Sunday, July 13, 2008

75 ரூவாயும் கல்விச்சுற்றுலாவும்..

வாழ்க்கையில் முதன்முதலாக போன சுற்றுலா நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் உறவினர்களுடன் சென்ற ஒரு மாத தென்னிந்திய சுற்றுலா.. அதில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் அனைத்து குடும்பங்களும் சந்தித்து அங்கிருந்து புறப்படுவதாக ஏற்பாடு. முதன்முதலாக ரயிலில் ஏறியதும் அன்றுதான். ரயில், ஓடும் தண்டவாளத்திலிருந்து பிரிந்து பின் சேர்வதும் கைகாட்டிகளும், வண்டியோடும் திசைக்கு எதிராக ஓடும் வயல் வரப்புகளும், வீடுகளும் அப்படியே ஒரு புதுவித அனுபவத்தைத் தந்தது. எல்லாக் குடும்பங்களும் ஒரே கம்பார்ட்மெண்ட், ஒரே பேருந்து, ஒரே தங்குமிடம் என அருமையாய் எங்கள் பயணத்தைக் தொடர்ந்தோம்.

மேற்கூறிய சுற்றுலாவிற்குப் பின்னர் ஒம்போதாப்பு படிக்கும்போது எங்களது கா.நி.மே.நி. பள்ளியில் அழைத்துச்சென்ற கல்விச் சுற்றுலா-மறக்கமுடியாத ஒரு ஜாலி டூர்
வாழ்க்கையில் முதன்முதலாய் அம்மா அப்பாவுடன் இல்லாமல் தனியாக இருந்த மூன்று நாட்கள் அவை.

