Friday, October 15, 2010

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும்,சித்ராவையும் நேரில் கண்டேன்..


கத்தாரில் வாழும் இந்தியர்களுக்காக உதவும் இந்தியன் கம்யூனிட்டி பெனவேலண்ட் ஃபோரம் (ICBF)என்ற அமைப்பு அதன் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக்கொள்ள ஒரு இசை நிகழ்ச்சி நடத்தியது. பத்மஸ்ரீ.எஸ்.பி.பாலசுப்ரமணியம், பத்மஸ்ரீ.கே.எஸ்.சித்ரா, பிஜு நாராயணன் கலந்துகொண்ட அலி இண்டர்நேஷனல் ரிதம் 2010 என்ற இசை நிகழ்ச்சிதான் அது.

நிகழ்ச்சி இரவு ஏழு மணிக்கு துவங்க வேண்டியது. சரியாக 7.15 மணிக்குத் துவங்கி பாலு மைக்கைப் பிடித்து ஒருவன் ஒருவன் முதலாளி ( முத்து) என நிகழ்ச்சியை ஆரம்பிக்க, அதன் பின்னர் இசைமழை என்றால் என்ன என்பதை நேரில் கண்டேன்.. எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்ற பிரம்மாண்டம் எப்படி இசை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது என நேரில் பார்த்த நாள் அது. ரசிகர்களுடன் உரையாடுவதாகட்டும், பாடல்களைப் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்வதாகட்டும் அவரது கணீர்குரலால் எல்லோரையும் மயக்கிக் கொண்டிருந்தார். சங்கரபரணம் திரைப்படத்தில் சங்கராஆஆஆஆஆஆஆஆஆஆ என அவர் எழுப்பிய ப்ரீலூடுக்கும், முழுப்பாடலுக்கும் அரங்கமே மயங்கிக் கிடந்தது. தேரே மேரெ பீச்சுமே என்ற ஹிந்திப்பாடலிலும், வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலும் அட்டகாசம். மிக எளிமையான உடையில் வந்திருந்தார். பேங்கில் வேலை செய்பவர் போல ஒரு சபாரி உடை.

சித்ரா - அதே சின்னக்குயில் சித்ரா, அதே முகம் முழுக்க சிரிப்பாய், பாடல்களை அனாயாசமாய் பாடி கைதட்டல்களை அள்ளிக்கொண்டிருந்தார். கண்ணாளனே (பம்பாய்) பாடலை தமிழ், ஹிந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளிலும் ஒரு பத்தியைப் பாடி கலக்கினார்.

பிஜு நாராயணன் என்ற மலையாளப் பாடகரும் வந்திருந்தார்.. மலையாளப் பாடல்களை அவரும், சித்ராவுடன் இணைந்தும் பாடினார். கங்கே.. எனத்தொடங்கும் ஒரு பாடலைப் பாடினார். உடலெல்லாம் சிலிர்க்க.. அப்படி ஒரு ஆலாபனை.. கிடத்தட்ட 30 செகண்டுகள் வரை மூச்சைப் பிடித்து அவர் சொன்ன கங்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தான் அவர் பாடிய பாடல்களில் மிகச் சிறப்பு.

ஆர்க்கெஸ்ட்ரா குழுவினராக ஜெண்டில்மேன் இசைக்குழு என்ற சென்னையைச் சேர்ந்த குழுவினர் வந்ந்திருந்தார்கள். தமிழ், மலையாளப் பாடல்களுக்கு சிறப்பாய் இசையமைத்தனர். எஸ்.பி.பி பாடிய பாடல்களுக்கு அவரே இசைஇயக்கமும் செய்து கொண்டார்.

சுவையான நிகழ்வுகள்

எஸ்.பி பாலசுப்ரமணியம் பொத்தி வச்ச மல்லிக மொட்டு பாடலில் ’இது சாயங்காலமா மடி சாயுங்காலமா’ என்ற வரியில் கைகடிகாரத்தை சித்ரா சேச்சிக்கு காட்டிக் கொண்டிருந்தார். சேச்சி கொஞ்சங்கூட அசராமல் கருமே கண்ணாக பாடிக்கொண்டிருந்தார்.

