எனக்கும் எழுதறதுக்கு வேற விஷயம் இல்லாததனால நான் இப்போதைக்கு இருக்குற தோஹாவைப் பத்தியும் அதில் பாக்க வேண்டிய இடங்களைப் பத்தியும் உங்களுக்கு சொல்லலாமுன்னு இந்த பதிவு.
முதல்ல கார்னிச் எனப்படும் கடலில் விளையாட முடியாத கடற்கரை:-
பெரும்பான்மையான மக்களின் மாலை நேர பொழுதுபோக்கு இந்த கடற்கரையில் அப்படியே வாக்கிங் போவதுதான். கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் எந்த விதமான தொந்தரவும் இன்றி மெதுவாய் நடக்கலாம். காவல்துறையின் தலைமையகமான மினிஸ்ட்ரி ஆஃப் இன்டீரியரிலிருந்து அப்படியே ஆசிய விளையாட்டுப் போட்டி சின்னம் வரை காலாற நடந்து போகலாம். அதன் படம் கீழே.



ஷாப்பிங் மால்கள் :-
இங்கு அதிகம் அறியப்பட்ட மால்களாக இருப்பவை கேர்ரபோர், லூலூ ஹைபர் மார்கெட், சிடி சென்டர், டாஸ்மான் சென்டர் என பல வகையான மால்கள். இது தவிர இந்திய குடும்பங்கள் விரும்பிச் செல்லும் ஃபெமிலி புட் சென்டர் மற்றும் இந்தியன் சூப்பர் மார்கெட் ஆகியன உள்ளது. இந்தியாவில் கிடைக்கும் அனைத்து சாமான்களும் இங்கு கிடைக்கும், வடகம் வத்தல் முதல் வாழை இலை வரையும் அனைத்தும் கிடைக்கும். கருகப்பிலை இலவசமாய் தருவது ஃபெமிலி புட் சென்டர் மற்றும் இந்தியன் சூப்பர் மார்கெட் ஆகியன. லூலூவிலும் எல்லாம் கிடைக்கும் ரெடிமேட் இட்லி மாவுவரை. அரிசி தஞ்சாவூர் பொன்னி, இந்திய, பாகிஸ்தானிய பாசுமதி அரிசிகள் பங்களாதேஷ் மற்றும் இந்திய காய்கறிகள், பிலிப்பின, மற்றும் ஆஸ்திரேலிய பழங்கள் எல்லாம் கிடைக்கும். கத்தாருக்கு வர விரும்புபவர்கள் உணவுக்காக யோசிக்க வேண்டாம் தைரியமாய் வரலாம்.
உணவகங்கள் :-

