Friday, December 14, 2012

பீயிங் மோகன்தாஸ் வலைப்பக்கம் குறித்த எனது எண்ணங்கள்

மலரினும் மெல்லிய காமம் என்ற தலைப்பைப் பார்த்துவிட்டு மோகன்தாஸின் பீயிங் மோகன்தாஸிற்குள் நுழைந்தேன். அருமையான காதல் கதை. அவர்களின் உரையாடல்களும், மோகன் தாஸின் தற்குறிப்பேற்றங்களும் மிகவும் ரசித்துப் படிக்க வைத்தது. அப்படியே அவரது வலைப்பக்கங்களை முழுதும் படித்து முடித்த பொழுது கொஞ்சம் பிரமிப்பும், நிறைய மகிழ்வுமாய் இருந்தது.

மோகன் தாஸ் கதை எழுதுகிறார், ஓவியம் வரைகிறார், அருமையான புகைப்படம் எடுக்கிறார்,கவிதை எழுதுகிறார்...கவிதை தவிர எல்லாவற்றையும் சிறப்பாகவும் செய்கிறார். இது எனது அபிப்ராயம். அவரது வலைப்பதிவில் ஒரு சில கவிதைகள் தவிர மற்றவை சுவாரசியமாக இல்லை.

இவரது வலைப்பதிவைப் பற்றி ஒரு வரியில் சொல்லச் சொன்னால் “ அழகான மெல்லிய காமம் “ என்பேன். வலைப்பதிவின் பெரும்பான்மையான இடத்தை மெல்லிய காமமே பிடித்துக்கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் கதாநாயகன்  மோகனாக, அல்லது தாஸாக அல்லது இரண்டும் சேர்ந்து மோகன் தாஸாக வருகிறார். அதேபோல நாயகியும் ஒரே ஆள்தான்.. அகிலா. எனக்கு மிகவும் பிடித்தமான பெயர் ஆகிவிட்டது.

எல்லாக் கதைகளும் வெவ்வேறு காலகட்டங்களான கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, வேலை செய்யும் இடம், திருமணம் முடிந்து நடக்கும் வாழ்க்கை இப்படி மோகன் மற்றும் அகிலாவைக் குறித்த டைரிக்குறிப்பை ரசனையுடன் கதையாக்கித் தந்தால் எப்படி இருக்குமோ அதுதான் மோகன் தாஸின் வலைப்பதிவில் கதைகள்.

இது தவிர சொந்தக் கதையையும் அப்படியே எழுதுகிறார். பள்ளி வாழ்க்கையில் நடந்த முதல் காதல் குறித்த பதிவு. எல்லோரும் எழுதலாம்தான். ஏன் நிறைவேறவில்லை என்பதில் உள்ளதைச் சொல்லிச் செல்கிறார்.

அதேபோல முடிந்தவரை மனதில் உள்ளதை உள்ளபடிச் சொல்லிச் செல்கிறார். ஹீரோ பில்டப் எல்லாம் இன்றி, என்னால் முடியவில்லை, அல்லது நான் அதற்கு தகுதியாய் இல்லை என்பதை எல்லாம் அப்படியே சொல்கிறார்.

காமக்கதை என்றாலே எப்படி இருக்கும் என்பது இணையத்தில் உலவும், அல்லது பள்ளி கல்லூரிகளில் அப்படிப்பட்ட புத்தகத்தைப் படித்திருப்பவர்களுக்கு தெரியும். மிஞ்சிப்போனால் 5 அல்லது 10 உறவுமுறைகள்தான் மீண்டும், மீண்டும். ஒரு காலகட்டத்திற்குப் பின்னர் குப்பை என நமக்கே தெரிந்துவிடும். ஆனால் இவரது கதைகளில் நமது வாழ்க்கையில் நடப்பதை அப்படியே சொல்லிச் செல்கிறார். வழக்கமாய் எழுதுபவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அந்தரங்கம் குறித்து எழுதுவதில்லை. பழைய சினிமாக்களில் காட்டுவதைப்போல இரண்டு பூக்களை ஒட்டவைத்து நம்மை கேவலமாய்ச் சிந்திக்க வைப்பதைப்போல. 

