Wednesday, July 21, 2010

மதராசப்பட்டிணம்


கல்பாத்தி எஸ்.அகோரம் என்ற வித்தியாசமான பெயர் கொண்ட ஒரு தயாரிப்பாளர் தமிழில் மிகவித்யாசமான படங்களாய் எடுத்துக்கொண்டிருக்கிறார். முதலில் இம்சை அரசன் 23ம் புலிகேசி, பின்னர் இரும்புகோட்டை முரட்டுச் சிங்கம்.. என்ற வரிசையில் இப்போது மதராசப்பட்டிணம்.

இது தவிர வேறு எத்தனை நல்ல படங்கள் எடுத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் நான் பார்த்த எல்லாப்படங்களுமே ஒவ்வொரு வகையில் பிரம்மாண்டம்.

23ம் புலிகேசியில் ராஜா காலத்துக் கதையை வைத்து பிரம்மாண்டம்

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கத்தில் கௌபாய் கதையை வைத்து பிரம்மாண்டம்

மதராசப்பட்டிணத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தையும், தற்போதைய தமிழகத்தையும் காட்டுவதில் பிரம்மாண்டம்.

படத்தின் ஆகப்பெரிய பலம் ஒவ்வொரு காட்சியும் நம்பும்படி இருப்பது. அதீத வில்லத்தனமோ அல்லது ஹீரோத்தனமோ இன்றி படம் முழுக்க இயல்பாய் நகர்கிறது.

ஒரு பிரிட்டனைச் சேர்ந்த பாட்டி இன்றைய சென்னையில் பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுதான் கதை.

ஒரு ஆதர்ச காதல் கதை எனச் சொல்லலாம். ஆனால் காதலர்கள் சேர்வதில்லை. சேர்த்து வைத்திருந்தால் என்னவாம் என இயக்குனரை மனதிற்குள் கேட்கும்படி அமைந்த கதையும், திரைக்கதையும், காட்சிகளும் கலக்கல்.


நம்ம பழைய மதராஸையும், வெள்ளையர்களின் மதராசப்பட்டிணத்தையும் இன்றைய சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த வெள்ளைப்பாட்டி தனது நினைவிலிருந்து நமக்குக் காண்பிக்கிறது.

பாட்டியின் கனவிலியில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே நிகழ்காலச் சென்னைக்கும், முன்நாளைய மதராசப்பட்டிணத்திற்குமாக மாற்றி மாற்றிக் காண்பிக்கும்போது நாமும் அதை இயல்பாய் ரசிக்கிறோம். சென்னை மக்கள் வெள்ளத்தால் எப்படி அடையாளமற்றுப்போய்விட்டது என்பதும் தெரிகிறது.

இங்கிலாந்தில் இருக்கும் என்பது வயது பாட்டிக்கு திடீரென உடல்நலம் குறைகிறது. மூளையில் ரத்தம் கட்டியிருக்கிறது என மருத்துவர் சொல்கிறார். வாய்ப்பே இல்லையே..எப்படி எனக் கேட்கிறார்கள் மகளும், பேத்தியும்? சிறுவயதில் எப்போதாவது தலையில் அடிபட்டிருக்கும், அதனாலதான் எனச் சொல்கிறார் மருத்துவர்.ஒரு வாரத்தில் பாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் எனவும், பிழைக்க 50 சதவீதம் வாய்ப்பிருக்கிறது என சொல்கிறார் மருத்துவர்.

இதைக்கேட்டுக்கொண்டிருக்கும் அவருக்கு பழைய நினைவுகள் திரும்ப ஆரம்பிக்கிறது. இந்தியாவில் பாட்டிக்கு ஏற்பட்ட காதலும், கட்டாயத்தால் இங்கிலாந்து திரும்பும்போது அவளிடம் காதலன் சொன்ன வாக்கும், கொடுத்த பரிசும் நினைவுக்கு வருகிறது. சுதந்திரம் கிடைத்த உடன் நாட்டைவிட்டு வெளியேறும் வெள்ளையர்களுடன் அவளும் வம்படியாய் இழுத்துச் செல்லப்படுகிறாள். பாட்டிக்கு வைத்தியம் செய்ய ஒரு வாரம் இருக்கும் நேரத்தில் பாட்டியிடம் இருக்கும் தாலியை ( காதலன் இந்தியாவில் கொடுத்தது) பழைய காதலனின் மனைவியிடம் சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்குச் செல்ல வேண்டும் என அடம்பிடிக்கிறது. தற்போது சென்னையாகியிருக்கும் மதராசப்பட்டிணத்தில் சென்று தனது அழகிய பழைய நினைவுகளை மீட்டெடுப்பதுடன், தனது பழைய காதலனைக் கண்டுபிடிக்கவும் முயல்கிறது.

வில்லனாக நடித்தவரும் கலக்கியிருக்கிறார்.


பழைய வண்டிகள், சாலைகள், மனித முகங்கள், வண்ணாரப்பேட்டை இடங்கள், நமது நட்டின் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தம், அந்நாளைய பிரிட்டிஷார், அவர்கள் பயன்படுத்தும் பொருட்கள், எல்லாம் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டுள்ளன.

மல்யுத்தம் படத்தின் ஒரு முக்கிய அங்கமாகவே வருகிறது. வண்ணாரப்பேட்டையிலிருந்து மக்களை அப்புறப்படுத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்து அதற்கு வெள்ளைக்கார கமிஷனர், ’என்னை மல்யுத்தத்தில் வென்றால் இங்கு வரும் கட்டிடங்களை தடுத்து நிறுத்துவேன். உங்கள் இடம் திரும்ப வழங்கப்படும்’ என்கிறான். அதற்கு மல்யுத்தம் நடக்கிறது. படத்தில் அடிக்கடி மல்யுத்த விளையாட்டு காண்பிக்கப்படுகிறது. வஸ்தாதாக நாசர். மல்யுத்தப் பற்சியாளராகவே இருக்கிறார் படம் முழுக்க. சொல்வனத்தில் வெளியான மைசூர்பட்டணத்து மல்லர்கள் நினைவிற்கு வந்துபோனது. நாம் நமது பாரம்பரியக் கலைகளை காலில் போட்டு மிதித்துவிட்டு ஜென்டில்மேன் விளையாட்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

கூவம் நதியில் கிழவியும், காதலனும் படகில் சவாரி செய்யும் நினைவும், அழகோ அழகு.. செட்டிங்தான் என்றாலும் இப்படி ஒரு சுத்தமான நதியை சாகடித்துவிட்டோம் என நினைக்கையில் மனது கனக்கிறது. நமது அரசியல்வாதிகள் கூவத்தை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டதுதான் மிச்சம்.


வெள்ளையர்களின் அல்லக்கையாக கொச்சின் ஹனீஃபா வந்து செல்கிறார். சுமரான ரோல். உயிருடன் இருந்தபோது நடித்த கடைசிப் படமாய் இருக்கும் என நினைக்கிறேன்.

கதாநாயகியாக வரும் எமி அழகோ அழகு. நமது கதாநயகிகளுக்கு சரியான போட்டியாவார். அவ்வளவு இயல்பான நடிப்பு, உணர்ச்சிகளை அழகாய் வெளிப்படுத்தும் முகம். இந்தியச் சாயல் அவரது நடிப்பிற்கு மிகப்பெரிய பலம்.

அவரது சொந்த ஊரில் அவர் உடை உடுத்தப் பிரியப்படுவதில்லை எனக் கேள்வி. எப்போதும் முடிந்தவரை திறந்தமேனியாக இருப்பாராம். ஆனால் இந்தப்படத்தில் இவரைவிட வேறு யாரும் நன்றாய் நடிக்க முடியாது எனத்தோன்றுகிறது.

பாட்டியாய் நடித்திருப்பவரும் மனதை கொள்ளைகொள்கிறார். இறுதியில் கதாநாயகனோடு சேர்த்து வைத்திருக்கலாம். அவ்வளவுதூரம் மெனக்கெட்டு இந்தியா வந்த அவருக்கு காதலனின் கல்லறையும், அந்நாளைய துபாசுவி(கொச்சின் ஹனீபா)ன் போட்டோவும்தான் பார்க்கக் கிடைக்கிறது. காதலன் தனாது நினைவாய்ச் செய்து வைத்திருக்கும் தர்ம ஸ்தாபனங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனது கல்லறையிலேயே உயிரை விடுவதுடன் சுபம்.

ஒரு மெல்லிய காதல்கதையை அப்படியே தேசப்பற்றில் முக்கி எடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது கதை. அதை நல்லவிதமாயும் எடுத்துள்ளார்கள்.

பார்க்கலாம்.

2 comments:

ஹரன்பிரசன்னா said...

//உயிருடன் இருந்தபோது நடித்த கடைசிப் படமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
//

இந்த ஒரு வரியில் இந்த விமர்சனம் எங்கேயோ போய்விட்டது.

ஜெயக்குமார் said...

//
ஹரன்பிரசன்னா said...
//உயிருடன் இருந்தபோது நடித்த கடைசிப் படமாய் இருக்கும் என நினைக்கிறேன்.
//

இந்த ஒரு வரியில் இந்த விமர்சனம் எங்கேயோ போய்விட்டது.//

:-))))