Wednesday, October 24, 2007

பாலமுருகன்.

என்னன்னே தெரியல பாலமுருகனுக்கு அப்படியே காத்துல பறக்க்குற மாதிரியே இருக்குது ரெண்டு நாளா.. மெட்ராஸ் ஏஜண்ட் மீதி 65 ஆயிரத்த எடுத்துட்டு வா உணக்கு டிக்கெட் ரெடி பண்ணியாச்சி ரெண்டு நாள்ல கிளம்பனும்னு சொன்னதுல இருந்தே இப்படித்தான் ஆய்ட்டான் நம்ம பாலு.
மத்தவைங்க கதய கேட்டா சிரிப்பா இருக்குது இவனுக்கு. துட்ட குடுத்துட்டு ரெண்டு மாசம் பம்பாயில இருந்துட்டு பணமும் போயி, பாஸ்போர்ட்டும் போயி வந்திருந்த ஹமீது இவன்கிட்ட பாத்து செய்யுப்பா என்ன மாதிரி ஆயீடாம அப்படின்னு சொன்னதெல்லாம் கேட்டு மனசுக்குள்ளயே சிரிச்சுகிட்டான்.
அப்பாவும் கவர்மெண்டுல வேலைங்கிறதுனால லச்ச ரூவா பெரட்டுரதெல்லாம் பெரிய விஷயமாவே படல அவனுக்கு. பத்தாப்பு முடிச்ச உடனே பக்கத்துல இருக்குற ஒரு பாலிடெக்னிக்குல ஒரு டிப்ளோமாவும் முடிச்சு வச்சான். அப்புறம் அவங்க ஊர்க்காரன் ஒருத்தன் ட்ராவல் ஏஜென்சி நடத்துரான்னு கேள்விப் பட்டு அவங்கப்பா நம்ம பயலையும் கொஞ்சம் தள்ளி விடுப்பான்னு சொல்லும்போது அவர் நாக்குல சனி இருந்தது பாவம் அவர் கவனிக்கல போல..
பயலும் மெட்ராஸ் போயி புது துணீ எல்லாம் எடுத்துட்டு ஏஜெண்டு பனத்தையும் அடைச்சிட்டு டிக்கெட்ட வாங்கிட்டு மஸ்கட் போறதுக்கு ரெடி ஆயிட்டான். காலையில 6 மணிக்கு பிளைட்டு. அப்பா, அம்மா, தங்கச்சி எல்லார்ட்டயும் போயிட்டு வர்ரேன்னுட்டு பய வண்டியில ஏறுனான்.. அப்ப வரைக்கும் ஏஜென்ட்டு சொன்னது மஸ்கட்ல வேலை மாசம் 10 ஆயிரத்துல இருந்து 12 ஆயிரம் வரைக்கும் அப்படின்னு சொன்னானே தவிர என்ன வேலைன்னு சொல்லவே இல்ல. நம்ம பாலமுருகணுக்கும் வெளிநாட்ல வேலைங்கிறததவிர வேற எதுவும் கேக்கனும்னு தோனவே இல்லை.
பய காலையில் 8 மனிக்கு மஸ்கட்ல இறங்குனதும் ஒரு வேன்ல அவனமாதிரியே வேலைக்கு வந்திருக்குற 15 பேர்கூட இவனையும் கூட்டிட்டு போனாங்க..
இன்னைக்கு உங்களுக்கு வேலையெல்லாம் கிடையாது.. கேம்ப்ல சொல்லி அட்வான்ஸ் வாங்கிக்கங்க.. வேனுங்குற சாமான வாங்கிக்குங்க அப்படின்னாரு கேம்ப் பாஸ் தமிழ்ல. நம்ம ஆளுக்கு அப்பவே புல்லரிச்சிருச்சி. இப்படி இல்லய்யா இருக்கனும் கம்பெனின்னா அப்படின்னு நெனச்ச்சுக்கிட்டான்.
சாயந்திரம் புதுசா வந்தவங்களுக்கு யுனிபாரம் கொடுத்தாங்க.. கழுத்துல இருந்து கால் வரைக்கும் ஒரே துனி.. மொரட்டு ஷூ, அப்புரம் கைக்கு போட ஒரு கிளவுஸ்.. அப்படியே கிளாஸுக்கு கூட்டிட்டு போனாங்க..
மஹாஸுன்னு இலங்கைக் காரர் ஒருத்தர் தான் வகுப்பு எடுத்தார்..
தம்பீ அப்படின்ன்னு அவர் கூப்புடுறதே நம்ம சொந்த அண்ணன் கூப்புடுற மாதிரி இருந்துச்சு.
காலையில இருந்து மத்தியானம் வரைக்கும் எப்படி கக்கூஸ் இருக்கும், எந்த எந்த இடத்துல கவனமா இருக்கனும்?? எந்த இடம் சுத்தமா இல்லன்னா நம்ம கம்பெனி பேரு கெடும் அப்படிங்கிறதெல்லாம் வெவரமா எடுத்து சொல்லிட்டு நம்ம ஆளுக்கு நாளையில இருந்து ஏர்போர்ட்ல வேலைன்னு சொன்னார். அப்பவெ நம்ம ஆளுக்கு சர்வ நாடியும் அடங்கிருச்சி. போயும், போயும் இந்த வேலைக்குத்தானா லச்ச ரூவா குடுத்து வந்தோம்னு நெனக்கும்போதே அழுகையா வந்துச்சு.
நான் டிப்ளோமா படிசிருக்கேன் எனக்கு வேற ஏதாவது வேலை இருந்தா குடுங்கன்னு கேட்டுப் பாத்தான்.. பதில் சொல்லாம நம்ம ஆள் கூட வெலைக்கு இருக்குற இன்னொரு ஆள காமிச்சு இவர் என்ன படிச்சிருக்காருன்னு நெனக்கிற அப்படின்னார் மஹாஸ். தம்பி நானு எம்.எஸ்.சி படிச்சிருக்கேன் தம்பி..அப்படின்னார் அவரு.
இனிமே ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் ஊருக்கு போகமுடியும் அதனால ரொம்ப கவலப் படாம வேலயப் பாரு.. நல்லா வேல செய்யுறன்னு தெரிஞ்சா சூப்பர்வைசர் ஆக்குனாலும் ஆக்குவாங்க அப்படின்னார்.
வந்த அன்னிக்கு எல்லாம் நல்லா இருக்குப்பான்னு அப்பாக்கு போன் செஞ்சது ஞாபகம் வந்துச்சு. இனிமே என்னத்த சொல்லி என்னத்த ஆகப் போகுதுன்னு அப்படியே வேலயப் பாத்து இன்னைக்கு சூப்பர்வைசர் ஆகிட்டான் பாலமுருகன்..
இன்னும் 10 நாள்ல ஊருல இருப்பான்.. அப்பா வாங்குன கடனெல்லாம் இப்பதான் அடைஞ்சு கொஞ்சம் பணம் சேத்துருக்கான்.. இனிமே எல்லாத்துக்கும் சாமான் வாங்கிட்டு போகனும்.. எல்லாருக்கும் நானு என்ன வெலை செய்யுறேன்னு மட்டும் சொல்லாம சூப்பர்வைசர் அப்படின்னு சொல்ல வேண்டியதுதான்னு நெனச்சுக்கிட்டான்..
இப்ப பாலமுருகன் என்ன செய்யுறான்னு நெனக்கிறீங்க..அங்க வேலய பாத்துக்கிட்டே கம்பெனியில இருந்து வருஷத்துக்கு ரெண்டு மூனு விசாவ வாங்கி அவங்க ஊர்ல இருந்து ஆளுகள கொண்டுவந்து இங்க விட்டுக்கிட்டு இருக்கான்... ஒரு விசாவுக்கு 50 ஆயிரம்தான் வாங்குறான்.. என்ன வேலைன்னும் சொல்லிப்புடுறான்.. என்னயமாதிரி (??) வந்த உடனேயே சூப்பர்வைசர் வேலையெல்லாம் கிடைக்காதுன்னு சொல்லியே கூட்டிட்டு வர்ரான்.. பாலமுருகன் அப்பாவுக்கு பய பொழச்சுக்கிட்டான்னு ஒரு பக்கம் சந்தோசம். அவனே கடனையெல்லம் அடைச்சு தங்கச்சி கலியானத்துக்குன்னு பணமெல்லாம் குடுத்து வச்சிருக்கான்.. ஒரு வழியா பாலமுருகன் கதை நல்லபடியா முடிவுக்கு வந்துச்சுன்னு வச்சுக்கங்க...
எத்தன பாலமுருகன நம்ம வாழ்க்கையில பாக்குறோம்.. எத்தன பேருக்கு இது மாதிரி வந்த இடத்துல பொழச்சிக்கிரனும்னு எண்ணம் வருது??? அல்லது பொழச்சுக்க முடியுது. பாலமுருகனுக்கு நல்ல நேரம்..
இந் நேரம் அவன் தப்பான இடத்துல மாட்டியிருந்தா??? அவன் வேல பாக்குற கம்பெனி அவனுக்கு சம்பளமும் தராம ஊருக்கு போகுற டிக்கெட்டும் தராம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்??

