Sunday, December 13, 2009

தோஹா (கத்தார்)வில் மழை.



கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று மாலை முதல் இந்த நிமிடம் வரை விட்டு விட்டு நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது.

நம்மூரில் பெய்வதுபோல அடைமழை நேற்றிரவும் இன்று அதிகாலையும் பெய்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் மழை என்பது அபூர்வம். நம்மூர்போல மழைக்கால மழையாக இருப்பதில்லை. எப்போதாவது ஏற்படும் புயல்சின்னங்கள் மூலமே மழை பெய்கிறது. ஆதலால் எப்போதும் சேதாரங்கள் இல்லாமல் மழைகள் செல்வதில்லை.

போன மாதம் ஜெத்தாவில் ( சவுதி)மழையினால் கிட்டத்தட்ட 120 பேர்கள் வரை இறந்தனர். 2007ல் ஏற்பட்ட கோரமான மழையினால் பல நாட்கள் மஸ்கட் (ஓமன்) நகரம் தண்ணீரில் தத்தளித்தது. குடிக்கக்கூட நீரின்றி மக்கள் சில நாட்கள் இருந்தனர். ஓமன் நாடு முழுதும் பேரழிவைச் சந்தித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில், சாலைகளில் தேங்கும் நீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் ஒன்றும் இருப்பதில்லை. மழை எப்போதவது பெய்வதால் அதற்கு தனிக்கவனம் செலுத்துவதில்லை. நம்மூர் போல எல்லாக் காலநிலைகளுக்கும் ஏற்ற "ஆல்வெதர்" சாலைகளும் கிடையாது. அதானாலேயே வண்டிகள் நீரில் அடித்துச் செல்லப்படுவதும், ஆட்கள் ஜலசமாதியடைவதும் சர்வசாதாரனமாக நடக்கிறது. நல்லவேளையாக கத்தாரில் அந்த அளவுக்கு பயங்கர மழையாக இல்லாமல் நல்ல மழையாகவே இதுவரை பெய்து வருகிறது.



மேகம் மறைத்த ஆசிய விளையாட்டுப்போட்டி நினைவு விளக்குத்தூண்.





மழையில் மிதக்கும் தோஹா.

இங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் இருக்கும் மன்னும், நீரும் தொடர்ச்சியக வண்டிச் சக்கரங்களில் அரைக்கப்பட்டு அது கூழாகி அந்த இடங்கள் மனிதன் கால் வைப்பதற்கே லாயக்கில்லாமல் ஆகி பின்னர் வண்டிச்சக்கரங்கள் மூலம் பல இடங்களுக்கு சென்று தூசியாகி மீண்டும் அதன் இருப்பிடம் அடையும்.

போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் இடத்திலுள்ள நீரைமட்டும் உறிஞ்சி வெளியே விடுவார்கள். இதர இடங்களுக்கு நான் மேலே சொன்ன கதிதான்..

நம்மூரிலாவது ஆங்காங்கே குளம் குட்டைகளில் ஒரு 10 முதல் 20 சதமான தண்ணீராவது சேரும், பின்னர் ஏதோ ஒரு வகையில் பயன்படும். ஆனால் இங்கெல்லாம் அப்படியே தாழ்வான இடங்களில் தண்ணீர் சேர்ந்து முழுதும் ஆவியாகியும், தரைக்குள்ளும் சென்று வீணாகும்.

நம்மூரில் மழைபெய்யும்போது ஏற்படும் மகிழ்ச்சி இங்கும் ஏற்படும். ஆனால் நம்மூர் போல கடைக்குப் போய் ரெண்டு பஜ்ஜியும், ஒரு டீயும் சாப்பிட்டு மழையை அனுபவிக்க முடியாது.. அல்லது வெளியே சென்று மழையில் நனைதல் சாத்தியமில்லை.

இனி இந்த மழை ஓய்ந்து வெயில் வந்துவிட்டால் அடுத்த வருடமோ இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரோதான் மழையைப் பார்க்க முடியும்.

இந்த முறை ஊருக்கு வந்துவிட்டு மழையைப் பார்க்காமல் சென்ற குறை இப்போது கத்தாரில் வந்த மழையினால் தீர்ந்தது. மழையைப் பார்க்காத ஒவ்வொரு ஆண்டும் மனதை என்னவோ செய்கிறது.. என்னமோ யாருமே இல்லாத அல்லது சீக்கிரம் அழியப்போகும் உலகில் வாழ்வதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடிவதில்லை. இந்த 2009 இந்த மழையினால் அருமையாக கழிந்தது..

மழை பெய்து முடிந்தால் கடுமையான குளிர்காலம் ஆரம்பிக்கும். அதையும் அனுபவிக்க வேண்டியதுதான்..

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ என்ற பாடலில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை..

அந்தப்பாடலின் ஒலியும், ஒளியும் இங்கே..




(படங்கள் எனது அலைபேசியில் எடுத்தது.)

6 comments:

அண்ணாமலையான் said...

இதே நம்ம ஊரா இருந்தா கட்சிக்காரங்க ஏதாவது பணம் தருவாங்க, அடிச்ச மழைக்கு...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

கத்தாரில் மழை சந்தோஷம். :)
ஏப்ரல் தாண்டி அடிக்கும் சூட்டிலிருந்து மழையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டே இருப்போம் இல்லையா?

//கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் //

இல்லை நண்பரே.
போன வருடமும்(2008), அதற்கு முந்தைய வருடமும் (2007) நல்ல மழை பெய்தது. இரு வருடங்களும் எனது ஆபிஸுக்கு வெளியே வீதியில் பெருவெள்ளம். நீர் வற்றவே ஒரு நாளுக்கும் மேல் பிடித்தது.
வாராது வந்த மழையை நிறையவே ரசித்தேன்.

கானகம் said...

போன ஆண்டு மழை பெய்தபோது ஊரில் இருந்தேன் என நினைக்கிறேன். அப்படியெனில் நான் கொடுத்த தகவல் முழுமையன்று.

வருகைக்கு நன்றி ரிஷான் மற்றும் அண்ணாமலை.

ஆயில்யன் said...

இன்றைய மழை முழுமையாக ரசித்த்தேன் காலையில் (ஆபிஸ்ல அப்ப கொஞ்சம் கூட வேலையில்லாம வெட்டியா இருந்தோம்ல:)) )

ரசிப்பது ஒரு விஷயமென்றால் தோஹாவினை பொறுத்தவரை வடிகால் வசதிகள் ரொம்ப்ப்பவே மோசம் அதற்கான அனுபவங்கள் அடுத்து வரும் நாட்களில் இருக்கலாம் :(

ஆயில்யன் said...

//இல்லை நண்பரே.
போன வருடமும்(2008), அதற்கு முந்தைய வருடமும் (2007) நல்ல மழை பெய்தது. இரு வருடங்களும் எனது ஆபிஸுக்கு வெளியே வீதியில் பெருவெள்ளம்.//

அட!!!

ஆச்சர்யமா இருக்கே! அப்ப நானும் தோஹாவுலதான் இருந்தேன்! ம்ம் ஒரு வேளை அப்ப பிசியா இருந்திருப்பேனோ என்னவோ :)

கானகம் said...

ஆயில்யன், வருகைக்கு நன்றி..