மண்ணில் இந்த காதலன்றி பாடலில் ரசிகர்கள் மூச்சு விடாம பாடுங்க என சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர் .. இதைக் கவனித்த எஸ்.பி "பாடலைன்னா ?" என்று கேட்டுவிட்டு இதை மூச்சு விடாம பாட முடியாது அப்படின்னு ஆயிரம் மேடையில சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன். அது ஒரு மியுசிகள் கிம்மிக்ஸ் அவ்வளவே என்றார். ’எப்படி இருந்தாலும் நான் பாடி முடிஞ்சதும் நீங்க கைய தட்டுவீங்கன்னு தெரியும்’ என்றார். அதுபோலவே ரசிகர்களும் கரகோஷம் செய்தனர்.

அதேபோல தான் இசையை முறைப்படி கற்றவனல்ல என்றும் திரைத்துறையில் நுழைந்தபிறகு இசையையே உயிராக பாவித்து பாடிவருவதாகவும், எந்த ஒரு பாடலையும் முழுமையாக தெரிந்துகொண்ட பிறகே அப்பாடலை மேடையில் பாடுவதாகவும் குறிப்பிட்டார். இதுவரை ஏறக்குறைய 36000 பாடல்களை பாடியிருக்கலாம் என்றும் கூறினார்.

நிகழ்ச்சி தொகுபாளர் அடுத்து எந்திரன் படத்திலிருந்து ஒரு பாடல் என அறிவிக்க, தவறுதலாக சித்ரா மேடையில் நுழைந்து விட்டார்.. நிலைமையை அழகாக சமாளித்த தொகுப்பாளர் சித்ராவின் உற்சாகத்துக்கு ஒரு கரகோஷம் எழுப்புங்கள் எனக்கேட்க மக்களும் ஆரவாரம் செய்தனர். பின்னர் சித்ரா ஒரு மலையாள பாடலை பாடியபின்பு எந்திரன் பாடப்பட்டது.

எந்திரனில் வரும் அரிமா, அரிமா பாடலை இசைக்குழுவின் நடத்துனரே கொடுமையாகப் பாடினார். மக்கள் மிகப் பெருந்தன்மையுடன் அந்தக் கொடுமைக்கும் கை தட்டினர்..

இறுதியாக பாடகர் ஷாகுல் ஹமீதுக்கும்,ஸ்வர்னலதாவுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக அவர்கள் பாடிய சில பாடல்களை கோரஸ் பாட வந்த ஒரு பெண் அருமையாகப் பாடினார்.

தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அரங்கில் இருந்த மக்கள் தேசிய கீதத்துக்கு கொடுத்த மரியாதை மனநிறைவை அளித்தது..

அடுத்த ஆண்டும் நிகழ்ச்சிக்கு கண்டிப்பாய்ச் செல்ல வேண்டும்.

5 comments:

ஆயில்யன் said...

நான் ஒரு நாள் முந்திதான் சேதி தெரிஞ்சு டிக்கெட்டுக்கு டிரை செஞ்சேன் பட்ஷே எனக்கு கிட்டல பாஸ்!

இசை வெள்ளத்தில் முழ்கி எந்திரிச்சிருக்கீங்க இந்த வீக் எண்ட் சூப்பரூ! :)

snkm said...

நன்றி! பெருமைக்கு உரியவர்கள் என்றுமே பணிவாகவே இருப்பார்கள்! எஸ் பி பி யும் எத்தனையோ பாடல்களைப் பாடி உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறார்! மேலும் பல பாடல்களைப் பாடி புகழ் பெற இறைவனை வேண்டுவோம்!

Unknown said...

வணக்கம் சகோதரம்
இப்பதிவு கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் காரணம் நானும் இந்த அரிய அற்புதமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தேன் என்னால் என்றுமே மறக்க முடியாது.

Unknown said...

உங்கள் தளத்திற்க்கு எனது தளத்தில் இணைப்புக் கொடுத்துள்ளேன் வாழ்க வழமுடன் .

Unknown said...

இதன் காணொளியை எங்கே வாங்கலாம் உதவி செய்ய முடிமா சகோதரம்