மோகன் தாஸ் அந்தரங்கம் என நாம் நினைப்பதையும் எழுதுகிறார், இயல்பான வார்த்தைகளில். அதைவிட முக்கியம் அந்த சூழ்நிலைகளில் நாம் எப்படிப் பேசுவோமோ அப்படியே. அதைவைத்து மட்டுமே மெல்லிய காமம் என்கிறேன் நான். 

மோகன் தாஸ் பக்கத்தை நான் எனது தங்கைக்கோ, மகளுக்கோ அறிமுகம் செய்வேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ஆனால் அவர்கள் படிக்கலாம் என்பதே எனது எண்ணம். ஆனால் அறிமுகம் செய்து படிக்க வைக்க மனத்தடை உள்ளது.

இன்னும் கொஞ்ச காலம் ஆனபின்னால் படிக்கச் சொல்வேனோ என்னமோ.

கதைகளில் சுவாரசியம்தான் அடிப்படையே. நமது காலகட்டத்திய கதையாய் இருப்பதால் நமது பள்ளி, கல்லுரி காலத்தை மீண்டும் மகிழ்வுடன் அசைபோடும் ஒரு வாய்ப்பாக எனக்குப் படுகிறது.

அழகான தொய்வற்ற எழுத்து நடை, நிகழ்வுகளை அழகாக தொகுத்தளித்தல், காமத்தையும் அதன் எல்லை மீறாமல் அழகாகச் சொல்வது, விவரனைகளை சுவாரசியமாக சொல்வது என அவருக்கென ஒரு நடையை வைத்திருக்கிறார். அவரது கதைகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே டெம்ப்ளேட்டில் வார்த்த கதைகள் போலிருப்பினும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தைப் பேசுவதால் போரடிப்பதில்லை.


ஏன் மோகன் தாஸ் வலைப்பக்கத்துக்கு ஒரு அறிமுகம் எழுதினேன்? நான் படிக்க ஆரம்பித்த பின்னர் அப்படியே உள்ளிழுத்துக்கொண்டது கதைகள், சுவாரசியம்தான் காரனம்.

பலவகையான விஷயங்களைப் பற்றிச் சொல்ல தொடர்ந்து முயன்றிருக்கிறார். வலைப்பதிவின் அக்கப்போர்கள் இருந்த காலத்தில்கூட அக்கப்போர்களில் கலந்து கொள்ளாமல் அவைகளைப் பற்றிய விவரங்கள் மட்டுமே பதிவு செய்திருக்கிறார்.

கிட்டத்தட்ட எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்திருக்கிறார். 

அவரது எழுத்தை அவரே ரசிக்கிறார். நமக்கே பிடிக்காத விஷயத்தை எப்படி மற்றவர்களுக்குத் தருவது? 2005 முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். செகுவேரா வின் தீவிர விசிறி. பிடல் காஸ்ட்ரோ குறித்தும் ஒரு பதிவு எழுதி இருக்கிறார். நிறைய வாசித்திருக்கிறார், வாசிக்கிறார். பாரதியின் கவிதைகள் இவருக்கு ஆதர்சம். அச்சமில்லை என்ற பாரதியின் பாடல் எப்படி இவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய உந்துதலாய் இருந்தது என்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

குறைகள் எனச் சொன்னால் சில நல்ல தொடர்கதைகளை அப்படியே பாதியிலேயே தொங்க விட்டிருப்பது. குறிப்பாக நீராக நீளும் காதல். வேறு வழியின்றி விபச்சாரம் செய்யும் பெண்ணை நாயகன் சந்தித்து அதன் பின்னர் அது காதலாக மாறும் என நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அடுத்த பகுதியைக் காணவில்லை. 

அதேபோல கொலைத்தொழில் வல்லவன் என்ற ஒரு தொடர்..அதுவும் பாதியில்..