இது போன்ற கடைகள் தவிர திருநெல்வேலியின் ஆரியாஸ், சென்னையின் ஹோட்டல் வசந்தம், ஷாலிமார், மற்றும் எளியவர்களுக்கான ஹோட்டல் போனன்சா போன்ற ஹோட்டல்களும் உண்டு. நம்மூர் இட்டிலி, தோசை முதற்கொண்டு எல்லாம் கிடைக்கும். இங்கு வருகின்ற அனைத்து ஆட்களும் தவறாமல் சொல்வது நம்மூர் விலைதான் இங்கேயும் உள்ளது என. இரண்டு இட்டிலி நாற்பது ரூபாய்கள். பில்டர் காபி நாற்பது ரூபாய்கள், நம்மூர் மதிப்பில். மற்றபடி சைனீஸ் உணவு வகையில் ஆரம்பித்து, லெபனான் உணவுகள், சூடானிய உணவுகள், நேபாள உணவுகள் என உணவில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் கிடைக்கும். பர்ஸ் மட்டும சீக்கிரம் ஆவியாகிவிடும்.
போனன்சா ஹோட்டலில் பத்து ரியால்கள் இருந்தால் நான்கு இட்டிலி, ஒரு தோசை ஒரு காப்பியும் சாப்பிட்டு விடலாம். சிவகங்கையை சேர்ந்த ஒருவர் நடத்துகிறார். நம்மூர் மக்களின் கூட்டம் எப்போதும் இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் சாம்பாரும் சட்னியும் கிடைக்கும். கிட்டத்தட்ட மதுரையிலும். சிவகங்கையிலும் சாப்பிடுவது போன்ற உணர்வுதான் இருக்கும். அண்ணே, அப்படின்னு கூப்டா போதும் மூணு சட்னி, ஒரு சாம்பார் எல்லாத்தையும் இடம் இருக்குற வரைக்கும் ஊத்திட்டு போயிருவார். எனக்குப் பிடித்த ஓட்டல்களில் போனன்சவும் ஒன்று அதன் சுவைக்காகவும், நம்ம ஊர்க்காரர் ஓட்டல் என்பதாலும், இன்னும் குறிப்பாய் அதன் விலைக்காகவும்.
நமது மக்களின் பொழுதுபோக்குகள்:-
வேலை செய்துவிட்டு வந்து தொலைகாட்சி பார்த்தல். அது தவிர வெள்ளிக்கிழமைகளில் தோகாவில் எங்காவது சந்தித்தல். தோஹாவில் சந்தித்தல் என்பது எல்லாராலும் முடியாத காரியம். அவரவர்கள் வேலை செய்யும் கம்பெனி அனைவரையும் சாமான்கள் வாங்கவும் மற்றபடி வெளியுலகைப் பார்க்கவும் வாரம் ஒரு நாள் கம்பெனி வண்டியிலேயே வேலையாட்களை அழைத்துச்சென்று பின்னர் திருப்பி அழைத்துவருவார்கள். அப்போதுதான் உள்ளூர்க்காரன், சொந்தபந்தம், தெரிஞ்சவன் இப்படி பலபேர் சந்திக்கும் களமாகவும், ஊருக்கு பணம் அனுப்புவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். கீழே உள்ள படம் பணம் அனுப்புவதற்காக நிற்கும் கூட்டம்.

வெள்ளிக்கிழைமை மாலை நான்கு மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை இருந்துவிட்டு அடுத்தவார பணிகளுக்கு தயாராக திரும்பவேண்டும். பல கம்பெனிகள் வாகன வசதிகள் கூட செய்து தராது.
கொஞ்சம் நல்ல வேளையில் வந்தவர்கள் கடற்கரையிலும், ஷாப்பிங் மால்களிலும் பொழுதைக் களிப்பர். இது தவிர நிறைய இரவு உணவு விடுதிகளும், கிளப்புகளும், உண்டு. இந்தியன் கிளப் கூட உண்டு கத்தாரில்.
சினிமாக்கள்


தோஹா சினிமா, மற்றும் கல்ப் சினிமா என இரண்டு தியேட்டர்களில் தமிழ், தெலுகு மற்றும் மலையாள படங்களும் வரும். இது தவிர மால் சினிமாவில் அவ்வப்போது தமிழ் படங்கள் வரும். சிடி சினிமா போன்ற பல தியேட்டர்கள் உள்ளன. தமிழ் சினிமாக்கள் அனைத்தும் 25 கத்தாரி ரியால்கள் பால்கனியில் அமர்ந்து பார்க்க. முதல் வகுப்பு கட்டணமாக ௨0 கத்தாரி ரியால்களும் அதற்க்கு கீழே 15 கத்தாரி ரியல்களும் கட்டணம். நம்மூர் திண்டுக்கல், மதுரை தியேட்டர்கள் போலத்தான் இருக்கும். மற்ற மால் சினிமா சிடி சினிமாக்கள் அனைத்தும் நம்மூர் சினி, மினி பிரியா போல இருக்கும். இது தவிர திருட்டு வி சி டிக்கள் வெள்ளமென கிடைக்கும். ஒரு படம் ௧0 ரியாலிலிருந்து ௧௫ ரியால்கள் வரை விற்கப்படும் குத்து மதிப்பான கணக்கு என்னவெனில் ஒரு சி.டி ஐந்து ரூபாய், அதான் கணக்கு. என்ன படம் வேண்டுமானாலும் கிடைக்கும் குசேலரு தவிர..
..தொடரும்...