Tuesday, February 26, 2008

த சைக்கிளிஸ்ட். (ஜெயக்குமார்)

சைக்கிள் ஓட்ரதுக்கு முன்னமே எப்பவாவது அப்பாகிட்டயோ அண்ணன்கிட்டயோ அடிவாங்கி இருக்கீங்களா?? நா வாங்கி இருக்கேன் என்னோட தம்பி உபயத்துல--எங்கப்பா சைக்கிள எடுத்ததுக்காக..

எல்லாப் பயகளும் வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டி ஊருக்குள்ளா படம் போட்டுக்கிட்டிருக்க நா மட்டும் தனியா கொப்பு தவறவிட்ட கொரங்கு மாதிரி ஆய்ட்டேன். உடனடியா சைக்கிள் கத்துக்கிட்டு நாமளும் கூட்டத்துல சேந்துரனும்னு நிதி திரட்ட ஆரம்பிச்சு, வீட்டுக்கு வந்த மாமா அத்தைக கிட்ட அஞ்சு காசு--பத்துகாசா சேத்து அரைமணி நேரம் ஒரு மணி நேரம்னு சைக்கிள கையில பிடிச்சுகிட்டே ஊர சுத்தி வர ஆரம்பிச்சேன். 'எப்படிண்ணே வண்டில ஏர்ரது' அப்படின்னு எந்த அண்ணன் கிட்ட கேட்டாலும், 'இந்தா இப்படித்தாண்டா' அப்படின்னு என்னோட வண்டிய எடுத்துட்டு ஓசி ரவுண்டு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க..

பலநாள் முயற்சியில வண்டிய வேகமா தள்ளிக்கிட்டே போய் பெடல்மேல நின்னுக்கிட்டே கொஞ்சதூரம் போக பழகிட்டேன். அப்பயே, 'சைக்கிள்ள நாம பல சாதனைகள் பண்ணவேண்டியிருக்கு; எப்ப கொரங்கு பெடல் போடுறதுன்னு அவசரமா முக்கோணத்துல காலவிட்டதுல, அடுத்த பக்கம் கால விடவே முடியாம நேர போயி எதுத்தாப்ல இருந்த மரத்துல கொஞ்சம் கூட பிசிரே இல்லாம மோதிட்டேன். அந்த வகையில் எங்கப்பாவுக்கு ஆன செலவு, சைக்கிளுக்கு அஞ்சு ரூபாயும்; எனக்கு வைத்தியம் பாத்த வகையில கிட்டத்தட்ட பதினைஞ்சு ரூபாயும். இதுக்கு ஒருமாசதம் முன்னதான் ரோட்ல இருந்த பள்ளத்துல கால விட்டு 7 தையல் போட்டு அப்பதான் ஒழுங்க நடக்க ஆரம்பிச்சிருந்தேன்..

அதுக்குள்ள முழுப்பரிச்சை லீவு வேற வந்துருச்சி. எங்க அத்த வீடு திருநெல்வேலியில. அப்ப அவங்க சேர்மாதேவியில இருந்தாங்க. எங்க அத்தைவழி சொந்தம், மாமா வழி சொந்தமெல்லாம் முழுப்பரிச்சை லீவுக்கு போறது அங்கதான். காலையில எந்திரிச்சதும் அப்படியே தாமிரபரணியில ஒரு முங்கப்போட்டுட்டு வர்ர வழியில் பிள்ளையாருக்கு ஒரு கும்புடப்போட்டுட்டு அப்படியே வீட்டுக்கு வந்தா, போடுறது கையில வந்து விழுகுறதுக்குள்ள வயித்துக்குள்ள போயிரும். நதியில குளிச்சதும், அங்க இருந்து வீட்டுக்கு நடந்து வந்ததுக்கும் அந்த பசி எடுக்கும்.

சாயந்திரம் ஆச்சுன்னா மாமா உபயத்துல வாடகை சைக்கிள் கிடைக்கும் ஓட்ரதுக்கு. என்னோட அத்தை பசங்க மாமா பசங்கெல்லாம் சீக்கிரம் கத்துக்கிட்டாய்ங்க.. எனக்கு 10 நாள் ஆனபொறகுதான் கவுட்டுக்குள்ள விட்டு ஓட்டப் பழகினேன்.