எனக்கு மிகவும் பிடிக்கும் பதிவுகள் எனில் கதைகள், தொடர் கதைகள், சினிமா விமர்சனம், புகைப்படங்கள்.

Being Mohandoss'ல் எனக்குப்பிடித்த டாப் டென் கதைகள்..

01. மலரினும் மெல்லியது காமம் ( தலைப்பு உதவி வள்ளுவராம் :-) )

02. உள்ளம் உடைக்கும் காதல்

03. மதுமிதா

04. தேவதையின் காதலன்

05. சோழ பரம்பரைக் கதைகள்

06. மோகனீயம் தொடர்கள்

07. Curse of the Golden Flower - Cinema Review

08. கன்னடப் பைங்கிளீயுடன் ஒரு காதல் மொழி.

09. I lost my virginity to Mohandoss

10. அவளை அவன் கண்விடல்.

இது தவிர நிறையக் கதைகள் பிடித்திருந்தாலும் மேற்சொன்ன கதைகள் மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்தவை.

ஃபிடல் காஸ்ட்ரோ குறித்த பதிவும் அருமை. இவரது வலைப்பதிவில் நல்ல நல்ல புகைப்படங்களும், ஓவியங்களையும் காணலாம்.

என்னங்கப்பா மோகன் தாஸ் வலைப்பதிவுக்கே அறிமுகமானு கேட்பவர்களுக்கு.. புதுசா நான் தெரிஞ்சிகிட்டேன்.. அதை மத்தவங்களுக்கும் நான் சொல்றேன்..அம்புட்டுத்தேன்.

Saturday, November 10, 2012

இராக்கில் ஒரு பயணம்

இராக்கில் ஒரு பயணம் - ஜெயக்குமார்"

எனது இராக்கிய பயண அனுபவங்களை இட்லிவடையில் எழுதி இருக்கிறேன். அதன் சுட்டி இங்கே 


படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லவும்.

ஜெயக்குமார் 

Tuesday, June 26, 2012

3 திரைப்பட விமர்சனம்

நான் எழுதிய 3 திரைப்பட விமர்சனம் இட்லிவடையில் வெளியாகி இருக்கிறது.



படிக்க இங்கே சொடுக்குங்கள்.



Saturday, June 16, 2012

அம்மா என்றால் அன்பு. ( எனக்கு மட்டும் இது கடந்தகாலம்)