கல்விச்சுற்றுலாவுக்கு எங்கள் பள்ளியில் கூட்டம் சேர்ப்பதற்குள் ஆசிரியர்களுக்கு தாவு தீர்ந்துவிடும். எங்கள் ஊரே ஒரு கிராமம். அந்த ஊரில் உள்ள எங்கள் பள்ளியில் படிக்க எங்கள் ஊரைவிட வரப்பட்டிக்காடு கிராமங்களில் இருந்து வரும் ஏழைமாணவர்கள் படிக்கும் பள்ளி அது. வருடம் பதினைந்து ரூபாய் கட்டணம். அதையே மூன்று தவணைகளில் கட்டும் ஆட்களும் உண்டு. (1983) அதுபோல சூழ்நிலையில் இருக்கின்ற ஐந்நூறு மாணவர்களில் ஒரு ஐம்பது மாணவர்களை சேர்ப்பது எவ்வளவு பெரிய இமாலய சாதனை?? பயணக்கட்டணம் ரூபாய் எழுபத்தைந்து. மூன்று நாட்கள் பயணம். முதல் நாள் கட்டுச்சோறு. மற்ற இரண்டு நாட்களும் எங்கள் அய்யாக்களே சாப்பாடு வாங்கித்தந்து விடுவார்கள் அந்தப் பேருந்து கட்டணத்திலேயே. இந்த கட்டணத்தில் ரெண்டு நாள் சாப்பாடும் போட்டு வண்டிவாடகையும் குடுத்து கூப்டுட்டு போக ஆம்னி பஸ்ஸா கிடைக்கும்.?எங்களுக்கென்றே ஜெயவிலாஸ் கம்பெனியிலிருந்து ஒரு இத்துப்போன பஸ் கருப்பு பெயிண்டும் மஞ்சள் பார்டரும் போட்டு வரும். அதுதான் எங்கள் பயண ஊர்தி. எங்கள் சயின்ஸ் வாத்தியார்தான் இந்த கல்விச்சுற்றுலா ஒருங்கிணைப்பாளர். அப்படியே ஒவ்வொரு மரத்தடிக்கு கீழேயும் ஒரு நாள் மீட்டிங் நடக்கும். அப்பத்தான எல்லா இடத்தையும் கவர் பண்ண மாதிரி இருக்கும். எங்க பள்ளிக்கூடத்துல இருக்குற மரங்கள எண்ணி மாளாது. பணம் முதல்லேயே குடுத்தவைங்க முன்னாடியும், குடுக்காதவங்க பின்னாடியும் உக்காந்து எங்க எங்கெல்லாம் போகப் போறோம் அங்க என்னென்ன விசேஷம் எல்லாம் விவரமா அய்யா எடுத்துச்சொல்வார். இன்னைக்கு இருக்குற கைடுக எல்லாம் எங்க அழகர்சாமி அய்யாகிட்ட பிச்சை வாங்கனும். இங்கிருந்து நேரா கெளம்பி திருச்சி உச்சிப்புள்ளையாருக்கு ஒரு கும்புடப்போட்டுட்டு, அப்படியே ஸ்ரீரங்கம் போறோம். காவிரி போற அழகை அப்படியே பாத்துக்கிட்டே இருக்கலாம்டா. அப்புறம் அங்கையே மத்தியான சாப்பாடு. அங்கிருந்து நேரா கெளம்பி மெட்ராஸுக்குப் போறோம். அங்க ஜெயவிலாஸ் கெஸ்ட் ஹவுசுல தங்கல். மறுநா காலையில அப்படியே ம்யூசியம். அங்க நம்ம ராமனய்யா பின்னாலையே போகனும்டா. நாங்களும் கண்ணு வச்சிருப்போம். இருந்தாலும் சொல்றேண்டா. அப்புறமா மெரினா பீச். உலகத்துலையே பெரிய செயற்கை கடற்கரை. அங்க இருந்துட்டு சாமான் வாங்குறவங்கெல்லாம் வாங்கிக்கிறீங்க.. அப்படினு ஒவ்வொரு இடமா சொல்லிக்கிட்டே வருவார். இந்த சுற்றுலாவுல கலந்துக்கல நம்மோட வாழ்க்கையே போச்சு அப்படிங்கிற எண்ணம் வர்ரமாதிரி சொல்லுவாரு. ஒவ்வொரு மீட்டிங் முடிஞ்ச மறுநாள் ரெண்டுபேராவது பேர் குடுத்துருவாய்ங்க. அவிங்க அப்பா அம்மாவ அடிப்பாய்ங்களோ இல்ல இவைங்களையே அடிச்சிகிருவாய்ங்களோ தெரியாது. பணத்தை தேத்திருவாய்ங்க. இல்லைன்னா அப்பாவ விட்டு பையன் டூருக்கு கண்டிப்பா வாரான்னு அய்யாகிட்ட சொல்ல வச்சி பஸ்ஸுல சீட்டு போட்ருவாய்ங்க.பணம் பின்னாடி குடுத்துக்கலாம் . இப்படியே ஒரு மாசம் நடக்கும் அதுக்கப்புறம் புறப்படுற அன்னைக்கு மொதநா ராத்திரியே பள்ளிக்கூடத்துல வந்து படுத்துக்கிரனும். சிலசமயம் டேய் பஸ் இன்னிக்கு வர்லையாம்டா நாளைக்குத்தானாம்டா என எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரங்கள் கதைகட்டி விடுவார்கள். காலையில அஞ்சு மணிக்கு பஸ் வரும். அவ்வளவுதான். கூட்டமா ஓடி மொதல்ல அவன் அவன் பிரண்டுகளோட இடம் பிடிச்சி உக்காந்துகிருவாய்ங்க.
ஆனா அய்யாவுங்க வந்த உடனேயே சின்னப்பயகெல்லாம் முன்னாடி வாங்கடான்னு அய்யா பக்கத்துலையே உக்கார வச்சிருவாங்க. கொஞ்சம் வளந்த பசங்க செய்யிற கொஞ்ச நஞ்ச சேட்டையும் செய்ய முடியாம அப்படியே இருக்க வேண்டியதுதான்.
ஒவ்வொரு ஊரா கூட்டிட்டுபோயி எங்களுக்கு எங்க ஓசியில தங்க இடம் தருவாங்களோ அங்கன தான் தங்குவோம். அங்கயும் காலங்காத்தால் கூட்டுப்பிரார்த்தனை எல்லாம் இருக்கும். எங்க பள்ளிக்கூட பெருமைய காமிக்க. எங்க பள்ளிக்கூட பேமஸே கூட்டு பிரார்த்தனைதான். எங்க பள்ளிக்கூடத்துக்கு யார் வந்தாலும் அவைங்கள ஒரே அமுக்கு அமுக்கனும்னா கூட்டுப்பிரார்த்தனைதான். எங்க பள்ளிக்கூடத்துல உள்ள நிறைய கட்டிடங்கள் பல தொழிலதிபர்கள் கட்டிகொடுத்தது. பொள்ளாச்சி மகாலிங்கமாகட்டும், மறைந்த காஞ்சிப்பெரியவர் ஆகட்டும், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகட்டும், ஜெயவிலாஸ் மொதலாளி ஆகட்டும் மொதல்ல கூட்டுப்பிரார்த்தனைதான். அப்புறம்தான் பேச்செல்லாம். 'ஓம் தத் சத்' அப்படின்னு இந்து மதப் பிரார்த்தனையில் தொடங்கி, 'அவ்வூது பில்லாஹி மின ஷைத்தான்" என எங்கள் அப்பாஸ் அலி அய்யாவோ அல்லது அக்பர் அலி அய்யாவோ சொன்ன பின்பு 'பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவை' அழைத்து எங்கள் பிரார்த்தனை முடியும். நான் படித்த 13 ஆண்டுகளும் ( அட குட்டிஒண்ணாப்பையும் சேத்துங்க) மாறாதிருந்த வரிசை இது.

மெட்ராஸ்ல மியுசியத்துல, டாய்லட்டுக்குள்ள போன ஒருத்தன் ஒரு மணிநேரமா காணோம். ராமனய்யவும், அழகர்சாமி அய்யாவும் ரெண்டு வாட்டி மூணுவாட்டி தலைய எண்ணி பேரக்கூப்டுப்பாத்தாச்சு ஒரு ஆளு மட்டும் குறையுறான். அப்புறமா ஆடி அசைஞ்சு வர்றாரு நம்ம ஆளு. ராமனய்யா கேட்டது இன்னும் நெனவு இருக்கு. எண்டா வெளிக்கிப்போனயா இல்ல கொடல புடுங்கி சுத்தம் பன்னயாடானு. பண்ணயாடானுஅப்புறம் மகாபலிபுரத்துல ஒருத்தன் அப்புறம் இன்னொரு இடத்துல ஒருத்தன்னு ஒவ்வொருத்தனையா தேடி ஊருக்கு கொண்டு வந்து சேக்குரதுக்குள்ள அய்யாக்களுக்கு நாக்குத்தள்ளிரும். எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு செஞ்சாங்க ?? நம்ம பசங்களுக்கு நாலு இடம் சுத்திப்பாத்தாதான வெளிய என்ன நடக்குதுன்னு தெரியும் அதுக்காகத்தான் இவ்வளவு சிரமமும் எடுத்து செஞ்சாங்க. இப்பெல்லாம் அப்படி கல்விச்சுற்றுலா எல்லாம் கூப்டுட்டு போறாங்களான்னு தெரியல.
மூணு நாள் பயணம்முடிஞ்சஉடனேயே ஒரு பயணக்கட்டுரை எழுதி முடிச்சா அந்த நிகழ்ச்சி நிறைவு பெறும்.
எனக்கு இந்த சந்தோஷம் பள்ளிக்கோடத்துல ஒருவாட்டி கிடைச்சுது. அதுக்கப்புறம் காலேஜுல போன கல்விச் சுற்றுலாவத்தான் சுற்றுலான்னு சொல்ல முடியும். சும்மா படமெடுத்து ஆடுனாய்ங்க எங்காளுக எல்லாம். படிக்கிற காலத்துலயே காந்திகிராம பல்கலைகழகத்துல படிச்சவைங்களே அப்படித்தான் இருந்தாய்ங்க. சிகரெட் என்ன, சரக்கு என்ன சும்மா ஊட்டியில ராத்திரி குளுருல ஆட்டமா போட்டாய்ங்க. அதுல ஒருத்தனுக்கொருத்தன் கைலிய பிடிச்சு இழுக்க, பிடிக்காத வாத்தியார சவுண்டு விட அப்படின்னு ஒரே அமர்க்களமா போச்சு. ,மெட்ராஸ்ல வந்த பின்னாடி ஒரே சமத்துவமா எங்க வாத்தியாரும், பயகளும் சேந்து தண்ணி அடிச்சு ஒரே பாசமழை. திரும்பி வந்து இண்டேர்னல ஆப்பு அடிச்சாங்க அது தனிக்கதை. அதுலையும் சின்னத்தம்பின்னு ஒருத்தன் சிரிக்கிற சிரிப்புக்கு ஊரே திரும்பி பாக்கும். கலக்கலா போயிட்டு வந்தோம். போன இடத்துல போன ரெண்டு வண்டியில ஒரு வண்டி ஆக்சிடென்ட் ஆயி எல்லோரையும் ஒரே பஸ்சுல போட்டு அடைச்சி யுனிவேர்சிடியில கொண்டுவந்து தள்ளுனாங்க. முழுசா அனுபவுக்க முடியாட்டியும் இருந்தவரைக்கும் அனுபவிச்ச அமர்க்களமான டூர் அது. நமக்குத்தான் வேடிக்கை பாக்குற பாக்கியத்தோட முடிஞ்சுபோச்சு. சேட்டையில எல்லாம் கலந்துக்குற அளவுக்கு தைரியமும் , வசதியும் இல்ல அப்ப.
இப்ப சுத்துறதுதேன் பொழைப்பா இருக்கு. ஆனா அங்க அனுபவிச்சசந்தோஷம் இனிமே கிடைக்குமா என்ன??

4 comments:

ரசிகன் said...

மலரும் நினைவுகளில் கலக்கறிங்க:)
எனக்கும் என்னோட பள்ளிச் சுற்றுலா நினைவுக்கு வந்துடுச்சுன்னா பாத்துக்கோங்களேன்:)

விஜய் said...

இன்பச் சுற்றுலாவின் நினைவலைகளை குறும்ப்டம் போல் சொல்லியுள்ளது என் நினைவுகளை பள்ளிக் காலத்திற்கு இட்டுச் செல்கிறது.பாரட்டுக்கள்

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

please visit my blog.

வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 31 மறுமொழிகள் | விஜய்

கானகம் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன் மற்றும் விஜய்

Karthi said...

jeyakumar,

I really enjoyed your article on our school tour..I felt like,watching a movie with actors alagarsamy ayya,Raman ayya,our students as characters interestingly the Black color jeyavilas bus with a Yellow border.

You had a doubt that whether GNHS school arranges this tour everyyear or not.
Unfortunately NO.
In 1994 tour,there was an unfortunate tragedy where few of our school students were missing in cauvery river in trichy. After that,this tour was cancelled for many year..

Anyway,I appreciate your writing..All the best .
-Karthik