நம்ம பால்ராஜுக்கு ஆன மாதிரிதான்.. அடுத்த தடவ பாப்போம்...

Wednesday, October 17, 2007

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை. பகுதி மூன்று

எனது ஆசிரியர்கள்:-

ஆரம்ப பள்ளியில் எனது ஆசிரியர்களாய் ஐவர் இருந்தாலும் எனது மூன்றாம் வகுப்பு ஆசிரியை திருமதி.பாக்கியம் அவர்களும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியை திருமதி.லில்லிஜாய்ஸ் அவர்களுமே என்னைக் கவர்ந்தவர்கள். அவர்களது வகுப்புகளில் மட்டுமே நான் மாணவனாய் என்னை உணர்ந்தேன். மற்ற ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்தவேண்டும் என்பதைத் தவிர வேறு ஒரு குறிக்கோளும் இல்லாதிருந்தனர்.

பின்னர் மேல் நிலைப்பள்ளிக்கு வந்த பின்னர் நிலைமை மாறியது. காந்தி ஐயா என்ற ஆசிரியர் என்மீது காட்டிய அன்பு அளவிடற்கறியது. எப்போதும் எனது அண்ணன் மற்றும் அக்காள்கள் எப்படிப் படித்தனர் நானும் அவ்வாறு படிப்பதே எனது பெற்றோருக்கு செய்யும் கடமை என்பதை சொல்லிக்கொண்டே இருப்பார்.

அதன் பின்னர் சாரதாமணி அக்கா, மெய்ஞானகுரு அய்யா, சோமசுந்தரம் அய்யா ( இவர் எடுக்கும் வரலாற்று பாடங்களை பரீட்சை எழுத வேண்டும் என்ற கட்டளை இன்றி கேட்டால் இன்று முழுதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். அவ்வளவு இனிமையாக நடத்துவார்)

சக்திவேல் அய்யா என்றொரு ஆசிரியர். இவர் எடுக்கும் ஆயிரத்து ஓர் இரவுகள் கதையும், ராமாயண, மஹாபாரத வகுப்புகளும் 45 நிமிடங்கள் போவதே தெரியாது. பின்னர் தவறான நடவடிக்கையால் பெயர் கெட்டார்.

எனது வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஆசிரியர்களுள் சாந்தி அக்காவுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஒரு ஆசிரியருக்கு என்ன இலக்கணம் என்பதை அவரைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தனது மாணவர்களை தனது சொந்த தம்பி, தங்கைகள் போல நடத்தியது.

அவர்கள் நல்வாழ்விற்காக கோவில், குளம் என சென்றுவிட்டு அனைவருக்குமாக பிரார்த்திப்பது.

தனது பழைய மாணவர்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள் எனப் பார்த்து நன்றாய் இருப்பவர்களை சுட்டிக்காட்டி அவர் படித்தது போல நீயும் படித்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என அறிவுறுத்துவது.

இன்னும் பல. அவர் வகுப்பில் படித்த அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டவர்கள் அல்ல. ஆனால் அவ்வாறு வெற்றி பெற வேண்டும் என நினைத்தார்கள். அதற்காக உழைத்தார்கள். இவர் எனக்கு ஆசிரியராய் வாய்த்தது நான் செய்த புன்னியம் என்றால் அது மிகை இல்லை.

ஆசிரியப் பணி என்பது தலைமுறைகளை உருவாக்கும் செயல் என்பதை குறைந்த அளவு ஆசிரியர்களே அறிந்திருந்தனர். அவர்கள் எல்லா குழந்தைகளையும் நல் மாணாக்கர்களாக ஆக்குவதற்காக எல்லா வழிகளையும் மேற்கொண்டனர். கிராமப் புற மாணவர்களாய் இருந்ததாலும் அவர்களை படிப்பில் ஆழ்த்த அதிக கடினமாய் இருந்ததாலும் அவர்களால் அடிக்காமல் சொல்லித்தர இயலவில்லை. அடியாத மாடு படியாது.. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி உதவுறதில்ல அப்படி சொல்லிக்கிட்டே வெளுத்தாங்க.. அதுல நம்ம ஹரன் ப்ரசன்னாவுக்கு கொஞ்சம் ஜாஸ்தி விழுந்துருச்சி.. அதான் அப்படி எல்லாம் எழுதிட்டார்..

தொடரும்..

