Tuesday, February 24, 2009

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு.

போடு தாம்பாளம். போடு புழுக்க.. & கட்டு கயிறு, வெட்டு வெட்டருவா, சுடு விளக்கு..

ஒரு ஊர்ல ஒரு கஷ்டப்பட்ட குடும்பம் இருந்துச்சி. அம்மா, அப்பா காட்டு வேலைக்குப் போனாலும் சரியாக்கூட சாப்பிட முடியாத அளவு வறுமை. அவங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன்கிட்ட அவங்கம்மா தம்பி இட்லி சுட்டுத்தரேன் அதைக் கொண்டுபோயி வித்துக் கசாக்கிட்டு வாடான்னாங்க.. அவனும் இட்லிய எடுத்துகிட்டு ஊர்ல இருக்குற குளத்தங்கரைக்கு வியாபாரத்துக்கு போனான். அங்க போயி ரொம்ப நேரம் ஆகியும் வியாபாரமே ஆகல. அதனால அவனோட அம்மா சுட்டுத் தந்த ஏழு இட்லியில ஒன்னத் திங்கட்டுமா, ரெண்டைத் திங்கட்டுமா, மூனத் திங்கட்டுமா, நாலத்திங்கட்டுமா, அஞ்சத் திங்கட்டுமா , ஆரத்திங்கட்டுமா, ஏழையும் தின்னுபுட்டா ராத்திரிக்கு என்ன செய்யுறதுன்னு சத்தமா சொல்லிகிட்டே யோசிச்சிருக்கான்..

அந்த கொளத்துல இருக்குற சப்த கன்னியர்களும், இவன் பெரிய ராட்சசனா இருப்பான் போல இருக்குதே அப்படின்னுட்டு அவனுக்கு காணிக்கையா ஒரு தாம்பாளத்த குடுத்தாங்க. அவன்கிட்ட கொடுத்து இத போடு தாம்பாளம்னு சொன்னா ருசி ருசியா சாப்பாடு போடும்னு சொல்லி அனுப்பி இருக்காங்க.

அத எடுத்துகிட்டு பக்கத்துல இருந்த பாட்டி வீட்டுக்குப் போயி குடுத்து வச்சிட்டு குளிக்க போனான். போறப்ப மறக்காம பாட்டி, பாட்டி இத போடு தாம்பாளம்னு மட்டும் சொல்லிராத அப்படின்னு சொல்லிட்டுப் போனான. கெளவி இவன் இவ்வளவு தூரம் அழுத்திச் சொல்றானே இதுல என்னமோ இருக்கு அப்படின்னு தெரிஞ்சிகிட்டு அவன் போனப்புறம் போடு தாம்பாளம் அப்படின்னு சொல்லிச்சு. அம்புட்டுத்தான்.. சாப்பாடு வகையென்ன, சாம்பார் வகையென்ன, காய்கறி வகையென்ன, இப்படி சாப்பாடு அயிட்டமா வந்து குமிஞ்சிருச்சி. பாட்டி சாமர்த்தியமா அதை மறைச்சு வச்சிட்டு அதே மாதிரி இருக்குற இன்னொரு தாம்பாளத்த குளிச்சிட்டு வந்த நம்ம பயகிட்ட குடுத்துருச்சி. நம்ம பயலும் வீட்டுக்குப் போயி அம்மாகிட்ட நடந்தத சொல்லிட்டு போடு தாம்பாளம்னு சொல்லி இருக்கான். அதுதான் வெறும் தாம்பாளம் ஆச்சே. பேசாம இருந்திருக்கு.


மறுநாள் அதே மாதிரி அவனோட அம்மா இட்லி செஞ்சு குடுக்க அதே மாதிரி இவனும் ஒன்னத் திங்கட்டுமா அப்படின்னு ஆரம்பிக்க அதே போல சப்த கன்னியரும் வர இன்னிக்கு ஒரு ஆட்டுக்குட்டிய தர்றோம், அதுகிட்ட போயி போடு புழுக்க .. அப்படின்னு சொன்னா தங்கமும், வைடூரியமும் போடும் அப்படின்னாங்க.. நம்மாளு மறுபடியும் பாட்டி வீட்டுக்கு போயி வழக்கம்போல பாட்டி போடு புழுக்க அப்படின்னு சொல்லிராதன்னு சொல்லிட்டு குளிக்கப் போனான். பாட்டியும் போடு புழுக்கன்னு சொல்ல தங்கமும் வைரமுமா கொட்டுச்சு.. கெளவி அத மறைச்சு வச்சிட்டு சாதா ஆடு ஒன்ன குடுத்து விட்டுட்டா.. வீட்டுக்குப் போயி போடு புழுக்கன்னா அது புழுக்கையத்தன் போடுது.