கூட்டுக்குடும்பம் என்றால் எப்படி இருக்கும்? எங்களின் கூட்டுக்குடும்பத்தின் மொத்த குடும்ப உறுப்பினர்கள் என்று பார்த்தால் எனது அப்பாவுக்கு 3 குழந்தைகள், பெரியப்பாவுக்கு ஆறு குழந்தைகள், அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி ஆக வீட்டு உறுப்பினர் மட்டும் 15 பேர். இது தவிர சில விருந்தினர்கள் எப்போதும் இருப்பார்கள். காலையில் எழுந்ததும் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்குச் செல்லும் அப்பா, அக்கா, வயதான பெரியவர்களுக்கான காலை உணவு, ஒவ்வொருவராக எழுந்துவர அனைவருக்குமான காப்பிக் கடை. முதல் சுற்றுக் காப்பிக் கடை முடியும் போது 8 மணி எனில் 10 மணிக்கு இன்னொரு ரவுண்டு காபி வீட்டில்உள்ளோருக்கு. 11 மணிக்கு பெரியவர்களுக்கான காலை மற்றும் மதிய உணவும் இனைந்த பிரஞ்ச். மதியம் கொஞ்சம் ஓய்வு. மீண்டும் 4 மணீக்கு காபிக் கடை, இரவு உணவு, பின்னர் அனைவருக்கும் பால் அல்லது ஏதாவது ஒரு பானம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற விசேட நாட்களில் சிறப்பு உனவு, நீத்தார் கடன் நாட்களில் அதற்கான பிரத்யோக சமையல், இதையனைத்தையும் ஒருவரே செய்யவேண்டும் அதுவும் கிட்டத்தட்ட 35 வருடங்களாக ஒருவர் செய்தால் எப்படி இருக்கும்? அப்படிச் செய்தவர்தான் ஜெயலக்‌ஷ்மி எனும் எனது அம்மா. தற்போது இருக்கும் வசதிகள் எதுவும் அப்போது இருந்ததில்லை. காய்ந்த விறகு அடுப்பு இல்லையெனில் மரத்தூள் அடுப்பு. ( மர அறுவை மில்லில் மரம் அறுக்கும்போது கிடைக்கும் தூசிதான் மரத்தூள்) மரத்தூள் அடுப்பை சமையலுக்கு தயார் செய்தலே ஒரு தனி கலை. அடுப்பு வட்ட வடிவில் இருக்கும். கீழ் பகுதியில் விறகு வைக்க ஒரு இடம் இருக்கும். நடுவில் ஒரு மன் எண்ணெய் பாட்டிலை வைத்துவிட்டு பின்னர் கழுத்துவரை மரத்தூளை நிரப்ப வேண்டும்.விறகு வைக்கும் பகுதியை கையால் மூடிக்கொண்டு மரத்தூளை அடுப்பில் நிரப்ப வேண்டும். மரத்தூளை அப்படியே நிரப்பினால் பாதி சமையல் செய்யும்போதே கீழே விழுந்துவிடும் எனவே கொஞ்சம் நீர் தெளித்து நன்றாக அழுத்தி அழுத்தி தூளை நிரப்ப வேண்டும். அதன் பின்னர் நடுவில் வைத்த பாட்டிலை எடுக்கும் முன்னர் விறகு வைக்கும் இடத்தில் இருக்கும் மரத்தூளை எடுத்து விட்டு பின்னர் பாட்டிலை கொஞ்சம், கொஞ்சமாக அசைத்து எடுக்க வேண்டும். அதுதான் சமையல் அடுப்பு. சில சமயங்களில் சோம்பேறித்தனத்தினால் சரியாக அடைத்துக் கொடுக்காமல் இருந்தால் அம்மாவின் பாடு பாவம். தூள் எல்லாம் கீழே விழுந்துவிடும். பிறகு முள் விறகால் சமையலைத் தொடர வேண்டும். இப்படித்தான் சமையல் 1982 வரை. அதன் பின்னர்தான் மன் எண்ணெய் அடுப்பு வந்தது. நூதன் ஸ்டவ். அதிலும் ஏதேனும் ஒன்றுதான் வைக்க முடியும். மீதி சமையல் எல்லாம் தூள் அடுப்பிலும், கரி அடுப்பிலுமாக நடக்கும். அம்மாவின் சமையல் அட்டகாசமான சுவையுடன் இருக்கும். அதிலும் நொட்டை, நொள்ளை சொல்லி இருக்கிறேன். சாப்பிடாமல் போயிருக்கிறேன். பாவம் அம்மா, வாசலில் அமர்ந்துகொண்டு குமாரோ..