Wednesday, October 6, 2010

எனக்கு வீணை வாசிக்கிற பொண்ணு பாத்த சரித்திரம் ( வரலாறு முக்கியம் அமைச்சரே..)

கத்தார்ல வேலை செஞ்சுகிட்டு வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போய்ட்டிருந்தேன். எனக்கும் பொண்ணு பாத்து கல்யாணம் செஞ்சு வச்சிரனும்னு எங்க அண்ணனும், அண்ணியும் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க.. மேட்ரிமோனியல் வெப்சைட்டுல எல்லாம் ”அண்ணன் அழைக்கிறார்” ரேஞ்சுலையும், சாதாரனமாயும் பல போஸுல படம் போட்டுப் பாத்தேன். பொண்ணுகளோ அல்லது அவங்க அப்பாக்களோ சீந்துற மாதிரியே தெரியலை. ஊர்ல இருந்தாலாவது நாலு கல்யாணத்துக்கு கூப்டாலும், கூப்டாட்டாலும் போய் தலையக் காட்டிட்டு வந்தா நாம இருக்குறது நாலுபேருக்காவது தெரியும். அதுக்கும் வழியில்லாம் வெளிநாட்டுல உக்காந்தாச்சு.

கல்யாணத்தப் பத்தி யோசிச்சு என்ன ஆகப்போகுதுங்குற பக்குவத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிருந்தது. அப்படி இருக்குறப்ப ஒரு நா எங்கண்ணன் திடீர்னு ஒருநாள் சாயந்திரம் போன் செஞ்சு ஒடனே மெயில் பாருன்னார். நான் அண்ணே நான் வெளிய இருக்கேன், கம்ப்யூட்டர் பக்கத்துல போறதுக்கே இன்னும் அரைமணி நேரம் ஆகும்ணே அப்படின்னு சொன்ன ஒடனெ சரி, காலையில சொல்லுன்னுட்டார்.

காலையில பாத்தா எங்கண்ணன் எனக்கு ஒரு பொண்ணு பாத்து அவங்களோட போட்டோவையும் அனுப்பியிருந்தார். ஃபிளாஷ் அடிச்சா கீழ விழுந்திரும்கிற மாதிரி ஒரு நோஞ்சான். அதுக்கு பொடவை கட்டி விட்டு இருக்குற நகையையெல்லாம் போட்டு விட்டு ஒரு போட்டோ.

ஆரம்பத்துலையே நம்ம கண்டிஷன் என்னான்னா, டிகிரி படிச்ச பொண்ணா இருக்கனும்.. நான் டிப்ளொமாதான்.. இருந்தாலும் அப்படி ஒரு கண்டிஷன போட்டு வச்சேன். உன்னோட கண்டிஷனையே அவங்களும் போட்டா அபப்டினு எங்கண்ணன் ரொம்பநாள் சொல்லிட்டிருந்தார்.

அண்ணன் என்னோட போன எதிர்பார்த்து ஓய்ஞ்சு போய் காலையில் பத்துமணிக்கு ஃபோன் செஞ்சு என்ன புடிச்சிருக்குல அப்படினு ஒப்புக்குக் கேட்டுட்டு மே 12 கல்யாணம்டா அப்படின்னுட்டார்..அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சு மே 10 கல்யாணம் அப்டின்னார். அப்புறம் ஒரு மணிநேரம் கழிச்சு மே 12ம் தேதினு சொன்னார். அண்ணே யாருன்னே பொண்ணு, யார் போய் பாத்தாங்க? எப்படி இப்படின்னே. என்னோட, அப்பா, அத்தை பையன் அக்கா இப்படி ஒரு 5 பேர் கொண்ட குழு பாத்து முடிவு செஞ்சுட்டு வந்துட்டாங்க. அவங்களுகெல்லாம் பிடிச்சிருக்கு அப்டின்னுட்டார். அண்ணிக்கு தூரத்துச் சொந்தம் வேற அப்படின்னார். கடவுள் மேல பாரத்தப் போட்டுட்டு நீங்க என்ன செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும் அண்ணே னு சொல்லி சரின்னுட்டேன்.