மறுநாளும் அவனோட அம்மா இதேபோல இட்லி சுட்டுத் தர அதைக் கொண்டுபோய் விக்க மத்யானம் இதே மாதிரி ஒன்னத் திங்கட்டுமான்னு சொல்ல கன்னிமார்கள் வந்து இவனுக்கு மொதல்ல குடுத்த ரெண்ட வச்சிருந்தாலே இவனோட தலைமுறைக்கும் காணுமே .. இவன வேற யாரோ ஏமாத்துராங்கன்னு தெரிஞ்சிகிட்டு அன்னைக்கு ஒரு கயிறு, வெட்டருவா, ஒரு விளக்கு மூனும் குடுத்துவிட்டாங்க. கட்டு கயிறுன்னு சொல்லணும், வெட்டு வெட்டருவா ன்னு சொல்லணும் , சுடுவிளக்குன்னு சொல்லணும் அப்படின்னாங்க. நம்மாளு வழக்கம்போல கெளவி வீட்டுக்குப் போயி மறக்காம என்ன சொல்லக் கூடாது அப்படிங்கிறதையும் சொல்லிட்டு குளிக்கப் போனாரு. போய்ட்டு திரும்பி வந்து பாட்டி, பாட்டின்னு கத்துராப்ல.. கெளவிய ஆளையே காணோம்.. ஒரு மூலையில இருந்து உம்.உம்.உமுனு சத்தம் மட்டும் வருது.. அங்க பாத்தா கெளவி ஒரு பந்து மாதிரி சுருண்டு கிடக்கு..

நம்மாளு கெளவிய கயித்துக் கட்டுலருந்து அவுத்து விட கெளவி உண்மைய சொல்லி எல்லாத்தையும் திருப்பிக் குடுத்துருச்சி.

நம்மாளும் வீட்டுக்குப் போயி போடு தாம்பாளம்னு சொல்ல இதுவரைக்கும் இப்படி ஒரு சாப்பாடு சாப்டதில்லைன்னு சொல்றமாதிரி சாப்பாடு வருது..

அப்புறம் போடு புழுக்கைன்னு ஆட்டப் பாத்து சொன்னா அது தங்கமும், வைரமும், வைடூரியமுமா போடுது..

கட்டு கயிறு மேட்டர் என்னன்னு நம்ம ஆளுக்கு தெரியும். அதனால அத செஞ்சு பாக்கல..

அந்நேரம் பாத்து அவங்க நாட்டப் பாத்து எதிரி ராஜா படையெடுக்க.. உள்ளூர் ராஜாவுக்கு உதறல் எடுத்துருச்சி.. எதிரி நாட்டு ராசா எவ்வளவு பலசாலின்னும் தெரியும்.. அதனால வீட்டுக்கு ஒரு ஆளு போருக்குத் தயாராகணும் அப்படின்னு முரசு அறைஞ்சு சொல்லச் சொன்னாரு. இதக் கேள்விப்பட்ட நம்ம ஆளு போயி ராஜாவைப் பாக்க அனுமதி வாங்கி அவர்கிட்டப் போயி ராஜா நான் ஒரே ஆளு போதும், எதிரி நாட்டுப் படையவே கொளுத்திருவேன்னு சொல்ல நீ மட்டும் அப்படி செஞ்சுட்ட எம் பொன்னையே உனக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடுத்தார்..

நேரா போர்களத்துக்கு போய் நம்ம ஆளு நிக்கிறார் அவனோட நாட்டு படைகள் நிக்க வேண்டிய இடத்துல.. எதிரி நாட்டு ஆளுங்க என்னடான்னா ஆனைபடை, குதிரைப் படை, காலாட் படைன்னு ஒரு பெரிய சேனை திரட்டி நிக்கிறாங்க.

போர் ஆரம்பம் அப்படின்னு எக்காளம் எடுத்து ஊதுன உடனேயே நம்ம ஆளு கட்டு கயிறு அப்படின்னு சொல்லி கயிற தூக்கிப் போட்டான.. அம்புட்டுத்தான். .. ஆன, குதுர, ஆளு எல்லாத்தையும் ஒரே சுருட்டா வாரி சுருட்டி ஒரு பந்து மாதிரி ஆக்கிருச்சி.

அடுத்து விட்டான் " வெட்டு வெட்டருவா " அப்படின்னு சொல்லி.. அம்புட்டுதேன், சும்மா காய்கறி வெட்டுற மாதிரி ஆளுக தலைய சீவிருச்சி அருவா.

அப்புறம் விட்டான் சுடு விளக்கேன்னு ஒரு சத்தம்..வெட்டிப் போட்ட எல்லாத்தையும் மொத்தமா எரிச்சி சாம்பலாக்கிருச்சி.

