Saturday, January 10, 2015

அவள் அப்படித்தான்..

ருத்ரையாவின் ”அவள் அப்படித்தான்”... 

19.11.2014 அன்று அவர் காலமாகி விட்டார். எல்லோரும் அவரைப்பற்றி எழுதியதில் தவறாமல் குறிப்பிட்டது ”அவள் அப்படித்தான்” படத்தைக்குறித்து. 

உண்மையிலேயே கருப்பு வெள்ளைக்காலத்திலேயே எத்தனை விஷயங்களை அநாயாசமாக தொட்டுச் சென்றிருக்கிறார் குறிப்பாய் கல்யாணத்திற்கு முந்தைய உறவு, பெண் சுதந்திரம், சொந்தக்காலில் நிற்கும் சுதந்திரமான பெண் இப்படியாக. 

இதை படத்தில் காட்சிகளாக வைக்க நிச்சயம் தைரியம் வேண்டும். அந்தக்காலத்திலேயே பர்தா குறித்து பேசியவுடன் மைக் மியுட் ஆகி விடுகிறது. போலி மதச்சார்பின்மை நீடூழி வாழ்ந்துகொண்டிருக்கிறது, கருப்பு வெள்ளைக்காலத்திலிருந்தே.... 


எத்தனைமுறை ஏமாற்றப்பட்டாலும் எதிர்நீச்சல் போடும் பெண்ணாக ஸ்ரீபிரியா கலக்கி இருக்கிறார்.... அருமையான கதை, திரைக்கதை, வசனம், எல்லாம் படத்தை முழுதாய் பார்க்க வைத்தது. கருப்பு வெள்ளை படம் என்பது மட்டுமே குறை. இதை மீண்டும் வெளியிட்டால் மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் என்றே நான் நினைக்கிறேன். சாகாவரம் பெற்ற இன்றும் விடாமல் சீரியஸாய் விவாதிக்கப்படும் விஷயங்களைக்குறித்து பேசுவதால் சொல்கிறேன். 

ருத்ரையா எடுத்த இன்னொரு படம் கிராமத்து அத்தியாயமாம்.. அவள் அப்படித்தான் போலில்லாமல் சுமாராய்தான் இருக்குமாம், அவசியம் பார்ப்பேன். அவள் அப்படித்தான் படத்தை கதை திரைக்கதைக்கு அடுத்த படியாக நடிகை ஸ்ரீபிரியா மற்றும் ரஜினிகாந்த் படத்தை சுமக்கிறார்கள்... கமலை குறைத்து மதிப்பிடவில்லை. ரஜினியை ஒப்பிடும்போது ஸ்கோப் குறைவு. ரஜினி ”மாப்ள” என அழைக்கும் தோரனையில் இருக்கும் இயல்பு, எந்த விஷயத்தைப் பற்றி சொன்னாலும் ரெண்டு விஷயம் எனச் சொல்லிச் செல்வது (சொல்வதெல்லாம் முன்முடிவுகள்தான், ஆனால், இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கும் முன் முடிவுகள்.

 படம் முழுக்க ஆங்கில வசனங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால், எல்லாமே ஸ்மார்ட் வசனங்கள்.. ஆரம்பத்தில் வரும் குழப்பமாக ஓடும் படத்தில் கமல் தோன்றி ரஷ்தான் பார்த்தொக்கொண்டிருக்கிறோம் எனச் சொல்வதும் அதன் பின்னர் படம் ஆரம்பிப்பதெல்லாம் இன்றும் புதிது. (நான்கூட குப்பை பிரிண்ட்டை பார்த்துக்கொண்டிருக்கிறோமோ என கொஞ்சம் கவலைப்பட்டேன்.) உண்மையில் ருத்ரையா இன்னும் கொஞ்சம் கூடுதலாக படமெடுத்திருக்கலாம் என தோன்றுகிறது. இன்னொருமுறை இந்தப்படத்தை அவசியம் பார்ப்பேன். பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். நீங்கள் இதுவரை பார்த்து மிக நல்லபடம் என நம்பிக்கொண்டிருக்கும் படத்தைவிட நிச்சயம் நல்ல படமாக இது இருக்கும்.

No comments: