Wednesday, February 27, 2008

எழுத்தாளர் சுஜாதா - மறைவு அஞ்சலி.


இனிய கதைகளும், கட்டுரைகளும், தொடர்களும், எழுதி சிறுகதை மற்றும் தொடர்களில் தனி இடத்தைப் பிடித்தவரும், அறிவியல் கட்டுரைகளை பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி அனைவரது இடத்திலும் நீங்கா இடம் பெற்ற எழுத்தாளர் சுஜாதா காலமானார். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்..

இப்போது தினமும் படிக்கும் சுஜதாவின் புத்தகம் ஓரிரு எண்ணங்கள். பின்பக்க அட்டைப்படத்தில் உள்ள சுஜாதாவோடு தினமும் மானசீகமாய் பேசுவேன். எப்படிசார் இப்படி நகைச்சுவை இழையோட எல்லா விஷயத்தையும் எழுத முடிகிறதென.?? நல்ல ஆசான்.. நல்ல மானசீக நன்பர் பெரும்பான்மையோருக்கு, என்னைப் புத்தகம் படிக்க வைத்த எழுத்தாளர்.. அவரது ஓரிரு எண்ணங்களில் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துக்கள் ( நடன பெண்களுக்கு - வயது அல்லது இடுப்பு 40க்குமேல் ஆடாமல் இருக்க)

தமிழ் இனையப் பல்கலைகழகம் செய்யவேண்டியது பற்றி..

அவர் எழுதிய காகித சங்கிலிகளை சினிமாக்காரர்கள் செய்த குளருபடிகள் பற்றி..

இன்னும் எத்தனை எத்தனையோ கட்டுரைகளையும், அறிவியல் தொடர்களையும், (சுஜாதாவைக் கேளுங்கள்) ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகமும், போன்றவைகளை எழுதி நிறைய பேர்களை கதை மற்றும் கவிதைகள் மீது ஆர்வம் ஏற்படுத்திய இன்னும் குறிப்பாய் அனைவரையும் எழுதத்தூண்டிய சுஜாதா இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவரது ஏகலைவன்கள் உலகம் முழுதும் பரவியுள்ளனர். அவர்களுக்கும் நமது ஆறுதல்கள் உரித்தாகுக.

அவர் முழுஅன்புடன் வணங்கிய அந்த ஸ்ரீரங்கன் அவரை தன்னுடன் அழைத்துக்கொள்வானாக..

இது அவரை முழுதும் படித்த ஒருவனால் எழுதப்பட்ட ஒரு நிறைவான அஞ்சலி அல்ல.. சுஜாதா எழுதியதில் கொஞ்சம் படித்ததிலேயே அவர்பால் ஈர்க்கப்பட்ட அவரது வாசகனின் வருத்தங்களை தெரிவிக்கும் ஒரு முயற்சி..

ஜெயக்குமார்

Tuesday, February 26, 2008

த சைக்கிளிஸ்ட். (ஜெயக்குமார்)

சைக்கிள் ஓட்ரதுக்கு முன்னமே எப்பவாவது அப்பாகிட்டயோ அண்ணன்கிட்டயோ அடிவாங்கி இருக்கீங்களா?? நா வாங்கி இருக்கேன் என்னோட தம்பி உபயத்துல--எங்கப்பா சைக்கிள எடுத்ததுக்காக..

எல்லாப் பயகளும் வாடகை சைக்கிள் வாங்கி ஓட்டி ஊருக்குள்ளா படம் போட்டுக்கிட்டிருக்க நா மட்டும் தனியா கொப்பு தவறவிட்ட கொரங்கு மாதிரி ஆய்ட்டேன். உடனடியா சைக்கிள் கத்துக்கிட்டு நாமளும் கூட்டத்துல சேந்துரனும்னு நிதி திரட்ட ஆரம்பிச்சு, வீட்டுக்கு வந்த மாமா அத்தைக கிட்ட அஞ்சு காசு--பத்துகாசா சேத்து அரைமணி நேரம் ஒரு மணி நேரம்னு சைக்கிள கையில பிடிச்சுகிட்டே ஊர சுத்தி வர ஆரம்பிச்சேன். 'எப்படிண்ணே வண்டில ஏர்ரது' அப்படின்னு எந்த அண்ணன் கிட்ட கேட்டாலும், 'இந்தா இப்படித்தாண்டா' அப்படின்னு என்னோட வண்டிய எடுத்துட்டு ஓசி ரவுண்டு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க..

பலநாள் முயற்சியில வண்டிய வேகமா தள்ளிக்கிட்டே போய் பெடல்மேல நின்னுக்கிட்டே கொஞ்சதூரம் போக பழகிட்டேன். அப்பயே, 'சைக்கிள்ள நாம பல சாதனைகள் பண்ணவேண்டியிருக்கு; எப்ப கொரங்கு பெடல் போடுறதுன்னு அவசரமா முக்கோணத்துல காலவிட்டதுல, அடுத்த பக்கம் கால விடவே முடியாம நேர போயி எதுத்தாப்ல இருந்த மரத்துல கொஞ்சம் கூட பிசிரே இல்லாம மோதிட்டேன். அந்த வகையில் எங்கப்பாவுக்கு ஆன செலவு, சைக்கிளுக்கு அஞ்சு ரூபாயும்; எனக்கு வைத்தியம் பாத்த வகையில கிட்டத்தட்ட பதினைஞ்சு ரூபாயும். இதுக்கு ஒருமாசதம் முன்னதான் ரோட்ல இருந்த பள்ளத்துல கால விட்டு 7 தையல் போட்டு அப்பதான் ஒழுங்க நடக்க ஆரம்பிச்சிருந்தேன்..

அதுக்குள்ள முழுப்பரிச்சை லீவு வேற வந்துருச்சி. எங்க அத்த வீடு திருநெல்வேலியில. அப்ப அவங்க சேர்மாதேவியில இருந்தாங்க. எங்க அத்தைவழி சொந்தம், மாமா வழி சொந்தமெல்லாம் முழுப்பரிச்சை லீவுக்கு போறது அங்கதான். காலையில எந்திரிச்சதும் அப்படியே தாமிரபரணியில ஒரு முங்கப்போட்டுட்டு வர்ர வழியில் பிள்ளையாருக்கு ஒரு கும்புடப்போட்டுட்டு அப்படியே வீட்டுக்கு வந்தா, போடுறது கையில வந்து விழுகுறதுக்குள்ள வயித்துக்குள்ள போயிரும். நதியில குளிச்சதும், அங்க இருந்து வீட்டுக்கு நடந்து வந்ததுக்கும் அந்த பசி எடுக்கும்.

சாயந்திரம் ஆச்சுன்னா மாமா உபயத்துல வாடகை சைக்கிள் கிடைக்கும் ஓட்ரதுக்கு. என்னோட அத்தை பசங்க மாமா பசங்கெல்லாம் சீக்கிரம் கத்துக்கிட்டாய்ங்க.. எனக்கு 10 நாள் ஆனபொறகுதான் கவுட்டுக்குள்ள விட்டு ஓட்டப் பழகினேன்.

அதுக்குள்ள எங்க அண்ணங்கல்லாம் வண்டி சீட்டுல உக்காந்து ஓட்டிக்கிட்டிருக்கும்போது நம்ம இன்னும் கவுட்டுக்குள்ள விட்டு ஓட்ரதுலையே இருக்கோமேன்னு எனக்கும் மேல உக்காந்து ஓட்ட சொல்லித்தாங்கன்னு ஆரம்பிக்க அவங்க கொரங்குப் பெடல்ல இருந்து எப்படி கால தூக்கி மேல போடுரதுன்னு சொல்லித்தராம என்னைய அப்படியே சைக்கிள் சீட் மேல உக்காரவச்சு ஓட்டச்சொல்லிக்குடுத்தாங்க,. எங்கண்ணன் எம்மேல இருந்த கோவத்தையெல்லாம் தீத்துகிறதுக்கு ஒரு வாய்ப்பா எனக்கு சீட்ல உக்காந்து ஓட்டச்சொல்லிகொடுத்தத பயன்படுத்திக்கிடாரு. இப்படி வளைஞ்சா அடி, ஹேண்டில்பார் வளைஞ்சா அடி, இடுப்பு வளைஞ்சா அடின்னு எந்தப்பக்கம் திரும்புனாலும் அடி மேல அடியா வச்சு சொல்லிக்குடுத்துக்கிட்டிருக்கும்போது ஒருநா எனக்கேதெரியாம நானே சைக்கிள யாரும் பிடிக்காம ஓட்டிகிட்டிருக்கேன். நானும் எங்கண்ணன் பின்னாடி வர்ராருன்னு நெனச்சுக்கிட்டே வண்டிய ஓட்டிகிட்டிருக்கேன். என்னடா அண்ணன் சத்தத்தையே கானோமேன்னு வண்டிய வளைச்சு திருப்பி வந்தா எங்கண்ணன் அவரோட பிரண்டுகூட பேசிக்கிடிருக்காரு.. அப்புறம் ரொம்ப கெஞ்சுனதுக்கபுரம் வண்டியில இருந்து எறக்கி விட்டாரு. இனி அண்ணன் இல்லாமயே வண்டிய ஓட்டிரவேண்டியதுதான்னு நெனச்சப்ப நம்ம ஆட்கள் பக்கத்துவீட்டுப் பண்ணையார் வீட்ல ஒரு கல்லு கிடக்கும். அதுமேல ஏறி நின்னு ஏறிக்கிட்டு திரும்பி இங்கையே வந்து இறங்கிக்க அப்படின்னு ஒரு அபாரமான ஐடியா குடுத்தாய்ங்க.. நானும் அதே டெக்னிக்க வச்சு ஒரு நாலுநாள் ஓட்டிக்கிட்டிருந்தேன். பண்னணயாருக்கு எம்மெல என்ன கோவமோ, இல்ல சைக்கிளுக்கு எம்மேல என்ன கோவமோ கல்லத் தூக்கிட்டுப் போய்ட்டாய்ங்க. நாலு ரவுண்டு சுத்துனதுக்கபுறமும் வண்டியில இருந்து இறங்க தைரியம் வர்ல. சரி எப்படியும் இறங்கித்தான ஆகணும்னு ஒரு பக்கமா காலத் தூக்குன உடனே வண்டி அப்படியே இடதுகைப்பக்கமா சாஞ்சு விழுகப்போன நேரத்துல படக்குன்னு கால எடுத்து பெடல் வழியா கீழே இறங்கிட்டேன். நமக்கு சைக்கிள் தெரிஞ்சிருச்சின்னு அன்னைக்கு முழுக்க அதே மாதிரி எப்படி இறங்குனேனோ அப்படியே மேல ஏறவும் கத்துக்கிட்டேன். சைக்கிள் கத்துக்குறவும் லீவு முடியவும் சரியா இருந்துச்சு. அப்படியே ஊருக்குள்ள என்னைக்கும் இல்லாத பெருமிதமா இறங்குனேன்..கம்பம் டு நாகர்கோவில் திருவள்ளுவர் பஸ்ஸுல. அதுக்கப்புறம் வண்டிகூடவே கொஞ்சதூரம் ஓடி அப்படியே தவ்வி ஏறவும், ஒத்தக்கால்ல வண்டிஓட்டவும், இன்னும் பல விதமான டெக்னிக்குல வண்டி ஓட்டியாச்சு.

அன்னையில இருந்து இன்னைக்கி வரைக்கும் சைக்கிள் ஓட்ட எப்ப வாய்ப்பு கிடைச்சாலும் விடுறதே இல்ல. படிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சப்போ மதுரையில பினாயில்ல ஆரம்பிச்சு, கேம்லின் பேனா, ஆயுர்வேத மருந்து, சித்த மருந்து எல்லா கம்பெனிக்கும் ரெப்பா இருந்தப்போ இந்த சைக்கிள்ளதான் நம்ம பொளப்பு ஓடிச்சு. இன்னைக்கும் வலதுகாலுல ஸ்போக்ஸ் கம்பி காலுக்குள்ள நுழைஞ்ச தடம் இருக்கு.. சைக்கிள் ஓட்டி விழுப்புண் வாங்காதவன் எதுத்த வீட்டு அக்காவுக்கு டபுள்ஸ் பழகுறதுக்கு கூட உக்காந்து கால உள்ளவிட்டதுல வாங்குனேன். இன்னைக்கும் சைக்கிள் ஓட்ட வாய்ப்பு கிடைச்சா விடுறதே இல்ல.. நா வேலைபாக்குற நாட்டுல (கத்தார்) சைக்கிள் ஓட்டுனா அன்றே கடைசிநாளாக இருக்க வாய்ப்பு இருப்பதால் அந்த ரிஸ்க் எடுப்பதில்லை..

Monday, February 25, 2008

கலியாணப் பாடல்கள் - ஒலிநாடா- பம்பாய் சகோதரிகள்.


சமீபத்தில் பம்பாய் சகோதரிகள் பாடிய கலியாணப் பாடல்களை கேட்க நேர்ந்தது.

எனக்கும் கலியாணம் நடந்தது. ஆனால் இந்தப் பாடல்கள் இல்லாமலேயே நடந்து முடிந்தது. கலியாணம் ஆனபிறகு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் இதைக் கேட்டபோது நமது கலியாணத்திலும் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பாடல்களை கலியாணத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக பாடி இருப்பது திருமணங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வுகளும் அந்தக் காலத்தில் எப்படி அனுபவித்து திருமணங்களை நடத்தி இருப்பர் என நினைக்கும்போது இன்று நடக்கும் திருமணங்களின் நிலையை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

அந்தக்காலத்தில் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை நடந்த திருமணங்கள் பின்னர் ஐந்து நாட்களாக குறைந்து பின்னர் மூன்று நாட்களாகி தற்போது ஒருநாள் திருமணங்களாகி வருகிறது. போகிற போக்கைப் பார்த்தால் எனக்கு கலியாணம் ஆகிவிட்டது அப்படியே இருந்த இடத்திலே ஆசிர்வாதம் செய்யுங்கள் பரிசுப் பொருட்களை மட்டும் அனுப்பிவைத்துவிடுங்கள் என்று சொல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை என தோன்றுகிறது..

அந்தக் காலத்தில் திருமணங்கள் தொலைவில் இருக்கும் சொந்தங்கள் சந்திக்கும் இடமாகவும் பின்னர் உறவுகளுக்கேற்றபடி 10 நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தங்கி இருந்து திருமணத்தை நடத்திக் கொடுத்த காலங்களாக இருந்தது. இன்று அவரவருக்கு இருக்கும் பணபலத்தை நிரூபிக்கும் இடமாக திருமணங்கள் மாறியுள்ளன.

நான் பார்த்த 5 நாள் திருமணம் எங்கள் வீட்டில் வைத்து நடைபெற்ற எனது தூரத்து உறவினர் ஒருவரின் திருமணம். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்து நல்லபடியாய் நடத்திக்கொடுக்கும்படி கேட்டுக் கொண்ட திருமணப் பத்திரிக்கையை அப்படியே மனதில் கொண்டு எங்கள் வீட்டில் 10 நாட்களுக்கு முன்னதாகவே கூட்டம் ஆரம்பித்துவிட்டது. இதில் எங்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். முதலில் வீடு முழுக்க ஆட்கள். பின்னர் நாங்கள் பள்ளிக்கூடத்திற்கு போனோமா இல்லையா என பார்ப்பதற்கு யாரும் இல்லாத தைரியத்தில் பள்ளியில் "அய்யா எங்க வீட்ல கலியாணம்" என 5 நாட்களுக்கு முன்னரே பள்ளிக்கு நாங்களே விடுமுறை விட்டுக் கொண்டது என ஒரே அமர்க்களமாய் இருந்தோம். திருமணம் முடிந்தபின்பு பள்ளிக் கூடத்தில் என்னமோ புது வகுப்புக்குள் போவதுபோல இருந்தது. நாங்கள் படிக்கும்போது ஒரே வாத்தியார் தமிழ் முதல் புவியியல் வரை எடுப்பார். எனவே 5 நாட்களில் ஒவ்வோரு பாடத்திலும் இரண்டு, மூன்று பாடங்கள் போய்விட்டது. படிக்கிற புள்ளைக்குத்தான அந்தக் கவலையெல்லாம்.. நானெல்லாம் உப்புக்குச் சப்பாணிமாதிரி பள்ளிக்குப் போய்வந்தேன். எனவே பாடங்கள் போனதெல்லாம் பெரிய விஷயமாய் தெரியவில்லை.

சரி விஷயத்துக்கு வருவோம்…

பெண்னை அழைத்து வருவதில் ஆரம்பித்து, திருமணம் நடத்தி, பூப்பந்து விளையாடி, மணமகனை கிண்டல் செய்து, மணமகளையும் கிண்டல் செய்து, சாந்திமுகூர்த்தம் செய்து, தாம்பூலம் கொடுத்து பின்னர் கணவன் மனைவியான பின்பு அவர்களுக்குள் எற்படும் ஊடலையும் பாடலாக்கி அருமையான இசை விருந்தளித்துள்ளார்கள் என்று சொன்னால் அது மிகை இல்லை.

திருமணப்பாடல்களில் நாயகனாக மதுரையம்பதியையும், நாயகியாக மீணாட்சியையும் கொண்டு அவர்களது திருமண பாடல்களாக இதை எழுதி இருக்கிறார்கள்.

எல்.கிருஷ்னனின் இனிய இசையில் தமிழில் பாடல்களனைத்தும் கேட்பதற்கு இனிமையாய் உள்ளன.

திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுவகைகள் பற்றி ஒரு பாடலில் (போஜனம் செய்ய வாருங்கள் என்ற பாடல்) சைவ உணவு வகைப் பட்டியலை அதில் கேட்கலாம்.

சாம்பார் வகைகள்
ரசம் வகைகள்
இனிப்பு வகைகள்
வடைவகைகள்
பழங்கள்
சித்ராண்ணங்கள்
அரிசி சாதமும், நெய்யும் சேர்த்து சாப்பிட வாருங்கள் என பாடி இருக்கிறார்.

மாப்பிள்ளை சமர்த்தரடி… என்ற பாடலில் மாப்பிள்ளை எதில் சமர்த்தராம்??? காபி குடிப்பதில்.. அதுவும் காது கடுக்கனை விற்று.. நகையெல்லாம் எடுத்துப்போய் போன விலைக்கு விற்று மட்டை மட்டையாய் பொடி போடுவதிலாம்…

பூப் பந்தாடினார் பரமசுந்தரன் பாண்டியன் பெண்ணோடு.. என்ற பாடலைக் கேட்கும் போது எனக்கு "வசந்தவல்லி பந்து விளையாடிய" காட்சிதான் ஞாபகத்திற்கு வந்தது.

நல்ல தமிழிசை.. நல்ல குரல்வளம் கொண்ட பாடகிகள், அருமையான பக்க வாத்தியங்கள் கொண்டு எல்.கிருஷ்ணன் கொடுத்துள்ள இந்த இசைத்தொகுப்பை வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் கேளுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


நன்பர் ஒருவர் கொடுத்த கலியாணப் பாடல் லின்க்
Marriage Songs,
Vani Recording Co.(P) Ltd,
Post Box: 2063, Chennai – 600 020