குமாரோ என நான் வீட்டிற்கு வந்து சாப்பாட்டை போட்டுத் தொலை என திட்டும்வரை வாசலிலேயே காத்திருப்பார்கள். தானும் சாப்பிட மாட்டர்கள். அதன்பின்னர் கொஞ்சம் வசதி வந்த பின்னர் அதாவது நான் 10வது படிக்கும்போது ஒரு மாபெரும் கிரைண்டர் வந்தது. அதன் பின்னர்தான் அம்மாவிற்கு கொஞ்சமேனும் ஓய்வு கிடைத்தது. இல்லையெனில் 15 பேருக்கு கையாலேயே இட்லி, தோசை மாவு அரைத்து அதை செய்தும் கொடுக்க வேண்டும். இப்போது நினைத்தாலே நெஞ்சடைக்கிறது. எப்படி அம்மா இதையெல்லாம் தனியாகச் செய்தார்கள் என. அம்மாவிற்கு இப்படி வேலை செய்ததில் எல்லாம் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் யாராவது சாப்பாடு பிடிக்கவில்லை என சாப்பிடாமல் போனால்தான் தாங்க முடியாது. எவ்வளவு அலுப்பில் படுத்திருந்தாலும் உடனே எழுந்து அவர்கள் சாப்பிட வேறு ஏதாவது செய்து கொடுத்துவிட்டுத்தான் படுப்பார். அம்மாவுக்கு என்மீது எப்போதும் தனிப்பிரியம். அம்மாவும், அப்பாவும் எதோ ஒரு சப்பைக் காரணத்துக்காக சண்டை போட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் பிரிந்திருந்து மீண்டும் சேர்ந்த பிறகு பிறந்த குழந்தை நான். மேலும் எல்லோராலும் சோனிப்பூனை என அன்புடன் அழைக்கப்பட்டவன். அதனாலேயே இன்னும் கொஞ்சம் பிரியம் அதிகம். ஒரு சிறு தடுமாற்றத்தில் சொத்துக்களை எல்லாம் இழந்துவிட்டோம். அப்போதும் இந்தக் கூட்டுக் குடும்பமே கைகொடுத்தது. அப்பா அரசு வேலையில் இருந்ததால் உனவுக்கு ரொம்பக்கஷ்டமின்றி இருந்தாலும் மதியம் பள்ளியில் கிடைக்கும் சத்துணவும் பள்ளி சென்ற எங்கள் அனைவருக்கும் வசதியாக இருந்தது. சத்துணவு சாப்பிட்டு வருவதால் மாலை வந்தஉடன் எனக்கென கொஞ்சம் சாதம் எடுத்து வைத்து நிறைய நீர்மோர் ஊற்றி கொஞ்சம் குளம்போ, ரசமோ போட்டுத் தருவார்கள் அம்மா. கூட்டுக்குடும்பத்தில் பெரியப்பா, சித்தப்பா என்பதெல்லாம் அடையாளம் சொல்லி அழைப்பதற்காகவே இருக்கும். பெரியப்பாவும், எனது அப்பாவும் எல்லோருக்கும் அப்பாக்களே. ஆஸ்ரம அப்பா என்பது எனது பெரியப்பாவைக் குறிக்கும். அவர் காந்திநிகேதன் ஆஸ்ரமத்தில் சமையல் வேலை செய்து வந்தார் . அதனால் அந்தப் பெயர். பெரியம்மாவும், அம்மாவும் அம்மாவே. அப்பாவிடம் சொல்லி ஒரு காரியம் ஆகவில்லையெனில் பெரியப்பாவிடம் சொல்லி சாதிக்கப்பார்ப்போம். பெரும்பாலும் நடக்காது. எனது அப்பாவிற்கு பெரியப்பாவின் முதல் மகள் மற்றும் கடைசி பையன் மீதும் உயிர். அப்பாவிடம் நான் திட்டுவாங்குவதற்கு அவந்தான் காரனம். காலையில் எழுந்து பட்டையை போட்டுக்கொண்டு தெய்வப்பழம்போல இருப்பான். அவன் குளித்து கோவிலுக்கு போய்விட்டு வந்த பின்னர்தான் நான் படுக்கையில் இருந்தே எழுவேன். படிப்பிலும் பயங்கர கெட்டி அவன். நான் 50 பேர் கொண்ட