அதுக்குள்ள எங்க அண்ணங்கல்லாம் வண்டி சீட்டுல உக்காந்து ஓட்டிக்கிட்டிருக்கும்போது நம்ம இன்னும் கவுட்டுக்குள்ள விட்டு ஓட்ரதுலையே இருக்கோமேன்னு எனக்கும் மேல உக்காந்து ஓட்ட சொல்லித்தாங்கன்னு ஆரம்பிக்க அவங்க கொரங்குப் பெடல்ல இருந்து எப்படி கால தூக்கி மேல போடுரதுன்னு சொல்லித்தராம என்னைய அப்படியே சைக்கிள் சீட் மேல உக்காரவச்சு ஓட்டச்சொல்லிக்குடுத்தாங்க,. எங்கண்ணன் எம்மேல இருந்த கோவத்தையெல்லாம் தீத்துகிறதுக்கு ஒரு வாய்ப்பா எனக்கு சீட்ல உக்காந்து ஓட்டச்சொல்லிகொடுத்தத பயன்படுத்திக்கிடாரு. இப்படி வளைஞ்சா அடி, ஹேண்டில்பார் வளைஞ்சா அடி, இடுப்பு வளைஞ்சா அடின்னு எந்தப்பக்கம் திரும்புனாலும் அடி மேல அடியா வச்சு சொல்லிக்குடுத்துக்கிட்டிருக்கும்போது ஒருநா எனக்கேதெரியாம நானே சைக்கிள யாரும் பிடிக்காம ஓட்டிகிட்டிருக்கேன். நானும் எங்கண்ணன் பின்னாடி வர்ராருன்னு நெனச்சுக்கிட்டே வண்டிய ஓட்டிகிட்டிருக்கேன். என்னடா அண்ணன் சத்தத்தையே கானோமேன்னு வண்டிய வளைச்சு திருப்பி வந்தா எங்கண்ணன் அவரோட பிரண்டுகூட பேசிக்கிடிருக்காரு.. அப்புறம் ரொம்ப கெஞ்சுனதுக்கபுரம் வண்டியில இருந்து எறக்கி விட்டாரு. இனி அண்ணன் இல்லாமயே வண்டிய ஓட்டிரவேண்டியதுதான்னு நெனச்சப்ப நம்ம ஆட்கள் பக்கத்துவீட்டுப் பண்ணையார் வீட்ல ஒரு கல்லு கிடக்கும். அதுமேல ஏறி நின்னு ஏறிக்கிட்டு திரும்பி இங்கையே வந்து இறங்கிக்க அப்படின்னு ஒரு அபாரமான ஐடியா குடுத்தாய்ங்க.. நானும் அதே டெக்னிக்க வச்சு ஒரு நாலுநாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். பண்னணயாருக்கு எம்மெல என்ன கோவமோ, இல்ல சைக்கிளுக்கு எம்மேல என்ன கோவமோ கல்லத் தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்க. நாலு ரவுண்டு சுத்துனதுக்கபுறமும் வண்டியில இருந்து இறங்க தைரியம் வர்ல. சரி எப்படியும் இறங்கித்தான ஆகணும்னு ஒரு பக்கமா காலத் தூக்குன உடனே வண்டி அப்படியே இடதுகைப்பக்கமா சாஞ்சு விழுகப்போன நேரத்துல படக்குன்னு கால எடுத்து பெடல் வழியா கீழே இறங்கிட்டேன். நமக்கு சைக்கிள் தெரிஞ்சிருச்சின்னு அன்னைக்கு முழுக்க அதே மாதிரி எப்படி இறங்குனேனோ அப்படியே மேல ஏறவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் கத்துக்குறவும் லீவு முடியவும் சரியா இருந்துச்சு. அப்படியே ஊருக்குள்ள என்னைக்கும் இல்லாத பெருமிதமா இறங்குனேன்..கம்பம் டு நாகர்கோவில் திருவள்ளுவர் பஸ்ஸுல. அதுக்கப்புறம் வண்டிகூடவே கொஞ்சதூரம் ஓடி அப்படியே தவ்வி ஏறவும், ஒத்தக்கால்ல வண்டிஓட்டவும், இன்னும் பல விதமான டெக்னிக்குல வண்டி ஓட்டியாச்சு.

அன்னையில இருந்து இன்னைக்கி வரைக்கும் சைக்கிள் ஓட்ட எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் விடுறதே இல்ல. படிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சப்போ மதுரையில பினாயில்ல ஆரம்பிச்சு, கேம்லின் பேனா, ஆயுர்வேத மருந்து, சித்த மருந்து எல்லா கம்பெனிக்கும் ரெப்பா இருந்தப்போ இந்த சைக்கிள்ளதான் நம்ம பொளப்பு ஓடிச்சு. இன்னைக்கும் வலதுகாலுல ஸ்போக்ஸ் கம்பி காலுக்குள்ள நுழைஞ்ச தடம் இருக்கு.. சைக்கிள் ஓட்டி விழுப்புண் வாங்காதவன் எதுத்த வீட்டு அக்காவுக்கு டபுள்ஸ் பழகுறதுக்கு கூட உக்காந்து கால உள்ளவிட்டதுல வாங்குனேன். இன்னைக்கும் சைக்கிள் ஓட்ட வாய்ப்பு கிடைச்சா விடுறதே இல்ல.. நா வேலைபாக்குற நாட்டுல (கத்தார்) சைக்கிள் ஓட்டுனா அன்றே கடைசிநாளாக இருக்க வாய்ப்பு இருப்பதால் அந்த ரிஸ்க் எடுப்பதில்லை..

