Saturday, May 9, 2009

துறைமுகம் - புகைப்படங்கள்.

எனது பனி நிமித்தமாக துறைமுகத்திற்க்கு அடிக்கடி செல்வதுண்டு. அவ்வப்போது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

எத்தனையோ பேர் தனது கடல் அனுபவங்களைப்பற்றியும், கடலில் வேலைசெய்வது மகிழ்ச்சியாய் இருக்கிறது எனவும், அதைவிடக் கொடுமை உண்டா என எழுதியவர்களும் உண்டு.

கடற்கரையிலும், நின்றுகொண்டிருக்கும் கப்பலிலும் கிடைத்த எனது அனுபவங்களை இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.

பொதுவாக நான் பார்த்தவரையில் நான்கு விதமான கப்பல்களை பார்த்திருக்கிறேன்.

கச்சா எண்ணெய் ஏற்றிச்செல்லும் கப்பல்கள்.

பெரிய பெரிய கப்பல்கள்..( பாய்லர்கள், பீம்கள், இன்னும் பெரிய பெரிய சரக்குகளை ஏற்றிவருபவை)

ரோ ரோ என அழைக்கப்டும் கார்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சரக்கை மட்டும் ஏற்றிச்செல்லும் கப்பல்கள்.

மூன்றாவது சப்ளை போட் எனப்படும் சிறிய போட்டுகள்.இவைகளைப் பற்றிய எனது அனுபவங்கள் இங்கு.


இந்த சிறிய போட்டில்தன் எண்ணெய் துரப்பனப் பனிக்குச் செல்லும் ஊழியர்கள் செல்வதும் வருவதும். அவர்களது உணவு, வேலைக்குத் தேவைப்படும் சாமான்கள் அனைத்தும் இவைமூலமே அனுப்பப்படுகின்றன. அங்கு உண்டாகும் கழிவுகளும் இதன் மூலமே கரைக்கு சுத்திகரிப்புக்கு அனுப்பபடும்.

அதிக பட்சம் 10 மனிநேரம் பயணம் செய்தால் வரும் தூரத்தில் உள்ள இடங்களுக்கு இவைகள் செல்கின்றன. சில நேரங்களில் வானிலை காரனமாக படகில் ஏறிய பின்பு மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரையிலும் ஆங்கரேஜ் எனப்படும் நங்கூரமிடப்படும் அளவு ஆளமுள்ள இடத்திலேயே நிற்கும். கண்ணுக்கு அருகில் தரை தெரிய இவர்கள் கரையைப் பார்த்தபடியே இருக்க வேண்டும். முதல் முதலாய் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் பிரசினை வாந்தி.. தொடர்ச்சியாக வாந்தி எடுத்துக்கொண்டே இருந்து படகுக்காரர்களே அவரை ஹெலிகாப்டரில் மாற்றி அனுப்பி வைத்து விடும் அளவு கஷ்டப்படுவர்கள். ஒரு சிலர் படகு மேலே சென்று கீழே விழுந்தாலும் அசராத ஆட்கள்.

அங்கு கிடைக்கும் உணவுகளும் படகுக்குப் படகு வித்தியாசப்படும்.

இந்திய குக் இருந்தால் குறைந்தபட்சம் தாலும், சப்பாத்தியும் உறுதியாக கிடைக்கும். இந்தோனேஷிய, ஹாங்காங் படகுகளில் பயணம் செய்ய நேர்ந்தால் நண்டு, இறால் போன்றவையும் ரொட்டியும் கிடைக்கும். முழுசாக இரண்டுகிலோ எடையில் உள்ள முழு பொறித்த நண்டைப் பார்த்திருக்கிறேன் உணவு மேஜையில்.

படகுப் பயணத்தில் பாதுகாப்பே முதன்மை. எனவே எல்லோருக்குமான லைஃப் வெஸ்ட், படகுக்கு ஏதேனும் நேர்ந்தால் தப்பிக்க சிறு சிறு படகுகள் ( டைட்டானிக்கில் பார்த்திருப்பீர்களே அதுபோல) என இருக்கும்.

