Wednesday, November 2, 2011

13 Assassins (Japanese)


நமக்குத் தெரிந்ததெல்லாம் டி.வி.எஸ் சாமுராய் தான் ஒரு காலத்தில். ஆனால் சாமுராய் என்ற பெயருக்கு ஜப்பானில் இருக்கும் மதிப்பே தனி. சாமுராயாக இருப்பதே ஒருவகை சுமைதான். அதை விரும்பி ஏற்றுக்கொள்வோரே சிறந்த சாமுராயாக இருக்க முடியும்.

சாமுராய்கள் தொழில்மயமான ஜப்பானின் காலத்திற்கு முன்பு இருந்தவர்கள். அவர்களுக்கென தனியானதொரு சட்ட திட்டங்கள் உண்டு. அதன் பெயர் புஷிடோ. சாமுராய்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்கள், மற்றும் நிலச்சுவாந்தாரர்களின் செல்வங்களுக்கும், அவர்களுக்கும் பாதுகாப்பாய் இருந்தனர். அவர்களது பாதுகாப்புக்காக உயிரையும் அர்ப்பணித்தல் அவர்களின் கடமைகளில் ஒன்று. சாமுராய்களில் பெண்களும் உண்டு. சாமுராய்கள் எதிராளியிடம் தோற்க நேர்ந்துவிட்டால் தற்கொலை ( ஹரகிரி ) செய்துகொள்ள வேண்டும். அதற்கும் எப்படி ஹரகிரி செய்து கொள்ளவேண்டும் என்ற சட்டங்களூம் உண்டு.

ஆனால் எங்கும் இருப்பதுபோல ஜப்பானிலும் நூற்றுக்கணக்கானோர் தாங்கள் சாமுராய் எனக் கூறிக்கொண்டிருந்தாலும் அவர்களெல்லம நம்மூர் “டாக்டர்கள்” போலத்தான்.

அப்படி ”சாமுராய்”க்களின் காலம் மறையும் நேரத்தில் 13 உண்மையான சாமுராய்கள் சேர்ந்து மக்களுக்கு கொடுமை செய்யும் ஒரு கொடூரமான பிரபுவை (நாரிட்சுகு)அழிக்க தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராகிறார்கள்.

யார் அந்த கொடூரமான பிரபு? ஜப்பானில் ”ஷோகுன்” என்றால் படைத்தலைவன். அப்படி ஒரு முன்னாள் படைத்தலைவனின் மகனும், தற்போதைய படைத்தலைவனின் இளைய தம்பியுமய் இருக்கும் ஒருவன், பெயர் மட்சுடிரா நாரிட்சுகு. இந்தத் தகுதிகளினால் எந்த சட்டமும் இவனைக் கட்டுப்படுத்தாது. ஷோகுன்களை ஜப்பானிய அரசர் நேரடியாக நியமிப்பார். கேட்க வேண்டுமா? நினைத்த பெண்ணை கற்பழிப்பது, கொடூரமாக கொலை செய்வது, அங்கங்களை வெட்டி விளையாடுவது இப்படியாக கொடூரமாக இருந்தவன்.

இவனது கொட்டத்தைப் பார்க்கும் ஒரு அரசு அதிகாரி இப்போதே இவ்வளவு கொடுமைகளைச் செய்யும் இவன், நாளைக்கு அதிகாரத்தின் உச்சிக்குச் செல்லும்போது இன்னும் என்னென்ன கொடுமைகள் செய்வானோ? அதற்குள் இவனை அகற்றிவிட வேண்டுமென நினைக்கிறார். அதற்காக ஷின்சிமொன் என்ற ஒரு சாமுராயை நாரிட்சுகுவைக் கொல்லும்படி வேண்டுகிறார்.

ஷின்சிமொன் பொறுக்கி எடுத்த மேலும் 11 பேரை சேர்த்துக் கொண்டு ”ஈடோ” என்ற இடத்திற்கு நாரிட்சுகு (வில்லன்) செல்லும் வழியில் ஊடறுத்து நாரிட்சுகுவை (வில்லன்)கொல்லுதல் என்று திட்டம்தீட்டுகிறார்.

13வது ஆள் பெயர் கிகா. காட்டில் இவர்களுக்கு வழி காட்டியாக வந்து இவர்களுடன் சேர்ந்து கொள்பவன்.கிகா சாமுராய் அல்லன். ஆனால் சாமுராய்கள் என்றால் பெரிய கொம்பா என்ற எண்ணம் கொண்டவன். அவனாலும் சிறப்பாய் சண்டையிட முடியும் என நினைப்பவன். அவனையும் அவர்களது திட்டத்தில் சேர்த்துக் கொள்கின்றனர்.

நல்லவேளையாக ஆங்கில சப்டைட்டிலுடன் படம் பார்த்தேன். இல்லையெனில் ஒரு அட்சரம் கூட புரிந்திருக்காது.

ஏன் நாரிட்சுகுவைக் ( வில்லன்) கொல்ல வேண்டும் என்பதற்கு நியாயம் சேர்க்கும் காட்சிகள் உறைய வைக்கின்றன. ஒரு காட்சியில் ஒரு பெண்னை கையையும், காலையும் வெட்டி, நாக்கையும் அறுத்து வைத்திருப்பான். இப்படி செய்வது அவனது விளையாட்டாம். அவளுடன் விளையாடுவது போரடித்த பின்னர் அவளை வெளியே வீசிவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு பெண்ணை கற்பழித்து விடுவான்,அவள் ஹரகிரி செய்து கொள்வாள்.கணவனை வெட்டிக் கொன்றுவிடுவான்.

இன்னொரு காட்சியில் ஒரு குடும்பத்தையே அம்புகள் விட்டு கொல்வான். சிறு குழந்தை உட்பட.

அதுபோல மக்கள் அனைவரும் அவனது அடிமைகள். அதுதான் அவன் கொள்கை. ஓரிடத்தில் ஹன்பேயிடம் Ruling is convenient, but only for rulers. The people must live to serve. என்பான்.

இதையெல்லாம் கேட்கும் ஷின்ஷிமோன் இந்த அநியாயத்தைச் செய்யும் நாரிட்சுவைக் கொல்வதே சாமுராயாக இருக்கும் தனக்குப் பெருமை அளிக்கும் என நினைக்கிறார். ஒரு சாமுராய் கௌரவமாய்ச் சாவதைவிட என்ன பெருமை இருக்க முடியும் என்கிறார். இதை, கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைத்தவரிடம் I shall accomplish your task... with magnificence என்பார்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்ற நம்மூர் பழமொழியையே ஜப்பானிலும் சொல்கின்றனர். தூண்டிலைப் போட்டு வைத்துவிட்டு காத்திருக்க வேண்டும். அவசரப்பட்டால் மீன் புழுவை மட்டும் சாப்பிட்டு ஓடிவிடும். பொறுமையாய் இருந்தால் மீன் வசமாய்ச் சிக்கும். வில்லனைக் கொல்ல காத்திருக்க வேண்டியிருக்கும் நேரத்தில் தனது குழுவிடம் ஷின்ஷிமோன் சொல்வது மேற்சொன்னது.

வில்லனைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டு காத்திருக்கும் இடத்திற்கு வராமல் வேறுபாதையில் சென்றுவிட்டதுபோல ஒரு மாயையை நாரிட்சுகு உருவாக்குவான். ஆனால் நிச்சயம் இவர்கள் வலைவிரித்துக் காத்திருக்கும் வழியில்தான் வருவான் என்பதை ஷின்ஷிமொன் சொல்வார். அதைப்போலவே 70 பேர் கொண்ட குழுவாகப் புறப்பட்ட அந்தக்கொடூரன் மறைவாகப் பதுங்கி இருந்துவிட்டு ஆட்களை மேலும் சேர்த்து 200 பேருக்கும் மேலாக வந்து தாக்குவான்.

13 பேர் கொண்ட சாமுராய் குழு 200 பேர் கொண்ட குழுவை வென்றதா, அந்தக் கொடூரன் கொல்லப்பட்டானா என்பதுதான் கதை.

நாரிட்சுகுவைத் தாக்க திட்டமிட்டிருந்த முழுகிராமத்தையே அவர்களுக்கான வலையாக மாற்றியிருப்பார்கள், 13 பேரும் சேர்ந்து. வெடிகள், முட்கள், அம்புகள், வாட்கள் என எல்லாவற்றையும் கொண்டு சண்டையிடும் காட்சிகள் அருமை. ஆனால் அந்த சண்டைதான் மிக முக்கியம் என்பதால் மிக நீளமான சண்டையாக எடுத்திருக்கின்றனர்.

இந்தப்படத்தின் ஒளி மற்றும் ஒலிப்பதிவு குறித்து. இசையற்றிருத்தலே சிறந்த இசை என்பதை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மிக மிக அவசியமான இடம் தவிர வேறு எங்கும் இசையை நம்மால் உணர முடிவதில்லை. கிட்டத்தட்ட படத்துடன் இயல்பாக பயணிக்கிறது இசை. பிரம்மாண்டம் ஏதுமின்றி சாமுராய்களின் வாழ்க்கை பற்றி அருமையாகச் சொல்கிறது படம்.

ஒளிப்பதிவும் அருமை. கண்ணைகூசச் செய்யும் ஒரு இடம்கூட இல்லை. அழகான ஜப்பானிய கிராமங்களைப் பார்த்த உணர்வு. இவ்வளவு இயற்கை அழகுடனா ஜப்பான் இருக்கும்? அழகோ அழகு சாமுராய்கள் எதிரியை எதிர் கொள்ளும் இடம். படத்தில் எங்கும் வெயில் வந்து பார்த்தாக ஞாபகம் இல்லை.

ஹீரோயிஸம், பறந்து பறந்து சண்டை, என்ற எதுவும் இன்றி கெட்டவனை அழிக்க தன்னைப் பணயம் வைக்கும் 13பேரின் கதை. அவ்வளவே. அந்தக்காலத்தில் எப்படி செய்திருப்பரோ அதேபோல.

