந்து வருவதும்தான். மாலையில் வைகை எக்ஸ்பிரஸ் எங்கள் காலடியின் கீழே ஓடுவதைப் பார்ப்பது ஒரு தனிசுகம். அகலரயில்பாதை மீட்டர்கேஜிலிருந்து கிட்டத்தட்ட 3 மீட்டர் உயரத்திலிருந்தது.

கல்லூரிப் பாடங்களை எல்லாம் ஊறுகாய் போல படிக்க ஆரம்பித்திருந்தோம். எப்போது பார்த்தாலும் லைப்ரரி வாசம், ஓஷோவும், பாலகுமாரனும் கிறுக்குப் பிடிக்க வைத்தார்கள். சொல்லி வைத்தாற்போல எங்களின் இன்னொரு நண்பன் கண்ணனும் பாலகுமாரனின் வெறியன். அவனும் ஏகப்பட்ட புத்தகங்கள் கொண்டுவருவான்.

பல்கலைக்கழக லைபரரியில் விவசாய மாணவர்களை புத்தகம் தொட விடமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. எங்கள் அண்ணன்மாரும் லைப்ரரியில் இருந்து படிக்க எடுத்துச் செல்லும் புத்தகங்களின் சில பக்கங்களை படிப்பதற்காக கிழித்து வைத்துக் கொள்ளும் நல்ல குணங்களைப் பெற்றிருந்ததும் எங்களுக்கு இருந்த இத்தடைக்குக் காரணம். அப்புறம் நூலகர் மனதை மாற்றி, சண்டையும் இட்டு நாங்கள் உண்மையான வாசகர்கள்தான் என நிரூபித்த பின்னரே நூலகத்தின் எல்லாப் பகுதிகளும் எங்களுக்காக திறந்தது. பிரிட்டானிக்க என்சைக்ளொபீடியாவெல்லாம் கண்ணால் பார்த்தது அங்கேதான். கிட்டத்தட்ட 20 வால்யூம்கள். அங்கே படித்த இரு ஆண்டுகளில் 10 வால்யூம்களை முழுதாய் வாசித்திருப்பேன் என நினைக்கிறேன். அதன் பின்னர் எனது வாசிக்கும் ஆர்வம் வெறித்தனமாய் வளர்ந்ததே தவிர கொஞ்சமும் குறையவில்லை. வெளிமாநிலத்தில் வேலைக்குச் என்றபோதும் தமிழ் புத்தகம் விற்கும் கடைகளை கண்டுபிடிப்பதே எனது முதல் வேலையாகக் கொள்வேன். எனது ஒரு பிறந்த நாளுக்கு எனது அண்ணியிடமிருந்து பரிசாக ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தைக் கேட்டு வாங்கினேன். நிறைய எழுத்துப் பிழைகளுடன் கூடிய முதல் பதிப்பு. 250 ரூபாய்கள். எனது அண்ணிக்கு இதில் என்ன இருக்கிறது என நினைத்தாலும், எனக்காக வாங்கிக் கொடுத்தார். இவ்வளவு அதிக பட்ச விலையில் புத்தகம் வாங்கியது அப்போதுதான். இப்போதெல்லாம் ஆண்டிற்கு 4000 முதல் 5000 வரை புத்தகங்களுக்கு செலவழிக்கிறேன். எனது மனைவியும் புத்தகப்பிரியை அதனால் சண்டை ஏதுமின்றியும், முனுமுனுப்பின்றியும் புத்தகம் வாங்க முடிகிறது. இங்கேயே கிட்டத்தட்ட 200 புஸ்தகங்கள் வரை வைத்திருக்கிறேன்.

இப்படியாக வளர்ந்தது எனது படிக்கும் ஆர்வம். இப்போது கிட்டத்தட்ட எழுத்து வடிவில் என்ன இருந்தாலும் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வெளிநாடு சென்ற பின்னர் நடைமுறைச் சிக்கல்களால் இப்படி தேடித்தேடி புத்தகம் வாங்குவது எல்லாம் குறைந்துபோய் வாய்ப்புக் கிடைக்கும்போது மட்டுமே வாங்கமுடிகிறது.

திருமணத்திற்குப் பிறகு எனது மனைவியுடன் ஒரு முன் மதிய நேரத்தில் மதுரை மீனாட்சி கோவிலுக்கு சென்றுவிட்டு வரும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அலசி ஒரு 5 புத்தகங்கள் வாங்கியதும் பின்னர் 2009ம் ஆண்டு விடுமுறையில் சர்வோதய இலக்கியப் பண்ணையில் நிறைய நேரம் செலவழித்து புத்தகம் வாங்கியதும் இனிமையான அனுபவங்கள்.

புத்தகம் படித்தல் என்ற அருமையான பழக்கத்தை அறிமுகம் செய்து எனது வாழ்க்கையை மடைமாற்றிவிட்டதில் எனது நண்பன் பிரகாஷுக்கு மிக முக்கிய பங்குண்டு. இந்த சந்தர்ப்பத்தில் அவனுக்கு ஒரு நன்றி.

Sunday, September 5, 2010

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

அதனால்தான் மகாகவி பாரதியார்கூட

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்

என்றார்.

எனது பள்ளி வாழ்க்கை மிக மிக இனிமையாக அமைந்த ஒன்று. குட்டி ஒண்ணாப்பில் (அரை கிளாஸ்) ஆரம்பித்து பனிரெண்டாம் வகுப்புவரை ஒரே பள்ளியில் படித்தேன். இன்றும் எனது பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும்போதும் சந்திக்கிறேன்.

குறிப்பாய் 12ம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த சாந்தி அக்கா, பழனிச்சாமி அய்யா ஆகியோர் என மனதில் என்றும் நீங்கா இடம் பெற்றவர்கள்.

எனது பள்ளி வாழ்க்கை குறித்த எனது அனுபவங்களை முன்னரே எழுதியிருக்கிறேன்

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை.. பகுதி இரண்டு


இது தவிர காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் எனக்கு பாடம் எடுத்த அனைத்து ஆசிரியர்களையும் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருமே சொல்லிவைத்ததுபோல் என்மீது மிக அன்பாய் இருந்தனர். பள்ளியோ, கல்லூரியோ ஒருபோதும் சுமையாக உணர்ந்ததில்லை நான். அந்த வகையில் எல்லா ஆசிரியர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்.

எழுத்தறிவித்தவன் என்ற வகையில் எனது அன்பு நண்பன் டாக்டர் ஆர்.பிரகாஷையும் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவனால்தான் சராசரியைவிட மோசமான மாணவனாய் இருந்த என்னை ஒரு உருப்படியான ஆளாக்க முடிந்தது. உனது நண்பனைப் பற்றிச் சொல் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்பது எனது விஷயத்தில் மிக உண்மை.

பள்ளி, கல்லூரி வாழ்க்கையை நேசிப்பவராய் இருந்து சொல்லிக் கொடுத்த ஆசிரியரை நன்றியுடன் நினைப்பவராய் இருந்தால் உங்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Saturday, September 4, 2010

நான் வெளிநாட்டு வேலைக்கு தேர்வான கதை.

2002ல் திண்டுக்கல்லில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எங்கள் ஊரில் ரோட்டைத் தேய்த்துக்கொண்டிருந்தேன். வழக்கமாக வேலையில்லாதவர்கள் செய்யும் டீக்கடை வாசமும், தினத்தந்தி பேப்பருமாய் செட்டில் ஆகியிருந்த காலம் அது. ஒருநாள் தினத்தந்தியில் மஸ்கட்டில் தோட்டக்கலை மேற்பார்வையாளருக்கு ஆட்கள் தேவைனு ஒரு விளம்பரம். அன்னிக்கு காலையில் ரொம்ப ஃப்ரீயா இருந்தேன், என்னோட பிரண்டு சரவணக்குமார் கடையில் ஒரு வெள்ளை பேப்பர் வாங்கி கைலையே எழுதின ஒரு சி.வி ரெடி செஞ்சு 2 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அவங்க சொன்ன அட்ரஸுக்கு அனுப்பி வச்சுட்டேன். விளம்பரம் பாத்ததிலிருந்து ஒருமணி நேரத்துல எழுதி போஸ்ட் செஞ்சாச்சு. ஏன்னா 1996ல இருந்து பாஸ்போர்ட் எங்கிட்ட இருக்கு. ஒருவாட்டிகூட வெளிநாடு போக வாய்ப்பு கிடைக்கலை. கழுத இந்த வேலை கெடைச்சுப்போச்சுன்னா??

நமக்குக் கெடைக்காதுன்னு நல்லாத் தெரியும். இருந்தாலும் கழுதைய போட்டுத்தான் வைப்பமேன்னு போட்டு வச்சது. அட்லீஸ்ட் இண்டர்வியூவுக்கு கூப்டாய்ங்கன்னா, அப்படியே தாம்பரத்துல அக்கா வீட்டுல ஒரு நாலுநாள் இருந்துட்டு அப்படியே அக்காகிட்ட கொஞ்சம் கைச்செலவுக்கு காசையும் தேத்திட்டு வந்துறலாம்கிறது மாஸ்டர் பிளான்.

மறுநாள் டீக்கடையில் உக்காந்திருக்கேன், சரவணன் வந்து எங்கப்பா என்னைய தேடிக்கிட்டிருக்கார்னு சொன்னான். சாப்பிடுற நேரம் தவிர மத்த நேரத்துல தேடமாட்டாரேனு வீடுக்குப் போனா, டேய் ரெண்டுவாட்டி மெட்ராஸுல இருந்து ஃபோன் வந்துச்சிரா அப்படின்னார் எங்கப்பா.. நமக்கு எவண்டா மெட்ராஸ்ல இருந்து போன் செய்யப்போறான்னு என்னமாச்சும் சொன்னாங்களாப்பானு கேட்டா இல்லடா திருப்பி அரைமணி நேரத்துல கூப்பிடுறேன்னு சொல்லியிருக்காய்ங்க அப்படின்னார். சொல்லிவச்ச்ச மாதிரி கரெக்டா கூப்டாய்ங்க..

