Friday, December 24, 2010

இலக்கைத் தவறவிட்ட மன்மதன் அம்பு


ரஜினியின் எந்திரனுக்குப் பிறகு சுமாரான எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. படத்தின் மூன்று முக்கிய பாத்திரங்களின் பெயர்சுருக்கமே படத்தின் தலைப்பு.

கதை என்ன? தான் சந்தேகப்படும் காதலியை உளவு பார்க்க அனுப்பும் உளவாளியே சூழ்நிலை காரணமாக உளவு பார்க்க வந்தவரையே காதலிப்பதுதான் கதை.

மாதவன் ( மதன்) அம்புஜாக்‌ஷி என்ற அம்பு என்ற நிஷா ( த்ரிஷா) மற்றும் மேஜர் மன்னார் என்ற மேஜர் ( கமல்) இவர்கள் மூவரைச் சுற்றித்தான் கதை என்றாலும் சங்கீதாவும் மிக முக்கியப் பங்குவகிக்கிறார். கமலின் படங்களில்பிரபலமானவர்களைவிட நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆட்களைத் தேர்வு செய்கிறார் என்பதை உறுதியாக நம்பலாம். சதி லீலாவதியில் கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.

இதிலும் சங்கீதாவுக்கு த்ரிஷாவுக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றார். அவரும் கொடுத்த பாத்திரத்தை அநாயாசமாகச் செய்திருக்கிறார். இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஒரு டைவோர்ஸி அடுத்த திருமணத்திற்கு ரெடியாக இருப்பது மற்றும் த்ரிஷாவுக்கு அவர்கூறும் அறிவுரைகள் மற்றும் தனது கருத்துக்களாகச் சொல்வதெல்லாம் கமல் பட கதாபாத்திரங்களுக்கே சாத்தியம்.

கமல் வழக்கம்போல கலக்கல். வயதுக்கு ஏற்ற வேடம். ரிடையர்டு மேஜர் பணத்தேவைக்காக உளவு பார்க்கிறார். மாதவனிடம் உண்மையைச் சொல்கிறார். உளவு பார்க்கப் போய் சுவாரசியமாக எதுவுமே கண்டுபிடிக்கவில்லையாதலால் அவருக்குச் சேரவேண்டிய பணத்தைத் தரமறுக்கிறார் மாதவன். பணம் அவசியம் தேவையென்பதாலும், அதற்காகத்தான் இந்த உளவு வேலைக்கே ஒத்துக்கொண்டிருப்பதாலும் வேறு வழியின்றி வேறு ஒருவனுடன் த்ரிஷா சுற்றுவதாக கதை செய்து சொல்கிறார், புற்றுநோயால் அவதிப்படும் தனது நண்பனும், பார்ட்னருமான ரமேஷ் அரவிந்தைக் காப்பாற்ற வேண்டிய பணத்துக்காக.

வசனங்கள் எல்லாம் பளீர் ரகம் என்றாலும் எத்தனைபேர் ஒன்றி ரசிப்பார்கள் எனத் தெரியவில்லை. அவ்வளவு ஆங்கிலக் கலப்பு. சுத்தத்தமிழுக்கு ஆதரவாக சில காட்சிகள் வைத்திருக்கும் கமல் வசனங்களில் இவ்வளவு ஆங்கிலக் கலப்பை எப்படி அனுமதித்தாரோ?வசனமும் கமல்தான்.

பாடல்கள் எல்லாம் ஆஹா ஓஹோ எனப் புகழப்பட, படத்தில் அவைகள் வருவதும், போவதும் இம்சையாய் இருக்கிறது. ரிவர்ஸில் வரும் ஒரு பாடல் மட்டும் ஓக்கே. படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் எந்தப்பாடலும் மனதில் நிற்கவில்லை.

படம் முழுக்க ரிச்சாக எடுக்கப்பட்டது தெரிகிறது. கதை நடக்கும் இடங்களும், பாத்திரங்களும் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். மாதவன் தொழிலதிபர், டைவர்ஸ் மூலம் பெரும்பணம் ஜீவனாம்சமாக கிடைத்த சங்கீதா, நடிகையாக த்ரிஷா, படப் ப்ரொட்யூசராக வரும் குரூப், முன்னாள் மேஜராக வரும் கமல், எல்லோரும் பணக்காரத்துடனே வருகின்றனர். விதிவிலக்கு புற்றுநோயால் அவதிப்படும் ரமேஷ் அர்விந்தும், அவர் மனைவியாக வரும் ஊர்வசியும் மட்டுமே.

படத்தை ரிச்சாக காண்பிப்பதற்காகவே த்ரிஷா விடுமுறையை சொகுசுக் கப்பலில் கழிப்பதாக கதையை அமைத்து விட்டதால் கதையை வெளிநாடுகளிலும், உல்லாசக்கப்பலிலும் நகர்த்த வாய்ப்பு. எனவே எல்லா லொகேஷன்களும், கப்பலும் கொள்ளை அழகு. ஒருமுறையாவது போய்வர ஆவலைத் தூண்டுகின்றன.

ஒளிப்பதிவு கலக்கல். மிக சிறந்த ஒளிபரப்பு. நீலக்கடலும், கப்பலிலிருந்து வெளியே காட்டும் காட்சிகளும், ரிவர்ஸில் எடுக்கப்பட்ட பாடலின் ஒளிப்பதிவும், சூப்பர். ஓ பக்கங்கள் ஞானியின் மகனாம்.

தயாரிப்பாளருக்காக தான் எழுதிய வக்கிரப்பாடலை நீக்குவதாக கமல் சொன்ன பாடல் வெளிநாடுகளில் இடம் பெறுகிறது. பதிவர் லோஷன் இலங்கையில் இந்தப்பாடல் இருந்ததாகச் சொன்னார். இந்தப்பாடல் மூலம் தனது மன வக்கிரத்தை வெளிக்காட்டியதுடன் இந்துக்கள் மனதை காயப்படுத்தியது தவிர வேறு என்ன சாதித்தார் எனத் தெரியவில்லை. கமலின் சொந்த வாழ்க்கையின் தோல்வியை இப்படி தீர்த்துக்கொள்கிறாரோ எனத்தோன்றுகிறது. அல்லது உன்னைப்போல் ஒருவனில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகக் காட்டியதற்காக, இந்துக்களை இழிவு செய்வதன் மூலம் சரிக்கட்டுகிறரோ என எண்ணத் தோன்றுகிறது. அதேபோல காவியைப் பற்றியும் ஒரு நக்கல்.


த்ரிஷா பல இடங்களில் கவர்ச்சி காட்டுகிறார். நிச்சயம் டீன் ஏஜ் திரிஷாவெல்லாம் மலையேறியாகிவிட்டது. இப்போது முதிர்ச்சியான அழகான த்ரிஷா. அதற்குத் தக்காற்போல் டாட்டூவும் வில்லங்கமான இடங்களில் போட்டுக்கொண்டிருக்கிறார். உடைகள் கவுதமியாம். அருமையான உடைகள் . படத்தின் ரிச்னெஸ்க்கு உடைகளும் ஒரு காரணம். இசை பற்றி எனக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை.

முதல் பாதியின் தொய்வு படுத்துகிறது. கப்பல் காட்சிகளும், நல்ல வசனங்களும் படத்தை நகர்த்துகின்றன. இரண்டாம் பாதி கலக்கல். சரவெடி நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. கதை, திரைக்கதை, வசனம் - கமலஹாசன் என இருந்தாலும் நிறைய இடங்களில் கிரேஸி எட்டிப்பார்க்கிறர். வசனத்தை மட்டுமாவது கிரேஸியிடம் ஒப்படைத்திருக்கலாம். நகைச்சுவைப் பகுதியை இன்னும் சிறப்பாய் செய்திருப்பார். இயக்கம் கே.எஸ்.ரவிக்குமார் என்பதால் படம் தப்பித்தது எனச் சொல்லலாம். இல்லையெனில் கமலுக்கு இன்னொரு தோல்விப்படமாக இது அமைந்திருக்கும்.