எதிரியின் படைத்தலைவன் ஹன்பே (அவனும் சாமுராய்தான்) தலை வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும். அதைக் காலால் எட்டி உதைப்பான் அந்தக் கொடுரன். “அவன் உன்னைக்காக்கத்தானே தனது உயிரை இழந்தான் அவன் தலையை எட்டி உதைக்கிறாயே என ஷின்ஷிமோன் கேட்பார். நாரிட்சுகு பதிலாக திமிருடன், உனக்கு வேண்டுமெனில் எனது தலையை வெட்டி நீ காலால் உதை என்பான்.

இறுதிச் சண்டையாக நாரிட்சுகுவை “உன்னால் கஷ்டப்பட்ட மக்களுக்காகவும், இனி நாடு அமைதியாக இருப்பதற்காகவும், எனது நண்பனின் குடும்பம் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும், உன்னால் சர்வநாசம் செய்யப்பட்ட அந்தப் பாவப்பட்ட பெண்ணிற்காகவும் உன்னைக் கொல்கிறேன் எனச் சொல்லி அவனை அழிக்கிறான் சாமுராய் ஷின்ஷிமோன். ஷின்ஷிமோனும் நாரிட்சுவால் வாளால் குத்தப்படுகிறார். இருவரும் இறக்கின்றனர்.

எல்லா கொடூரர்களுக்கும் அவர்களது சாவு என்பது வலி மிகுந்தே இருக்கிறது,அன்று முதல் இன்றுவரை. ஷின்ஷிமோனால் வயிற்றில் குத்தப்பட்டு துடிக்கும்போது வலிக்காக அழுகிறான், சாகப்போவதை நினைத்து சகதியில் புரண்டு அழுகிறான். ஷின்ஷிமோன் அவனது தலையைக் கொய்து அவனது வலியிலிருந்து விடுதலை அளிக்கிறார். அவ்வளவு கொடூரமானவனுக்கும் கருனையே காட்டுகிறான் இந்த சாமுராய்.

சாமுராய்களின் வாழ்க்கை என்பதே ஒரு சுமைதான் என்பதை கடைசியில் வீழ்ந்து கிடக்கும் ஷின்ஷிமோன் சொல்வார். திருமணம் ஆகாத ஒரு சாமுராய்க்கு (ஷின்ஷிமோனின் மருமகன்) இனிமேல் உன் வாழ்க்கையை நீ விரும்பிய வழியில் வாழ்ந்துகொள் என்பதுடன் நிறைவு பெருகிறது.

கிகாவாக வரும் அந்த காட்டுவாசி ஒரு மனிதனே அல்ல. அவன் ஒரு காட்டுப் பேய். ஆனால் நன்மை செய்யும் பேய். அவன் சொல்லும் உபாஷி என்ற பெண் அந்தக் கூட்டத்தின் தலைவியின் மகளாக இருக்கக் கூடும். அவனது தலைவியின் மகள்மீது கைவைத்ததால்தான் தன்னை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டதாக கிகா சொல்கிறான் ஓரிடத்தில்.

சண்டையில் அவனுக்கு கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு விடுவான். கடைசியில் எநதக் காயமும் இன்றி அவன் அடுத்த காட்சியில் வருவான். எஞ்சி இருக்கும் ஒரு சாமுராய் எப்படி உனக்கு காயமே இல்லை எனக் கேட்கும்போது Compared to fighting a wild bear these wounds are nothing. என்று சொல்லி விடுவான்.

சாமுராய்களுக்கு உதவ கிகா என்ற நல்ல பேய் உதவுவதாகக் கூட கொள்ளலாம்.


இது திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட கதை அல்ல.. நிஜமாகவே நடந்தது, திரைவடிவத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1963ல் இதே பெயரில் வந்த கருப்பு வெள்ளைப் படத்தின் மறுதயாரிப்புதான் இந்தப் படம்.

இயக்கம் : தகாஷி மைக் ( Takashi Miike.)
ஜப்பான் அகாதமி பரிசுக்கு சிறந்த படம் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படம்.

இந்தப் படத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குங்கள்.

படத்தின் ட்ரெய்லரைக் காண இங்கே சொடுக்குங்கள்.

இந்தப் படத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளம் இது.

1 comment:

kargil Jay said...

நன்றாக விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.

ஷின்ஷிமொனிடம் "குருவே, 70 பேர் அல்ல 200 பேர் வந்திருக்கிறார்கள்" என்று ஹன்பே அதிக போர் வீரர்களைத் திரட்டி வந்ததைச் சொல்வான்.

அதற்கு ஷின்ஷிமோன் "ரொம்ப நல்லது.. தூண்டிலில் நினைத்ததைவிட மிகப்பெரிய மீன் மாட்டிவிட்டது" - என்று சொல்லும் காட்சி ரொம்ப பிடித்து இருந்தது..