நான் பார்த்த கப்பல்கள் எல்லாம் மூன்றடுக்கு அல்லது இரண்டு அடுக்குகளில் இருக்கின்றன. ஒவ்வொருவரும் படுக்க இடம், டாய்லெட், குளியல் அறை. துணீ துவைக்க இடம் எல்லாம் தனித்தனியாய் இருக்கின்றன. உல்லாசப்படகுகளில் கான்பிப்பதுபோலில்லாமல் நம்மூர் கல்லூரிகளின் டார்மிட்டரியை விட கொஞ்சம் நன்றாய் இருக்கும் அவ்வளவே..

தங்குமிடம் தவிர முற்றம்போல இடமும் காலியாக இருக்கும். சாமான்கள் எடுத்துச்ச் செல்ல. 20 அடி, நாற்பது அடி கண்டெய்னர்கள், பைப்புகள், கடலில் எண்ணெய் துரப்பனப் பனிக்குத் தேவையான எல்லா சாமான்களும் எடுத்துச்செல்ல வசதியாக இருக்கும்.

கப்பலில் கேப்டனின் அறை ஒன்றுதான் அதிக பட்ச சுத்தமாய் இருக்கும். மேல் தளம் அவருடையது. கப்பலில் ஏற்றப்படும் ஒவ்வொறு சாமானும் அவரது கையொப்பம் பெற்றபின்பே ஏற்றப்படும். இறக்கும்போதும் அவரது கையொப்பம் அவசியம்.

ஒருமுறை கடலில் வேலைக்குச் சென்றுவிட்டால் உங்களை மாற்ற ஆள் வரும் வரையில் நீங்கள் அங்கிருந்து கிளம்ப முடியாது. பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம் ஆட்களை தயாராய் லீவெல்லாம் கொடுத்து சரியாக வைத்திருப்பார்கள். ஆனல் சிறிய சிறிய கம்பெனிகளான சமையல் செய்பவர்கள், சாரம் கட்டித்தருபவர்கள் (Scaffolding) இன்னும் எத்தனையோ கம்பெனிகள் அவரவர் சக்திக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கு சுழற்சி முறை விடுமுறை கொடுப்பர். சில துரதிருஷ்டசாலிகளுக்கு ஆறு மாதம் வரை தரையைப் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்ப்பதில்லை.

இரவில் படகில் இருந்தபடி கடலைப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். படகைச் சுற்றி சுற்றி கூட்டம் கூட்டமாய் டியூப்லைட் போலிருக்கும் மீன்கள் வரும் பெயர் தெரியாது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி நீளத்தில் இருக்கும். மீன் பிடிப்பது குற்றமென்றாலும் எல்லாப் படகுக்காரர்களும் மீன் பிடிப்பார்கள்.




துறைமுகத்தில் சில சமயம் அதிகக் கப்பல்கள் வருவதால் நிற்க இடம் கிடைக்காததால் இப்படி இரண்டு படகுகளுக்கு ஒரு பெர்த் வீதமும் கொடுப்பார்கள். சில சமயம் மூன்று படகுகளையும் இனைப்பார்கள். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு தாண்டிச்செல்ல வைத்திருக்கும் கட்டையைத்தான் பார்க்கிறீர்கள்.இரண்டு படகுகள் இனைந்திருக்கின்றன.



கேப்டனின் அறை வாசலில் இருந்து எடுத்த படம்.




கேப்டனின் அறை.

கடலுக்குள் வேலை எப்படி செய்கிறார்கள் என்பதைப் பற்றிய நேரடி அனுபவம் இல்லாததால் இந்தக் கட்டுரையை இத்துடன் முடிக்கிறேன்.. நன்றி. வணக்கம்.. ( யாராச்சும் சோடா குடுங்கப்பு)

<