பொண்ணப் பத்தி எங்க அண்ணி சொன்னதுதான் ஹை லைட்

பொண்ணு பி.சி.ஏ படிச்சிருக்கு ( கத்தாரில் என் வீட்டுக்காரம்மாவுக்கு வேலை தேடும்போது என் வீட்டுக்காரம்மா சொன்ன பதில்களை தனிப்பதிவாக போடவேண்டும்)

நல்லா வீணை வாசிப்பா ( மனசுக்குள்ள கிரீடத்தோட மயில்மேல் உக்காந்து இருக்குர ராஜா ரவிவர்மா வரைஞ்ச சரஸ்வதி ஞாபகம்தான் வந்துச்சி.. அடடா கலைவாணியே மணைவியாவா அப்படினு அப்டியே மனசுக்குள்ள ஒரு சந்தோஷம்.. ஆனா நமக்கு அப்படி வாய்க்கிறதுக்கு வாய்ப்பே இல்லையேன்னும் ஒரு குரல் சொல்லிகிட்டே இருந்துச்சி.)

ஒரு வழியா பொண்ணோட நம்பரெல்லாம் கிடைச்சி தொடர்ந்து பேச ஆரம்பிச்சு ஸ்வீட் நத்திங்க்ஸ் எல்லாம் ரியாலா கரைஞ்சு போய்ட்டிருந்தது. நீ நல்லா வீணை வாசிப்பியாமே அப்டினு தெரியாம கேட்டு வச்சேன். இண்டர்நேஷனல் லைன ஆன்ல வச்சிகிட்டு உறையைப் பிரிச்சு சுதி சேத்து ஒரு பாட்டு பாடுனாங்க. முடிஞ்ச உடனே எப்படினு கேட்டாங்க.. சுருதி சேத்ததுக்கெல்லாம் பாராட்டு கேக்குது பாரு இந்தப் பொண்ணுனு மனசுல நெனச்சிகிட்டு, பாட்டை வாசிச்சு காமிம்மா என தொலைபேசியில் சீட்டு எழுதி கொடுக்க..எனது வருங்கால மணைவி அந்த நிமிடமே மணைவி ஸ்தானத்துக்கு வந்தார். இப்ப வாசிச்சது என்னவாம் என எகிற, அட, வாசிச்சியா, நான் கூட சுதி சேக்குறையோனு நெனச்சிட்டேன் என உளரி வைக்க, அப்புறம் எனக்குப் புரிவதுபோல ஜனகனமன வீணையில் வாசித்தார். ஒருவழியாய் நம்மூர் காசு கிட்டத்தட்ட 250 ரூபாய் செல்வில் ஜனகனமன கேட்ட பாக்கியசாலி ஆனேன்.

அப்புறம் அந்த மே வந்தே விட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்து முடிய, அன்று அவர்கள் வீட்டுக்கு வரவேண்டிய முறை. தொலைபேசியில் மட்டுமே கேட்டிருந்த வீணையின் நாதத்தை நேரில் கேட்கும் நாளும் வந்தது. என்னென்னமோ வாசித்துக் காண்பித்தார் அம்மணி. ஆனால் யாருக்கு ஏதும் புரியவில்லை. எனது பெரியப்பா மட்டும் சுவாரஸ்யமாய் தலையாட்டிக்கொண்டிருந்தார். கடைசியில் பெரியப்பா எப்டி இருக்குனு கேட்டதுக்கு, அப்படியே சரஸ்வதி மாதிரி இருக்காடா உன்னோட பொண்டாட்டி என ஆசிர்வதித்தார். அதெல்லாம் சரிப்பா, பாட்டு எபப்டி இருந்துச்சி எனக் கேட்க, அவரோ நான் மெஷின மண்டபத்துலையே வச்சுட்டு வந்துட்டேன், அதனால சரியாக் கேக்கல, நல்லாதான வாசிச்சிருப்பா என ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.

ஒருவழியாய் எல்லோருக்கும் கிட்டத்தட்ட அனுமானிக்கும்படியாக ஜனகனமன வாசித்து வீணையை மூடிவைத்ததுதான்.. திருமணத்திற்குப் பின்னர் அதை கத்தார் கொண்டுவந்துவிடவேண்டும் என ஒரு பில்டப்.. நானும் என்ன செலவானாலும் கொண்டுவந்து விடுவோம் என ஓக்கே சொல்லிவிட்டேன். இதை எதிர்பார்க்காத வீட்டுக்காரம்மா அடுத்தவாட்டி போய்ட்டு வரும் போது ஹேண்ட் லக்கேஜில் கொண்டு வருவோம் என்றார். ஒருவருடம் வாசிக்கவில்லயெனில் பழக்கம் விட்டுப்போய்விடாதோ என நான் சிரிக்காமல் கேட்க, அதெல்லாம் ஞாபகம் இருக்கும் என சீரியசாய் பதில் சொன்னார். அடுத்த முறையும் வந்தது. அதற்குள் அம்மணியின் தோழி இன்னொரு வீணை காயத்ரியாகும் முயற்சியில் இருப்பது தெரியவர பெருந்தன்மையாயும், அப்பாடா தப்பித்தோம் என அவருக்கு அன்பளித்து விட்டார் அம்மணி.

இப்போதுவரை எனது நண்பர்கள் அனைவருக்கும் என் வீட்டுக்காரம்மா ஒரு வீணை காயத்ரிபோலவும், நான் அவருக்கு வீணை வாங்கித்தராமல் அவரது கலையை சீரழித்தது போலவும் ஒரு வெளியே சொல்லாத வதந்தி நிலவுகிறது.

இதைக்கேட்டால் எனது மணைவியே விழுந்து விழுந்து சிரிப்பார் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

--

7 comments:

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

சஞ்சயன் said...

சிரிப்பூட்டும் பதிவு.

அது சரி.. இண்ணைக்கு உங்களுக்கு சாப்பாடும் படுக்கையும் வெளியிலயாம் என்று கத்தார்ல பேசிக்கிறாங்களே..நெசமா?

சார்.. நம்மள மாதிரி நீங்களும் அடங்கிப் போயிடுங்க..
சேதம் குறைவாக இருக்கும்.

ஆயில்யன் said...

அட அதான் வாசிச்சு காமிச்சிருக்காங்க அப்புறமா ஹேண்ட் லக்கேஜ்ல எடுத்துட்டு வரணும்ன்னு ஆர்வமா இருந்தவங்களுக்கு நீங்க ஒரு சிறிய கலைச்சேவை செஞ்சு அதை இங்கிட்டு கொண்டு வந்திருக்கலாம் - இப்படி எதையுமேஏஏஏஏஏஏஏஏஏஏ செய்யாம இப்படி சொல்றது ம்ஹும் சரியில்ல ! :)

கணேசமூர்த்தி said...

தல‌
இந்த வீணை வாசிக்கறதுனா பேப்பர்ல எழுதி வச்சி சத்தமா வாசிக்கிறது தான...
அதுவும் ஆரம்பத்திலேயே ஜன கன மன வாசிச்சாச்சா?அப்பவே உஷாரா இருந்திருக்க வேண்டாமா...
மூர்த்தி
லா ரோஸ்

தணிகை செந்தில் said...

நல்ல நகைச்சுவையான நடை.
நல்ல flow இருக்கு.
பெரியப்பா ஜோக் சூப்பர்ர்.,,
கடைசியில மனைவியின் போட்டோ பற்றி கமெண்ட்டும் எழுதிட்டீங்க..அடி ஒதையெல்லாத்துக்கும் தயாரா இருங்க.

கத்தார் சீனு said...

கலக்கல் பதிவு ஜெயக்குமார்.... அப்ப, வீணை கடைசி வரை கத்தார் வராமலே எஸ்கேப் ஆய்டுச்சி...(நீங்களும்)பதிவு போட்டன்னைக்கு சோறு போட்டாங்களா வீட்ல?? உடம்ப பார்த்துக்கோங்க.....உங்க பதிவ எதிர்பார்த்து நாங்கள்லாம் இருக்கோம் ......

கானகம் said...

வார்த்தை,

விசரன்,

ஆயில்யன்,

மூர்த்தி,

தணிகை செந்தில்

கத்தார் சீனு

ஆகியோரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.