நீங்க ஜெயக்குமார்தான.. ஆமா சார், கார்டன் சூப்பர்வைசர் வேலைக்கு அப்ளிகெஷன் போட்டிருந்தீங்கள்ல, ஆமா சார். உடனே கிளம்பி நாளைக்கு நடக்குற இண்டர்வியூவுக்கு வந்துருங்க அப்படிண்னுட்டாய்ங்க.. நானும் கெத்தா அதெல்லாம் சும்மா ஊர் சுத்துற மாதிரின்னா நான் வரலை. செலெக்ட் ஆகுறதுக்கு ஒரு 50 சதவீதமாச்சும் வாய்ப்பிருக்கனும்னேன். அந்த ஆளும் சார் இதுவரைக்கும் வந்ததுலையே நீங்க தான் சார் டிப்ளோமா, நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் சார்னான்.. சரி கழுதைய போய்ட்டுத்தான் வருவமேன்னுட்டு அப்பாட்ட ஒரு 500 ரூபாயத் தேத்திகிட்டு சென்னைக்கு வந்தாச்சு.

ஏதோ ஒரு ஹோட்டல்லதான் இண்டர்வியூ. காலையில 9 மணிக்கே போயாச்சு. அங்க பாத்தா உக்கார இடம் இல்லை. கிட்டத்தட்ட ஒரு 500 பேர் இருக்காய்ங்க..

என்னைய கூப்டவன அந்தக் கூட்டத்திலையும் தேடிக்கண்டுபிடிச்சி என்னையா இது திருவிழாக்கூட்டம் மாதிரி உக்காந்திருக்காய்ங்க அப்படின்னா, சார், கோச்சுக்காதீங்க, இது கிளீனர்களுக்கும், தோட்டவேலை செய்றவங்களுக்கும் இண்டர்வியூ, உங்களுக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அப்படிண்ட்டான். என்ன செய்யுறது வந்தாச்சு அட்டெண்ட் பன்னிட்டே போய்ருவோம்னு சாயந்திரம் வரைக்கும் இருந்து 4 மணிக்கு இண்டர்வியூவுக்குப் போனேன். ஒரு 9 பேர் இருந்தாய்ங்க. அதுல ஒருத்தன் பி.எஸ்.ஸி அக்ரி. சரி நமக்கு இன்னிக்கு இல்லைனு முடிவே செஞ்சுட்டேன். அதுபோக எட்டுபேருல மத்தவைங்க எல்லாம் +2க்கு அப்புறம் தோட்டக்காரனுங்களா 10 வருஷத்துக்கு மேல வெளிநாட்டுல வேலை செஞ்சு சூப்பர்வைசர் ஆகுறதுக்காக காத்திருக்குற ஆளுங்க..நானு இப்பதான் இந்த வேலைகிடைச்சாத்தான் வெளிநாட்டையே பாக்கப்போற ஆளு.

சரி, நம்மள கூப்டு கழுத்தறுத்தவன சும்மா விடக்கூடாதுன்னு கருவிகிட்டே இருந்தேன். 6 வது ஆளாவோ, ஏழாவது ஆளாவோ கூப்டாய்ங்க. மொத்தம் ரெண்டு பேரு. பொதுவா மத்திய கிழக்கு வேலைன்னா ஒரு அரபியாச்சும் வந்து சும்மா உக்காந்திருப்பாரு, இங்க அப்படி யாருமே இல்லை. சரி, இன்னிக்கு இவனுங்கள போட்டு நொங்கெடுத்துற வேண்டியதுதான்னு பிளான் செஞ்சு மாலை வணக்கம் சொல்லி உக்காந்தேன். சர்டிபிகேட் எல்லாம் பாத்தாங்க.. அப்புறம் வீட்டைப் பத்தி சொல்லுனு இங்கிலீசுல கேட்டாய்ங்க.. சொன்னேன். அப்புறம் புல் எப்படிப் போடுவ அப்படின்னாங்க.. என்னய்யா கேள்வி கேக்குறனு ஒரு எரிச்சலோட கேட்டேன். இல்லை ஒரு காலி இடத்துல எப்படி லான் போடுவன்னு கேட்டாய்ங்க, சொன்னேன். அப்புறம் புல்லுக்கு என்னென்ன வியாதிகள் வரும்னாய்ங்க சொன்னேன்.. அடுத்து எந்தெந்த பூ எந்தெந்த பருவ காலத்துல பூக்கும்னாய்ங்க.. உங்களப்பாத்தா வேலை தர்ற மாதிரித் தெரியலை.. எனக்கு ராத்திரிக்கு பஸ் இருக்கு, ஊரப்பாத்துப் போகனும், சட்டு, புட்டுனு இண்டர்வியூவ முடிங்கய்யான்னேன்.. உடனே ஒருத்தர் ஆப்ரேஷன் மேனேஜராம்.. அவர், தம்பி நீ செலக்ட் ஆய்ட்ட , உன்னோட இங்கிலீஷையும், ஹிந்தியையும்தான் செக் பன்னிகிட்டிருக்கோம்னார். எனக்கு இவனுக சொல்றதுல நம்பிக்கை இல்லாததுனால கொஞ்சம் மப்பா, உங்க ரெண்டு பேரவிட நான் நல்லாப் பேசுவேனு சொன்னதும், சரி, கெளம்பிக்க. ஒரு வாரத்துல அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஏஜெண்டுக்கு வரும்னுட்டாய்ங்க..

அப்பத்தான் கொஞ்சூண்டு நம்பிக்கை வந்துச்சு.. இதுலையும் ஒரு இக்கன்னா வச்சித்தான் விட்டாய்ங்க. ஒரு லச்ச ரூபா கட்டுனாதான் வேலைன்னு. நான் கேட்ட சம்பளத்துல பாதிதான் குடுத்தாய்ங்க. ( எனக்கு தன்நம்பிக்கை ஜாஸ்தி) எதுக்குடா தரனும், என்னோட படிப்பையும், பேச்சையும் வச்சித்தானடா குடுத்தீங்க அப்படினு சண்டை போடவும், டபால்னு எங்க கமிஷன் வேண்டாம் ஏஜெண்டுக்கு மட்டும் 65 ஆயிரம் கட்டிருன்னாய்ங்க. நாலு மாசம் வெட்டியா திரிஞ்சதா நெனச்சுக்க வேண்டியதுதான்னு சரிய்யான்னு சொல்லி வச்சேன். அப்புறம் என்னோட கண்டிசன்களான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெர் ஓமான் கம்பெனியோட லெட்டெர் ஹெட்ல என்னோட வீட்டு விலாசத்துக்கு வரனும். அதுக்கப்புறம்தான் நான் பணம் தருவேன் அப்டின்னு சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாய்ங்க. எனக்கு நல்ல நேரம் எங்க சொந்தக்காரர் ஒருத்தர் மஸ்கட்டுல இருந்தார். அவர்ட்ட அப்பாயிண்ட்மெண்ட் லெட்டெரை அனுப்பி வச்சி இப்படி ஒரு கம்பெனி இருக்கா, சம்பளம் எல்லாம் ஒழுங்கா தர்ராய்ங்களா அப்டினு எல்லாம் கேட்டு கன்ஃபார்ம் செஞ்ச பின்னாடிதான் வண்டி ஏறுனேன்..

எல்லாம் சரியாயி, விசா, டிக்கெட் எல்லாம் வந்தாச்சி, ஒருவேளை கம்பெணி ஏமாத்திட்டா அப்டின்னு ஒரு 12000 ரூபாய்க்கு ஓமானி ரியாலா மாத்தி கையில வச்சிகிட்டேன்.. திரும்பி வர்ரதுக்கு வேனும்ல..காலையில 6 மணிக்கு கல்ஃப் ஏர் பிளைட். மொதநா ராத்திரி 11 மணிக்கே ஏர்போர்ட்டுக்குபோயாச்சு. எங்க அண்ணன், அக்கா வீட்டுக்காரர், நானு. எல்லோரும் வரிசையில் போற மாதிரி நானும் வரிசையில் போனேன். உள்ள விடுறதுக்கு முன்னால ஒரு போலிஸ் செக் செய்வார், டிக்கெட், பாஸ்போர்ட் எல்லாம். அவரு டிக்கெட்ட பாத்துட்டு என்னைய ஒரு ஏளனப் பார்வை பாத்தாரு பாருங்க.. எத்தன வருஷம் ஆனாலும் மறக்காது.. யோவ் ஆறு மணி ஃப்ளைட்டுக்கு இப்பவே வந்து என்னய்யா சாதிக்கப்போற.. போய்ட்டு நாலு மணிக்கு வான்னுட்டார். வேற வழியில்லாம ஏர்போர்ட்லையே அடுத்த அஞ்சு மணி நேரத்தை டீ குடிச்சே ஒழிச்சோம்.

காலையில உள்ளூர் நேரம் எட்டு மணிக்கு மஸ்கட் ஏர்போர்ட்டுல இறங்கியாச்சி. ஒரிஜினல் விசாவை கவுண்டர்ல இருந்து வாங்கிட்டு வந்து இம்மிக்ரேஷன் ஆபிசர்ட்ட தரனும். அதைச் செஞ்சதே பெரிய சாதனை செஞ்ச மாதிரி இருந்துச்சி. அப்புறம் மஸ்கட் ஏர்போர்ட்டுக்கு வெளிய வந்தேன். என்னைய கூப்டுட்டுப் போக யாராச்சும் வந்திருப்பாய்ங்கன்னு ஒவ்வொருத்தனையா பாத்துகிட்டு, ஒவ்வொரு பிளக்கார்டையா பாத்துகிட்டு வாரேன் ஒருத்தனுமே இல்லை.. லேசா வயித்தக் கலக்கிச்சி. சரி, போட்டுத்தள்ளிட்டாய்ங்க அப்படினு மனசுல ஒரு பயம்.. திடீர்னு ஒருத்தர் வந்தார், ஹலோ ஜெயக்குமார்தான நீங்க அப்படின்னு தமிழ்ல கேட்டார், ஆமா சார்னேன், அப்படியே பின்னாடியே வாங்கன்னு விறு விறுன்னு நடக்க ஆரம்பிச்சார். நானும் என்னோட பெரிய பொட்டிய தூக்கிகிட்டே கிட்டத்தட்ட ஓடுனேன். கடைசியில ஏர்போர்ட்டோட கடைசிப் பகுதிக்கு வந்தாச்சு, அதாவது டிபார்ச்சர் கவுண்டர் கிட்ட உள்ள பகுதிக்கு வந்தாச்சு. சடக்குனு ஒரு ரூமுக்குள்ள நுழைஞ்சாரு, நானும் பின்னாடியே போனேன். பிளைட்ல என்னையா சாப்ட அப்படின்னார். நான் ஒன்னும் சாப்பிடலை அப்படின்னேன். சரி, தோசையும் சாம்பாரும் இருக்கு சாப்பிடுங்க அப்படின்னார். எனக்கு இவங்க யாரு, எதுக்கு நம்மள இங்க கூப்டு வந்திருக்காய்ங்க, எப்படி நம்மள பேரச் சொல்லி கூப்டுட்டு வந்தாய்ங்க அப்படினு ஒரே குழப்பத்துல இருந்தேன். அவர்ட்ட சார், நான் என்னோட கம்பெனி ஆளுக வந்து கூப்டுட்டுப் போவாங்கன்னு சொன்னாங்க, அதனால அங்க நிக்கிறேன்னேன். அவரு ஒரு சிரிப்பு சிரிச்சு நம்மாளுக மொதவாட்டி வரும்போது என்னல்லாம் தப்பு செய்வாய்ங்களோ அதெல்லாம் கரெக்டா செய்யுறைய்யா நீயி அப்படின்னார்.

என்ன சார்னா, என்னோட சட்டையப் பாரு.. என்ன எழுதியிருக்குனு அப்படின்னார், நான் வேலைக்கு வந்திருக்குற கம்பெனியோட ஆளுதான் அவரு. நான் வேலைக்கு வந்ந்திருக்குற கம்பெனிதான் ரன்வேயில ஆரம்பிச்சு, வெளியில் கார்பார்க் வரைக்கும் கிளினிங்கும், கார்டனிங்கும் செய்யுது. கொஞ்சம் பதட்டப்படாம இருந்திருந்தாலே இதையெல்லாம் கவனிச்சிருக்கலாம். அதுக்கப்புறம் என்னைய வரவேற்ற நண்பர் சைமன் என்னுடைய உயிர் நண்பன் ஆனார். அந்தக் கம்பெனியை விட்டு கிட்டத்தட்ட 7வருஷம் ஆயிருச்சி. இப்பவும் அவர்ட்ட பேச்சுவார்த்தை இருக்கு.

அன்னிக்கு வெளிநாட்டுக்குப் போனவன் அதுக்கப்புறம் திரும்பிப் பாக்கலைனு வைங்க..எதுக்கு இந்தக் கதைன்னா, எங்கையாச்சும் வாய்ப்பு இருந்துச்சுன்னா கல்ல எறிஞ்சிறனும், நமக்கு எங்க கிடைக்கப்போகுது அப்படினு விட்டுடக் கூடாது. அதான் நான் தினத்தந்தி பேப்பரப் பாத்து அப்ளிகேஷன் போட்டது மூலமா கத்துக்கிட்டது. அந்த முதல் அடியிலிருந்துதான் எனது இன்றைய நிலை எட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது ஒரு ஆச்சரியம் கலந்த பரவசம் ஏற்படுவதை தவிர்க்க முடிவதில்லை

Wednesday, September 1, 2010

ஓமானில் கார்

செந்திலின் பக்கங்களில் இந்த பதிவைப் பார்த்த உடன் நம்ம கதையையும் கொஞ்சம் எடுத்து விடலாமே எனத் தோன்றியதால் இந்தப் பதிவு.

துபாய், மஸ்கட் பக்கம் வேலைக்குப் போறவங்கள்ள கிட்டத்தட்ட எல்லோருக்கும் விருப்பப்பட்டா லைசென்ஸ் வாங்கிக்கிற மாதிரி வாய்ப்பு இருக்கும். எனக்கு சென்னையில வேலைக்கு எடுக்கும்போதே 3 மாசத்துல லைசென்ஸ் வாங்கிடனும் அப்படிங்கிற கண்டிஷனோடதான் வேலைக்கு எடுத்தாய்ங்க..

இதென்ன பிரமாதம், இப்பதான் நம்மூர் லைசென்ஸ் வாங்கியிருக்கேன்.. அதே டெக்னிக்கை இடது புறமா செஞ்சா முடிஞ்சிச்சினு நெனச்சிகிட்டே விமானத்தில் ஏறும்போது விதி என்னையப் பாத்து சிரிச்சது எனக்குத் தெரியலை.

மஸ்கட்ல போய் இறங்குன அன்னிக்கே பேதிக்கு மருந்து குடுத்துட்டாய்ங்க.. ஏர்போர்ட்ல இருந்து நான் வேலை செய்யுற கம்பெனியோட கேம்ப்புக்கு போறதுக்கு ஒரு 40 கிலோமீட்டர் இருக்கும். வண்டிய எடுக்கும்போதே பைக்க எடுக்குற மாதிரி ஒரு சுண்டு சுண்டி எடுத்துட்டு அப்புறம் எங்கையும் ஸ்பீடைக் குறைக்காம அப்படியே வண்டி 140 கிலோமீட்டர் வேகம் வரைக்கும் போகும், அப்பப்ப 120கு வந்துட்டு திருப்பி 140 கி.மீலையே போய்க்கிட்டிருந்துச்சி. சரி, இன்னிக்கு கதைய முடிச்சுட்டாய்ங்கனுதான் நெனச்சேன். ஒரு 30 நிமிஷத்துல கேம்ப்புல இறக்கி விட்டபின்னாலதான் உசுரே வந்துச்சி.

வேலைக்குச் சேந்த மறுநாள்லையே எங்க டிவிஷன் மேனேஜர், தம்பி, ட்ரைவிங் லைசென்ஸ் வாங்குறதுக்கு உண்டான பெர்மிஷன மொதல்ல எழுதிரு, அப்ரூவல் வர்ரதுக்கு 15 நாள் ஆகும் அப்படின்னு சொல்லி எழுத வச்சாரு. ஒரு வாரத்துக்குள்ளையே ஐ.டி கார்டு வந்துருச்சி. அப்புறம் பெர்மிஷனும் வந்தாச்சி. மேனேஜர், சீக்கிரம் லைசென்ஸ எடுத்துரு. இல்லைன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னாரு.

ரொம்ப கஷ்டம் அப்படிங்கிறதுக்கு என்ன அர்த்தம்னா எனக்கு இப்ப வண்டியும் ட்ரைவரும் குடுத்துருக்காய்ங்க, அதை 3 மாசம் வரைக்கும்தான் தருவாங்க. அதுக்கப்புறம் லைசென்ஸ் எடுக்குறவரைக்கும் டாக்ஸியிலதான் போகனும். மஸ்கட் ஊரெல்லாம் சுத்துர தோட்டக்கலை சூப்பர்வைசர் நானு. அங்க அடிக்கிற வெயிலுக்கு 10 நிமிஷம் வெளிய நின்னா என்னப்பா குளிச்சிட்டு தொவட்டாம வந்துட்டியான்னு கேக்குற அளவு வேர்க்கும். கம்பெனி யுனிஃபார்ம் வேற முழுக்கை சட்டை, கழுத்துல டை. அங்க எப்பவோ இருந்த ஒரு இந்திய எக்ஸ் சர்வீஸ்மேன் எல்லாத்தையும் புரொஃபஷனல் ஆக்குறேன்னு ஆரம்பிச்சு வச்ச ட்ரெஸ்கோட் அது. நான் கொஞ்சமா சவுண்டு விடவும் எங்கூட சேந்துகிட்டு மத்தவைங்களும் சேந்து சவுண்டு விட்டு வெளிய வேலை செய்யுற எங்களமாதிரி சூப்பர்வைசர்களுக்கு அரைக்கை சட்டையும்,. டை கட்டவேண்டியதில்லைன்னும் பெர்மிஷன் வாங்குனோம்.

எதுக்கு இந்த பூர்வாங்கக் கதைன்னா லைச்சென்ஸ் எவ்வளவு முக்கியம்கிறதும், எடுக்குறது என்ன பெரிய பிரம்ம வித்தையான்னு நெனச்சதுக்கு கிடைச்ச அனுபவத்தை சொல்றதுக்கும். ஒரு சுபமுகூர்த்த நன்நாளில் எனக்கு ஒரு பலூச்சி - பாக்கிஸ்தானி வாத்தியார் கிடைச்சார். அவர்ட்ட ”இங்க பாருங்க, இப்பதான் எங்கூர்ல லைசென்ஸ் வாங்கிட்டு நேரா இங்க வாரேன்”னதும், அப்படியா, அப்படின்னுட்டு வண்டிய குடுத்து பார்க்கிங்கு உள்ளையே ஒரு ரவுண்டு எடுக்கச் சொன்னார். ரெண்டு வாட்டி ஆஃப் செஞ்சு ஒருவழியா வண்டி ஒட்டி, நிறுத்துனதும், ஒரு பெருமைப் பார்வை பாத்தேன். அவர் உடனே எவ்வளவு சீக்கிரம் உங்க ஊர் ட்ரைவிங்க மறக்குரையோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு லைசென்ஸ் கிடைக்கும்னார்.

காலையில 5 முதல் ஆறு மணிவரை எனக்கு ட்ரைவிங் கிளாஸ். என்னோட கேம்ப் வாசல்ல வந்து பிக்கப் செய்வார் ட்ரெயினர். 4.55க்கு கேட்டுல நான் இருக்கனும். 5 மணிக்கு கேட்டுல வந்துட்டு நான் இல்லைன்னா, இல்ல ஓடி வர்றத பாத்ததுக்கப்புறமும், வண்டிய கெளப்பிட்டு போய்ட்டே இருப்பார். அவ்வளவு ஸ்ட்ரிக்டு. நாந்தாண்டா லேட்டா வரனும், நீ இல்லைடா அப்படிம்பார். பணம் கட்டிப் படிக்கிற உனக்கே அக்கறை இல்லைனா எனக்கு என்ன ஆச்சு அப்படிம்பார்.

அதி தீவிர கோச் அவர். அடிக்க மட்டும் மாட்டார். அவ்வளவு கண்டிப்பு. ஓமான்ல ட்ரைவிங் டெஸ்ட்ல மொதல்ல பார்க்கிங் போடுறது ஒரு டெஸ்ட். வண்டிய ரிவர்ஸ்ல பார்க்கிங் போடனும், வலதுபக்கம் இருந்து ஒருவாட்டி, இடது பக்கம் இருந்து ஒருவாட்டி. ரெண்டு பக்கமும் ட்ரம்ஸ் இருக்கும் அதைத் தொடாம போடனும். தொட்டா அவுட். பெயில். நம்மாளுக இடிக்கவே மாட்டான்னு நெனைக்கும்போதே எப்படியோ வந்து கரெக்டா இடிப்பாங்க.

அப்புறம் செயற்கையா உருவாக்கப்பட்ட ஒரு மலைப்பாதைமேல போய்ட்டு கீழ வரனும். மேல ஏறும்போது அங்க ஒரு சிக்னல் இருக்கும். அங்க சிவப்பு வந்து ஒரு நிமிஷம் கழிச்சு பச்சை வரும். உங்க வண்டி ஒரு அடி கீழ இறங்குனாலும் நீங்க பெயில். நம்மாளுக சில பேரு மேல போன வேகத்துலையே கீழ வருவாங்க.. பதட்டத்துல

இந்த ரெண்டு கண்டத்தையும் தாண்டிட்டீங்கன்னா, அடுத்தது ரோடு. இங்கனதான் எல்லாப் பயகளும் சீ, இதெல்லாம் ஒரு பொழப்பா அப்படிங்கிற மனநிலைக்கு வர்ற இடம்.

நாளைக்கு டெஸ்ட் அப்படினு ட்ரெயினர் சொன்ன உடனேயே மனசுக்குள்ள நம்ம கற்பனையிலேயே பலரவுண்டு வந்திருப்போம், இதுவரைக்கும் வண்டி ஓட்டுன இடங்கள்ல. டெஸ்ட் அன்னிக்கு உங்க கூட ஒரு ஓமான் போலிஸ் பக்கத்துல இருப்பார், உங்க ட்ரெயினர் பின்னாடி சீட்ல. சலாம் அலைக்கும் எல்லாம் முடிஞ்ச பின்னால, போலிஸ்காரர் உங்கள வண்டி எடுங்கனு சொல்வாரு. எடுத்துட்டீங்கன்னா பெயிலு :-) ஏன்னா பாஸஞ்சர் பெல்ட் போட்ருக்காரான்னு பாக்க வேண்டியது ட்ரைவரோட வேலை. சீட் பெல்ட் ப்ளீஸ்னு போலிஸ்ட்ட சொல்லனும். போலிஸுக்கு தெரியாததானு நாமளே நெனச்சிகிட்ட பெயில்தான்.. அதுவும் பார்க்கிங்க விட்டு வெளிய வர்றதுக்கு முன்னாடியே பெயிலு.

அடுத்து வண்டி ஒரு ஜெர்க் ஆகி ஆஃப் ஆகும் பதட்டத்துல.. பெயில்

வண்டி போய்ட்டிருக்கும்போது கை சும்மா இல்லாம ரியர்வியூ மிரர்ல கைய வைப்பீங்க, பெயில். ஏன்னா, வண்டி கெளம்புறதுக்கு முன்னாடியே சீட், ரிவர்வியூ மிரர், செண்டர் மிரர் எல்லாத்தையும் சரி செய்யனும்.

போலிஸ் வலது பக்கம் திரும்பு அப்படிம்பார்.. அங்க நோ எண்ட்ரி இருக்கும். போலிஸே சொல்லிட்டாருனு வண்டிய திருப்புனா பெயில். அறிவில்ல, நோ எண்ட்ரியில போறியேன்னு ஒரு சவுண்டு வேற விழும்,. பத்தாக்கொறைக்கு ட்ரெயினருக்கு என்னய்யா உங்க ஆளுன்னு ஒரு இழுப்பு இழுப்பார். ட்ரெயினரின் வீட்டு வளர்ப்பைப் பொறுத்து உங்களுக்கு கீழே இறங்கிய பின்பு கிடைக்கும் வசவுகள் மாறும்.

முதல் முறை பெயிலாகும்போது நமக்கு ஆறுதல் சொல்ல பலர் இருப்பார்கள்.. என்னய்யா இதுக்குப்போயி கலங்குற,.. அடுத்ததுல பாஸ் செஞ்சிருவ பாருன்னு சொல்வாங்க..

ரெண்டாவது தடவை பெயிலாகும்போது சரி, விடுங்க அடுத்ததுல பாருங்க அப்படிம்பாங்க..

மூணாவது தடவை பெயிலான பின்னாடி உங்களுக்கு 10, 15 நண்பர்கள் கிடைச்சிருப்பாங்க,

மஸ்கட்டுல எங்கெங்கல்லாம் டெஸ்ட் நடக்குதுனு ஒரு ஐடியா கிடைச்சுரும்.

எங்க போனா சீக்கிரம் பாஸாகலாம் அப்படிங்கிற மாதிரி நிறையபேரு ஐடியா சொல்ல ஆரம்பிப்பாங்க.

நாலாவது தடவை பெயிலாகும்போது ஓமான் போலிஸ் பாரபட்சம் காட்டுறது மாதிரி தெரியும்.

ஐந்தாவது முறை நமக்கெல்லாம் எப்ப லைசென்ஸ் கிடைச்சு என்னிக்கு வண்டி ஓட்டுறதுனு ஒரு எண்ணம் வந்துரும்.

ஆறாவது முறை, ஏழாவது முறையெல்லாம் கடவுள் மேல பாரத்த போட்டு வண்டிய ஓட்ட ஆரம்பிச்சிருவீங்க.

இப்படி அடிக்கடி டெஸ்ட்டுக்கு ஓட்டி, ஓட்டி உங்களுக்கும் வண்டிய எப்படி ஓட்டுறதுன்னு ஐடியா கிடச்சிருக்கும். போலிஸ் பயமும் போயிருக்கும். நெறைய பேருக்கு போலிஸ் ஃபிரண்டே இருப்பாங்கன்னா பாத்துக்கங்க. அவ்வளவுதடவ அங்க வந்திருப்பாரு.. .. கே ஃபாலக் ஜெகொமார் (எப்படி இருக்கீங்க ஜெயக்குமார் என்பதன் அரபுத் திரிபு) அப்படின்னு அன்பா கேட்டுட்டு கரெக்டா பெயில் போடுவார். அப்புறம் ஒரு டெஸ்ட்டுல இவைங்க எங்க பாஸ் போடப் போறாய்ங்க அப்படினு வண்டி ஓட்டிட்டு டெஸ்ட் முடிஞ்சு இறங்குனு சொல்லும்போது உங்க ட்ரைவிங் புஸ்தகத்த போலிஸ் கையில குடுப்பார்.. அப்படின்னா..நான்..நான்.. பாஸ் ஆய்ட்டேனா அப்படினு ஒரு சந்தோஷம் வரும் பாருங்க.. அதெல்லாம் லைசென்ஸ் வாங்குனவனுக்குத்தான் தெரியும்.

நம்மாளு ஒருத்தர் உ.பிக் காரர். 48வது தடவையா டெஸ்டுக்குப்போயி பாஸானாரு. ஓமான் நாட்டுல எங்கெங்க ட்ரைவிங் டெஸ்ட் நடக்கும், எங்க போனா சுளுவா இருக்கும், எந்த ஊர் போலிஸ் நல்லவங்க, எந்த ஊர்ல நாஷ்டா நல்லா இருக்கும் இப்படி ஓமான் நாட்டையே சுத்தி சுத்தி வந்த அனுபவத்துல ஏகப்பட்ட தகவல்கள் சேகரிச்சாரு. ஒவ்வொரு வாட்டி பெயிலாகும்போதும் இந்த ஊர் போலிஸ்காரங்க சரியில்லைனு அடுத்த ஊர் போயிருவாரு. ஓமானில் எங்கு வேண்டுமானாலும் டெஸ்ட் கொடுக்கலாம். தமிழ்நாட்டுல ட்ரெயினிங் எடுத்துட்டு காஷ்மீர்ல டெஸ்ட் தர்றதுமாதிரி.

பொதுவா லஞ்சம் வாங்க மாட்டாங்க. வாஸ்தா எனப்படும் ரெகமெண்டேஷன்ல சிலருக்கு லைசென்ஸ் கிடைக்கும். ஆனால் அப்படி லைசென்ஸ் வாங்குவது சாவை வாங்குவதற்குச் சமம். இவ்வளவு கடுமையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டு, கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றி தேர்வுகள் நடத்தி அதில் பாசாகும் ஆட்களே விபத்தில் விழும்போது, இப்படி ரெகமெண்டேஷனில் லைசென்ஸ் வாங்குவோர் தானும் சிக்கலில் மாட்டி பிறரையும் விபத்தில் மாட்டிவிடுவார்கள்.

அப்புறம் லைசென்ஸ் வாங்குன பின்னாடி அப்படியே காத்துல ஒரு வாரம் மெதப்பீங்க.. எல்லோரும் வாழ்த்துச் சொல்வாங்க. கம்பெனி ரொம்ப தாராளமா டபுள் கேபின் பிக்கப் குடுக்கும். பெட்ரோல் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். ஒரு வருடம் அனுபவித்த பின்னர் ட்ரைவிங் போரடித்து எப்படா பக்கத்துல உக்காந்துட்டு போவோம்னு ரொம்பப் பேருக்கு ஆயிரும். ஆனா எனக்கு மட்டும் இன்னிக்கு வரைக்கும் ட்ரைவிங்தான் எனக்கு ரொம்பப் பிடிச்ச பொழுதுபோக்கு. நானும் கிட்டத்தட்ட 3.5 லட்சம் கிலோமீட்டர் ஓட்டிட்டேன் ஓமான், கத்தார், துபாய்னு. இன்னும் எனக்கு ரொம்பப் பிடிச்சது இடது கைய ஜன்னல்ல வச்சிகிட்டு, ஒத்தக்கையில் வண்டிய ஓட்டிக்கிட்டே, இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே நீளமான பயனங்கள் போவது..

அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய கனடாவில் கார் அவசியம் படியுங்கள். மனுஷன் கலக்கியிருப்பார்.