5 comments:

ஹரன்பிரசன்னா said...

நீங்க ஐந்து வயதில் எழுதிய கட்டுரை இது என அனுமானிக்கிறேன். உங்கள் அத்தை மாமா காசு கொடுத்து சைக்கிள் ஓட்டச் சொன்னது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் அத்தை வீடு திருநெல்வேலியில் இருக்க, அவர் ஏன் சேரன்மகாதேவியில் இருந்தார் என்பன போன்ற சிந்தனைகளைக் கிளப்புவதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இந்த 'சைக்கிள் ஓட்டுவது எப்படி?' கதையையெல்லாம் தூரத் தள்ளி வைத்துவிட்டு, வேறு எதாவது எழுதவும்.

பத்மகிஷோர் said...

குட் கொசு வத்தி

ஹரன்பிரசன்னா said...

இன்று எல்லாரும் சைக்கிள் ஓட்டுவது பற்றி எழுதுவதைப் பார்க்கிறேன். உண்மையில் சைக்கிள் ஓட்டுவது என்பது ஒரு டிரண்ட். அது சாதாரண நிகழ்வாக இங்கே சித்திரிக்கப்படுகிறது. நடந்து சென்றே எல்லா இடங்களையும் அடைவது காலாவதியானபோது, விளிம்பு நிலை மாந்தர்களுக்கான டிரண்டாக சைக்கிள் ஓட்டுவது என்கிற கலை எழுச்சி கொண்டது. இன்றும் எப்பேற்பட்டவரும் என்றேனும் ஓர்நாளில் ஒரு நிமிடமமேனும் சைக்கிள் ஓட்டியே இருந்திருப்பார்கள். இந்நிலை நீடிப்பது சைக்கிள் ஓட்டுவதை அழியாத ஒன்றாக மாற்றுகிறது. உண்மையில் சைக்கிள் ஓட்டுவது என்பது சைக்கிள் ஓட்டுவதற்காகச் செய்யப்படுவதல்ல. அதனாலதான் அதை டிரண்ட் என்கிறேன். நீங்கள் ஓட்டுகிறீர்கள். அது சைக்கிளாக இருக்கிறது. அதனால் அது சைக்கிள் ஓட்டுவதாக அமைகிறது. வலிந்து சைக்கிள் ஓட்டுதல் என்பது, வலிந்து நடப்பதைப் போன்று இயல்பற்ற ஒன்றாக நின்றுவிடக்கூடியது. சைக்கிள் ஓட்டுதல் பல்வேறு ஊடுபிரதிகளைக் கொண்டது என்று நீங்கள் ஆராயலாம். சைக்கிளில் நின்று கொண்டு ஓட்டுதல், கவுட்டையை ஹாண்ட் பாருக்குள் போட்டு ஓட்டுதல், சைக்கிள் சீட்டைக் கழற்றிவிட்டு பின்பக்கத்தைக் குத்தும் கம்பிமேல் அமராமல் சாகசம் காட்டி ஓட்டுதல், ஹாண்ட் பாரை குறுக்கப் பிடித்துக்கொண்டு ஓட்டுதல் என பல்வேறு ஊடுபிரதிகள் மூலம் புராதனமான சைக்கிள் ஓட்டுதல் என்னும் நேர்பிரதியை நாம் சிதைக்கலாம். இத்தனை கூறுகளும் ஒருங்கினையும்போது சைக்கிள் ஓட்டுதல் பின்நவீனத்துவத்துப் பிரதியாகிறது. உண்மையில் சைக்கிள் ஓட்டுதலில் எல்லா ஊடுபிரதிகளையும் கொண்ட ஒரு நிகழ்வு இதுவரையில் இந்தியாவில் நிகழவே இல்லை. இதில் ஏதேனும் ஒரு பிரதியைக் கொண்ட சைக்கிள் ஓட்டுதலே நிகழ்ந்து வந்துள்ளது. சீட்டின் மேல் ஏறி நேராக சைக்கிள் ஓட்டத் தெரிந்த யாரும் கவுட்டை போட்டு சைக்கிள் ஓட்டுவதில்லை என்பதன் வழியாக அவர்களால் மீண்டும் பின்நவீனத்துவ சைக்கிள் ஓட்டுவதற்குள் நுழைய முடியாமல் போகிறது. இது பின்நவீனத்துவத்தின் சவால். அதேசமயம், எந்த வொரு சைக்கிள் ஓட்டுதலையும் பின்நவீனத்துவ சைக்கிள் ஓட்டுதல் இல்லை என்பதை பின்நவீனத்துவன் கூறுகளே தடை செய்கின்றன. இதைமுன்வைத்தே இன்று பலர் சைக்கிள் ஓட்டுதலை, மிகச்சாதாரணமாக ஓட்டும்போதுகூட பின்நவீனத்துவ சைக்கிள் ஓட்டுதல் என்கிறார்கள். பின்நவீனத்துவம் போதாமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்போது இயல்பாகவே சைக்கிள் ஓட்டுதலும் போதாமையை நோக்கி நகரும். பின் காலணிய டிரெண்டின்படி, ஒரு சக்கரம், ஒரே ஒரு ஹாண்ட்பார் மட்டும் வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஓட்டுதலொன்றை உருவாக்கி அதை ஸ்தாபித்து நம்மை காலணிய உலகிற்குள் அழைத்துச் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை. வாழ்க 'ஓட்டுதல்.'

