Sunday, June 20, 2010

அப்பா என்றால் அன்பு ... தந்தையர் தினம்

எப்பவுமே எனக்கு எங்கப்பாவ ரொம்பப் புடிக்கும். முக்கியமான காரணம், நான் எப்ப பெரியாளாய்ட்டேன்னு எங்கப்பாவே நெனச்சுக்கிட்டாரோ அன்னையில இருந்து என்னைய அனாவசியமா திட்டுறதோ, அடிக்கிறதோ கிடையாது.

படிப்புல எப்பவுமே 40 அல்லது 45 தரத்துக்கு கீழ போனதே இல்ல. ஆனாலும் எங்கப்பா அவன் பொழப்பு அவந்தான் பாத்துக்கனும்னு எங்கம்மாட்ட சொல்வாரு... இன்னிக்கு படிக்குற புள்ளைகளோட அம்மா, அப்பாவ நெனச்சுக்கிறேன்

வீட்டுல யாருக்கும் பயப்பட மாட்டேங்கிறான், அவன கண்டிச்சு வைங்க, அப்படிங்கிற எங்கம்மாவோட குற்றச்சாட்டுக்கு, ராத்திரி சாப்டுட்டு கையக் கழுவ கொல்லைப்புறமா வருவான்ல, அப்ப கருப்புப் போர்வையப் போத்திகிட்டு அவன மிரட்டுறேன் அப்படினு கிண்டலா சொன்ன எங்கப்பா

கூட்டுக்குடும்பமா கிட்டத்தட்ட 15, 20 பேரு இருந்த எங்க வீட்ல இன்னிக்கு எங்கப்பாவும், அம்மாவும் மட்டும்.. அன்னிக்கும், இன்னிக்கும் வீட்டுக்கு யார்வந்தாலும் சந்தோஷமா உபசரிச்சு அனுப்புறத வாழ்க்கையாவே சொல்லிக்குடுத்த எங்கப்பா.

என்ன நடந்தாலும் கூட்டுக் குடும்பமாவே இருக்கனும்னு இன்னிக்குவரை கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து எங்க ஊர்ல இப்படியில்ல இருக்கும் கூட்டுக்குடும்பம்னா அப்படினு எல்லோரையும் சொல்லவச்ச அப்பாவும், பெரியப்பாவும்

கூட்டுக்குடும்பத்துல பொம்பளகளுக்குள்ள நடக்குற சண்டையில ஆம்பளைக நுழையாம இருந்தாலே கூட்டுக்குடும்பம் ஸ்திரமா இருக்கும்னு வாழ்ந்து காட்டுன அப்பாவும், பெரியப்பாவும்...

பத்தாப்பு முடிச்சுட்டு ஐ.டி.ஐ சேருரேன்னு போய்ச் சேந்து அதை பாதியிலேயே விட்டுட்டு, எங்கூர்ல தரையத் தேச்சப்பகூட ஒன்னும் சொல்லாம என்ன்ன செய்யனுமோ செய்டானு சொன்ன அப்பா

வேலைக்குப் போனப்புறமும், 2000 ரூபாய அம்மா கையில குடுத்து ஆசிர்வாதம் வாங்குனா, வாங்காத, வாங்காதனு அலறுவாரு அப்பா.. திரும்பி ஊருக்குப் போகும்போது 3000 கேப்பான் அப்படினு பிரியத்தோட சொன்ன அப்பா..

சம்பாதிச்ச ஒவ்வொரு பைசாவையும் அளந்து போட்ட, குறிப்பா குழந்தைக படிப்புக்காகவே எல்லாத்தையும் செலவழிச்ச அப்பா..

அண்ணன் குழந்தைகளை தன்னோட குழந்தைகளைவிடவும் ஜாஸ்தியா நேசிச்ச அப்பா..

ஒரு மிகப்பெரிய சரிவுல, எல்லாத்தையும் இழந்து குடும்பமே ஸ்தம்பிச்ச நின்னப்ப, விடுங்க, எல்லாம் சரியாகும்னு எங்க பெரியப்பாவுக்கும், தனக்கும் சேர்த்து தேறுதல் சொல்லி குடும்பத்த நிமுத்துன அப்பா..

என்ன சம்பாதிக்கிறார், எப்படி சமாளிக்க முடியுது அப்பாவால் அப்படினு எந்தக் கவலையும் இல்லாம நாங்க பாட்டுக்கு கோனார் நோட்ஸ் வேணும், நாய்க்கர் நோட்ஸ் வேணும்னு படுத்துனப்ப, படிக்கிற புள்ள கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்துக்கும் கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்த அப்பா..

பள்ளிக்கூடத்துல பனிரெண்டாம் வகுப்புல மூணாவது ஆளா வந்தப்ப மைனர் ஸ்கூல்ல மூணாவதா வந்துருக்காப்ல அப்படினு கேக்காதவங்களுக்கும் சொல்லி சந்தோஷப்பட்ட அப்பா,

வெட்னரி காலேஜ் போகனுமா வேனாமானு நீ முடிவு பன்னிக்க.. அப்பா கஷ்டப்படுறாருன்னு படிக்காம இருக்காத, வேணும்னா வீட்டையே வித்துக்கிறலாம்னு தைரியம் சொன்ன அப்பா..

டெல்லியில வேலைக்குப் போறேன்னு சொன்னப்ப மதுரையில வந்து ட்ரெயின் ஏத்திவிட்ட அப்பா..

வெளிநாட்டுக்குப் போறேன்னு சொன்னப்ப, நம்ம பய எங்கையும் பொழச்சுக்குவான்னு சந்தோஷமா அனுப்பி வச்ச அப்பா..

ஒரு காலத்துல அம்மாவ படுத்துன அப்பா, இன்னிக்கு அம்மாவ குழந்தை மாதிரி பாத்துக்குற அப்பா..

இப்படி எங்கப்பாவப் பத்தி தினமும் நெனச்சுகிட்டும், என்னோட மனைவிகிட்ட தினமும் இதைச் சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கனே, நான் தனியா எங்கப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துச் சொல்லனுமா?

5 comments:

ஆயில்யன் said...

//ஒரு காலத்துல அம்மாவ படுத்துன அப்பா, இன்னிக்கு அம்மாவ குழந்தை மாதிரி பாத்துக்குற அப்பா.//

:) நேர்ல பார்த்தெல்லாம் போனில் கூப்பிட்டெல்லாம் சொல்லவேண்டாம் கண்டிப்பாக உணர்ந்து உற்சாகமான மகிழ்ச்சியோட வலம்வருவாங்க :)

தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் :)

cheena (சீனா) said...

அன்பின் ஜெயக்குமார்

மலரும் நினைவுகளாய் - அப்பா அருகில் இல்லாத போது - அசை போட்டு - எழுதிய இடுகை நன்று ந்அன்று - 2000 கொடுத்து 3000 கேட்கும் பழக்கம் - ஹா ஹா ஹா - ப்ருதல் உனர்வு அதில உள்ள அப்பா - பெண்கள் சண்டையில் ஆண்கள் தலை இடாதது கூட்டுக் குடும்பத்தின் ஆணி வேராக விளங்கும் கொள்கை. நல்ல செயல் - நல்வாழ்த்துகள் ஜெயகுமார்

நட்புடன் சீனா

Kumar.B said...

"வேலைக்குப் போனப்புறமும், 2000 ரூபாய அம்மா கையில குடுத்து ஆசிர்வாதம் வாங்குனா, வாங்காத, வாங்காதனு அலறுவாரு அப்பா.. திரும்பி ஊருக்குப் போகும்போது 3000 கேப்பான் அப்படினு பிரியத்தோட சொன்ன அப்பா.." - very good

Joe said...

அருமையா எழுதியிருக்கீங்க!

Dr.Dolittle said...

நீங்க வெட்னரியனா?