அவனோட ராஜாவுக்கு சந்தோஷம் தாளல.. இனிமே நீதாம்ப்பா இந்த நாட்டுக்கு ராஜா. உனக்கு என்னோட பொன்னையும் கட்டிவைக்கிறேன்னு சொல்லி கட்டி வச்சாரு.

அந்த கலியாணத்துக்கு எங்க தாத்தா, பாட்டி எல்லாம் போயிருந்தாங்கன்னு சொல்லக் கேள்வி.

தாத்தா அப்பாவுக்குச் சொன்ன கதைகள் - இரண்டு முற்றிற்று.

6 comments:

ஹரன்பிரசன்னா said...

தாத்தா அப்பாவுக்கு சொல்லாத கமெண்ட்டு. எப்போ இந்த கதையெல்லாம் முடியும்?

agalvenkat said...

வளந்த அப்பா இதல்லாமா கேக்கப்போறாரு, பேரனுக்கு சொல்லச்சொல்லுய்யா . . .

நம் தமிழ் செவிவழிகதைகள் பல தரமானது, கற்பனாசக்தி, கிரகிக்கும் மற்றும் கிரியா சக்திகளை அதிகமாக்கும்.

இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள் இன்றைக்கும் கிளைகதைகளுடன் வளர்ந்து வருவதும், அவற்றை கேட்ட, கேட்கும் மக்கள் தனித்தன்மையான சிந்தனை திறன் பெருவதும் கவனிக்கத்தக்கது.

நிற்க.

நம்ம sytle-ல ஒரு பன்ஞ் வேணாமா? - இதோ . . .

இயற்கையான மலைகள் (இமயம், பொதிகை, . . .), தீவுகள், ஆறுகள், குளங்கள், இயற்கை / செயற்கை வினோதங்கள் எல்லாம் கதைகளில் பின்னுவார்கள் நம் பெரியவர்கள். அப்படி கதைக்குள் புகுத்தப்பட்ட ராமர் பாலத்தை, அயோத்தி கோவிலை நாமே பெரியவர்களாகியும்(?!?) கட்டிக்கிட்டு அழுது - தேவையா ?

ஆகவே இவை போன்ற வெகுசில எதிர்மறை - சமுதாய அழிவு - விளைவுகளும் கதைகளால் நிகழும். 21 மட்டுமல்ல 20,19, 18, . . . என மனித நூற்றாண்டுகளில் சில பக்கங்களில் இதுபோல உதாரணங்கள் உண்டு. முன்பு அரண்மனைகளில் மட்டும் பெரும்பாலும் நிகழ்ந்த இத்தகு அரசியல் இப்பொழுது சாமான்யர்களாலும், சாமியார்களாலும் கூட அரங்கேற்றப்படுவது மூளைசலவைகளின் உச்சம்.

அந்த விதமான பாதிப்புகள் இல்லாத குட்டி கதைகளை நிறையா சொல்லு நண்பா.

அரவிந்தன் நீலகண்டன் said...

