Tuesday, October 12, 2010

மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்?

மத்திய கிழக்கில் வாழ்பவரா நீங்கள்? தூதரகத்தால் கைவிடப்பட்டு, நீங்கள் அநாதையாய் செத்தால் இந்திய தூதரகமே உங்களை பெட்டியில் வைத்து அனுப்பும். குரூர நகைச்சுவைபோலத் தெரிந்தாலும் அதுதான் உண்மை என நிரூபித்திருக்கிறது ஓமான் - மஸ்கட்டிலுள்ள இந்தியத் தூதரகம்.


மத்திய கிழக்கில் வேலை செய்பவர்களுக்கு பிரச்சினையான நேரத்தில் இருக்கும் ஒரே துணை இந்தியத்தூதரகம் மட்டுமே.. ஆனால் அதுவே கைவிட்டுவிட்டால் நடுரோட்டில் இறக்க வேண்டும். அப்படி ஒரு நிலை ஒரு பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது மஸ்கட் விமான நிலையத்தில்...

படிக்காத, இரு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண் வீட்டுவேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவிட்டு , திரும்பி ஊருக்கு போக வந்திருக்கிறார். கத்தார் ஏர்வேஸ் விமானம் என்பதால் தோஹாவில் இறங்கி வேறு விமானம் மாற்றிக்கொள்ள வேண்டும். தோஹாவில் கடவுச் சீட்டை தொலைத்து விட்டார். எனவே இந்தியாவிற்கு செல்லும் விமானத்தில் ஏற்றாமல் மீண்டும் மஸ்கட்டிலேயே இறக்கி விட்டுவிட்டது விமானக் கம்பெனி. ஓமானிலிருந்து வெளியேறும்போதே விசாவை கேன்சல் செய்துவிட்டதால் மீண்டும் ஓமானுக்குள் நுழைய முடியாதநிலை. இதனால் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை விமானக் கம்பெனியும், மஸ்கட் விமான நிலைய அதிகாரிகளும் இந்தியத் தூதரகத்திற்கு தகவல் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

தொடர்ந்து தகவல் கொடுத்தும், தூதரகத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து நாட்களாக யாருமே வந்து பார்க்கவில்லை. அந்தப் பெண்ணிற்கு உணவு, படுக்கை போன்றவற்றை கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்து உதவியிருக்கிறது. தூதரகத்திலிருந்தும் வேறு எந்த வகையிலும் உதவி கிடைக்காத சோகத்தில் பரிதாபத்திற்குரிய அந்தப் பெண் மன அழுத்தத்தின் உச்சியில் புத்தி பேதலித்து இறந்திருக்கிறார்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகநாடு, தெற்காசியாவில் வல்லரசு என்ற பதவிக்கு போட்டியிடும் இந்தியா தனது குடிமக்களை இப்படியா இறக்க விடுவது? இது நமது நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? நம்மைவிடச் சிறிய நாடான நேபாளம் கூட தனது மக்களை இப்படி அல்லாட விடுவதில்லை.

எனது கேள்வியெல்லாம் தனது நாட்டு பிரஜை தன்னால் சமாளிக்க முடியாத, தூதரகத்தின் உதவியால் மட்டுமே வெளியேற முடியும் என்ற நிலையில் இருக்கும்போது அவருக்கு உதவமுடியாத அளவு என்ன மிக முக்கியமான சாதனையைச் செய்துகொண்டிருந்தனர் என்பதுதான், அதுவும் ஐந்து நாட்களாக...

அரசாங்க அதிகாரிகள் எவ்வளவு தூரம் மனசாட்சியின்றி பேசக்கூடியவர்கள் என்பதற்கு இன்னொரு உதாரணம், அந்தப் பெண் இறந்த பின்னர் அறிக்கை விட்ட இந்தியத் தூதுவர் “அந்தப் பெண்ணின் சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவை தூதரகமே ஏற்றுக்கொள்ளும்’’ என்று சொன்னதுதான்..

தனது பொறுப்பில் இருக்கும் தூதரகத்தின் அஜாக்கிரதையாலும், பொறுப்பின்மையாலும் ஒரு உயிர் போக காரனமாயிருந்தது தெரிந்தும், ஏதோ மிகப்பெரிய உதவியைச் செய்வதுபோல தொனிக்கும் இப்படிப்பட்ட அறிக்கையை விட எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மனித உயிருக்கு எந்தவித மரியாதையும் செய்யாத அல்லது எந்த மரியாதையும் காட்டவிரும்பாத ஒருவரால் மட்டுமே இப்படிப் பேச முடியும்.

இரு நாட்களுக்கு முன்னர்தான் எனது நண்பரிடம் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நேற்று அகரமுதல வலைத்தளத்தில் வற்றாயிருப்பு சுந்தரின் இந்தப் பதிவைப் பார்த்ததும் எனது எண்ணத்தையும் பதிகிறேன்.

பொதுவாகவே தூதரகங்களில் மனிதாபிமானம் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள், பணபலம், வசதி வாய்ப்புகள் உள்ளோர், உதவி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்போர், பதவியில் இருப்போர் இவர்களுக்கெல்லாம் செலவழித்தது போக மீதமுள்ளது மட்டுமே சாதாரன இந்தியனுக்குக் கிடைக்கும்..

துரதிருஷ்டவசமாக சாதாரண இந்தியர்களின் எண்ணிக்கைதான் மத்திய கிழக்கில் அதிகம்..

இந்தியத் தூதரகங்களின் இப்படிப்பட்ட ”பொறுப்பான” செயல்பாடுகளை பார்க்கும்போது மத்திய கிழக்கு நாட்டில் வாழும் நமது பாதுகாப்பை நினைத்து பயம் மேலிடுகிறது.

இந்த பரிதாப நிகழ்விற்கு தொடர்புடைய சுட்டிகள்

தட்ஸ்தமிழில் வந்த செய்தி இது

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி இரண்டு

டைம்ஸ் ஆஃப் ஓமனில் வந்த செய்தி மூன்று

4 comments:

தணிகை செந்தில் said...

ஓமன் நாட்டின் இந்திய தூதரகத்தின் இந்த பொறுப்பற்ற செயல் வன்மையாக கண்டிக்க வேண்டியது.வேதனையாய் உள்ளது.இன்று தினமலரில் இந்திய வெளியுறவு அமைச்சகம் அச்செயலை கண்டிப்பதாகவும்,ஓர் உயரதிகாரியை விசாரணைக்கு அனுப்பப்போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாடகங்களை தவிர்த்து நிஜமான சேவை மனப்பாங்கு தூதரக அதிகாரிகளுக்கு தேவை என்பதை உயர் அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.மொழி தெரியாத இடத்தில் அப்பெண்மணி பட்ட அவஸ்தை வேதனையாயிருக்கிறது.

எம்.ரிஷான் ஷெரீப் said...

:-(

கானகம் said...

நண்பர்களே வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

சீனு said...

இந்திய தூதரகத்திலிருந்து ஒரு ஆளாவது சும்மா போய் பார்த்து பேசி அறுதலாவது சொல்லி இருந்தா அந்த பாவப்பட்ட பெண்மணியின் உயிர் பிழைத்திருக்கும். எவ்வளவு மன உளைச்சல் மற்றும் வேதனைக்கு ஆளாகி இருப்பாங்க !!!