Monday, October 15, 2007

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை.. பகுதி இரண்டு


எங்கள் பள்ளியின் தினசரி நிகழ்வுகள்:-

காலையில் 7.30திலிருந்து 8 மணிக்குள் அனைவரும் வந்துவிடவேண்டும். துப்புரவு ஒவ்வொரு மாணவனின் கடமையாய் சொல்லித்தரப்பட்டது. அதாவது ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு அந்த இடத்தின் துப்புரவு பேணுதல் அந்தந்த வகுப்பின் கடமையாகும். மரங்களடர்ந்த எங்கள் பள்ளியில் காலையில் எங்கெங்கு காணினும் இலைகளடா என சொல்லும் அளவுக்கு இலைகள் இறைந்து கிடக்கும். அதை விளக்குமாறால் கூட்டி குப்பைகிடங்கில் காலை 8 மணிக்குள் இடவேண்டும். பிறந்ததிலிருந்து அந்த பள்ளியில் படித்ததால் எங்களுக்கெல்லாம் அது ஒரு விஷயமாகவே தெரிந்ததில்லை. வெளி பள்ளிகளில் படித்துவிட்டு இடையில் காந்திநிகேதனில் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு கடினமான பணியாக துப்புரவு இருந்து வந்திருக்கிறது. ஆனால் இப்போதும் உள்ளூருக்கு விடுமுறையில் செல்லும்போது் வீட்டின் பின்புறத்தை சுத்தம் செய்த பின்னர் அது அழகாய் காட்சி அளிக்கும்போது ஏற்படும் மன நிறைவை வேறு எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் தரமுடியாது என்பது அதை செய்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஒரு அனுபவம்... அதை பழக்கமாக்கியதும், அதுபோல வேலை செய்வது இழிவல்ல என்ற எண்ணத்தை உண்டாக்கியது காந்திநிகேதன் பள்ளி.

இறைவணக்கம்:-
செவ்வாய் முதல் வியாழன்வரை தினமும் வரிசை எனப்படும் பொது கூட்டமும் வெள்ளிக்கிழமைகளில் சர்வ சமய கூட்டுப் பிரார்த்தனையும் நடக்கும். இந்த சர்வ சமய கூட்டுப்பிரார்த்தனை உண்மையில் எவ்வளவு மன அமைதியை தரும் என்பதை கண்கூடாக அனுபவித்திருக்கிறேன்.

ஓம் தத் சத் ஸ்ரீ நாராயண நீ... என 1000 பேர்கள் ஒரே சமயத்தில் உச்சரிக்கும்போது எற்படும் அதிர்வும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியும் விவரிக்க முடியாதது. பின்னர் புணித குரானிலிருந்து " அவ்வூதுபில்லாஹி மினஷைத்தான்.. எனத்தொடங்கும் பாடலும்.. அதை தொடர்ந்து " பரமண்டலங்களிருக்கிற எங்கள் பிதாவே என தொடங்கும் கிறித்துவ பிரார்த்தனையும் நடக்கும்.

பின்னர் அந்த அந்த மாதங்களுக்கு ஏற்ப இந்து பண்டிகைகள், இஸ்லாமியர்களின் பண்டிகைகள், கிறிஸ்துமஸ் எல்லாம் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சாண்டாகிளாஸ் தாத்தா வேடமிட்டு வந்து பரிசுப்பொருட்களை சிறுவர்கள் அனைவருக்கும் தருவார். இந்து பண்டிகையின்போது விநாயகர் சிலைகளை மாணவர்களை எடுத்துவரச்சொல்லி பள்ளியில் பொது மேடை அமைத்து பிரார்த்தனை பாடல்கள் பாடி பிரசாதம் விநியோகித்து பின்னர் மூன்றாம் நாள் அதை உள்ளுர் ஊருணியில் போய் கரைப்பர். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் சிறப்பாக நடைபெறும். இஸ்லாமியர்களின் பண்டிகையின்போது எங்கள் பள்ளியின் ஆசிரியர்களான அக்பர் அலி அய்யா, அப்பாஸ் அலி அய்யா அல்லது யாராவது ஒரு ஆசிரியர் இஸ்லாத்தின் பெருமைகள், நபிகள் நாயகத்தின் பெருமைகள், அவரது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் ரமலான், ஈகை பெருநாள் பற்றிய விவரங்களும் எங்களுக்கு எடுத்துச்சொல்வர்.

எங்கள் பள்ளியைப் போல மத நல்லிணக்கத்தை இதைவிட சிறப்பாக மாணவர்களுக்கு போதிக்க முடியாது. எங்களுக்கு பள்ளியில் இந்த மதம் உயர்ந்தது.. இது தாழ்ந்தது என்ற எண்ணம் ஏற்ப்பட்டதே இல்லை எனக்கூறினால் அது மிகை இல்லை.

திங்கட் கிழமைகளில் நடக்கும் கொடி வணக்கமும் அதை தொடர்ந்த அணிவகுப்பும் நம்மை பெருமிதத்திற்கே இட்டுச்செல்லும். அதை தொடர்ந்த சுதந்திர போராட்டம் குறித்த உரையும் நடத்தப்படும். கொடிவணக்கத்திற்கு மாணவர்கள் அவர்களது வகுப்பில் ஆரம்பித்து கொடி மைதானம் வரை அணிவகுத்து நடந்து செல்வது கண் கொள்ளா காட்சி.

இது தவிர தினசரி அணிவகுப்பில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கொடிப்பாடலும், தேசிய கீதமும் இருக்கும். அன்றைய செய்திகளை ஏதெனும் ஒரு வகுப்பு மாணவன் தொகுத்தளிப்பான். பின்னர் தலைமை ஆசிரியர் உரையுடன் முடிவடையும்.

தொடரும்...

Tuesday, October 9, 2007

காந்திநிகேதனில் மற்றும் காந்திகிராமத்தில் எனது வாழ்க்கை

Gandhiji
எல்லோருக்கும் தனது வாழ்வில் படித்த பள்ளியை பற்றிய இனிமையான ஞாபகங்கள் எப்போதும் இருக்கும்..

இன்றைக்கு அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்ற பதத்தை பயன்படுத்தாத ஆட்கள் குறைவு. ( நல்ல விதமாகவும், அதையே கிண்டலாகவும் சொல்கின்ற நபர்களும் உண்டு.)

மனம்போல் வாழ்வு என்ற தலைப்பில் எனது பள்ளி தலைமைஆசிரியர் திரு.து.பால்ராஜ் அவர்கள் ஆற்றிய உரைதான் எனது வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்ததென்றால் அது மிகை இல்லை.

மற்ற எந்த பள்ளிக்கும் இல்லாத பெருமை எங்கள் பள்ளிக்குண்டு. அது, சுதந்திர போராட்ட காலத்தில் அஹிம்சா வழியில் போரிட ஆட்களை தயார் செய்யும் பயிற்சி கூடமாக ஆரம்பித்து ஏராளமான பெண்களும், ஆண்களும் பயிற்சி பெற்று கிராமங்களுக்கு சென்று காந்தியடிகளின் கிராம ராஜ்ய கனவை நனவாக்க பாடுபட்டனர்.

பின்னர் சுதந்திரம் கிடைத்த பின்பு அதை "காந்தி நிகேதன் ஆசிரமம்" ஆக மாற்றி கிராமப்புற மக்களுக்கு கல்வியும், கிராமக் கைத்தொழில்களும் கற்றுக்கொடுக்கும் ஒரு பயிற்சி நிலையமாக மாறியது. இன்றும் அது தனது கொள்கையில் சிறிதும் மாற்றமின்றி புதிய கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப கல்வித்திட்டத்தை மாற்றிக் கொண்டதே தவிர அதன் அடிப்படை கொள்கையான கிராமப்புற மக்களுக்கு கல்வி என்ற கொள்கையிலும் கிராம முன்னேற்றம் என்ற குறிக்கோளிலும் எந்த வித மாற்றமின்றி இன்றுவரை ஒரு காந்திய நிறுவனம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நடக்கிறது நான் படித்த காந்தி நிகேதன் ஆசிரமம்...

தொடர்வேன்...

Friday, October 5, 2007

கத்தார் ஒரு அறிமுகம்.

கத்தார் அறிமுகம்:-

ஒரு முஸ்லிம் தேசத்திற்க்குண்டான அனைத்து கலியான குனங்களை கொண்ட ஒரு நாடு.. சவுதி அரேபியா நாட்டு நிலப்பரப்பு முடிந்து அதனுடன் தொக்கிக்கொண்டிருக்கும் ஒரு மச்சம் போல இருக்கும் சிறிய நாடு இது.
மொத்த மக்கள் தொகை 9 லட்சம் இதில் உள்ளூர் கத்தாரிகள் 20 % மீதமுள்ளவர் வெளிநாட்டினர். அதில் 10% இந்தியர். 20% இதர அரபு நாட்டு மக்கள் மற்றவர்கள் 50%. உலகில் எரிவாயு அதிகமுள்ள நாடுகளில் முதன்மையானது.


*மொழி *:

அரபி, ஆனால் ஆங்கிலம் பரவலாக பேசப்படும் மொழி என்று கூறப்பட்டாலும் போலிஸ், மற்றும் இதர அரசு அலுவலகங்களில் மண்டூப் எனப்படும் மக்கள் தொடர்பு அலுவலர் இல்லாமல் போனால் ஒன்னும் நடக்காது. நீங்கள் ஏதாவது சொல்லிகொண்டிருப்பீர்கள் அவரும் ஏதாவது சொல்லுவார். இறுதியில் கைகுலுக்கிவிட்டு திரும்பி வரவேண்டியதுதான்.

*மதம்:*

இஸ்லாம் மட்டுமே. பிற மத வெறுப்பு 2005 வரை இருந்து தற்போது குறைவு. (சிலுவைகள், கிறித்தவ புஸ்தகங்கள், சாமி போட்டோ, டாலர், விபூதி, குங்குமம், இந்து கடவுள் படமிட்ட புத்தகங்கள் எல்லாம் விமான நிலையத்திலேயே ஒரு காலத்தில் பிடுங்கிக் கொண்டிருந்தனர். தற்போது கடைகளில் பகிரங்கமக விற்பனையாகிறது.) ஒரு சர்ச் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ( தற்போது வேலை நடப்பதில்லை. ஏனெனத்தெரியவில்லை) இந்து கோயில் கட்ட இன்னும் அனுமதி கேட்டு வின்னப்பம் கூட அனுப்பவில்லை.

*தொழில்:-*

வேகமாக கார் ஓட்டி தினமும் 1 கத்தாரியாவது அல்லது கத்தாரியால் ஒரு வெளிநாட்டுக்காரனாவது சாதல்.
மீதமுள்ள நேரத்தில் பனி செய்தல். எக்ஸ்பாட்ஸ் எனும் நாங்கள் வெள்ளிக்கிழமை கூட அலுவலகத்தில் வேலை செய்தல்.
மற்றபடி இருக்கும் என்னைய் மற்றும் எரிவாயுவை வெள்ளைக்காரன் பிரித்தெடுக்க கத்தாரிகள் உள்ளுர் ஷேர்மார்க்கெட்டில் அதன் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என பார்ப்பது.

*இதர வேலைகள். *

வெளிநாட்டிலிருந்து புதிதாய் கம்பெனி ஆரம்பிப்பவர்க்கு ஸ்பான்சர் ஆக இருத்தல். ( அவன் சொல்லும் இடங்களில் கையெழுத்திடுதல், விசா வாங்க உதவுதல், கம்பெனியின் முகமாக இருப்பது.- பலசமயங்களில் அதுவே வில்லங்கமாகவும் முடியும்)

*பொழுதுபோக்கு:-*

கத்தாரிகளின் பொழுதுபோக்கு குட்டி குட்டி படகுகளை எடுத்துக்கொண்டு நடுக்கடலில் இருந்து விட்டு வருவது.

பாலைவனத்தில் கழுகுகளை பறக்க விட்டு மற்றும் போட்டிகள் வைத்து பொழுது போக்குவது.
அவ்ர்களின் நிரந்தர பொம்மையான படகு கார்களை அபாயகரமாக ஓட்டி மற்றவர்களை பயமுறுத்தி ஓடச்செய்வது. விபத்தில் சிக்குவது மற்றும் விபத்து உண்டாக்குவது.
ஆங்கில சினிமாக்களை அரபி சப்டைட்டிலுடன் பார்ப்பது, அதுவும் தியேட்டரில்.

*பார்க்கவேண்டிய இடங்கள்:-*

01. கார்னிச் எனப்படும் கடற்கரை.
02. டியூன் ட்ரைவெனப்படும் பாலைவன பயனம். ( 4 x 4 வண்டிகளில் பாலைவனத்தில் உலவுதல்)
03. புத்தம் புதிதாய் ஜொலிக்கும் ஷாப்பிங் மால்கள்.
04. நல்ல சாலைகள் என எழுத் ஆசைதான்.. ஆனால் இன்னும் 2 வருடம் கழித்து எழுதினால் சரியாக இருக்கும். எனவேதான் எழுதவில்லை.
05. போஸ்ட் ஆபிஸ். ( நிஜமாகவே ப்ரொபஷனல் இதில் இவர்கள், மற்றும் போஸ்ட் ஆபிஸும் மிக அழகாய் வைத்திருப்பார்கள்)
மேற்கூறியவைகள் மட்டுமே என்னை கவர்ந்தது இந்த இரண்டாண்டு காலத்தில்..

*சட்டம் ஒழுங்கு:-* **

பொதுவாய் அமைதியான நாடு.. அவ்வப்போது போதை மருந்து விற்றவர் பிடிபட்டார் எனும் செய்திகளும், வெளிநாட்டவர் செய்யும் கூட்டு உடலுறவு, நேபாளி ஒருவனை இரண்டு தாய்ல்லாந்து மக்கள் சேர்ந்து கொன்று தின்று விட்டதும் (இது செய்தாள்களில் வரவில்லை), ஈழத் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான சண்டைகள் அவ்வப்போது கொலைகள், சில சமயங்களில் ப்ரபாகரன் குழுவுக்கும், கருனா குழுவுக்குமான சண்டைகள் இதெல்லாம் அவ்வப்போது வந்து போகும் விஷயங்கள்.
தவிர மற்றபடி இந்த் ஊர் ராஜா எந்த எந்த நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்,, புதிதாய் ஏது சட்டம் வந்ததா என விஷயங்கள் தவிர சாதாரனமான விஷயங்களே செய்திதாழ்களில் இருக்கும்.

விபச்சாரம்:-

துபாய் போல இல்லவிட்டாலும் பரவலாக உள்ளது. ஷெராட்டன், ஓயசிஸ், சோபிடெல் போன்ற ஓட்டல்களில் மாலை வந்தாலே சீன மற்றும் பிலிப்பினோ பென்கள் அழைப்புக்கு காத்திருப்பதைக்கானலாம்.
விமான நிலையத்தை ஒட்டிய ஓட்டலில் பாகிஸ்தானி பென்கள் மாமாக்களுடன் இருப்பர். இரவு 9 மனியிலிருந்து காலை 2 மனிவரை கார்கள் வருவதும் போவதும் பென்கள் கார்கள் மாறி அமர்வதும் தொடரும். இது தவிர ஷேக்குகளுக்கு சப்ளை செய்ய என பாலஸ்தீன, எகிப்திய, சிரிய பென்கள். இவர்களுக்கென தனி இடம். மொத்தத்தில் எல்லாம் கிடைக்கும்..

சினிமா:-

தமிழ் சினிமா அவ்வப்போது வரும்.. ரஜினி படமென்றால் 15 நாட்கள் வரை ஓடும். பிற படங்கள் 4 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஓடும்.. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரும். தோஹா சினிமா, கல்ஃப் சினிமா என்ற இரு தியேட்டர்களில் மட்டும் ஆங்கில படங்களுடன் இந்திய படங்களும் ஓடும். இலங்கை தமிழர்களும் மலையாளிகளும் நம் தமிழ்நாட்டு ரசிகப்ப் பெருமக்களும் படம் பார்க்கிறார்கள். சிவாஜி படம் வெளிவந்து இரண்டாவது நாள் போயிருந்தேன்.. இலங்கை தமிழர்களின் விசில் மற்றும் கைதட்டல் சத்தத்தில் பாதி படம் பார்க்க முடியவில்லை. இதே போன்றுதான் சந்திரமுகி படத்திற்க்கும். இருப்பினும் பொழுதுபோக இங்கு இருக்கும் ஒரே வடிகால் சினிமா மட்டுமே. ( தியேட்ட்ரில் இருக்கும் கத்தாரிகளுக்கு ( வேலை செய்யும்) இந்த திரைப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது இவர்கள் இப்படி ஆர்ப்பாட்டமாய் படம் பார்க்கிறார்களே என அடிக்கடி எட்டிப்பார்ப்பதோடு சரி.

உணவு வகைகள்::-

அரபு உனவுகள் சுவைத்துப்பார்க்க அசைவம் சாப்பிடுபவராய் இருக்க வேண்டும். மற்றபடி அரபிய ரொட்டியாகிய குப்புஸ் அவ்வப்போது சாப்பிடுவதுண்டு. அனைவருக்கும் உனவு கிடைக்கவேண்டும் என்பதற்க்காக அதற்க்கு அரசு மானியம் வழங்குகிறது. ஒரு ரியாலுக்கு ஆறு குப்புஸ் கிடைக்கும். பாகிஸ்தானியர்கள் 1 பாக்கெட் வாங்கி 1 ரியாலுக்கு தயிர் வாங்கி மதிய உணவை முடித்து விடுவார்கள்.

இந்திய பள்ளிகள்:-

அரபிய பள்ளிகளுடன் எனக்கு நேரடி பரிச்சியம் கிடையாது. ஆனால் இந்திய பள்ளிகளில் அரபு குழந்தைகள் படிப்பது அதிகரித்து வருகிறது. நமது இந்திய பள்ளிகளில் குறிப்பிட தகுந்தது பிர்லா பப்ளிக் ஸ்கூல், மற்றும் தோஹா மாடர்ன் இந்தியன் ஸ்கூல் இவையிரண்டும் குறிப்பிட தகுந்தது. நல்ல படிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி குழந்தைகளை ஊக்குவிப்பர். மற்றபடி .
தென்னிந்தியர்களுக்கு அரபி மொழியின் அரிசுவடி மட்டுமே கற்றுத்தருகிறார்கள். அதை ஆப்ஷனலில் விட்டும்விடலாம். ஆனால் அரபி குழந்தைகளுக்கு ஆங்கில மொழிக்காக மட்டுமே நமது இந்திய பள்ளிகளில் சேர்க்கிறார்கள். பாடத்திட்டம் இந்திய சிபிஎஸ்சி திட்டம் எல்லா பள்ளிகளிலும். அமெரிக்கவின் பெரும்பான்மையான பல்கலை கழகங்கள் தனது கிளையை இங்கு வைத்துள்ளன

இந்திய தூதரகம்:-


இந்திய தூதரகம் பற்றி குறிப்பிட்டேயாக வேண்டும்.
மிக மிக அன்பான அலுவலர்கள். படிக்காத பாமரன் போனாலும் உதவி கிடைக்கும். ஸ்பான்சர்களால் கைவிடப்பட்ட இந்தியர்களுக்கு உணவும் அவர்களுக்குண்டான பனத்தை பெற்றுத்தருதல் என மும்முரமாக இயங்குகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா, சுதந்திர தின விழா போன்ற நாட்களில் கடைநிலை பனியாளர்களை அழைத்து உணவு, கலை நிகழ்ச்சிகள், பரிசு பொருட்கள் என கொடுத்து அவர்களுக்கு இந்திய தூதரகம் பற்றிய தகவல் கொடுத்து அவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதை அனுகலாம் என நம்பிக்கை அளித்து அனுப்புகிறார்கள். இது போன்ற நாட்களில் குறைந்தது 3000 பேராவது கூடுகிறார்கள்.
அதற்க்குண்டான பனத்தை அவர்கள் செய்யும் ஒவ்வொரு சேவைக்கும் 1 ரியால் கூடுதல் வசூலித்து இண்டியன் கம்யூனிட்டி பெனெவேலண்ட் ஃபண்ட் என நிதியை உருவாக்கி உதவுகிறார்கள். இந்திய தூதுவர் பெயர் டாக்டர் ஜார்ஜ் ஜோசப். மிக அமைதியான அனைவருடனும் எளிதில் பழகும் ஒரு மனிதர். நான் அவரை இருமுறை சந்தித்திருக்கிறேன். என்னைப்பற்றி, எனது வேலை பற்றி எனது குடும்ப சூழ்நிலை பற்றி விசாரிப்பார். வேலை எப்படி இருக்கிறது மற்றும் நமது தூதரகம் வேறு என்ன செய்ய முடியும் என நீங்கள் நினைக்கிறீர்கள் என பலதும் விசாரிப்பார்..


கத்தாரின் மிக முக்கியமான ஒரு விஷயம் இவர்கள் அமேரிக்காவுக்கு எழுதி தந்திருக்கும் அடிமை சாசனம்..
நான் வேலை பார்க்கும் கம்பெனியின் பின்புறத்தில்தான் அமெரிக்க தளம் உள்ளது. அதனுள் உள்ளூர் போலிஸ்காரன் கூட போக முடியாது. ( இந்த ஊர் போலிஸ் கிட்டத்தட்ட ஒரு நடமாடும் நீதிமன்றம் மாதிரி. விபத்துக்களில் சம்பவ இடத்தில் உள்ள போலிஸ்காரர் சொல்வதுதன் தீர்ப்பு.எனவேதான் போலிஸ்காரர் கூட என்றேன்)
கிட்டதட்ட 5 கிலோமீட்டர் நீளமும் 2 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு தளம் இது. அதன் உள்ளேயே விமான ஓடுதளம், பயிற்சி களம் எல்லாம் உள்ளன. அணாமத்தான விமானங்கள் வரும், போகும். கத்தார் ராணுவத்திற்க்கோ உள்ளூர் போலிஸுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது. அவ்ர்கள் எதுவும் கேட்கவும் முடியாது. அமெரிக்காவிலிரிந்து வரும் சரக்குகள் நேரடியாக அவர்கள் விமான நிலையத்திலேயே இற்க்கி கொள்வார்கள். கடல் மூலம் வரும் சரக்குகளுக்கென தனியாக ஒரு போர்ட்டும் உள்ளது. கிட்டத்தட்ட 5000 வீரர்கள் வரை இருக்கலாம்.
கத்தாரின் எந்த சட்டமும் அவர்களை கட்டுப்படுத்தாது. கத்தாருக்கென குறிப்பிடிம்படி ரானுவம் எதுவும் இல்லை, மினிஸ்ட்ரி ஆஃப் டிபன்ஸ் இருந்தும்கூட. மினிஸ்ட்ரி ஆஃப் இண்டீரியர் என்ற ஒரு அமைச்சகம் மட்டும் எல்லா சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்களையும் மற்றும் பந்தோபஸ்துக்களையும் கவனிக்கிறது. அமேரிக்காவின் கப்பல்கள் மற்றும் ரானுவ வீரர்கள் கத்தாரையும் சேர்த்து காக்கிறார்கள். இருக்கும் முந்தைய ரானுவ வீரர்கள் அமெரிக்க தூதரகம் மற்றும் ரானுவ தள பாதுகாப்பில் இருக்கிறார்கள். பொதுவாக கத்தாருக்கு எந்த எதீரி நாடும் கீடையாது. மேலும் உலக ரௌடி இங்கிருக்கும்ம்போது எதிரிகள் வர வாய்ப்பும் இல்லை.


கலை மற்றும் நுன்கலைகள்:-


இங்கு கத்தாரில் ஆர்ட் கேலரி மற்றும் ஆர்ட் எக்க்ஷிபிஷன் ஒன்றும் நடந்ததாய் எனக்கு தெரிந்து இல்லை. இவர்களது நிரந்தர கத்தார் தேசிய மியுசியம் மற்றும் கத்தார் ஆயுத மியுசியம் என இர்னடு உள்ளது. தேசிய மியுசியத்தில் அவர்களது பரம்பரியம் மற்றூம் உடைகள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தர் எப்படி இருந்தது என்ற போட்டோக்கள் மற்றும் சில நானயங்கள் இருக்கும்.
ஆயுத எக்ஷிபிஷனில் அவர்களது ஆதி காலத்து ஆயுதங்களான துப்பாக்கிகள், கூர்வாள்கள், பீரங்கிகள் மற்றும் சில கருவிகளிருக்கும்.
இது தவிர அவ்வப்போது கத்தாரிலுள்ள ஆர்டிஸ்டுகள் வரைந்த படங்கள் மேற்கூறிய இடங்களில் ஏதேனும் ஒன்றில் காட்சிக்காக வைக்கப்படும். அவ்வளவே. அதிக பட்சம் 15 முதல் 20 படங்கள் இருந்தால் அதிகம்.

இவர்களது படகு கட்டும்திறன், மற்றும் வெள்ளியில் கலைப்பொருட்கள் செய்ய்தல் மற்றும் பிரம்பு, துனி வேலைப்பாடுகள் எல்லாம் பிரசித்தம். இதுபோன்ற உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கு தனியாக ஒரு சூக் எனப்படும் மார்கெட் வைத்துள்ளார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கத்தார் எப்படி இருந்ததோ அதேபோல அமைத்துள்ளார்கள். பாரம்பரியத்தை காக்கும் முயற்சியாக இதை கொள்ளலாம்.

விளையாட்டு & ஆசிய விளையாட்டு போட்டிகள்:-

ஆனால் கத்தாரை விளையாட்டு மற்றும் முக்கிய சந்திப்புகளுக்கான இடங்களாக மாற்ற தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். ஆசிய விளையாட்டு போட்டி அவர்களது ஒருங்கினைப்பு திறனுக்கு ஒரு சான்று.

என்னென்ன போட்டிகள் நடந்தது எத்தனை நாடுகள் கலந்து கொண்டன எத்தனை அனிகள் கலந்துகொண்டன எல்லாம் எல்லோருக்கும் தெரியும்.
கத்தார் அரசு இந்த விளையாட்டு போட்டிகளுக்காக கிட்டத்தட்ட 7000 பேருந்துகளும் 5000 கார்களும் பயன்படுத்தின. 9 புதிய விளையாட்டு அரங்கங்களும் உருவாக்கப்பட்டன. ஒவ்வோரு விளையாட்டு வீரருக்கும் தனித்தனியான அட்டவனை அவர்களுக்கென தனித்தனி உதவியாளர்கள் மேலும் விளையாட்டுத்திடலில் உதவியாளர்கள் என விளையாட்டு வீரர்களைவிட உதவியாளர்கள் மற்றும் ஒருங்கினைப்பாளார்களை அமர்த்தி எந்த வித குளறுபடிகளுமின்றி நடத்தினர்.
வீரர்கள் தங்க 5 நட்சத்திர வசதிகள் கொண்ட விடுதிகளை ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என அமைத்தனர். மேலும் வசதிக்காக 5 நட்சத்திர வசதிகள் கொண்ட 7 கப்பல்களை தோஹா துறைமுகத்தில் நிறுத்தியிருந்தனர்.
அனைத்து நாட்டு வீரர்களும் ஒட்டுமொத்தமாக பாராட்டினர். நமது இந்திய துப்பாக்கி சுடும் வீரர் (ராதோர்) மட்டும் ஒருங்கினைப்பாளர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர் என குற்றம் சாட்டியது மற்றும் கொரியாவைச்சேர்ந்த குதிரையேற்ற வீரர் களத்தில் இறந்தது தவிர மிக சிறப்பாக நடந்துமுடிந்த விளையாட்டு நிகழ்ச்சி இது.

ஆசிய விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வும் மற்றும் முடிவு நிகழ்ச்சிகளும் இதுவரை எந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் நடந்திராத அளவு மிக மிக பிரம்மாண்டமாக நடந்தது. சீனா இதைவிட சிறப்பாக நடத்த முயலப்போவதாக சொன்னதே இதன் பிரம்மாண்டத்தை உனர்த்தி இருக்கும்.