வகுப்பில் கீழிருந்த 5வது ஆள். கூட்டுக்குடும்பத்தில் குழந்தைகளுக்குள்ளாக நடக்கும் வழக்கமான போட்டிகள், சண்டைகள் எல்லாம் உண்டு. அம்மாவிற்கு என்மீது பெரிய எதிர்பார்ப்புகள் எல்லாம் இல்லை. ஆனல் நான் எப்படியாவது “ காலை ஊன்றிவிட வேண்டும்” என்பதற்காக எங்கள் தெரு ஆஞ்சநேயரிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பார், பையனுக்கு ஒரு வழி செய்யக்கூடாதா என. எனது அண்ணன் ஆரம்பத்தில் இருந்தே அவரது கல்வியில் ஆரம்பித்து, வேலைவரை எதுவுமே அப்பாவிடம் கேட்ட்தில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒவ்வொரு பாடத்துக்கும் ஜாதிக்கொரு நோட்ஸ் வைத்திருப்பேன். அப்படியும் 272 மார்க்தான் பத்தாம் வகுப்பில். அது ஒரு குறை அம்மாவுக்கு. பின்னர் 12ம் வகுப்பில் உருப்படியாய் படித்ததில் கொஞ்சம் சந்தோஷம். பின்னர் கல்லூரி முடித்துவிட்டு ஆண்டிற்கு சராசரியாக மூன்று கம்பெனிகள் மாறிக்கொண்டே இருந்ததில் நான் என்ன ஆவேனோ என்ற கவலை. என்னைப்பற்றி மட்டுமே எப்போதும் கவலையில் இருந்த அம்மாவுக்கு நான் வெளிநாட்டில் வேலைக்குச் சென்று ஒருவருடம் தொடர்ச்சியாய் இருந்தபின்னர்தான் பையன் இனிமேல் பிழைத்துக்கொள்வன் என நம்பிக்கை பிறந்தது. வேலையற்று இருக்கும்போது அம்மாவிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பேன். உனக்கு என்னம்மா வேனும் என .. அம்மாவுக்கு காசு மாலை போட்டுக்கொள்ள வேண்டும் என அதிக நாள் ஆசை. அதை நிறைவேற்றினோம்( நானும், அண்ணனும் சேர்ந்து) கைநிறைய காசு வேண்டும். அதையும் எப்போது எவ்வளவு கேட்டாலும் நிறைவேற்றினோம். இதற்கு ஒரு காரணமும் உண்டு. கூட்டுக் குடும்பம் என்பதினால் எனது அப்பாவின் சம்பளம் முழுக்க பள்ளிக் கூட செலவுக்கும், வீட்டுச் செலவுக்குமே சென்றுவிடும். அம்மாவிடம் காசு என ஒன்றும், இருக்காது. கனவன் கை நிறைய சம்பாதித்தும், தன்னிடம் காசு இல்லையே என்ற குறை இருந்து கொண்டே இருந்தது. அது எங்களால் தீர்ந்தது. எங்கள் தலைமுறையினரில் முதல் திருமணம் எங்கள் அக்காவிற்கு நடந்தது 1989ல். கல்யாணம் செய்துகொண்டு சென்னைக்கு சென்றார்கள் எங்கள் அக்கா. (பெரியப்பா மகள்) முதல் ஆறுமாதம் எப்படி இருக்கிறாளோ, என்ன செய்கிறாளோ என எனது பெரியம்மாவைவிட அனது அம்மாதான் புலம்பிக்கொண்டிருந்தார்கள். வெள்ளந்தித்தனத்திற்கும் எனது அம்மாதான் உதாரனம். வெளியுலகம் குறித்த எந்த அனுபவமும் இன்றி இருந்தார்கள். வீட்டிற்கு முதன்முதலாய் தொலைபேசி வந்தது. வீட்டில் யாருமில்லாத சமயத்தில் மணி அடிக்கவும் அம்மா சமையல்கட்டில் இருந்தபடியே “இருங்க வாரேன்” எனச் சொல்ல மணி பாட்டுக்கு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. அதான் வாரேன்னு சொல்றேன்ல என தொலைபேசியை அன்புடன் கோபித்துக்கொள்வதற்குள் மணியடிப்பது நின்றுவிட்டது. இதை சொல்லிச் சொல்லியே அம்மாவை கிண்டல் செய்து கொண்டிருந்தோம். அதேபோல பெரியம்மாவுக்கும், அம்மாவுக்குமான சண்டைகள்.. எதிலும் பெரியவர்கள் யாரும் எனது குழந்தை எனவோ, என் மனைவியை ஏன் சொன்னாய் என்றோ சண்டை போட்டுக்கொண்டதில்லை. அதையும் கலகலப்பாக்கி விடுவார்கள். சண்டை ஆரம்பித்த உடன் அப்பா சொல்வது இதெல்லாம் சண்டையா.. ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு கம்பைக் குடுத்து ரூமில அடைங்கடா. யாராவது ஒருத்தர் வெளியே வரட்டும் என்பார். அம்மா, பெரியம்மா சண்டையின் ஆயுசு அடுத்த காபி போடும் வரைக்கும்தான்.. ஏ லக்‌ஷ்மி காபி போடேன் என பெரியம்மாவோ அல்லது வேனி காபி போடேன் என அம்மாவோ சொல்வதுடன் அந்த பழைய சண்டை முடிவுற்று நீதான் இன்னிக்கு ஒரு நாளைக்கு காபி போடேன் என பெரியம்மாவை அம்மா சத்தம் போடுவதிலிருந்து அடுத்த சண்டை ஆரம்பமாகும். அது இரவு உணவுக்கு அமரும் வரைதான். அதன்பின்னர் குளம்பு புளிப்பு என்பதற்கோ, மோர் அநியாயத்திற்கு புளிக்கிறது என்பதற்கோ அடுத்த சண்டை ஆரம்பிப்பதில் முதலில் இருந்த சண்டை முடிவுக்கு வரும். வீட்டிற்கு புதிதாய் யாராவது வந்தால் இன்றோடு இந்தக் குடும்பம் இரண்டாகப் போகிறது என நினைப்பார்கள்..அப்படி சண்டை நடக்கும். ஆனால் அதன் ஆயுள் அரைமணி நேரம் மட்டுமே என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எனது காலஞ்சென்றுவிட்ட பாட்டிக்கு அம்மாவைக் குறை செல்வது ஒரு பொழுதுபோக்கு. எனது பாட்டிதான் எனது அப்பாவை எடுத்து வளர்த்தார் என்பதால் அவரது சவுண்டுக்கு அப்பாவிடம் பயங்கர மதிப்பு இருக்கும். பாட்டியை திருப்திப் படுத்த அம்மாவை திட்டுவார். பாட்டி எனது அம்மாவை மட்டும் திட்டுவதில்லை. நேற்று பிறந்த குழந்தை முதல் எனது தாத்தா வரை எல்லோருக்கும் சமமாக திட்டுக்களை பகிர்ந்தளிப்பார். அவரது மகளை அதாவது எனது பெரியம்மாவை அவர் திட்டுவதைப் பார்த்தால் மாமியார் மருமகள் சண்டை என நினைத்துக் கொள்வார்கள். இப்படி எல்லோரிடமும் திட்டும் வாங்கிக்கொண்டு, அப்பாவின் அனுசரனையும் முழுதாய் இல்லாமல் இருந்தாலும உடலில் வலு இருந்தவரை சமைப்பதில் எந்தக் குறையும் இன்றி செய்தார்கள். உடல்நிலை குறித்த சரியான அக்கறையின்மை சர்க்கரை வியாதியையும், ரத்தக் கொதிப்பையும் கொண்டுவந்தது. எல்லா வைத்தியங்களும் செய்தோம். 2012, ஏப்ரல் 14ம் தேதி சர்க்கரை அளவு அதிகமாகி கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். உடனே மருத்துவமனையில் சேர்த்து கிட்டத்தட்ட 21 நாட்கள் மதுரை அப்பல்லோ மருத்துவர்கள் போராடியும், மேமாதம் 5ம் தேதி இரவு 10.40க்கு எனது தாயார் காலமாகிவிட்டார்கள். கடந்த ஒரு வருடமாகவே அதிகப்ட்சமாக வீட்டிற்குள் மட்டுமே நடமாடிக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருந்திருந்தால் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். இறைவன் அம்மாவுக்கு 74 வயது போதும் என நினைத்துவிட்டான். ஜெயக்குமார்