Monday, January 26, 2015

இந்திய குடியரசு தின வாழ்த்துகள்.

உலகின் 5வது எண்ணெய் வளமிக்க நாடு.. இரண்டு வற்றாத ஜீவ நதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாயும் நாடு கிட்டத்தட்ட 95% மக்கள் இஸ்லாமியர்கள். உலகின் மிகப்பழமையான நாகரீகத்தின் தொட்டில்கள்.. மத்திய கிழக்கிலேயே மிகப்பிரபலமாய் இருந்த பல்கலையைக் கொண்ட நாடு நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் ஒரே மொழி இத்தனை பெருமைகள் இருந்தும் இன்றைக்கு குடிநீரோ, தடையற்ற மின்சாரமோ, சரியான போக்குவரத்து வசதிகளோ அற்று அன்றன்றைக்கு விடிந்து எழுந்தால் படுக்கப்போனால்தான் நிச்சயம் என்ற அளவில் வாழ்க்கைத்தரம் உள்ள நாடு எது தெரியுமா? 

இன்றைய ஈராக். 

ஈரான் - ஈராக் போர் அமெரிக்கா உள் நுழைந்து நடத்திய போர்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரங்கள். அது அடங்கி பின்னர் ஜனநாயகம். கொஞ்சமே கொஞ்சூண்டு நிமிர்ந்த நாடு இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் துண்டாடப்பட்டு ஈராக் என்ற பெயரிட்டு அழைக்க இடம் கிடைக்குமா என்ற அளவில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டுள்ளனர். 

அப்படியே நேர் மாறாக இந்தியா.. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழிகளே 15. இதுதவிர ஆயிரக்கணக்கில் மொழிகள் மதமென எடுத்துக்கொண்டால் பெருவாரியான மக்களைக் கொண்ட இந்துமதம் முதல் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, பௌத்த, சமனம் என எண்ணற்ற மதங்கள். 

நீர்நிலைகளை, இயற்கையை நம்பியே பெருவாரியான விவசாயம்.. இருப்பினும் நமக்குள் வேற்றுமைக்குள் ஒற்றுமை என்ற ஒரு கருத்தாக்கத்தில் எத்தனை பிரிவினைகள் இருப்பினும் இந்தியா என்ற ஒரே தேசத்தின் கீழ் திரண்டு இந்தியர்களாக இணைந்து இருப்பதால்தான் இந்த 68 ஆண்டுகளில் நமது அருகில் இருக்கும் நாடுகளையெல்லாம் ஒப்பிடும்போது எங்கோ இருக்கிறோம். சில குறைகள் இருப்பினும் குடிமக்களுக்கு நீர், சாலை போக்குவரத்து வசதிகள், பள்ளிகள், மின்சாரம் எல்லாம் அதிகம் சாத்தியப்பட்டுள்ளது. 

இது எல்லாம் கூடி வாழ்ந்ததால்தான். நம்மிடம் எண்ணெய் வளம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு பணமும் நம் உழைப்பால் ஈட்டியவை. மத்திய கிழக்கைப்போல தரையின் கீழிருக்கும் எண்ணெயை எவனையோ எடுக்க சொல்லிவிட்டு அவன் கொடுக்கும் காசில் மாடமாளிகைகளும் பணக்கார கார்களும் கொண்டு வாழவில்லை. 

நமக்கிருப்பதோ நமக்கென ஒரு தேசம். வேலை செய்துவிட்டு வீடு திரும்பினால் படுக்க ஒரு இடம். சமூக பாதுகாப்பு என எல்லாவற்றையும் பெற்றிருக்கிறோம். அடைந்தது கொஞ்சம்தான் என்றாலும் நிச்சயம் மற்ற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது கல்வி, கேள்விகளிலும், தனி நபர் வருமானத்திலும் நிச்சயம் மேலே இருக்கிறோம்.. இது அத்தனையும் நாம் இந்தியர்கள் என ஒற்றுமையாய் முயன்றதால் வந்த விளைவு. 

இதையெல்லாம் கெடுக்க நினைக்கும் கும்பல்கள் குடியரசு தினத்துக்கு கருப்புக்கொடி இட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த முட்டாள்களுக்கு தெரிவதில்லை, இந்த உரிமையே குடியரசினால் விளைந்த ஜனநாயகம் என்ற கட்டமைப்பு வழங்கிய உரிமை என. அவர்கள் செய்வது தேசத்துரோகம் என்றாலும் அவர்கள் தரப்பைச் சொல்லவாவது குடியரசிலும், ஜனநாயகத்திலும் வாய்ப்புக் கிடைக்கும், . 

அதுகூட இல்லாமல், தெரு நாய்களைப்போல குண்டடிபட்டு சாகும் மக்களும், அவர்களை காப்பாற்ற முடியாத அரசாங்கமும், தினமும் மரண ஓலமும் கொண்ட நாடாக நம் நாடும் ஆக விரும்பும் ஈனர்களின் வேலைதான் இந்த கருப்புக்கொடி காட்டுதல், கோட்டையில் தேசியக்கொடி காட்டக்கூடாது என்ற புர்ச்சி முழக்கமெல்லாம். 

இந்த நாடகங்களையெல்லாம் இந்தியாவில் ஜனநாயகம் என ஒன்றிருக்கும்வரைதான் செய்ய இயலும். அதுகூட தெரியாத மூடர்களை நம்பியும் ஒரு கூட்டம். நமக்கு கிடைத்த இந்த ஜனநாயகத்தை காக்க வேண்டியது நம் கடமை. தேசத்துரோகிகளை இனம் கண்டு வேரறுக்க வேண்டியது நாளைய நமது சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமையும் கூட. 

எல்லாம் இருந்தும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்றி அடித்துக்கொண்டு சாகப்போகிறோமா (ஈராக்கைப்போல) அல்லது ஒற்றுமையாய் இருந்து பல சாதனைகளை செய்யப்போகிறோமா? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

No comments: