Friday, January 9, 2015

சில அனுபவங்கள்..

இம்முறை கல்லுப்பட்டியில் இருக்கும் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்ய விண்ணப்பம் கொடுக்க பேரையூர் தாலுகா ஆஃபிஸுக்கு சென்றிருந்தேன். மாற்றுத்திறனாளி ஒருவர் ( பாறைக்கு வைக்கும் வெடி வெடித்ததில் நாலு விரல்களை இழந்துவிட்டார்) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். என் கையெழுத்தை விட 100 மடங்கு அழகாக இருந்தது அவர் கையெழுத்து. அதைச் சொல்லியும் விட்டேன். பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் படிவங்களைக் கொடுத்ததும் அவர் ஒரு சீல் அடித்து உங்கள் ரேஷன் கடையில் சென்று பெயர் நீக்கி விட்டதாக எழுதிக்கொண்டு வாருங்கள் எனச் சொல்லி அனுப்பினார். அதையும் செய்துகொண்டுவந்து கொடுத்தேன். எல்லாம் 3 மணி நேரத்திற்குள் முடிந்தது. வாங்கிக்கொண்டவர் காற்றில் சொல்வதுபோல 50 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றார்.. யார்ட்ட சொல்றீங்க எனக்கேட்டதும் வெள்ளிக்கிழமை கிடைக்கும் சார், போய்ட்டு வாங்க எனச் சொல்லி அனுப்பினார். சொன்னபடியே பெயர் நீக்கிச் சான்றிதழும் கிடைத்தாகிவிட்டது. நாம் மட்டும் கொஞ்சம் நாசூக்கு பார்க்காமல், 50 ரூபாதான என லஞ்சத்தை ஊக்குவிக்காமல் இருந்தால், இருநாட்களுக்கு பதில் நான்கு நாட்கள் கழித்து ஒப்புதல் கடிதங்களை பெற்றுக்கொண்டால் ஓரளவேனும் லஞ்சத்தை குறைக்கலாம். 50 ரூபாயில் என்ன ஆகிடப்போகுது என நினைக்கும் மக்கள்தான், நாளைக்கு எவன் அலைவான் என சோம்பேறித்தனம் படுவோருமே அரசாங்கத்தில் கடைநிலையில் இருக்கும் ஊழியர்களுக்கு கை நீட்ட சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பது என் அபிப்ராயம்.

------------

என் பள்ளிக்கால நண்பனான செல்வராஜை மீண்டும் சந்தித்தேன்.. அவனைப்பற்றி பிளாக்கிலோ ஃபேஸ்புக்கிலோ எழுதிய ஞாபகம். போலிஸ்காரர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து 42 வயதுக்குள் முதுமை வந்து பார்க்கவே பரிதாபமாய் இருந்தான். குடி ஆளை உருக்கி எடுத்துவிட்டது. கை நீளம் என்பதால் போலிஸ் ஸ்டேஷன் அடிக்கடி சென்றுவருவதால் குடும்பத்தினரும் அவனை கைவிட்டுவிட்டனர். லோடுமேனாக வேலை செய்து வருகிறான். எலேய் ஜெயக்குமாரு என அன்போடு வந்து கைகுலுக்கினதில் தெரிந்தது பள்ளிக்கால நண்பனை மீண்டும் சந்தித்ததில் கிடைத்த மகிழ்ச்சி. நான் லோடுமேனாகா ஆகி இருக்கமாட்டேன் என்றாலும் எதேனும் ஒரு துணிக்கடையிலோ, உரக்கடையிலோ வேலை செய்துகொண்டிருந்திருக்கக் கூடும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போயிருப்பின்.. இப்படி ஒப்பிட்டு அப்பாடா தப்பிச்சோம் என மனது மகிழ்ச்சி அடைந்தது குரூரமான எண்ணமாக இருப்பினும், அவனைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் தோன்றியது அதுவே.

--------------

04.12.2014 அன்று அபுதாபி விமான நிலையத்தில் பெங்களூர் செல்லும் ஒருவரை மெக்டொனால்ட்ஸில் டேபிளின் எதிர்பக்கமாய் அமர்ந்திருந்ததால் பேச ஆரம்பித்தேன். வழக்கமான இந்திய மகன்களின் பிரச்சினைகளான லண்டனுக்கு கூப்டுட்டு போய் ஆறுமாசம் நல்லா வச்சிருந்தேன், ஆனா ஊருக்கு போறதுலையே குறியா இருந்தார் பெங்களூரைவிட்டு எங்கையும் வரமாட்டேங்கிறார். நமக்கு பொழப்பெல்லாம் இங்க இருக்கும்போது அங்க அவர் தனியா இருக்குறத நெனைக்கும்போது பயமா இருக்கு, தனியா இருக்கும்போது கீழ விழுந்துட்டா என்னாகுறது இப்படியாக. மற்றவர்களைப்போல துபாய்தான் எமிரேட்ஸின் தலைநகரம் என நம்பிக்கொன்டிருந்தார் அரபுநாடுகளில் நம் மக்கள் எல்லாம் காந்தியடிகளின் வாரிசாகவும் அரபிகள் எல்லாம் ராட்சசர்கள் எனவும் நம்பிக்கொன்டிருந்தார். பேச்சு அரபு நாடுகள், ஈரான், ஈராக். இந்திய சினிமாக்கள், மதுரை, பெங்களூர் என சுற்றி வந்தது. வாங்கியிருந்த வெஜ் பர்கரும். சிப்சும். காபியும் காலியானதும் போன் நம்பரோ, ஈமெயிலோ வாங்க்கிக்கொள்ளாமல் விடைபெற்றுக்கொண்டோம். ஈரானிய சினிமாக்களும் பார்க்கும்படி இருக்கும் என்றதும் ஈரானில் சினிமா எல்லாம் எடுப்பார்களா என ஆச்சரியப்பட்டார். ஈரான் முழுக்க பாலைவனம் என நம்பிக்கொன்டிருந்தார். எல்லோரும் கேட்கும் கேள்வியான ஈராக்கிலா வேலை என்பதையும் கேட்டார். அப்பாவை பார்க்க போய்க்கொன்டிருப்பதாக சொன்னார். ஆறுமணி நேர ட்ரான்சிட்டில் ஒரு மணி நேரம் நன்றாய் கழிந்தது.

No comments: