Monday, August 30, 2010

அந்தம் தொடர் மற்றும் அகர முதல வலைப்பதிவு குறித்த எனது எண்ணங்கள்.

வற்றாயிருப்பு சுந்தர்..

அகர முதல என்ற வலைப்பதிவுக்குச் சொந்தக்காரர்.

தற்போது காணாமல் போய்விட்ட மரத்தடி.டாட்.காமில் தீவிரமாக இயங்கியவர்.
குற்றுயிரும், கொலைஉயிருமாய் இன்றிருக்கும் மரத்தடி குழுவின் உறுப்பினராய் இருப்பவர்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தீவிர விசிறி. எஸ்.பி.பி. பாடிய பாடல்களில் அவருக்குப் பிடித்த பாடல்களை வரிசையாக பாடல் வரிகளுடன் பாடும் நிலா பாலு என்ற வலைத்தளத்தில் வலையேற்றுபவர்.

நல்ல புகைப்படக் கலைஞர்.

கவிப்பகைவர்களுக்கு எமன். ( நிறைய கவிதைகள் எழுதுவார் சார்)

மிகச் சிறந்த மனிதாபிமானி.

தீவிர இலக்கிய வாசிப்பும் அதைப்பற்றிய தனது கருத்தை பதிவும் செய்பவர். ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் பற்றி சில குறிப்புகள் என 5 பாகங்களில் அப்புத்தகத்தைப் பற்றிய தனது கருத்துக்களை பதிவு செய்தவர். கிட்டத்தட்ட அந்தக் கதையை திறனாய்வு செய்தவர்.

சுஜாதா, சுரா மற்றும் ஜெயமோகனின் தீவிர விசிறி.

நாட்டுப்பற்றும், சமூகக்கவலையும் கொள்பவர்.

ஆபிதின் கதைகளை ரசிப்பவர்.
சாருநிவேதிதா ஆபிதீன் கதைகளைத் திருடி தனது என உரிமைகொண்டாடியதைக் கண்டபின் சாருவை முழுதுமாய் வெறுத்தவர். தற்போது எப்படி எனத் தெரியவில்லை..

எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்கிறீர்களா?

எனக்குப் பிடித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதி வருவதில் இவரது அகர முதல வலைப்பூ வை அறிமுகம் செய்யவே இப்பதிவு.

2004ல் இருந்து வலைப்பதிவு எழுதினாலும் 200க்கும் குறைவான பதிவுகளே எழுதியிருக்கிறார். தரத்திற்கு அவர் காட்டும் முக்கியத்துவம் காரணமாயிருக்கலாம்.

மரத்தடி, ராயர் காபி கிளப், அகத்தியர், பொன்னியின் செல்வன், தமிழ் உலகம் போன்று இன்னும்பல இணைய குழுக்களில் முக்கிய பங்காற்றுபவர்.

அவர் எழுதிய அந்தம் என்ற தொடரை 2004 வாக்கில் படித்து விட்டேன். இன்றுவரை என் மனதை விட்டு அகலாத ஒரு கதை இருக்கிறதென்றால் அது அந்தம் மட்டுமே. நினைக்கும்தோறும் மனதில் மிக அருமையான உணர்வை அளிக்கும். கிட்டத்தட்ட நான் அனுபவிக்க விரும்பிய வாழ்க்கை அது. கணவன் மட்டும் இல்லாமல் இருந்தால் நிச்சயம் நிலாவைப் போன்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம். கதையைச் சுருக்கமாகச் சொன்னால், தற்போது தொலைக்காட்சித் தொடர்களுக்கு தீனியாகும் விஷயம்தான்.. கல்யாணமான ஒரு பெண்ணுடன் மலரும் காதலும், இறுதியில் கதாநாயகியின் கணவன் வந்ததும் இருவரும் பிரிவதும்தான் மொத்தக் கதை. மருத்துவமனையில் கிடக்கும் கதாநாயகன் தனது ஞாபகங்களைத் திரும்பிப் பார்ப்பதுபோல சொல்லப்படுகிறது கதை.

தனது முதல் கதை இது எனச் சொல்கிறார் சுந்தர். ஆனால் நல்ல சரளமான எழுத்து நடையில் எழுதியிருக்கிறார். 2004ல் இத்தொடரைப் பற்றி அவரைப் பாராட்டி எழுதிய மின் மடல்கள் ஞாபகம் வருகிறது. அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை அதுதான் இந்தக்கதை இவ்வளவு பிடித்துப்போக காரணமோ? பல லாஜிக் ஓட்டைகள் கொண்ட இத்தொடரை இப்போது படித்தால் அபத்தமாக தெரிகிறது. ஆனாலும் இன்றுவரை என் மனதிற்கு நெருக்கமான காதல் கதை.

2004ல் இருந்து இக்கதையைப்பற்றிய எனது எண்னத்தைப் பதிவு செய்துவிட வேஎண்டும் என நினைத்து முடியாமல், இன்று கைகூடியிருக்கிறது. :-) கிறுக்குத் தெளிந்தபின் ?

2008 - 2009ல் 11 பாகங்களாக இவர் எழுதிய மூன்று வருடங்களூக்குப் பிறகு என்ற தொடர் தென்றல் இதழில் வந்து நல்ல வரவேற்பைப்பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஊருக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களின் தொகுப்பு. இத்தொடர் நம்மை நாமே திரும்பிப் பார்ப்பதுபோல இருக்கிறது. எவ்வளவு நல்ல விஷயங்களை இழந்துவிட்டோம் என்பதையும், ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நடக்கும் விளைநிலங்களின் ஆக்கிரமிப்பு பற்றியும், கோவில்களிலும், பொது இடங்களிலும் பொது மக்களுக்கு சமூகபிரக்ஞை என்ற ஒன்று இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நடந்து கொள்வதையும் ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். அவசியம் படிக்க வேண்டிய தொடர் இது.

ரஜினி என்ற ஆளுமையுடனான அவரது சில சந்திப்புகளையும், ரஜினி பெப்சியை மதுரையில் வெளியிட்டதைக் குறித்தும் அவரது பதிவு இது. என்ன பிரமாதம் இது என்கிறீர்களா? சுந்தர் தீவிர கமல் விசிறி.

எந்த நடிகனின் பின்னால் செல்லும் சினிமா ரசிகர்கள் செய்கிற கிறுக்குத்தனங்களையும் இங்கு சுட்டிக்காட்டுகிறார்


சுந்தர் ஒரு நல்ல கவிஞரும்,கூட..(அ)கவிதைகள் என்ற வலைத்தளத்தில் கவிதைகள் எழுதுகிறார். அவரது கவிதைகளில் ஒற்றை இறகும் துயிலும் என்னை மிகவும் கவர்ந்தவை.

புகைப்படங்களை ராஜபார்வை என்ற வலைத்தளத்தில் பதிகிறார்.

அவரது வலைப்பதிவுகள் குறித்து அவரே தரும் வாக்குமூலம் கீழே...


*அகரமுதல* - இது கிட்டத்தட்ட எனது டைரிக்குறிப்புகள் போன்ற (முதல்) வலைப்பதிவு.
*ராஜபார்வை* -நான் எடுத்த புகைப்படங்களுக்கான வலைப்பதிவு
*அகவிதைகள்* - கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டூழியங்களுக்கான வலைப்பதிவு.

இவரது குறையாக நான் நினைப்பது நினைவலைகள் என்ற பெயரில் கொசுவத்தி சுற்றுவதுதான். சுவையாகத்தான் இருக்கிறது என்றாலும் மிக அதிகமாய் கொசுவத்தி சுற்றிவிட்டார்.

சுந்தர், அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். என்னைக் கவர்ந்த நல்ல வலைப்பதிவுகளின் வரிசையில் இது இரண்டாவது. அவரது வலைப்பதிவில் தற்போது நிறைய எழுதுவதில்லை. நிறைய எழுதுங்கள் சுந்தர் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்.

வயதானாலும்,( :-) ) மனதில் என்றும் இளமையாய் இருக்கும் வற்றாயிருப்பு சுந்தருக்கு வாழ்த்துக்கள்.

Saturday, August 28, 2010

சொல்வனம் இதழ் 32 குறித்து எனது எண்ணங்கள்.

சொல்வனம் இலக்கிய இணைய இதழ் குறித்து எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஒவ்வொரு இதழும் அதன் முந்தைய இதழை முந்திச் செல்கிறது தரத்திலும், உள்ளடக்கத்திலும். 23.08.2010 தேதியிட்ட சொல்வனத்தின் 32 வது இதழ் குறித்த எண்ணங்கள் கீழே

இந்த இதழும் வழக்கம்போல அருமை.

வெடித்துக் கிளம்பும் விக்கிலீக் கட்டுரை ராஜனின் எழுத்துத் திறமையின் பல பரிமானங்களை உனர்த்துகிறது. படிக்கப் படிக்க கட்டுரையின் உள்ளேயே இழுத்துச் சென்றுவிடுகிறது கட்டுரை. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

காமன்வெல்த் போட்டிகள் குறித்து சந்திரசேகரின் கட்டுரை இந்திய விளையாட்டுத்துறையின் லட்சனத்தை தோலுரிக்கிறது. ஆனால் அரசாங்கம் என்ற ஒன்று இந்த ஊழல்குறித்து ஏதும் செய்யாமல் இருப்பது, நாட்டின் மானத்தைவிட தனிப்பட்ட அரசியல்வாதிதான் முக்கியம் என்பது போல நடந்துகொள்வது அப்பட்டமாய் தெரிகிறது. ஒரு இந்தியனாய் மிக்க வருத்தமாய் உணர்கிறேன். நாட்டின் கௌரவத்துக்காக நடத்தப்படும் ( அவர்கள் சொல்லிக்கொள்வது போல) இந்த விளையாட்டுப்போட்டியிலேயே இவ்வளவு லஞ்சமும், ஊழலும் மோசமாய் தலைவிரித்தாடும் என நினைக்கவேயில்லை. அதிலும் நமது நாட்டின் கௌரவத்தையே அடகுவைத்துவிட்டு ஊழல் செய்யும் கல்மாதி போன்றவர்களைக்கூட நமது சட்டம் தண்டிக்காதெனில் மத்தியஅரசைப்பற்றி சாதாரன மக்கள் என்ன நினைப்பார்கள்?

ஆவுடை அக்காள் பாடல் திரட்டு குறித்த நாஞ்சில் நாடனின் கட்டுரை அருமை. பாரதிக்கு முன்னோடி மட்டுமின்றி, பாரதியின் கருத்துக்கள் ஆவுடை அக்காளின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டது என்ற ஒப்புமையும் புதிய தகவல். எப்போது எழுதினார் என்பதே தெரியாத அளவு பழமையான காலமாக இருந்தாலும் அக்காளின் கருத்துக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருப்பது நாஞ்சில நாடன் எடுத்துக்கட்டியுள்ள பாடல் வரிகளில் தெரிகிறது. இதுபோன்ற அடையாளம் அற்றுப்போன, அல்லது மறக்கப்பட்டுவிட்ட நமது மூதாதையர்களை எடுத்துக்காட்டும் நாஞ்சில் நாடனின் எழுத்து பாராட்டுக்குரியது.

துப்பு - சுகாவின் இன்னொரு அருமையான அனுபவக்கட்டுரை. அவர் சொல்லும் ”எல்லாப் பெரிய குடும்பங்களையும் போல உப்புப் பெறாத காரணங்களுக்காக அத்தனை காலம் தொடர்பில்லாமல் பிரிந்திருந்தோம்.’’ என்ற வரிகள்தான் இப்போதும் எத்தனைப் பொருத்தம். காலம் கடந்த பின்னர் இழந்ததை நினைத்து வருந்திப் பயன் என்ன? எத்தனை எத்தனை அண்ணன், தம்பிகள், அப்பா, மகன்கள் காலம் போடும் இந்தக் கண்ணாமூச்சியில் சிக்கி வாழ்க்கையின் நல்ல தருணங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்களோ? மொத்தக் கட்டுரையில் இந்த ஒரு வரி எவ்வளவு பெரிய உண்மையை சர்வசாதாரனமாய் சொல்லிச் செல்கிறது?

முதல் முறையாய் ராராவின் கார்டூன் சுமாருக்கும் கீழே வந்திருக்கிறது. வழக்கமாய் அவரது படங்கள் இன்றைய குழந்தைகளின் புத்திசாலினத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கும். இம்முறை குமுதத்தில் வரும் ஜோக் போலாகிவிட்டது.

சூப்பர் பக் குறித்த ராமன் ராஜாவின் கட்டுரை பயந்து போயிருக்கும் மக்களுக்கு ஒரு ஆறுதல். வெளிநாட்டவர் ஏன் இப்படி நம்மீது பாய்கிறர்கள் என்பதற்கு

// சேவைகள் துறையில் இந்தியா பீடு நடை போட்டு முன்னேறி வருகிறது. மென்பொருள் காண்ட்ராக்ட்களை ஒரேயடியாக வளைத்துப் போட்டாகிவிட்டது. அதே போல் மெடிக்கல் டூரிஸம் என்று அபுதாபியில் இருந்தெல்லாம் அராபிய ஷேக்கர்கள் வந்து இங்கே கிட்னி, இதயம் என்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு போகிறார்கள். காரணம், கிட்னி திருடுபோகும் அபாயத்தையும் மீறி இங்கே செலவு மிகவும் கம்மி//

இதுதான் காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். மேலும் வெளிநாட்டு ஆஸ்பத்திரின்னா எப்படித் தெரியுமா எனப் படம் போட்டவர்களுக்கு அங்கு கிடைக்கும் இலவச கிருமிகள் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.

இன்னும் ஒரு அருமையான இதழ் சொல்வனழ் இதழ் 32.

Monday, August 16, 2010

தையல் - வலைப்பக்கம் அறிமுகம்.


முதலில் நமக்குத் தெரிந்த ஆட்கள் என்ற அபிப்ராயத்துடன் எதையும் படிக்காமல் இருக்கக் கூடாது என்ற உண்மையை உணர வைத்தது ராம்கியின் தையல் வலைப்பக்கம். அப்படிப்பட்ட எண்ணம் அவர்கள் எழுத்தைப்பற்றிய உண்மையான அபிப்ராயம் நமக்குக் கிடைக்காமல் செய்துவிடும். அப்படிப்பட்ட எண்ணத்துடன்தான் தையல் வலைப்பதிவை தொடர்ச்சியாக தாண்டிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன். அவரது வலைத்தளத்திற்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால் அவ்வபோது எதையாவது படித்துவிட்டு சென்று விடுவேன். இப்போது முதலில் இருந்து படிக்க ஆரம்பித்து முழுதும் முடித்திருக்கிறேன்.

எல்லாக் கட்டுரைகளும் நல்ல நடையிலும், கச்சிதமாகவும் இருக்கிறது. வள வள என்று நீளமாகவோ, தேவையற்ற கிண்டல்களோ, ஏதுமின்றி, ஒரு விஷயத்தை எப்படிச் சுவாரசியமாய்ச் சொல்ல முடியும் என தொடர்ந்து முயற்சித்திருக்கிறார் ஜெ.ராம்கி. எல்லாமே மிக நன்றாய் வந்திருக்கிறது.

கோவிலுக்குச் சென்று வந்ததைப் பற்றி அவர் எழுதும் குறிப்புகள் அந்தக்கோவிலையே பார்த்திராதவர்களுக்குக் கூட கோவில் எப்படி இருக்கும் , சென்று வந்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை தனது எழுத்து மூலமே தந்துவிடுகிறார். அடி அண்ணாமலை கட்டுரை இதற்கு ஒரு உதாரனம்.

சோபன்பாபு எபிசோட்.. ஆச்சரியம் கலந்த தகவல்.. நான் அப்போது 8ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். 17.04.1980ல் ஜெயலலிதா ஒரு வாசகர் கடிதம் எழுதி இருக்கிறார் என்பதும் அதில் சோபன் பாபுவைப் பற்றி சொல்லியிருக்கிறார் என்பதும் ஆச்சரியம் கலந்த உண்மை. ஜெ.ராம்கி அவர் எழுதிய ஜெ புத்தகத்தில் இதையெல்லாம் எழுதியிருக்கிறார்.

ராம்கியின் முதல் புத்தகமான ஜே.பி யை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு இன்னும் தீராத ஆச்சரியம் எப்படி இரண்டாம் சுதந்திரமான ”எமர்ஜென்ஸியிலிருந்து விடுதலை”க்குக் காரணமான ஒருவரை மக்களின் ஞாபகத்திலிருந்தே ஒரே ஒருகுடும்பத்தால் திட்டமிட்டு அழிக்கமுடிந்தது என்பதும், அதை காங்கிரஸை கடுமையாய் எதிர்க்கும் மற்ற எந்த கட்சியாலும் இந்த இருட்டடிப்பை தடுத்த நிறுத்த முடியாமலும், ஜெ.பியின் புகழை பரப்ப முடியாமலும் இருந்தார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாய் இருந்தது. இத்தனைக்கும் இன்றைக்கும் பல தலைவர்கள் எமர்ஜென்ஸியின் கோரப்பிடியில் கொடுமையை அனுபவித்தவர்கள். ஒருவேளை இன்றைக்கு சுரண்டலினால் கிடைத்த வசதிவாய்ப்புகள் அவர்களுக்கு அந்த நினைவையே அத்துப்போகச் செய்திருக்கும். அதேபோல புத்தகத்தின் மூல ஆசிரியர் ( தேவ சகாயம்) எழுதியது போல இந்தியர்களாகிய நாமெல்லாம் ஜெ.பிக்கு செய்நன்றி கொன்றவர்கள்.

ரேஷன் கார்டு - ஒவ்வொரு இந்தியனின் கனவு அட்டை. ராம்கி அவரது பதிவில் சரியாகச் சொன்னபடி ரேஷன் கார்டு என்பது ” சென்னையில் அலல்து தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு” என்பதுதான் உண்மை. எங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என்னோட வீட்ட்டுக்காரம்மா பெயரைச் சேர்க்கும் சாதனை இன்னும் முற்றுப்பெறவில்லை. ஆனால் சென்னையில் வீட்டுக்காரம்மா பெயரை குடும்ப அட்டையில் இருந்து உடனே எடுத்துவிட்டார்கள். வித்தியாசமான அரசு இயந்திரம்.

புலிவிடும்தூது.. கலக்கல். அரசியல் நையாண்டியில் நிஜமாகவே வலிக்காமல் அடிக்கிறார்.

பிறவார்த்தை யாதொன்றும் கட்டுரையில் //தமிழ்நாட்டு மக்கள், புலிகளை தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் காட்டும் அசாத்திய உறுதி தவறானது என்பதை எந்த தேர்தல்களும் இதுவரை நிரூபிக்கவில்லை.// என்பது எவ்வளவு பெரிய உண்மை? இனிமேல் இலங்கைத் தமிழர் குறித்து ஒருவரும் பேசப்போவதில்லை..

சாரு நிவேதிதாவும் கருணாநிதியும்... சான்ஸே இல்லை.. இருவரையும் ஒப்பிட்டு எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை மிக சுவாரசியமாய் சொல்லி இருக்கிறார்.

அடுத்த கட்டம் கட்டுரையெல்லாம் சொல்வனம் போன்ற இலக்கிய பத்திரிக்கைகளில் வரவேண்டியது. மிக அருமை. தமிழ் சினிமாவைப் பற்றியும் அதன் நிதர்சனங்களைப் பற்றியும் ஏதுமறியாதவர்கள் விடும் உதார்களை அழகாக தோலுரிக்கிறார்.

ரஜினியின் படங்களில் வரும் நல்ல பாடல்வரிகளை ”சில்லுண்டியிசம்” என்ற பெயரில் ரஜினியின் படத்தின் கீழே இடுகிறார்.

அவர் எழுதிய புத்தகங்கள் குறித்து இவ்வாறு “பா.ராகவன் புத்தக உலகை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தின் முக்கியமான ஆளுமைகள் பற்றி புத்தகம் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினி – சப்தமா? சகாப்தமா? (2005); மு.க (2006), பாகவதர் (2007), ஜெ (2008 ) போன்ற புத்தகங்களின் மூலமாக நல்ல அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து எழுதிய காவிரி, மன்மோஹன்சிங், மதிமுக புத்தகங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த பின்னர் ஒரு வழியாக தமிழ் எழுத்தாளர்கள் வரிசையில் ஓரமாக நிற்க முடிந்ததிருக்கிறது” என சுயபுராணத்தில் எழுதியிருக்கிறார்.

பொதுவாக சினிமா நடிகர்களின் ரசிகர்களுக்கு சமூகத்தில் ஒரு இளக்காரமான பார்வையே பரிசாகக் கிடைக்கிறது. பொழுதுபோக்குக்காக சினிமாக்களைப் பார்க்காமல் அவர்களை கடவுள் ரேஞ்சுக்கு நினைப்பதும், அதற்காக வேலைசெய்வதுமாக வாழ்க்கையை வீணடிக்கிறார்கள் என்பதும் கிண்டல் செய்பவர்களின் வாதம். அதிலும் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்துவிட்டால் கிண்டல் இன்னும் கொஞ்சம் கூடும். உலக சினிமா எடுக்கிறேன் என ஆங்கில திரைப்படங்களை காப்பியடித்து கூத்தடித்துக்கொண்டிருக்கும் கமல் இவர்களுக்கு மிகச் சிறந்த நடிகன். ஆனால் உண்மையில் திரையிலும், நேரடி வாழ்க்கையிலும் நல்லவனாகவே வாழும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பப்படும் ரஜினியை ரசித்தால் கிண்டல். ரஜினி ரசிகன் எனில் இலக்கியம் படைப்பதும், சமூக அக்கறை சார்ந்து எழுதக்கூடியவராகவும் இருப்பது நடக்கவே கூடாத ஒரு விஷயம் என நினைக்கிறார்கள்.

ரஜினியின் தீவிர ரசிகராகவும் இருந்துகொண்டு அதே சமயம் சமூக அக்கறையுடன் கூடிய கட்டுரைகளையும், நகைச்சுவைக் கட்டுரைகளையும் எழுதுவதுடன், நிறைய புத்தகங்களையும் எழுதும் ரஜினி ராம்கியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் புதியவர்களுக்கு ஒரு நல்ல வலைப்பக்கமான தையலை அறிமுகம் செய்த திருப்தி எனக்கு.

Sunday, August 8, 2010

என்னத்தச் சொல்ல...

நமது பாரதப்பிரதமர் சமீபத்தில் காஷ்மீரத்துக்கு”ஏன் சுயாட்சி தரக்கூடாது” என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார், இங்கே. இத்தனை காலம் காஷ்மீரத்தைப் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் உயிரை பணயம் வைத்து போராடிக்கொண்டிருக்கும் இந்திய ராணுவத்தின் தியாகம் எல்லாம் இஸ்லாமிய ஓட்டு வங்கிக்காக தியாகம் செய்யப்படப்போகிறது, அல்லது காஷ்மீர முஸ்லிம்களிடம் பார்த்தீர்களா நாங்கள் சுயட்சி தர இருந்தோம் மற்றவர்கள்தான் தரவிடவில்லை எனச் சொல்லி வாக்குகளைப் பெற ஒரு குயுக்தியான வழி.

படிச்சவன் சூதும், வாதும் செஞ்சால் அய்யோனு போவான்..அம்போனு போவான் எனச் சொன்ன எங்கள் தீர்க்கதரிசியாம் பாரதியின் வாக்கு பொய்த்துப் போய்க்கொண்டிருக்கின்றது.

ஜனநாயகத்தின்மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்த நேருவின் மகளால் இந்திய மக்கள்மீதும், தலைவர்கள் மீதும் ஏவிவிடப்பட்ட எமர்ஜென்ஸியிலிருந்து இரண்டாம் சுதந்திரம் என வர்ணிக்கப்பட்ட விடுதலையை வாங்கிக்கொடுத்த ஜெயப்பிரகாஷ் நாராயணனையே மறந்த பெருமைக்குச் சொந்தக்காரர்கள் நாம். ”நாட்டின் பாதுகாப்பு” என்ற போர்வையில் 70களில் இந்தியாவில் சர்வாதிகார ஆட்சியை நடத்திய கட்சியால் இன்றும் நாட்டிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சி என்று சொல்லி ஓட்டு வாங்க முடிகிறது.

ஒவ்வொரு பயங்கரவாதத்துக்கும் ”பெயர் வைப்பதை” விட்டு விட்டு பயங்கரவாதத்தை வேரறுக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் இருக்கும் ஆளும் கட்சியை நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் குறித்த கவலை இன்னும் அதிகரிக்கிறது. இப்போது புதியதாக சிவப்பு பயங்கரவாதம் வேறு. மாவோயிஸ்ட்டுகள் செய்யும் பயங்கரவாதத்துக்கு நான் வைத்த ஒரு பெயர்.. ஏதோ நம்மாலான ஒரு உதவி.

ஆயிரம்கோடிக்கு குறைவாய் இருக்கும் ஊழல்கள் எல்லாம் இப்போது நமக்கெல்லாம் ஊழலாகவே தெரிவதில்லை. நேற்றுப் பிறந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு சினிமாப் படம் எடுக்க முடிவதெல்லாம் நிச்சயம் உழைத்து சம்பாதித்த பணத்தில் செய்ய முடியாது. இவர்களைப் போன்ற குடும்பமே நாடு என நினைக்கும் தலைவர்களிடம் இருந்து நாட்டைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்துக்களை உணராமலும், பாகிஸ்தானுடன் சேர்ந்துகொண்டு சீனா செய்யும் ஆக்கிரமிப்பு மற்றும் மாவோயிஸ்ட்டுகளுக்கு முழு ஆயுத உதவியும் செய்து இந்திய நாட்டின் பாதுகாப்பை நிலைகுலையச் செய்வதன் மூலம் விடும் மிரட்டல்கள் குறித்து ஆளும்கட்சி மக்களுக்குப் பொய்ச் சத்தியம் செய்வதை விட்டு விட்டு நாட்டின் எல்லைகளை பாதுகாக்க என்ன செலவானலும் அதை உறுதி செய்ய வேண்டும்.

மூன்றில் ஒரு இந்தியன் இரவு உணவின்றி படுக்கைக்குச் செல்ல, சேர்த்து வைக்கப்பட்டுள்ள தானியங்களை எலிகள் சூறையாடிக்கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்க்கும் அரசாங்கம் என்ன அரசாங்கமோ?

தொழில்நுட்பத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டால் தனது உணவுதானியங்களைக் கூட பத்திரப்படுத்த முடியவில்லையா? சேமிக்கப்பட்ட தாணியங்கள் உற்பத்தி செய்த தானியங்கள் போலல்லவா?

2011 தேர்தலுக்கு இப்போதிருந்தே எல்லோரும் அவரவர்களின் திறமைகளை காண்பித்து பெரிய அரசியல் கட்சிகளிடம் தனக்கான இடங்களைப் பெற முயன்றுகொண்டிருக்கிறன. தமிழக பெரும் கட்சிகள் காங்கிரசிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பித்திருக்கின்றன. அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த பின்னர் நம்மிடம் கூழைக்கும்பிடு போட ஆரம்பிப்பார்கள். அதிக லஞ்சம் கொடுத்து வெல்பவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை கூழைக்கும்பிடு போட வைப்பார். நல்ல ஜனநாயகம்..

எல்லாத்தையும் பாத்த பிறகு மனசுல தோனுறது.. என்னத்தச் சொல்ல...