Anonymous said...

//ஒரு சக்கரம், ஒரே ஒரு ஹாண்ட்பார் மட்டும் வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஓட்டுதலொன்றை உருவாக்கி அதை ஸ்தாபித்து நம்மை காலணிய உலகிற்குள் அழைத்துச் செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை//

ஹேண்டில்பார் சக்கரம் எதுவும் இல்லாமல், கொஞ்சம் மார்க்சியத்தையும் நிறைய ஓல்டு மங்க்கையும் உள்வாங்கிக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதைப்போல் கற்பனை செய்துகொண்டு டிரிங் டிரிங் என்று வயால் பெல் அடிப்பதே பின்நவீன சைக்கிள் ஓட்டுதல்.

M.Rishan Shareef said...

//இப்படி வளைஞ்சா அடி, ஹேண்டில்பார் வளைஞ்சா அடி, இடுப்பு வளைஞ்சா அடின்னு எந்தப்பக்கம் திரும்புனாலும் அடி மேல அடியா வச்சு சொல்லிக்குடுத்துக்கிட்டிருக்கும்போது ஒருநா எனக்கேதெரியாம நானே சைக்கிள யாரும் பிடிக்காம ஓட்டிகிட்டிருக்கேன்.//

ஹா ஹா ஹா!
உங்கள் அண்ணாவுக்கு நன்றி.
இல்லாவிடில் இச்சம்பவங்களை எளிதில் மறந்திருப்பீர்கள்... :)

உங்கள் பதிவின் இறுதிப் பகுதி சொல்வது உண்மைதான்.

நான் சென்ற வருடம் இந்த நாட்டிற்கு வந்த மூன்றாம்நாள் கடும் கோடையில் ரூமுக்கு நடந்து செல்லக் கடினமென்று 250 ரியாலில் புதுசைக்கிள் வாங்கிவிட்டேன்.

5,6 நாட்கள் சென்றிருக்கும்.ஒரு மதிய சுட்டெரிக்கும் வெயிலில் உணவுக்காக அறைக்குச் சென்று வேலைத்தளத்திற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தேன்.

2.30 மணி வெயில் மண்டையைப்பிளக்க,தலை சுற்றி அப்படியே வீதியோரமாக நின்றிருந்த ஒரு பென்ஸ் காரின்மேல் சைக்கிளோடு விழுந்துவிட்டேன்.
மறுபக்கம் விழுந்திருந்தால் பின்னால் வந்த கர்வா பஸ்ஸின் டயர்களில் சிக்குப்பட்டிருப்பேன்.இறைவன் காப்பாற்றினான்.

நான் விழுந்த கார் ஒரு RENT A CAR கம்பனிக்குச் சொந்தமானது.
அதில் வேலை செய்யும் இந்திய மலையாளிகள் என்னை அவர்கள் ஆபிஸ் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைத்தார்கள்.

மிகப்பரிவாக இருக்கிறார்களே என்று எண்ணிய கணத்தில் தங்கள் காரின் மேல் விழுந்த காரணத்தால் 500 ரியால் அபராதம் கேட்டார்கள்.எனக்கு ஏனென்று புரியவில்லை.இத்தனைக்கும் காரில் சிறு கீறல் கூட விழவில்லை.

பிறகு என் மேனஜருக்கு நான் போனில் அறிவிக்க அவர் பாதித்தூக்கத்தில்வந்து அவர்களுடன் சண்டையிட்டு பேரம் பேசி 300 ரியால் அபராதம் கட்டி என்னையும்,சைக்கிளையும் மீட்டுச் சென்றார்.

அன்று கைவிட்ட சைக்கிளோட்டம் தான்.இன்னும் தொடவேயில்லை.