ஒரு நல்ல தலைமையைக்கொண்ட சரியான பாதையில் அடிபோடும் ஒரு மத்திய கிழக்கு நாடு இது...

Wednesday, October 3, 2007

ஷேக்குகளுடனான அனுபவங்கள்.

அரபு நாடுகளில் வேலை செய்பவர்கள் குறிப்பாக ஷேக்குகளை பனி நிமித்தம் சந்திப்பவர்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்கும்.

எங்க கம்பெனி ஷேக்கை பாக்கனும்னா அது இப்படித்தான்.

முதலில் அவரிடம் இன்று உங்களை சந்திக்க வருகிறேன் என எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

அவர் சந்திக்கலாம் என நினைத்தால் உடனே உங்களுக்கு தொலைபேசுவார் அல்லது பதில் அனுப்புவார்..

பெரும்பாலும் இரவு பதினோறு மனிக்கு மேலும் காலை மூன்று மனிக்குள்ளும் சந்திப்பு நடக்கும். சந்திப்பு பெரும்பாலும் மஜ்லிஸ் என அழைக்கப்படும் அவரது அலுவலகத்தில்.
ஷேக் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரம்மாண்டமான ஹாலில் பிரம்மாண்ட சைசில் தொலைக்காட்சி பெட்டியில் உள்ளூர் கால்பந்து போட்டி அல்லது ஏதேனும் ஒரு அரபி தொடர் ஓடிக்கொண்டிருக்கும். அதுதான் அவரது பொது அறை. ஏதேனும் பிற ரகசிய விஷயங்கள் பேசவேண்டுமெனில் ஒரு தனியறையும் உண்டு.
முதலில் யார் வந்தாலும் கவ்வா அல்லது காவா எனப்படும் ஒரு அராபிய காப்பி வழங்கப்படும். பால், சர்க்கரை இல்லாமல். பின்னர் அடுத்தடுத்து ஆட்கள் வந்தாலும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு உங்களிடமும் காவா வேண்டுமா என கேட்டுகொன்டே இருப்பார்கள். குடித்துவிட்டு கோப்பையை கையிலேயே வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் ஊத்து என அர்த்தம். அதை இடவலமாக ஆட்டினால் வேண்டாம் என அர்த்தம். கோப்பையை வாங்கிச்சென்று விடுவார்கள்.
உள்ளே நுழையும் ஒவ்வொருவரும் அனைவருக்கும் சலாம் அலைக்கும் என தனித்தனியாக சொல்வார்கள். ஒரு சிலர் சத்தமாக அஸ்ஸலாமு அலைக்கும் என இரண்டு கையையும் உயர்த்திவிட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்வர். இரண்டும் சரிதான். இது ஷேக் மஜ்லிஸுக்குள் வரும் முன்னர். ஷேக் வந்து விட்டால் ஷேக்கிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொருவராக கைகுலுக்கிகொண்டே வரவேண்டும். எல்லாருக்கும் கைகுலுக்கிய பின்னர் காலியாக இருக்கும் ஆசனத்தில அமரவேண்டும். நம்மைப் போல பல கம்பெனிகளுக்கு அவர் ஸ்பான்சர். எனவே முதலில் வந்தவர் முதலிலும் மற்றவர்கள் வரிசைகிரமமாக வரை சந்தித்து விஷயங்கள், மற்றும் பிரச்சினைகளை சொல்லலாம்.
இரவு உனவு அருந்தும் சமயம் நீங்கள் அங்கிருந்தால் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய தாம்பாளத்தில் மட்டன் பிரியானியோ அல்லது மாட்டு பிரியானியோ இருக்கும். நிறைய சைடு டிஷ்களும் இருக்கும். தாம்பாளத்திலிருந்து உங்களுக்கு வேன்டியதை அப்படியே எடுத்து சாப்பிட வேன்டியதுதான். என்னைப்போன்ற சாக பட்சினிகளுக்கு ஏதாவது குளிர்பானம் அல்லது பழரசம் தரப்படும். அதையும் அவர்கள் உன்னுமிடத்தில் அவர்களது உடன் அமர்ந்து குடித்தால் மகிழ்வார்கள். பொதுவாக மஜ்லிஸில் குறைந்தது பத்து பேர் முதல் இருபது பேர் வரை உனவு அருந்துவார்கள். உனவு நேரம் இரவு பனிரெண்டுக்கு மேல்தான் பொதுவாய் இருக்கும். ஷேக்கின் அல்லக் கைகள், எங்களைப்போன்ற ஷேக்கை சந்திக்க வந்தவர்கள் மற்றும் அங்கு வேலை செய்பவர்கள் என பலரும் சாப்பிடுவார்கள்.

ஷேக்கை சந்திக்க சென்ற பின்னர் சம்பிரதாயமான வார்த்தைகள் பேசி முடித்த பின்னர் நமது பிரச்சினைகள் அல்லது தேவைகளை கூறிய பின்னர் சாத்தியம் அல்லது இல்லை என கூறிவிடுவார். மேற்கொண்டு பேச அனுமதியில்லை.

அவரது ஸ்பான்சர்ஷிப் கமிஷன் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும். உங்களுக்கு வரவேண்டிய பனம் வந்ததா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் ஷேக் கவலைப்பட மாட்டார்.

இவர் லண்டனில் சென்று படித்த ஷேக். இவரே இப்படி என்றால் மற்ற ஷேக்குகள் எப்படி இருப்பார்கள்????.

கம்பெனிகளிடம் முன்பனமும் வாங்கி கொண்டு கமிஷனையும் வாங்கி கொண்டு எந்த உதவியும் செய்யாமல் ( விசா வாங்கி தருவது, நாட்டை விட்டு வெளியேற ஒப்பமிடுவது, அரசு சம்பந்தப்பட்ட வேலைகளில் ஒப்பமிடுவது போன்றவைகள்) அலைக்கழிக்கும் ஷேக்குகளும் உண்டு.

நான் பனிபுரியும் நாட்டில் அங்கிருந்து எங்கள் கம்பெனியின் ஸ்பான்சர் கையொப்பமிடாமல் நாட்டை விட்டு வெளியேற முடியாது. அதற்கு எக்ஸிட் எனப் பெயர்.

அதில் குறிப்பிட்ட ஆள் நாட்டை விட்டு வெளியேறலாம் என அனுமதித்து ஒப்பமிட்டு தருவார் ஷேக். அதைகொண்டு போனாலொழிய ஏர்போர்ட்டை விட்டு வெளியேற முடியாது. சில சமயம் ஷேக் வெளியூர் அல்லது வெளிநாடு பயனம் போய் அவரிடம் வேலை செய்பவருக்கு அவசரமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசரம் ஏற்பட்டால் ஷேக் திரும்பி வரும்வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

பல ஷேக்குகள் நம்பிக்கையான பினாமி ஆட்களை வைத்திருப்பார்கள். ஷேக் இல்லாதபோது ஷேக்கின் கையொப்பத்தை அவர்கள் இடுவார்கள்.
பொதுவாக ஷேக்குகள் அரசு உத்தியோகத்தில் இருப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு வாரியத்தலைவர் போல சுற்றுலாத்துறை, அது இது என ஏதேனும் ஒரு துறையில் ஏதேனும் பொருப்பிலிருப்பார். எங்கள் கம்பெனியின் ஷேக் இந்த நாட்டு அரசரது ஜாதியை சேர்ந்தவர். அல் தானி என்ற இனத்தை சேர்ந்தவர். எனவே உளவு பிரிவில் மிக முக்கிய பொறுப்பிலிருக்கிறார்.

இது தவிர அராபிய ஷேக்குகளை பெயர் சொல்லி அழைப்பது அவர்களுக்கு பிடிக்காது.. ஷேக் .. ஷேக்.. ஷேக் மாத்திரமே.. அவர்கள் நீங்கள் உள்ளூரில் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும், இங்கு வந்து முதல் போட்டு தொழில் செய்தாலும் இந்த நாட்டு சட்டப்படி உங்களது ஸ்பான்சர்தான் முதலாளி உங்களது கம்பெனிக்கு. எனவே அவரை முறைத்துக்கொள்ளுதலும் சாத்தியமில்லை.

நானும் முதல் தடவ ஷேக்க பாக்க போகும்போது நம்ம தமிழ் சினிமால எல்லாம் பாத்திருக்கமே அதுபோல ஏதாவது ஒரு பொன்னு டான்ஸ் ஆடிக்கிட்டுருக்கும்னு நெனச்சிட்டு போனா அங்க பக்காவா ஆபிஸ் நடந்துகிட்டுருக்கு. சத்தமில்லாம வேலய முடிச்சிட்டு திரும்பி வந்துட்டேன். என்ன இருந்தாலும் இந்த ஊரில் ஒரு பரபரப்புடன் இயங்க வேண்டுமெனில் நமக்கொரு ஷேக்கு வேனுமடா.... அப்பத்தான காலையில பத்து மனிக்கு ஆபிஸுக்கு வந்துட்டு நேத்து ஷேக்க பாக்க போனனா காலயில 4 மனிக்குத்தான் வந்தேன் அப்படின்னும் படமும் போடலாம்...

Tuesday, October 2, 2007

சீன போரில் இந்தியாவின் தோல்விக்கு காரனங்கள்

எத்தனையோ பேரு சொன்ன விஷயந்தான்னாலும் நாமளே படிச்ச பின்னாடி அத பத்தி தெரியாதவங்களுக்கு சொல்றதுதான முறை.. அய்யய்யோ உங்களுக்கு இது பத்தி எல்லாம் தெரியாது தெரிஞ்சுக்கங்க அப்டின்லாம் நான் சொல்லல.. படிச்சேன் புதுசா இருந்துச்சே உங்களுக்கும் தெரியட்டுமே அப்படினுதான் இந்த பதிவு..

முதல்ல என்ன காரனம் சன்டைக்கு:-

சன்டை நடந்து 45 வருஷம் ஆன பின்னாடி கூட நிறைய பேருக்கு ஏன் சன்டை, என்ன காரனம் ஏன் தோத்தோம் அப்படின்னு இன்னும் சரியாத்தெரியாது..

எல்லாரும் என்ன நெனச்சுக்கிட்டிருக்கோம்னா சீனா நம்மள நம்ப வச்சு கழுத்த அறுத்துருச்சு அல்லது நம்பிக்கை துரோகம் செஞ்சுருச்சு அப்படின்னுதான்..

ஆனா, நெலமயோ வேற மாதிரி..

நம்ம அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவும், ராணுவ மந்திரி வி.கே.கிருஷ்ன மேனனும் இந்த பிரசினைய ராஜாங்க ரீதியா அவங்க ரெண்டுபேரும் தீத்துரலாம்னு நம்புனதுதான்..

அதேபோல உளவுதுறை அதிகாரி திரு.முல்லிக்கும் கூட எந்த பிரச்சினை வந்தாலும் சீனா நம்மள தாக்காதுன்னு ஒரு தவறான தகவலை அப்போதைய பிரதமருக்கும் ராணுவ மந்திரிக்கும் குடுத்ததும் கூட காரனம்...

இது தவிர முக்கியமான காரனமா இந்த 3 விஷயத்த சொல்ராங்க...

1. சீனா இந்தியாவ வடகிழக்குலயும் லடாக் பகுதியலயும் நம்மள தாக்காதுன்னு ஒரு தப்பு கணக்கு போட்டது.

02. சரியான உபகரனங்களோ , ஆயுதமோ அல்லது தயார் நிலையோ இல்லாம இந்திய ராணுவம் இருந்தது இரண்டாவது காரனம்...

03. எங்கே இந்தியா திபெத்த வளைச்சு போட்டுருமோன்னு சீனா பயந்தது மூனாவது காரனம்..

லால்பஹதுர் சாஸ்திரி 1962 பெப்ரவரி 4 ல் "சீனா ஆக்கிரமித்துள்ள இடங்களை விட்டு வெளியேற வேண்டும்.. இல்லையெனில் கோவாவில் நடந்தது போல மீண்டும் நடக்கும்" என்று முழங்கினார்..

1962 அக்டோபர் 12ல் நேரு " சீனர்களை தூக்கி எறியுங்கள் என இந்திய ராணுவத்திற்கு கட்டளை இட்டார்..

ஆனால் உன்மை நிலவரம் வேறு மாதிரி இருந்தது...

அன்றைய நிலைமையில் இந்தியா சீனாவிற்க்கு எதிராக வெல்ல முடியாது என்பதே நிலை.

சீனர்கள் மலைப்பிரதேச சண்டையில் அதிக தேர்ச்சி பெற்றவர்களாயிருந்ததும் நம்மிடம் சரியான திட்டமிடல், அரசியல் தொலைநோக்கு, இல்லாமை எதிரியின் பலம் என்னவென்று தெரியாமல் நமது ராணுவத்தை ஒரு தீராப்பழிக்கு ஆட்படுத்தியதும், நமது நிலப்பரப்பை நாம் இழந்ததும்தான் மிச்சமானது....

அருனாச்சல் எங்களுடையது என்கிறது சீனா..

திபேத்தை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்கிறது..

இப்படியே போனால்?????

முழு விவரமும் ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்...

http://www.ndtv.com/convergence/ndtv/showcolumns.aspx?id=COLEN20070022560

இது எனது முதல் பதிவு... உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்.. என்னை வளர்த்துக்கொள்ள உதவும்...


வருக..வருக...

அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் இக்கானகத்திற்கு..
கானகம் - இது காடு என்பதற்கு மாற்றுச்சொல்லாகவும் பயன்படும். எனது இந்த வலைப்பூவில் இதுதான் என்றில்லாமல் எனக்கு தோன்றும் நல்ல விஷயங்களையும், பார்த்த, படித்த விஷயங்களையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை..
ஜெயக்குமார்