
சமீபத்தில் பம்பாய் சகோதரிகள் பாடிய கலியாணப் பாடல்களை கேட்க நேர்ந்தது.
எனக்கும் கலியாணம் நடந்தது. ஆனால் இந்தப் பாடல்கள் இல்லாமலேயே நடந்து முடிந்தது. கலியாணம் ஆனபிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இதைக் கேட்டபோது நமது கலியாணத்திலும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
பாடல்களை கலியாணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக பாடி இருப்பது திருமணங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வுகளும் அந்தக் காலத்தில் எப்படி அனுபவித்து திருமணங்களை நடத்தி இருப்பர் என நினைக்கும்போது இன்று நடக்கும் திருமணங்களின் நிலையை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அந்தக்காலத்தில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நடந்த திருமணங்கள் பின்னர் ஐந்து நாட்களாக குறைந்து பின்னர் மூன்று நாட்களாகி தற்போது ஒருநாள் திருமணங்களாகி வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் எனக்கு கலியாணம் ஆகிவிட்டது அப்படியே இருந்த இடத்திலே ஆசிர்வாதம் செய்யுங்கள் பரிசுப் பொருட்களை மட்டும் அனுப்பிவைத்துவிடுங்கள் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என தோன்றுகிறது..
அந்தக் காலத்தில் திருமணங்கள் தொலைவில் இருக்கும் சொந்தங்கள் சந்திக்கும் இடமாகவும் பின்னர் உறவுகளுக்கேற்றபடி 10 நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தங்கி இருந்து திருமணத்தை நடத்திக் கொடுத்த காலங்களாக இருந்தது. இன்று அவரவருக்கு இருக்கும் பணபலத்தை நிரூபிக்கும் இடமாக திருமணங்கள் மாறியுள்ளன.
நான் பார்த்த 5 நாள் திருமணம் எங்கள் வீட்டில் வைத்து நடைபெற்ற எனது தூரத்து உறவினர் ஒருவரின் திருமணம். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்து நல்லபடியாய் நடத்திக்கொடுக்கும்படி கேட்டுக் கொண்ட திருமணப் பத்திரிக்கையை அப்படியே மனதில் கொண்டு எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் ஆரம்பித்துவிட்டது. இதில் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். முதலில் வீடு முழுக்க ஆட்கள். பின்னர் நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு போனோமா இல்லையா என பார்ப்பதற்கு யாரும் இல்லாத தைரியத்தில் பள்ளியில் "அய்யா எங்க வீட்ல கலியாணம்" என 5 நாட்களுக்கு முன்னரே பள்ளிக்கு நாங்களே விடுமுறை விட்டுக் கொண்டது என ஒரே அமர்க்களமாய் இருந்தோம். திருமணம் முடிந்தபின்பு பள்ளிக் கூடத்தில் என்னமோ புது வகுப்புக்குள் போவதுபோல இருந்தது. நாங்கள் படிக்கும்போது ஒரே வாத்தியார் தமிழ் முதல் புவியியல் வரை எடுப்பார். எனவே 5 நாட்களில் ஒவ்வோரு பாடத்திலும் இரண்டு, மூன்று பாடங்கள் போய்விட்டது. படிக்கிற புள்ளைக்குத்தான அந்தக் கவலையெல்லாம்.. நானெல்லாம் உப்புக்குச் சப்பாணிமாதிரி பள்ளிக்குப் போய்வந்தேன். எனவே பாடங்கள் போனதெல்லாம் பெரிய விஷயமாய் தெரியவில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம்…
பெண்னை அழைத்து வருவதில் ஆரம்பித்து, திருமணம் நடத்தி, பூப்பந்து விளையாடி, மணமகனை கிண்டல் செய்து, மணமகளையும் கிண்டல் செய்து, சாந்திமுகூர்த்தம் செய்து, தாம்பூலம் கொடுத்து பின்னர் கணவன் மனைவியான பின்பு அவர்களுக்குள் எற்படும் ஊடலையும் பாடலாக்கி அருமையான இசை விருந்தளித்துள்ளார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.
திருமணப்பாடல்களில் நாயகனாக மதுரையம்பதியையும், நாயகியாக மீணாட்சியையும் கொண்டு அவர்களது திருமண பாடல்களாக இதை எழுதி இருக்கிறார்கள்.
எல்.கிருஷ்னனின் இனிய இசையில் தமிழில் பாடல்களனைத்தும் கேட்பதற்கு இனிமையாய் உள்ளன.
திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுவகைகள் பற்றி ஒரு பாடலில் (போஜனம் செய்ய வாருங்கள் என்ற பாடல்) சைவ உணவு வகைப் பட்டியலை அதில் கேட்கலாம்.
சாம்பார் வகைகள்
ரசம் வகைகள்
இனிப்பு வகைகள்
வடைவகைகள்
பழங்கள்
சித்ராண்ணங்கள்
அரிசி சாதமும், நெய்யும் சேர்த்து சாப்பிட வாருங்கள் என பாடி இருக்கிறார்.
மாப்பிள்ளை சமர்த்தரடி… என்ற பாடலில் மாப்பிள்ளை எதில் சமர்த்தராம்??? காபி குடிப்பதில்.. அதுவும் காது கடுக்கனை விற்று.. நகையெல்லாம் எடுத்துப்போய் போன விலைக்கு விற்று மட்டை மட்டையாய் பொடி போடுவதிலாம்…
பூப் பந்தாடினார் பரமசுந்தரன் பாண்டியன் பெண்ணோடு.. என்ற பாடலைக் கேட்கும் போது எனக்கு "வசந்தவல்லி பந்து விளையாடிய" காட்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.
நல்ல தமிழிசை.. நல்ல குரல்வளம் கொண்ட பாடகிகள், அருமையான பக்க வாத்தியங்கள் கொண்டு எல்.கிருஷ்ணன் கொடுத்துள்ள இந்த இசைத்தொகுப்பை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் கேளுங்கள்.
நன்பர் ஒருவர் கொடுத்த
கலியாணப் பாடல் லின்க் Marriage Songs,
Vani Recording Co.(P) Ltd,
Post Box: 2063, Chennai – 600 020