பார்த்த சில மணி நேரத்திலேயே மாதவன் மீது சங்கீதாவுக்கு காதல் வருவதெல்லாம் கமலுக்கும், கமல் படத்தில் மக்களுக்கு மட்டுமே சாத்தியம். அதுவும் தனது தோழியை சந்தேகப்பட்டு உளவு பார்க்க ஆள் அனுப்பியவன் எனத்தெரிந்த பின்னரும்..

உஷா உதுப் தனக்கான பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். சந்தேகப்படும் காதலனாக மாதவன் கலக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். உடல் மொழி, குரல் ஏற்ற இறக்கங்கள், அம்மா கோண்டாக இருந்துகொண்டு தனது முடிவுகளை எடுப்பது, தண்ணியடித்துக்கொண்டு உளறுவது என எல்லா இடத்திலும் கலக்குகிறார்.

ஒரு சிறிய விபத்து படத்தின் திருப்புமுனையாக அமைவது படத்தில் ”அட” சொல்லவைக்கும் இடம். கமல் த்ரிஷா கெமிஸ்ட்ரி, மேத்ஸ் எல்லாம் அருமையாக அமைகிறது இன்னும் கொஞ்சம் அவர்களை காதலிக்க விட்டிருக்கலாம்.

லாப, நஷ்டத்தைப் பற்றி நமக்கு கவலை இல்லை என்பதால், ஒருமுறை பார்க்கலாம் என சிபாரிசு செய்யலாம். அவ்வளவே. மன்மதன் அம்பு - இலக்கை தைக்கவில்லை.

படங்கள் நன்றி சுலேகா டாட் காம்

Wednesday, December 22, 2010

நாஞ்சில் நாடனின் ”தலைகீழ் விகிதங்கள்”


நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் புத்தகம் குறித்த எனது விமர்சனம் தமிழ் ஹிந்துவில் வெளியாகி உள்ளது. படிக்க இங்கே சொடுக்குங்கள்.

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகாதமி விருது


மனதிற்கு மிகப்பிடித்த எழுத்தாளர் ஓர் உயரிய விருதை வாங்கும்போது நாமே அவ்விருதைப் பெற்றதுபோல உணர்வோம்.

இன்று எனக்கு அப்படிப்பட்ட ஒரு நாள். நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்களையும், மிதவையையும் படித்து விட்டு சே, எப்படி எழுதுறார்யா என மனதில் மகிழ்ச்சியுடன் இருக்கும் இப்போதைய நாட்களில், அவருக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்த செய்தி அளவிலா மகிழ்ச்சியைத் தருகிறது.

திரு.நாஞ்சில் நாடன், உங்களை நேரில் சந்திக்கும்போது தலைகீழ் விகிதங்களுக்காகவே கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்ல எண்ணியிருக்கிறேன். சாகித்திய அகாதமி விருதுக்காக இறுகக் கைப்பிடித்து ஒரு வாழ்த்து உங்களுக்கு.

உண்மையை எழுதுபவனுக்கு சுமை ஏதுமில்லை. அதனால், இந்த விருதின் மூலம் பொறுப்புகள் கூடும் என கவலை கொள்ளத் தேவையில்லை. ஏகாந்தமாக உங்களின் வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டிருங்கள். அதுதான் இலக்கியம் என இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

Tuesday, December 14, 2010

சீனா - விலகும் திரை

தமிழ் ஹிந்து தளத்தில் வெளியான சீனா - விலகும் திரை, புத்தக விமர்சனத்தைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.