Wednesday, July 23, 2008

தம்மின் மெலியாரை நோக்கி தமதுடைமை



















மேலே உள்ள படத்தில் உள்ள வல்லூறு அந்த குழந்தை சாவதற்காக காத்திருக்கிறது. இப்புகைப் படத்தை எடுத்தவர் மூன்றே மாதத்தில் மன அழுத்தத்தில் இறந்துபோனதாக தெரிகிறது.



தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென் றகமகிழ்க
- தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே யிவர்க்குநா மென்று


குமரகுருபரரின் இந்த வாக்கை அடிக்கடி நமக்கு மெய்ப்பிக்க வேண்டி இந்த ஆப்பிரிக்க நாடுகள் இருக்கின்றனவோ என நினைக்கத்தோன்றுகிறது. நம்மில் எத்தனை பேர் எத்தனை தடவை வீட்டிலோ அல்லது போன இடங்களிலோ "இதெல்லாம் மனுஷன் சாப்பிடுவானா" எனக்கூறி இருக்கிறோம்?? ஆனால் உலகில் எத்தனையோ இடங்களில் ஒருவேளை உணவாவது கிடைக்காதா என ஏங்குவோர் பலர்.

இங்கு இணைத்துள்ள படங்களைப்பார்க்கும்போது கடவுளால் அதிகம் நேசிக்கப்படுவது நாம்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

கத்தாரில் கூட ஸ்பான்சர்களால் கைவிடப்பட்ட எத்தனையோ நேபாளிகளையும், பங்களாதேஷிகளையும் பேப்பர் பொறுக்க காணும்போது மனதில் மண்டும் சோகம். எனது நிஜமான எண்ணங்கள், உணர்ச்சிகள் இவை. பெப்சி டப்பாக்களும், பாலிதின் கவர்களும் பொருக்கி அதில் கிடைக்கும் காசும், மற்றும் எங்கெல்லாம் வேலைகிடைக்குமோ அங்கெல்லாம் வேலைசெய்தும் தனது உணவுக்கு உயிரைகொடுத்து வேலைசெய்வோர் பலர். இவர்களை நம்பி ஊரில் இருக்கும் குடும்பங்கள் என்ன ஆகும்?? எப்படி சாப்பிடுவார்கள்???

எப்போது வேலைக்கு வெளியே வந்தேனோ அப்போதே சாப்பாடைகுறை சொல்வதை நிறுத்திக்கொண்டேன். என்ன கிடைக்கிறதோ அதையே உண்ணவும் கடைசி பருக்கை வரை சாப்பிடவும் பழகிக்கொண்டேன். பிடிக்காத காய்கறிகளை வாங்குவதை நிறுத்தி பிடிக்கும் பொருட்களை வாங்கி முழுதும் பயன்படுத்தும் மனநிலைக்கு எப்போதோ மாறியாகிவிட்டது. வீணாய் செலவழித்த பணத்தை நல்ல வழியில் சேமிக்கப் பழகி இருக்கிறேன்.

இன்று உலகம் இருக்கும் சூழ்நிலையில் நமக்கு நாமே சாப்பாட்டையும், தண்ணீரையும் வீணாக்கமாட்டேன் என்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். ஒவ்வொருமுறை அனாவசியமாய் குழாயைத்திறந்து வைத்துக்கொண்டு பல்துலக்கும்போதும், முகச்சவரம் செய்யும்போதும் யாருக்கோ கிடைக்கவேண்டிய தண்ணீரை நாம் வீணாக்குகிறோம் என்ற எண்ணம் மனதில் தைக்க வேண்டும். பள்ளியில் படிக்கும்போது கேட்ட செய்தி இது. காந்தியடிகள் கங்கைக்கரையில் பல்துலக்கும்போதுகூட தேவையான அளவு மட்டுமே தண்ணீர் எடுத்து பல்துலக்கினாராம். கூட இருந்தவர்கள் எப்படியும் கடலுக்குத்தானே சென்று சேர்கிறது அதை சற்று தாராளமாய் பயன்படுத்தினால் என்ன எனக் கேட்டபோது பிறருக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை நான் எடுத்துக்கொள்வது எப்படி முறையாகும் எனச்சொன்னாராம். காந்தியடிகள் சொன்ன "தேவைக்குமேல் வைத்திருப்பவன் திருடன்" என்ற கூற்றும் இன்றைக்கு உண்மையாய் கண்கூடாய் காணும் நிலையில் இருக்கிறோம்.

குறைந்தபட்சம் சிந்திக்கும் கூட்டம் என நினைக்கும் நாம் இதைப்பின்பற்றலாமே!!!!

அன்புடன்,

ஜெயக்குமார்

3 comments:

ரசிகன் said...

நெகிழ வைக்கும் பதிவு. அருமை. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய வரிகள்:)

கானகம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்.

Divya said...

பதிவும், படங்களும் மனதை கணமாக்கியது:(