அய்யா சூரியா இந்த மாதிரி கதைக்கெல்லாம் என்ன அர்த்தம்? இப்ப எங்க ஊர்ல மருத்துவாழ் மலைன்னு ஒரு மலை -மலைன்னு கூட சொல்லமுடியாது ஒரு குன்று- இருக்கு. அனுமார் இலங்கைக்கு தூக்கிட்டு போன சஞ்சீவி பர்வதத்துல இருந்து விழுந்த ஒரு துண்டு அப்படீன்னு ஐதீகம். இந்த ஐதீகத்துனால இந்த மலைக்கு மேல மக்களுக்கு ஒரு கரிசனை. அதனோட விளைவு என்ன தெரியுமா? இன்னைக்கு 113 வகையான மருந்து செடிகள் இந்த இத்துனியூண்டு குன்றுல இருக்கு. இதுனால் நம்ம நாட்டு பொருளாதாரத்துக்கு ஏற்படுற மருத்துவ இலாபம் எவ்வளவு? எத்தனை உயிரிவள பாதுகாப்பு (protection of bio-diversity) ஏற்பட்டிருக்கு இதுக்கெல்லாம் கணக்கு கிடையாது. cost benefit analysis கிடையாது. இன்னும் கொஞ்சம் அதிகம் தெரியணும்னா Biodiversity in Indian Scenarios அப்படீங்கிற புக்ல (ஜேஎன்யூ புரொபஸர் மற்றும் சூழலியல் விஞ்ஞானி ராமகிருஷ்ணன் எழுதினது) 305 ஆவது பக்கதுலேந்து படிங்க. நம்மூர் மலையை பத்திதான். அதுலயும் இந்த கதையை சொல்லுதாங்க) இப்ப ஒரு பேச்சுக்கு ஒரு கதையா ஒரு விஷயம் பார்ப்போமா? நம்ம டி.ஆர்.பாலு அவரோட குடும்பத்துல ஒண்ணோ அல்லது பினாமியோ எடுத்த எடுக்கப்போற ஒரு கமிஷனுக்காக இந்த மருத்துவாழ் மலையை உடைக்க ஒரு ப்ராஜெக்ட் போட்டாங்கன்னா மக்கள் என்ன சொல்லுவாய்ங்க..."இது அனுமாரோட தொடர்புபடுத்தி எங்க பாட்டன் பூட்டன் சொல்லிட்டு வந்த மலை ராசா....இதை உடைக்காதே" அப்படீன்னுவாங்க இல்லையா...உங்களை மாதிரி பகுத்தறிவுவாதிங்க அப்ப என்ன செய்வீங்க? நல்ல அறிவியல் பார்வை உள்ளவரா இருந்தா இந்த கதைகளுக்கு மரபுகளுக்கு பின்னாடி உள்ள பாரம்பரிய அறிவியல் பார்வையை உணர்ந்து உடைக்காதே அப்படீன்னு சொல்லோணும் இல்லீங்களா...ஆனா என்ன செய்வீங்க... கேரளா முழுசும் எங்க கன்னியாகுமரி மாவட்டத்துலயும் இருக்குற ஸர்ப்பகாவுகளில் இருக்குற மூலிகை செடிகள் இந்த மாதிரி கதைகளாலதான் இன்னைக்கும் ஜீவிச்சுருக்கு. நீங்க சொன்னீங்களே சாமியாருங்க, விடுதலை போராட்ட காலத்துல காந்திஜியோட சத்தியாகிரகத்தை ஊரு ஊரா உழவங்களுக்கும் ஏழைபாழைங்களுக்கும் கொண்டு போனது யாரு அப்படீங்கிறீங்க? இதே சாமியாருங்கதான். அயோத்திலேயும் கதையை வரலாறாக்குனது ஆரு வரலாற்றை கதையாக்குனது ஆரு அப்படீங்கிறது அங்குள்ள அகழ்வாராய்ச்சி அறிக்கைகளை கொஞ்சம் கண்ணையும் மனசையும் திறந்துட்டு படிச்சா தெளிவாவே தெரியும்.

agalvenkat said...

சரிய்யா அரவிந்தா, (உங்க blog - அருமை - நான் தான் ரொம்ப லேட்)

ம். . .எனக்கும் இப்படிதான் சொல்லிகுடுத்தாங்க. பாரம்பரியம், பல்லுயிர்பெருக்கம், பர்வதம், பாராயணம் முக்கியமா நீங்க சொன்ன பகுத்தறிவு. இந்த கடைசி வார்த்தைக்கு முழுஅர்த்தம் புரிந்தவர்கள் இக்கால பெருந்தலைகளில் கூட இல்லை. பெரியார் சொல்லாமல் விட்ட அறிவுகளும் சரி, அவர் ரூட்டுக்காக போட்ட கோடும் சரி வசை'மாரி' களால் அழிந்தே போகிறது. அந்தமாதிரி பகுத்தறிவு'வாதம்' என்னிடம் எதிர்பார்க்காதீர்கள்.

தத்துவார்த்த மனித்துவமும் - சூழலறிவும் மேற்கண்ட அனைத்தையும் அடக்கி அதைவிட பரந்து விரிந்தது. கஷ்டப்பட்டாவது புரிந்துகொள்ளவும். இன்றய தேதிக்கும், கடவுள்தான் படைத்தான் என்றிருக்கும் படித்த பலரில், உங்கள் பரிணாமம் பற்றிய குறிப்புகள் அனுபவித்து எழுதப்பட்டதாக நினைக்கிறேன். உங்களால் நான் சொல்லவருவதை புரிந்துகொள்ள் இயலும். வலைப்பூ தர்மப்படி ஏதாவது மறுதலிக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

வேணும்னா வாங்க, தனியாபோய் பேசுவோம் (மின்னஞ்சல்). வார்த்தைகளை விரயமாக்காமல், தெளிந்தவற்றை மட்டும் இங்கே பின் - குறிப்பெழுதுவோம் (பின்னூட்டமா? ok ok). சரியா நண்பா?

அரவிந்தன் நீலகண்டன் said...

//கதைக்குள் புகுத்தப்பட்ட ராமர் பாலத்தை, அயோத்தி கோவிலை நாமே பெரியவர்களாகியும்(?!?) கட்டிக்கிட்டு அழுது - தேவையா ? // I think it is necessary.

agalvenkat said...

பிழை: மனித்துவமும் = மனிதத்துவமும்
(in my last comment; இன்னமும் சில-பல சிறு எழுத்துப்பிழைகள் இதில் இருக்கின்றன - இனி நேராமல் பார்த்துக்கொள்கிறேன்).

I don't think correction is possible(!?), but only deletion is - for comment section, am I right?