Thursday, March 20, 2008

வைக்கம் முகம்மது பஷீரின் - ஜென்ம தினம் பற்றிய எனது எண்ணங்கள்.



வைக்கம் முகம்மது பஷீரின் ஜென்ம தினம் என்ற கதையை காலச்சுவடில் தற்செயலாக படித்தேன். இப்படி ஒரு யதார்த்தமான கதைகளை இன்றுவரை படித்ததில்லை நான்.

ஒரு மனிதனின் ஒரு நாள் உணவுக்கான போராட்டம் மட்டுமே கதை. ஆனால் அதில் கதாநாயகனுக்கு ஏற்படும் யாசகம் கேட்க ஏற்படும் கவுரவசிக்கல்கள், வயிறும் ஏற்படுத்தும் உணவுக்கான உந்துதல்கள் , கடைசியில் என்ன ஆனாலும் சரி என பக்கத்து அறை நண்பன் சமைத்ததை எடுத்து உண்டுவிட்டு பசி அடங்கியதும் அதனால் ஏற்படப்போகும் மானக்கேட்டிற்காக அஞ்சி நடுங்குவதும் பின்னர் அந்த விஷயம் சாதாரணமாக முடிந்து ( நான் வெளிய சாப்டுட்டு வந்துட்டேன் என பக்கத்து அறை நண்பன் சொல்லுமிடம்) , படிப்போர்க்கு "அப்பா.. மானக்கேட்டிலிருந்து தப்பிச்சுகிட்டார்" என்ற ஒரு எண்ணமும், நிம்மதியும் வருமாறு அருமையாக கதையை கொண்டுசென்றுள்ளார் முகம்மது பஷீர்.

கதை எழுதுவதற்கு கதைக்கருவை எங்கும் தேடி அலையவில்லை அவர். தனது வாழ்க்கையையே கதையாக்கியதால் கதையின் ஓட்டம் முடிவுவரை கொஞ்சமும் தொய்வில்லாமல் செல்கிறது. புனைவில்லை, அலாங்கராங்கலில்லை வெகு யதார்த்தமாய் கதை நம்முள் படிகிறது..

வாசிப்பனுபவம் என்ற பதத்திற்கான அர்த்தத்தை மேகருன்னிசா என்ற கதைக்குப்பின்னர் இந்த கதைதான் முழுதும் கொடுத்தது எனக்கு.

எளிய நடை, படிப்பவருக்கு தன்னைச்சுற்றி நடக்கும் வாழ்க்கையை கதையில் பார்ப்பதால் கதையில் முழுதும் தன்னை செலுத்திவிடமுடிகிறது.

அவரைப்பற்றி காலச்சுவடில் சுகுமாரன் எழுதிய கட்டுரையில் அவரது வாழ்க்கைக்கதையும், உலகத்தின் மீதும், எளிய மக்களின்மீதும் கொண்டிருந்த அன்பையும், அவர்களையும் தன்னையும் கதை மாந்தர்களாகக் கொண்டு அவரது எல்லாக்கதைகளும் எழுதியதாகக்குறிப்பிடுகிறார். (அங்கிருந்துதான் வைக்கம் முகம்மது பஷீரின் கதைகளை படிக்க ஆரம்பித்தேன் - அவரது கதைகளுக்கு இணைப்பு கொடுத்திருந்தனர்)

நான் படித்த இரண்டாவது கதை பஷீர் எழுதியதில் தேன் மாம்பழம். நான் படித்த முதல் கதையைப்போலவே எளிமையான கரு. சீரான நடையில் கதை சொல்லல் எல்லாம் இருந்து பஷீரை தேடி படிக்கவேண்டும் என்ற ஆவலை உருவாக்கிவிட்டார்..

நான் வாழ்கின்ற காலத்திலேயே வாழ்ந்த ஒரு நல்ல எழுத்தாளரை அவரது மறைவு மறைவுக்குப் பின் படிக்கிறேன். உலகில் இருக்கின்ற அனைத்துப்புத்தகங்களையும் படித்துவிட முடிகிறதா என்ன??

இன்னும் வாழ்க்கைப்பாதையில் எத்தனை ஆச்சரியங்கள் எழுத்து ரூபத்தில் காத்திருக்கிறதோ யாருக்குத்தெரியும்...????

நீங்களும் முதல் முறையாய் வைக்கம் முகம்மதுவை படிப்பபராய் இருந்தால் நான் ஆரம்பித்த இந்த கதையிலிருந்தே தொடங்குங்கள்.

ஜெயக்குமார்.

3 comments:

Unknown said...

பஷீரின் கதை பற்றிய உங்கள் பதிவு நன்றாக இருந்தது. தேடிப்படிக்க வேண்டிய எழுத்தாளர்.

ரசிகன் said...

கதையை படிக்கத்தூண்டும் விமர்சனம்.
நன்றிகள் பகிர்ந்துக்கொண்டதற்க்கு :)

கானகம் said...

விஜய் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

தல.. வந்து படிச்சுட்டுப் போனதுக்கு நன்றி.. உங்க வேகத்துக்கெல்லாம் நம்மால ஈடு குடுக்க முடியாது,, எழுதுரதுல,,

பாக்கலாம்..